பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் -மாரிமைந்தன் சிவராமன்
63 நாயன்மார்கள் வரலாறு
பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

-மாரிமைந்தன் சிவராமன்
மிழலை நாடு.
இது
பாண்டிய நாட்டில்
ஓர் உள்நாடு.
வெள்ளாற்றின்
தென்கரையில் அமைந்த
பெருமிழலை
மிழலை நாட்டின்
தலை நகரம்.
மாந்தோப்புகளும்
தென்னை பலா பாக்கு
முதலான
சோலைகளும் நிறைந்த
பசுஞ்சூழல் நகரே
பெருமிழலை.
நீதிநெறி தவறாத மக்களையும்
எப்போதும்
திருவெண்ணீற்றின்
தீர்க்கமான ஒளியையும் கொண்ட
மிழலை நாட்டில்
ஒரு குறுநில மன்னர்.
குறும்பர் என்னும்
குறுநில மன்னர்
குடியில் பிறந்ததால்
'குறும்பர்' என்னும் மரபுப் பெயரும்
'பெருமிழலை'
என்ற ஊரின் பெயரும் இணைந்து
பெருமிழலைக் குறும்பர்
என அழைக்கப்பட்டார்.
சிவ பக்தியிலும்
சிவனடியார்களைப்
பேணிக்காத்து உபசரிப்பதிலும்
நிகரற்றவராக விளங்கினார்
பெருமிழலையார்.
திங்களை
முடியில் தரித்த
சங்கரரின் அடியார்களுக்கு
உவந்த தொண்டுகளை
அவர்கள் கூறுவதற்கு முன்பே
குறிப்பறிந்து தொண்டாற்றுவார்.
சிவனடியார்கள்
ஆயிரம் பேர் வந்தாலும்
அகமகிழ்ந்து
திருவடி தொழுது
திருத்தொண்டாற்றி
காணிக்கையாக
செம்பொன் வழங்கி
ஆனந்தம் அடைவது
அவர் வழக்கம்.
பொன்மனச் செம்மலாக
இருந்தபோதும்
அவர்
காட்சிக்கு எளியவராகவே
இருப்பார்.
அடக்கத்தில்- பணிவில்
அவரை யாரும்
விஞ்ச முடியாது.
அவ்வளவு எளிமை !
அத்துணை அடக்கம் !!
'இறைவன் திருவருளைப் பெற
குருவருளே சிறந்த சாதனம்'
என்பதில்
அவர் உறுதியாக இருந்ததால்
நல்லதொரு குருவை
நாள்தோறும் தேடி வந்தார்.
பிறவிப் பெருங்கடலைக் கடக்க
இறைவன் திருவடி மரக்கலம் எனில்
குருவே மாலுமி
என உணர்ந்து
தனக்கான குருவைத் தேடினார்.
சிவபக்தியில் திளைத்திருந்த
பெருமிழலையாருக்கு
சிவனருளே தக்கதொரு குருவைக்
காட்டிக்கொடுத்தது.
அவர்
வேறு யாரும் இல்லை.
வேறு யாருக்கும் இணையில்லாத
சுந்தரமூர்த்தி சுவாமிகளே.
சாட்சாத்
சுந்தரமூர்த்தி நாயனாரே.
திருத்தொண்டினது
உண்மை நிலையை
உலகத்தார் அறிந்து
உய்யும் பொருட்டு எழுந்த
'திருத்தொண்டத்தொகை'
திருப்பதிகங்களையும்
அவற்றைப் பாடியருளிய
சுந்தரமூர்த்தி சுவாமிகளையும்
பணிந்து வழிபட்டார்
பெருமிழலையார்.
குரு பக்தியோடு
வைராக்கியத்தோடு
வழிபட்டார்.
வழி கிடைத்தது.
நம்பியாரூராரோடு ஏற்பட்ட
தனி ஈடுபாடு
பெருமிழலையாரை
ஆன்மீக உச்சத்திற்கு
அழைத்துச் சென்றது.
சுந்தரரின் திருவடிகளைக்
கைகளால் தொழுதும்
வாக்கினால் வாழ்த்தியும்
கருத்தினால் கருதியும்
வழிபடும் வழக்கத்தை
நாள் முழுதும் மேற்கொண்டவர்
நம் பெருமிழலையார்.
நாள்தோறும்
நம்பியாரூராரின்
திருவடித் தாமரைகளைத்
தனது இதயத் தாமரையில் வைத்து
தியானித்து வந்த
பெருமிழலையாருக்கு
பெறுதற்கரிய சித்திகள்
தேடி வந்தன.
கை கூடி நின்றன.
அணிமா
மகிமா
இலகிமா
கரிமா
பிராத்தி
பிராகாமியம்
ஈசத்துவம்
வசித்துவம்
முதலான
அட்டமா சித்திகளைப்
பெற்றார் பெருமிழையார்.
அட்டமா சித்திகள்
அப்படியொன்றும்
எளிதில் கிடைக்கும்
மந்திரம் தந்திரம் அல்ல.
அந்த எட்டு சித்திகளின்
வல்லமைகளை அறிந்தால்
ஆச்சரியமே மேலிடும்.
அணிமா -
ஆன்மாவைப் போல அணுவாதல்.
மகிமா -
சிறிது மிகப் பெரிதாதல்.
இலகிமா -
மிகக் கனத்து மிக இலகுவாதல்.
கரிமா -
இலகுவானது மிகக் கனத்ததாதல்.
பிராப்தி -
வேண்டுவன அடைதல்.
பிராகாமியம் - விரும்பியதை நுகர்தல்.
ஈசத்துவம் -
ஆட்சியுளனாதல்.
வசித்துவம் -
எல்லாம் தன் வசமாக்கும் வல்லனாதல்.
இவற்றில்
முதல் மூன்று
உடம்பால் ஆவன.
மீதம் ஐந்தும்
மனம் போன்ற
கருவிகளால் சாத்தியமாவன.
இத்தனை சித்திகளும்
வாய்த்திருந்தும்
அகங்காரம் கொள்ளாமல்
ஆணவம் காட்டாமல்
இவை எதையும் சிந்தியாமல்
சுந்தரருடைய திருவடிகளையே
சதாகாலமும் சிந்தித்திருந்தார்
பெருமிழையார்.
குருவருளோடு
கூடவே திருவருளும்
அவருக்குத்
துணை நின்றது.
சிவனடியார்
சேவைகளும்
நிதமும் தொடர்ந்தது.
ஒரு சமயம்
திருவஞ்சைக்களத்தில் உறையும்
நஞ்சுண்ட
அமுதப் பெருமானைப் பணிந்து
தமிழ் பாடிக்கொண்டிருந்த
சுந்தரமூர்த்தி நாயனார்
சேரமான் பெருமான் நாயனார்
அரண்மனையில் தங்கியிருந்தார்.
அது போது
திருக்கயிலை மலையை அடையும்
பெரும் வாழ்வு மறுநாள் தனக்கு
நிகழவிருப்பதை
சுந்தரர் உணர்ந்தார்.
பல காலம் காத்திருந்து
பெற்ற பெரும்பேறு
என மிக மகிழ்ந்தார்.
இது நடந்தது கொடுங்களூரில்.
ஆனால்
அச்செய்தி
மனம்
மொழி
மெய்
ஆகிய மூன்றாலும்
குரு சுந்தர மூர்த்தியை
வழிபட்டு வரும்
பெருமிழலையில் வாழும்
குறும்பருக்கு
யோகக் காட்சியாய்
தெரிந்து போனது.
"என் குருமூர்த்தி
நாளை கயிலை செல்கிறாரே!
இறைவனின் திருவடிகளில்
இளைப்பாறப் போகிறாரே!
குருநாதரை நீங்கி
இங்கு நான் வாழேன்.
கண்மணியைப்
பிரிந்து
வாழ்வோரைப் போல
நான் வாழ மாட்டேன்.
என் குருநாதர் வேண்டுமானால்
இறை திருவுளப்படி
நாளை செல்லட்டும்.
நான் இன்றே செல்கிறேன்.
யோக நெறியால்
இறைவனைச் சார்வேன்."
என்று எண்ணியபடி
அந்த நொடியே
சிவயோக நெறியில்
சிந்தனையைச் செலுத்தினார்.
மனதை ஒருமுகப்படுத்தி
சுழுமுனை நாடி வழியே
பிராண வாயுவை செலுத்தி
பல காலம் பயின்று வந்த
சாதனத்தின் முதிர்ச்சியினால்
பிரமந்திர வழியே சென்று
பிரணவ நாதத்துடன்
பிரம கபாலத்தைத்
திறந்துகொண்டு
திருக்கயிலாய மலை
நாயகனைச் சார்ந்தார்.
கபால மோட்சம் அடைந்தார்.
ஆம்...
பெருமிழலைக் குறும்ப நாயனார்
ஒளி வடிவாக பரவெளியைச் சார்ந்தார்.
பரபிரமத்தை அடைந்தார்.
குரு சுந்தரருக்கு
ஒருநாள் முன்னரே
இறைவனின் திருப்பாதங்களில்
இணைந்தார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில்
குரு வழிபாடு மூலம்
ஆதி குருவான
சிவபிரானை அடைந்தவர்கள்
பத்து திருத்தொண்டர்களே.
குலச்சிறையார்
சுந்தரர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருமூலர்
நின்றசீர் நெடுமாறர்
பெருமிழலைக் குறும்பர்
மங்கையர்க்கரசியார்
ஆகியோரே அவர்கள்.
அப் பாக்கியவான்களில் ஒருவரே
குருபக்தியாளரான
பெருமிழலைக் குறும்ப நாயனார்.
திருமயம் பேரையூர் அருகே குடவரையில் சிவலிங்கத்தின் திருமுன் யோக நிலையில் அமர்ந்து இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் பெருமிழலைக் குறும்ப நாயனார்.
'பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன் '
- சுந்தரர் வாக்கு.
ஓம் நமசிவாய!
கருத்துகள்
கருத்துரையிடுக