நமி நந்தியடிகள் நாயனார் புராணம்




 63 நாயன்மார்கள் வரலாறு

நமி நந்தியடிகள் நாயனார் புராணம்

எழுத்து: மாரிமைந்தன் சிவராமன்

காவிரி நாடு
எனப் போற்றப்படும் 
சோழ நாட்டில் 
திருவாரூர் அருகே 
ஏமப்பேறூர் 
எனும் திருத்தலம்.

ஏமப்பேறூர் 
வேத நெறிப்படி 
வாழ்பவர்கள் 
நிறைந்த ஊர்.
வேத ஓசை 
உரிய காலங்களில் 
மிகுந்து முழங்கும்.

உயிர்களைக் காத்து 
அருள் புரியும் 
திருநீற்றுச் சார்புடைய 
சைவ நெறியில் 
ஒருமைப்பட்டு வாழும் 
அந்தணர்கள்தான் 
ஏமப்பேறூரின் 
அருள் செல்வந்தர்கள்.

அப்படிப்பட்ட 
மகா சைவ மரபான 
அந்தணர் குலத்தில் 
உதித்தவர்தான் 
நமி நந்தியடிகள்.

நமி என்றால் 
சிறந்தவர் 
உயர்ந்தவர் 
என்று பொருள்.

நந்தியடிகள் என்பதில் சிவபெருமானுக்கு 
நந்தீஸ்வரர் எப்படியோ 
அப்படி 
நந்தீஸ்வரர் பெருமானுக்கு 
அடியவர் - அடிகள் என 
பொருள் படும் வகையில்
அவர்
பெயர் அமைந்திருக்கிறது.

சொல் உலகம் 
பொருள் உலகம் 
எனும் இரு உலகத்திலும் 
சிவனாரின் திருவடிகளை 
இடையறாது 
வாழ்த்தி வணங்கி 
வாழ்ந்து வந்தவர் 
நந்தியடிகள்.

வைகறை உச்சி 
மாலை நடு இரவு 
என்ற
நான்கு வேளைகளும் 
வழிபாடு செய்யும் 
நியதி கொண்டவர்.

ஏமப்பேறூரிலிருந்து 
அடிக்கடி 
திருவாரூர் சென்று 
அடியார்களின் 
இடர் களையும் 
தியாகராஜப் பெருமானை 
வழிபடுவது 
அவரது வழக்கம்.

ஒரு நாள்
பூங்கோயில் 
எனப் புகழப்படும் 
திருவாரூர் 
பெரிய கோயிலில் 
புற்றிடம் கொண்டிருக்கும் 
திருமூலநாதரை
தாழ் பணிந்து 
வணங்கச் சென்றார்.

அக்கோயிலின் 
மதிலுக்கு அருகே 
அரனெறி என்று
ஒரு தனிக் கோயில் 
உண்டு.

தியாகேசுவரரைத் 
தரிசித்த பின்னர் 
அரனெறி நாதரை 
வழிபடப் போனார்
அறநெறிவாழ் அந்தணர்.

நிறைந்த அன்புடன் 
கண்ணீர் சொரிந்து 
மிகவும் பணிந்து 
தொழுது மகிழ்ந்தார்.

புறப்பட 
எண்ணிய போதுதான் 
மாலைப் பொழுது 
முடிவுற்று 
கொஞ்சம் இருள் படர ஆரம்பித்திருந்தது.

கோயிலெங்கும் இருந்த திருவிளக்குகள் 
ஏற்றப்படாமல் இருந்தன.

திருவிளக்கு ஏற்றுதல்
என்பது இறைவன் 
வழங்கும் கொடுப்பினை 
என்பதை அறிந்திருந்த 
நமி நந்தியார் 
அத்தனை 
விளக்குகளையும் 
ஏற்றப் பிரியப்பட்டார்.

'திருக்கோயிலில் 
விளக்கிட்டோருக்கு மெய்ஞானமுண்டாம்'
என்ற அப்பரின் 
திருக்குரல்
அவர் மனதில் 
மென்மேலும்
ஆர்வம் ஊட்டியது.

சிவாகமங்களில் 
பெரிதும் புகழ்ந்து 
பேசப்படுவது 
திருக்கோயில்களில் 
திருவிளக்குகள்
ஏற்றும் திருப்பணி 
என்பதை 
உணர்ந்திருந்த 
நமி நந்தியடிகள் 
திருவிளக்குகள் 
அருகில் சென்றார்.

விளக்கெரியத் 
தேவையான நெய் 
அகலிகளில் இல்லை.

ஊருக்குச் சென்று 
கொண்டு வரலாமென்றால் 
போதிய நேரமில்லை.
இருள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தது.

வருத்தப்பட்டு 
யோசிக்கையில் 
அருகில் இருந்த 
வீடொன்று 
ஞாபகத்திற்கு வந்தது.
அங்கு விரைந்தார்.

அவ்வீடு 
சமணர் வீடு.
அங்கிருந்த சமணர்கள் 
நமி நந்தியடிகளின் 
வருகையையே 
விரும்பவில்லை.

அவர்களிடம் போய் 
விளக்கேற்ற 
நெய் கேட்டால்
விளங்குமா என்ன?

"கையில் 
நெருப்பை ஏந்திய 
உங்கள் கடவுளுக்கு 
விளக்கு வேண்டுமோ?
இங்கு நெய் இல்லை"
என்று 
மறுத்ததோடில்லாமல் "வேண்டுமானால் 
தண்ணீர் விட்டு 
விளக்கெரியச் 
செய்து கொள் "
என்று பரிகாசம் 
செய்தனர். 
ஏளனமாய்ச் சிரித்தனர்.

வேறு வழியின்றி
மீண்டும் 
அரனெறி நாதரைத்
தஞ்சமடைந்தார் 
நந்தியடிகள்.

"ஐயனே.....
ஏளன மொழி கேட்க 
என்ன பாவம் செய்தேனோ? 
கருணைக் கடவுளே! 
வழிகாட்டுவாயா..."
என்றழுதபடி
இறைமுன் சாய்ந்தார்.

அப்போது 
ஞானவெளியில் 
ஓர் இனிய 
குரல் ஒலித்தது.

"அன்பரே.......
கவலைப்படாதே....!
இதோ இங்குள்ள 
குளத்து நீரை 
மொண்டு
கொண்டு வந்து 
விளக்கு எரிப்பாயாக...!'

அது 
இறையின் திருவாக்கு 
என்பதை 
உணர்ந்த மகிழ்ச்சியில் திருக்குளத்திற்கு விரைந்து 
அதில் இறங்கி
ஐந்தெழுத்து ஓதி 
தண்ணீர் 
மொண்டு வந்து 
விளக்குகளில் 
ஊற்றினார்.

திருவருள் 
துணை கொண்டு 
சுடர் ஏற்றினார்.
அத்தனை விளக்குகளும் 
ஆயிரம் சூரிய ஒளியாய்ப் பிரகாசித்தன.

மீண்டும்
பரிகாசம் 
செய்யும் ஆவலில்
நடப்பதை எல்லாம்
கவனித்துக் கொண்டிருந்த 
சமணர்கள் பேசக்கூடத்
திராணியற்றுத் திகைத்தனர்.
வெட்கித் தலை குனிந்தனர்.

அப்போது 
கோயில் வந்த 
அன்பர் கூட்டம் 
'ஹர... ஹர...'
என முழக்கம் செய்தது.

நடப்பனவற்றை 
எல்லாம்
அரனெறி நாதர் 
அருள்ஒளி வீச 
ரசித்துக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் 
நமி நந்தியடிகள்
விடியும் வரை 
எரியும் வகையில் 
மீண்டும் 
தண்ணீர் ஊற்றிவிட்டு 
இறைவனிடம் 
அப்போதைக்கு 
விடை பெற்றார்.

வீட்டில் 
நடுநிசி பூஜை 
செய்ய வேண்டுமே!

ஏமப்பேறூர் திரும்பினார்.

நடு யாம வழிபாட்டின்
நியதி வழுவாது 
அன்று
மிக மகிழ்வாக  
சிவபூஜை 
செய்து விட்டுக் 
கண்ணயர்ந்தார்.

பொழுது புலர்ந்தபோது
வழக்கம் போல் 
திருவாரூருக்கு 
ஓட்டமும் நடையுமாக 
வந்து சேர்ந்தார் 
ஐந்தெழுத்தை ஓதியபடி.

கோயிலின் 
உள்ளும் புறமும் 
செய்யத்தக்க
தொண்டுகள் செய்தார்.

மாலை 
அரனெறி 
கோயிலுக்கு வந்தார்.

நீர் கொண்டு 
விளக்கேற்றினார்.

இது 
அடுத்தடுத்த நாட்களும் 
தொடர்ந்து 
இதுவே அவரது 
அனுதினத் 
தொண்டானது.

நமி நந்தியடிகளின் 
தெய்வத் தொண்டை
ஊர் தொடங்கி 
நாடே புகழும் நிலை 
விரைவில் வந்தது.

சோழ மன்னனின் 
செவிகளில் இச்செய்தி 
தேனாகப் பாய்ந்தது.

நமி நந்தியடிகளையே
திருவாரூர் 
தியாகராஜர் கோயிலுக்குத் 
தலைமை அர்ச்சகராக
நியமித்தான். 

கோயிலின் 
நித்திய வழிபாட்டிற்கு 
நிரந்தர ஏற்பாடு 
செய்து கொடுத்தான். 

அடிகள் மூலம் 
பல திருப்பணிகள் 
செய்தான்.

பங்குனி உத்திரப்
பெருவிழாவை 
வெகு விமரிசையாக 
நமி நந்தியார் 
உதவியோடு நடத்திப்
பெரும்புகழ் கொண்டான்.





திருவாரூர் தியாகேசர் 
ஆண்டுக்கு ஒருமுறை 
அருகில் உள்ள 
திருமணலியில் 
எழுந்தருளி 
திருவீதி உலா 
வருவது வழக்கம்.

ஊரே விழாக் கோலம் 
பூண்டிருக்கும். 
எல்லாக் குலத்தினரும் 
வேறுபாடு இன்றி 
ஒன்று கூடி 
தியாகேசுவரரை
வழிபட்டு மன மகிழ்வர்.

அந்த ஆண்டும் 
ஆண்டவர் 
திருமணலியில் 
எழுந்தருளினார்.

இவ்விழாவில் 
மிகுந்த சிரத்தையோடு 
நமி நந்தியடிகளும் 
கூட்ட நெரிசலில்
சிக்குண்டு...
கலந்து கொண்டு 
இறை தரிசனம் கண்டு
ஊர் திரும்பினார்.

வீடு திரும்பியவர் 
வீட்டிற்குள் செல்லாமல் புறக்கடையிலேயே 
களைப்புற்றுப் படுத்தார்.

இது கண்ட 
இல்லாள் ஓடி வந்து
"ஏன் இப்படி 
இங்கே இருளில் 
படுக்கிறீர்கள் ?

நடுநிசி பூஜை 
பாக்கியிருக்கிறதே !

உணவு 
உண்ணவும் வேண்டுமே!
வழக்கம்போல் 
எல்லாம் முடித்துவிட்டு 
அப்புறம் தூங்குங்கள்"
என்று பணிந்தாள்.

"பெண்ணே ...!
இன்று மணலியில் 
நடந்த விழாவில் 
கலந்து கொண்டேன் 
அல்லவா?

அங்கு பல்வேறு 
இனத்து மக்கள் 
வந்திருந்தார்கள். 
அவர்களுடன்
நானும் ஒட்டியபடி
கலந்தேன்.

அதனால் 
தீண்டப் பட்ட உணர்வு.....
'தீட்டு' பட்டவனாய் 
உடம்பு களங்கமுற்றதாய் நினைக்கிறேன்.

பிராயச்சித்தமாக 
குளித்தாக வேண்டும்.

நீ நீர் கொண்டு வா!
குளித்துவிட்டு 
வீட்டிற்குள் வந்து 
சிவபூஜை செய்து
ஹோமம் வளர்த்து 
உணவு உட்கொண்டு 
உறங்கப் போகிறேன்"
என்றார் 
மனக்கிலேசத்தோடு.

மனையாள்
குளிர்ந்த நீர் 
எடுத்து வருவதற்குள் 
களைப்பும் குழப்பமும் 
ஒன்று சேர்ந்து 
அவரைத் 
தூக்கத்தில் 
ஆழ்த்தியது.

கனவில் 
வந்தார் 
கண்ணுதற் கடவுள்.

"அன்பரே.….!
திருவாரூரில் 
பிறந்த யாவருமே 
நமது ஞானமறையோரே!
நமது சிவகணங்களே!

அதனை நாம் காட்ட 
நீ நாளை காண்பாயாக!"
என அருளி அக்கணமே
மறைந்தார் மகேசன்.

திடுமெனக்
கண்விழித்த 
நமி நந்தியடிகளுக்கு 
குற்றம் செய்துவிட்ட 
ஞானம் தோன்றி 
நடுக்கம் ஏற்பட்டது.

'அந்தோ...! 
திருவிழாவில் 
சகல குலத்தவரும் 
கலந்து கொண்டதால்  
தூய்மை குன்றி 
தீட்டுப்பட்டு விட்டது 
என்றல்லவா 
நினைத்திருந்தேன்.

இப்போது 
இறைவனே 
கனவில் வந்து 
தீண்டாமை பாவம் 
என உணர்த்திவிட்டாரே..!'
என்ற குற்ற உணர்வோடு 
மனைவி 
குளிக்கக் கொண்டு வந்த 
குளிர் நீரை 
லட்சியம் செய்யாமல் 
குளிக்காமல் 
மனை புகுந்து 
நடுநிசிப்
பூஜையை நடத்தி 
பிராயச்சித்தம் 
செய்து கொண்டதாகக்
கருதிக் கொண்டு
இறைவனைத் தொழுதார்.

விடியற்காலை 
திருவாரூர் வீதிகளில் 
நமி நந்தியடிகள்....

வழியெங்கும் 
அவர்
கண்ணில்பட்ட 
திருவாரூரில் 
பிறந்து 
வளர்ந்த மக்கள் 
எல்லோரும் 
சிவ சொரூபிகளாக 
பிரகாசமாக அவருக்குக் காட்சியளித்தனர்.

'சிவ...சிவ ....'
என்றபடியே
அவர்களைத்
தலைமேல் 
கரம் குவித்துத்
தொழுதார். 
மண்மேல் வீழ்ந்து 
பணிந்தார்.

தலை உயர்த்தி 
எழுந்து பார்த்தபோது 
மக்கள் அனைவரின் 
தோற்றமும் 
முன்பு மாதிரி
மாறிப் போயிருந்தது.

'இறைவன் படைப்பில் 
குல பேதம் ஏதுமில்லை இறைவனுக்கு 
அது 
ஏற்புடையதும் இல்லை'
என்பதைப் பூரணமாக 
அறிந்து கொண்ட 
நமி நந்தியடிகள் 
கோயிலுக்குச் சென்று 
இறைமுன் 
கண்ணீர் மல்க 
'அடியேன் பிழையைப் 
பொறுத்தருள வேண்டும்'
என வேண்டி நின்றார்.

இந்நிகழ்வுக்குப் பின்னர்
சொந்த ஊரான 
ஏமப்பேறூரை விடுத்து திருவாரூரிலேயே தங்கி 
சிவத்தொண்டு
புரியலானார்.

தண்ணீரில் 
விளக்கெரித்த 
தன்னிகரில்லா
நமி நந்தியடிகள் 
அடுத்து சில காலம்
திருவாரூரில் 
சிவத் தொண்டாற்றிவிட்டு 
ஒரு நன்னாளில் 
நமி நந்தியடிகள் நாயனாராக
நம்பெருமானின்
திருவடி ஜோதியில் கலந்தார்.

நமி நந்தியடிகள் நாயனாரை
திருநாவுக்கரசர் பெருமானும்
திருஞானசம்பந்தர் பெருமானும்
சுந்தரமூர்த்திப் பெருமானும்
போற்றிப் பாடியுள்ளனர்.

தூய்மையான தங்கம் 
எனும் பொருள் படும்படி
'தொண்டர்க்கு ஆணி'
என்கிறார் நாவுக்கரசர்.

'அரு நம்பி 
நமிநந்தி யடியார்க்கும் அடியேன் ' என்பது சுந்தரரின் வாக்கு.



திருத்தலக்குறிப்பு


திருவாரூருக்குத்
தெற்கே 
திருத்துறைப்பூண்டிக்குச்
செல்லும் சாலையில் 
6 கல் தொலைவில் 
ஏமப்பேறூர் உள்ளது.

இப்போது 
அவ்வூரின் பெயர் 
திருமப்பற்று. 
திருநெய்ப்பேறு
என்ற இன்னொரு 
பெயரும் உள்ளது.

இங்கு 
நமி நந்தியடிகள் நாயனாருக்குத்
தனி ஆலயம் உள்ளது.


ஓம் நமசிவாய!

கருத்துகள்

  1. நாயன்மார்களின் சரித்திரத்தை இரத்தினச் சுருக்கமாகவும் மிகவும் விறுவிறுப்பாகவும் தந்தமைக்கு தோழர் மாரிமைந்தன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)