பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் -மாரிமைந்தன் சிவராமன்

63 நாயன்மார்கள் வரலாறு பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் -மாரிமைந்தன் சிவராமன் மிழலை நாடு. இது பாண்டிய நாட்டில் ஓர் உள்நாடு. வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்த பெருமிழலை மிழலை நாட்டின் தலை நகரம். மாந்தோப்புகளும் தென்னை பலா பாக்கு முதலான சோலைகளும் நிறைந்த பசுஞ்சூழல் நகரே பெருமிழலை. நீதிநெறி தவறாத மக்களையும் எப்போதும் திருவெண்ணீற்றின் தீர்க்கமான ஒளியையும் கொண்ட மிழலை நாட்டில் ஒரு குறுநில மன்னர். குறும்பர் என்னும் குறுநில மன்னர் குடியில் பிறந்ததால் 'குறும்பர்' என்னும் மரபுப் பெயரும் 'பெருமிழலை' என்ற ஊரின் பெயரும் இணைந்து பெருமிழலைக் குறும்பர் என அழைக்கப்பட்டார். சிவ பக்தியிலும் சிவனடியார்களைப் பேணிக்காத்து உபசரிப்பதிலும் நிகரற்றவராக விளங்கினார் பெருமிழலையார். திங்களை முடியில் தரித்த சங்கரரின் அடியார்களுக்கு உவந்த தொண்டுகளை அவர்கள் கூறுவதற்கு முன்பே குறிப்பறிந்து தொண்டாற்றுவார். சிவனடியார்கள் ஆயி...