ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

 

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்


63 நாயன்மார்கள் வரலாறு

                                                -- மாரிமைந்தன் சிவராமன்


பொன் கொழிக்கும் 
காவிரி நதியின் 
வடகரையில் 
திருப்பெருமங்கலம் 
என்னும் திருத்தலம்.

நெற்றியில் 
திருநீறு கலந்திருக்கும் 
சிவபக்தர்கள்
நிறைந்த ஊர் அது.

எப்போதும் 
சிவ வழிபாடும் 
விழாக்களும் 
களைகட்ட 
சிவபுரிபோல் 
காட்சி அளிக்கும்.

திருப்பெருமங்கலத்தில் 
திருநிறைந்த 
வேளாளர் ஒருவர்.

அவர் திருநாமம் 
கலிக்காமர். 
பெருமங்கலத்தில் 
புகழ்மிக்க 
குலம் ஏயர்குடி.
அப்பெருங்குடியின்
தலைவர் என்பதால் 
'ஏயர்கோன்' 
என்று போற்றப்பட்டார்.

சோழ மன்னர்களுக்குப் 
பரம்பரை பரம்பரையாக 
படைத்தலைவர்களாக 
சேவையாற்றி வந்தவர்கள்
ஏயர்குடி மக்களே.

ஏயர்கோன் கலிக்காமர்
வேளாண் தொழிலில்  
பெரும் செல்வந்தராக 
விளங்கியதோடு 
சோழ மன்னனுக்குப் 
படைத்தளபதியாக 
செல்வாக்காக
இருந்து வந்தார்.

இதற்கு மேலாக 
அவர் ஒரு 
சிறந்த சிவ பக்தர்.

திருநீற்றை விரும்பும் 
சிவபெருமானின் திருவடியே 
உண்மையான செல்வம்' 
என்பதே 
அவரது சிவநெறி.
வாழ்வியில் கோட்பாடு.

திருப்பெருமங்கலத்திற்கு 
அருகே திருப்புன்கூர் 
என்னும் சிவ தலம்.

புன்கு எனும்
புங்கை மரத்தின் கீழ் 
சிவலோகநாதர் 
அருளாட்சி புரிந்து வந்ததால் 
ஊருக்கு அப்பெயர் 
காரணப் பெயராய் அமைந்தது.

செம்பொன் என்பதே
இறைவனின் திருவடி 
என்று 
சிவ பிரானின் திருவடியை 
இறுகப் பற்றிய கலிக்காமர் 
திருப்புன்கூர் சிவனாருக்கு 
எண்ணற்ற திருப்பணிகள் செய்து 
சிவனடியார்கள் உள்ளத்தில் 
செம்பொன்னாக 
ஒளிர்ந்து வந்தார்.

ஒரு நாள் ஒரு செய்தி 
அவர் காதுக்கு வந்தது.
அது கேட்டு 
துடி துடித்துப் போனார்.
உள்ளம் கொதித்து 
முகமெல்லாம் சிவந்து 
சினத்தின் உச்சியில்
கனத்த வார்த்தைகளைக் 
கொட்டித் தீர்த்தார். 

வேறொன்றுமில்லை.

மற்ற நாயன்மார்களைப் 
போல் அல்லாமல்
சிவபெருமானைத் 
தோழனாகக் கருதி 
வழிபட்டு வந்த சுந்தரர்
தனது காதலியான 
பரவையாரிடம் 
சிவபிரானையே 
தூது அனுப்பியதாக 
கேள்விப்பட்டார் கலிக்காமர்.

ஆளுடைய பரமசிவனுக்கு 
தன் ஆள் ஒருத்திக்காக
பணியாள் போல் 
வேலை சொல்லி 
அனுப்பிய சுந்தரர் மீது 
எல்லையில்லா கோபம் கொப்பளித்தது.

சுந்தரர் -பரவையார் 
இருவரின் ஊடலுக்காக
இறையனார் 
திருவாரூர் வீதிகளில் 
விடிய விடிய பாதங்கள் நோக 
அலைந்ததை எண்ணி 
வேதனைப் பட்டார்.

'அன்பெனும் பிடியில் 
அகப்படும் மலையாம்
அம்பலவாணர் தான் 
தூது போக 
சம்மதித்தார் 
என்றால் 
இந்த சுந்தரனுக்கு 
எங்கே புத்தி போயிற்று ? 

இவன் எல்லாம் 
ஒரு சிவ தொண்டனா ?

அய்யகோ.... 
இச்செய்தி கேட்டும்
என் ஆவி போகவில்லையே !
படுபாவி ஆனேனே !
பேயாகிப் போனேனே !!


சுந்தரன் மட்டும் 
என் கைகளில் சிக்கினால் 
என்ன நிகழுமோ ?'
என்று 
அனல் வார்த்தைகளை உமிழ்ந்தார்.
செய்தி கேட்ட 
நொடி முதல்
சுந்தரரை திட்டிக் 
கொண்டே இருந்தார்.

கலிக்காமரின் 
கடும் கோபம் குறித்து 
சுந்தரருக்குத் தெரிய வந்தது.

சுந்தரர் 
தன் தவறை எண்ணி 
மாபெரும் பிழை 
செய்து விட்டதாக 
வேதனைப்பட்டார்.

ஒரு சிவனடியாரின் 
மனத்தில் 
வேதனையை 
நிரப்பியதற்காக 
மனம் நொந்தர்.

கலிக்காமரின் சினத்தை 
உடனே தணிக்கப் 
பிரியப்பட்டார்.

அதற்கு 
என்ன செய்தார் தெரியுமா?
எல்லாம் வல்ல 
எல்லையற்ற 
புகழுடைய எம்பிரானிடமே 
தஞ்சமடைந்து 
முதலில் தன் பிழையைப் 
பொறுத்தருள வேண்டுமென 
வேண்டினார்.

கூடவே எப்படியாகிலும் 
கலிக்காமரின் சினம் 
தணிக்கச் செய்து 
அவரது தூய ஆசியைப் 
பெற்றுத் தர கடவுளிடம்
கண்ணீர் மல்க வேண்டினார்.

சுந்தரருக்காக 
ஏற்கனவே 
பரவையாரிடம் தூது போன
கயிலை மன்னன்
கலிக்காமரிடம் 
தூது போக மாட்டாரா என்ன !

சுந்தரரின்
வேண்டுகோளைப் 
பூர்த்தி செய்யும் வண்ணம் 
இருவரையும் கூட்டுவிக்க 
இறைவன் 
திருவுளம் கொண்டார்.

இரு சிவனடியார்களையும்  
ஒருமைப்படுத்த 
கூத்த பிரானின்
திருவிளையாடல் 
இனிது தொடங்கியது.

உடலை வாட்டி வதைத்து 
உருக்குலைக்கும் 
சூலை நோயை தன்னருளால் 
கலிக்காமருக்கு ஏவி விட்டார்
கங்கைச் சடையன்.

கலிக்காமர்
துடித்துப் போனார்.

தாங்கொணா நோயைத்
தாங்கிக் கொண்டு 
பரமன் பதம் பணிந்தார்.
சிவ சிந்தனையில் மூழ்கி 
வலிமறக்க வழி தேடினார்.

ஆனால் வயிற்று வலி 
மிகுந்ததே தவிர 
குறைந்தபாடில்லை.

'இனி வாழ்ந்து என்ன பயன் ?'
என கலிக்காமர் எண்ணிய 
சரியான தருணத்தில் 
திருப்புன்கூர்
திருமூலநாதர் 
கலிக்காமருக்கு 
நேரில் 
அருட்காட்சி அளித்தார்.

கலிக்காமருக்கு 
தலைகால் புரியவில்லை.
நிஜம்தானா என்று 
தன்னைக் கிள்ளியும்
கன்னத்தில் பலமாக அடித்தும் 
பார்த்துக் கொண்டார்.
வலி மிகுந்த வயிற்றையும்
விட்டு வைக்காமல் 
புரட்டிப் பார்த்தார். 

பரவசம் கொண்ட 
கலிக்காமர் 
உலக முதல்வனின்
ஆடல் அறியாமல் 
'என் தந்தையையும் 
பாட்டனாரையும் 
முப்பாட்டனாரையும் 
எம் குலத்தையும் 
எப்போதும் காப்பவரே !

எனக்கு நீங்கள் 
காட்சி தந்தது 
பெரும் பாக்கியம்.
பிறவி பயன் 
அடைந்து விட்டேன்.'
என தாழ் பணிந்தார்.

"அன்பரே.....!
என்ன வேண்டும் கேள் "
எதுவுமே தெரியாதவர் போல்
கேட்டார் ஏகாந்த நாயகன்.

கலிக்காமர்
வலி தாங்க முடியாமல் 
வயிற்றைத் தடவ
"கவலைப்படாதே....
கலிக்காமரே!

எனக்கு 
சுந்தரர் என்று ஒரு நண்பர் 
திருவாரூரில் இருக்கிறார்.
அவர் இந்நோயை 
நீக்குவதில் வல்லவர்.

அவரை விட்டால் 
இந்நோயை நீக்கும் 
வல்லாளர் 
எனக்குத் தெரிந்து 
யாரும் இல்லை. "

கலிக்காமர் 
முகம் மாறுவதைக் 
கவனிக்காதவர்  போல் 
முக்கண்ணர் 
முத்தாய்ப்பாய் 
இப்படியொரு 
தீர்வு சொன்னார்.

"ஐயன்மீர்.....
சுந்தரரா.....
வேண்டவே வேண்டாம்.

உலகாளும் உங்களைப்
பணியாள் போல் பாவித்த 
சுந்தரரால் தான் 
என் நோய் தீரும் என்றால் 
இந்நோயே இருந்து 
விட்டுப் போகட்டும்.

நோய் முற்றி 
நான் செத்தாலும் 
பரவாயில்லை.

தாங்கள் நேரில் வந்து 
வற்புறுத்தி கூறிய போதும் 
என் நிலை இதுவே "
கடவுள் என்றும் பாராது 
கண்டிப்பாய் சொன்னார்.

நெற்றிக்கண்ணர் 
சுட்டெரிக்காது 
புன்னகைத்து விட்டு 
சட்டென மறைந்து போனார்.

அதேசமயம் 
நம்பியூரார் சுந்தரர் 
கனவிலும் வந்தார் 
அம்பலத்தீசர்.

"தோழனே... 
என் அருமை பக்தனே! 

கலிக்காமர்
சூலை நோய் கொண்டு 
உயிரோடு 
போராடிக் கொண்டிருக்கிறார்.

நீ விரைந்து போய் காப்பாற்று"

கனவினின்று 
காணாமல் போனார்
கபாலக் கூத்தர்.

மறுநாள் மகிழ்ச்சியோடு 
சுந்தரமூர்த்தியார்
மறை நாயகனின் 
ஆஞ்ஞையை
தலை மேற்கொண்டு 
திருப்பெருமங்கலம் 
பயணித்தார்.

தன் வருகையை 
கலிக்காமருக்குத் தெரிவிக்க 
முன் செல்பவரைப் 
பணித்தார்.

அந்த ஆள் 
தந்த செய்தி 
கலிக்காமரை 
வெகுவாக பாதித்தது.

சிறு கணமும் 
யோசிக்காமல் 
'அந்த சுந்தரன் 
வந்து சேர்ந்து 
என் சூலை நோயை 
தீர்ப்பதற்கு 
வாய்பளிக்காமல்
நானே எனை வலிந்து 
சாகடிப்பேன்'
என்றவாறே 
உடைவாளை எடுத்து 
தன் வயிற்றில் பாய்ச்சி 
இரத்தம் பீறிட்டெழ 
ஒரு கணத்தில்
மாய்ந்து போனார்.

கணவன் அருகில் 
கண் துஞ்சாமல் 
தாய் போல் 
கவனித்துக் காத்து வந்த 
மங்கை நல்லாள் 
கலிக்காமரின் 
செயல் கண்டு கலங்கி 
கணவரோடு தானும் 
செத்தொழியத் தயாரானாள்.

அப்போது பணியாள் 
ஒருவன் ஓடிவந்து
சிவனடியார் ஒருவர்
வீட்டு வாசலில் 
காத்திருப்பதாகத் 
தகவல் தந்தான்.

கலிக்காமரின் 
நிலையைப் பார்த்த 
அவனது விசுவாசக் கதறல்
வீட்டில் உள்ளோரை
அருகில் வரச் செய்தது.

பார்த்தவர்கள் பதறினர்.
நெஞ்சு வெடித்துக் கதறினர்.

சூழ்நிலையை பார்த்த 
கலிக்காமரின் துணைவியார்
"யாரும் அழாதீர்கள்...
நம் அவலம் வரும் 
சிவனடியாருக்குத்
தெரிய வேண்டாம்.

அவரை முறைப்படி 
வரவேற்று
உபசரித்து அனுப்பிவிட்டு
அடுத்து செய்வன செய்யலாம்."

ஆணையிட்டவாறே
தன் கண்ணீரைத் 
துடைத்துக் கொண்டு 
போலிப் புன்னகையோடு 
வாசல் நோக்கி சென்றாள்.

வரவேற்பும் உபசரிப்பும் 
முடிந்த போது
சுந்தரர் வினவினார்.

"கலிக்காமர் எப்படி இருக்கிறார்? 
நலமாகத் தானே இருக்கிறார் ?"

"எங்கள் ஏயர்கோன்
நன்றாகவே உள்ளார். 
இப்போது பள்ளி அறையில் 
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்."
விரைந்து சொன்னான் 
ஒரு மூத்த பணியாள்.

"அவரைப் பார்த்தால் தான் 
என் மனம் நிம்மதியுறும்"
என்றவாறே சுந்தரர் 
படுக்கை அறைக்குள் 
நுழைந்தார்.

அங்கே 
கலிக்காமர்
குடல் சரிந்து 
இரத்தம் எல்லாம் 
வடிந்து உலர்ந்து 
உயிரற்றவராய் 
தரையில் கிடந்தார்.

"ஐயகோ.... 
என்னால் தானே 
இத்தனை துயர்.
இறை மெச்சும்
தூய அடியாரின் 
உயிர் துறப்பு. 
இறைவா.......
உன் கட்டளையை 
நிறைவேற்றாத 
பாவியானேனே"
என கதறியவாறு 
தனது இடை வாளினை 
கண்நொடிக்குள் எடுத்து 
கழுத்தறுத்து 
சாகத் துணிந்தார் 
நம்பியூரான் தோழர்.

இதுவே தருணம் 
என கருதிக்
காத்திருந்த 
கயிலை வேந்தன்
ஓர் அருள் பார்வை பார்க்க
அக்கணமே
கலிக்காமர் உயிர்த்தெழுந்தார்.

கண்விழித்தவர்
கண்ணெதிரே
சுந்தரர் கழுத்தறுக்க
யத்தனித்த நிலை கண்டு
விரைந்தெழுந்து 
அவர் கரம் பிடித்து
மரணம் தடுத்தார்.

இருவருமே
இறைவனின்
திருவிளையாடலைப் 
பூரணமாக 
உணர்ந்து கொண்டு
அன்பொழுக 
ஆரத்தழுவினர்.

கலிக்காமர் காலில் 
சுந்தரர் பணிந்து விழுந்தும்
சுந்தரர் திருவடிகளில் 
கலிக்காமர் 
கண்ணீர் மல்க விழுந்ததும் 
ஆடும் நாதனின் 
திருவிளையாடலை பரிபூரணமாக்கின.

பின்னர்
இரு அடியார்களும் 
திருப்புன்கூர் சென்று 
நெகிழ்ந்து நெகிழ்ந்து
சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போதுதான் 
சுந்தரமூர்த்தி நாயனார் 
'அந்தணாளன்'
எனத் தொடங்கும் 
பதிகம் பாடினார்
என்பது ஆன்மீகக் குறிப்பு.

சில நாட்கள் 
திருப்பெருமங்கலத்தில் 
சுந்தரர் தங்கி 
உரையாடி மகிழ்ந்தார்.

சுந்தரர் 
திருவாரூருக்கு 
கிளம்பும் போது
கலிக்காமர்
அவருடனே சென்று
திருவாரூரில் 
சில காலம் தங்கி
சுந்தரர் பெருமானோடு
தியாகேசரை வணங்கி 
மகிழ்ந்தார்.

பின்னொரு நாள் 
சுந்தரரிடம் 
அனுமதி பெற்று 
திருப்பெருமங்கலம் திரும்பிய 'ஏயர்கோன் 
கலிக்காம நாயனார் '
இறை பணிகள் 
இடையறாது செய்து
இறைவனே மெச்சும்
சிவ பணிகள் பல செய்து
உரிய காலத்தில் 
சிவபதம் பற்றி 
சிவகணமானார்.

ஏயர்கோன் கலிக்காமர் அடியார்க்கு அடியேன் - சுந்தரர்.


திருத்தலக்குறிப்பு

திருப்பெருமங்கலம் திருப்புன்கூருக்கு வடக்கே 
ஒரு கல்தொலைவில் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)