சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பட்டினத்தார் (பாகம் 3)


பட்டினத்தார் 

(பாகம் 3)

மாரிமைந்தன் சிவராமன்


பட்டினத்தாரின்
தேச சஞ்சாரம்
தெய்வ 
வழிகாட்டலில்
துவங்கியது.

முதலில்
சென்றது
திருவாரூர்.

அங்கு அவர்
நிகழ்த்திய 
அதிசயம்
அற்புதம்!

திருவாரூரே
திருவடி தொழுத
பேரதிசயம்.

பட்டினத்தார்
சில காலம்
திருவாரூரில்
தங்கியிருந்தார்.

ஒரு
சிறுவன்.

அவனுக்குப்
பட்டினத்தாரைப்
பார்த்த மாத்திரத்தில்
பிடித்துப் போனது.

அவனது
பணிவிடை
பட்டினத்தாருக்குப்
பிடித்திருந்தது. 

அல்லும் பகலும்
அவரது
நிழலாய் இருந்தான்.

அருந்தவப் பயன்
என
மகிழ்ந்தான்.

ஒருநாள்
அவனது
அம்மாவும்
அத்தையும்
பட்டினத்தார்
பாதம்
வணங்கினர்.

''சுவாமி...!
உங்களிடம்
இருப்பவன்
என் மகன்தான்.

இவள்
அவன் அத்தை.
இவளுக்கு
ஓர் அழகிய மகள்.

இருவருக்கும்
திருமணம்
செய்துவிட்டால்
எங்களிருவருக்கும்
கடமை முடியும்.
நிம்மதி கிட்டும்.

ஆனால்
என் மகனோ
உங்களிடம்
ஒட்டிக் கொண்டான்.

இனி
உங்களுடனேயே
இருந்து விடுவதாக
உறுதியாகக் கூறுகிறான்.

எங்கள் குடும்பம்
தழைக்க
வழி செய்யுங்கள்.
சுவாமி.''

அம்மா
புலம்பினாள்.
அத்தை
கண்ணீர் சிந்தினாள்.

பட்டினத்தார்
பையனை
அழைத்தார்.

''திருமணம்
செய்து கொள்.
திருவருள்
கிட்டும்.

அம்மா
அத்தை
அந்தப் பெண்
மனம்
குளிரும்.
உன் மணம்
சிறக்கும்.''

''இல்லை
சுவாமி...
உங்களுடனேயே
இருந்து விடுகிறேன்.
உங்களுடனேயே
வந்து விடுகிறேன்.
உங்களுக்குப்
பணி செய்வது
என் குலம்
செய்த பாக்கியம்."

ஏதோதோ
தர்க்கம் செய்தான்.
பட்டினத்தார்
உறுதியாய்ச்
சொன்னார்.

''என்
பேச்சைக்
கேள்.
மீறாதே!''

அரை மனத்தோடு
சம்மதித்தான்.

"நீங்கள்
வந்து
ஆசிர்வதிக்க
வேண்டும்.''
நிபந்தனை
விதித்தான்.

''கண்டிப்பாய்.''
கண்ணசைத்தார்
பட்டினத்தார்.

திருமணம் நடந்தது.
அருள் மயமானவர்
அருகிருந்து வாழ்த்தினார்.

இறை பசி நிறைந்தது.
இரை பசி குறைந்தது.

சர்வ காலம்
இறைவனைச்
சிந்தித்தவராய் இருந்த
பட்டினத்தார்
அடுத்து
மதுரை செல்லத்
திட்டமிட்டார்.

புறப்படும் நேரம்
ஒரு பூகம்பத்
தகவல் வந்தது.

புதிய மணமகன்
மரணித்திருந்தான்.

சடலத்தைப்
பார்க்க
வீடு
நுழைந்த
போது
பெரிசொன்று 
சொன்னது.

''மோகம்
முப்பது நாள்.
இவன்
வாழ்வே
முப்பது நாள்
ஆகிப் போயிற்றே!''

உடனிருந்த 
ஒரு பெரிசு
உருகிற்று.

''ஆமாம்பா...

பாவம்.
அறியாப் பையன்.
நேற்று
எண்ணெய் தேய்த்துக்
குளித்திருக்கிறான்.
இரவு
மனைவியோடு
களித்திருக்கிறான்.
ஜன்னி வந்து
துடிதுடித்தான். 
எமன் வந்து
பிடித்துச் சென்றான்."

பட்டினத்தாரைக்
கண்டு
கூட்டம் விலகியது.

தாயின் சடலத்தைக்
கண்டு
சஞ்சலம் காணாதவர்
அப் பையனின்
மரணம் கண்டு
மனம் நெகிழ்ந்தார்.

கண்கள் அவனைக்
கனிந்து நோக்கின.
அவரது திருவாய்
பாடல் படித்தது.

என்னே
அதிசயம்...!
ஏதும்
நடக்காதது போல்
அந்தப் பையன்
எழுந்தான்.

''சுவாமிக்குப்
பசிக்கும்.
பசியாற்ற
வேண்டும்."
விரைந்தோடினான்
கூடியிருக்கும்
கூட்டத்தை
லட்சியம்
செய்யாமலேயே!

ஊரே
உணர்ச்சிப் பூர்வமாய்
பட்டினத்தாரைக்
கொண்டாடியது.

''செத்தவனைப்
பிழைக்க வைத்த
சுவாமி''
என
ஒட்டு மொத்தமாகத்
தாள் பணிந்தது.

சிறு நகை கூடக்
காட்டாமல்
பட்டினத்தார்
புறப்பட்டார்.

''சுவாமி
இங்கேயே
இருந்து விடுங்கள்.
ஊரே
உங்களுக்குத்
தொண்டு செய்யும்.''

மறுக்காமல்
ஏற்காமல்
முகக் குறிப்பு
காட்டாமல்
பட்டினத்தார் 
புறப்பட்டார்.

அன்று முதல் 
அவரது 
பேச்சும் நின்றது.
மௌனமே 
பாஷையானது.

அது ஏன்?

அது 
சித்தர் ரகசியமாய்
இருக்கும்!




பாண்டிய நாட்டில்
மதுரை
பேரையூர்
கொங்கு நாட்டில்
அவிநாசி
திருமுருகன்பூண்டி
என
சஞ்சாரம்
தொடர்ந்தது.



ஏதோ
ஓர் ஊர்.

பட்டினத்தார்
பயணத்தில்
இடையில்
அவ்வூர்.

ஒரு
வீட்டின் முன்
நின்றார்.

மௌனம்
மொழியானதால்
வீட்டிலிருந்தவரைக்
கை தட்டி
அழைத்தார்.

''பிச்சை''
எனச்
சைகை
காட்டினார்.

வீட்டிலிருந்தவன்
கோணல் புத்திக்காரன்.

''என்ன திமிர்!
கை தட்டி
அழைக்கிறானே'"
எனக்
கோலோடு வந்தான்.

பட்டினத்தாரைச்
சாத்து சாத்து
என்று
குச்சியால்
பின்னி எடுத்தான்.

ஒரு துளி
சத்தமில்லை.
அப்படியே
நின்றிருந்தார்
அருளாளர்.

பக்கத்து 
வீட்டுக்காரன்
ஓடி வந்தான்.

அடித்தவனைத்
தடுத்து
''இவர் சிவனடியார்
போலிருக்கிறார்.
அடிக்காதே.
பாவம் சேர்க்காதே."
கோபித்தான்.

கோல் பறித்துத்
தூக்கி எறிந்தான்.

உடம்பில்
பட்டை பட்டையாய்த்
தடியடிப் பதிவுகள்.

அடுத்த அடி
நகர்ந்தார்
பட்டினத்தார்
ஏதும் நிகழாதது போல்.

அவர்
சிந்தையில்
ஒரு
ஜோதி எழுந்தது.

அது
சொன்னது.
'ஒரு
சாண் வயிற்றுக்கா
இந்தப் பாடு?
இத்தனை அடிகள்?'

கேள்வி கேட்ட
அகச் சுடரே
பதிலும் தந்தது.

'இனி
உணவுக்காகக்
கையேந்த வேண்டாம்.
தேடி வரும்
உணவை மட்டும்
எடுக்கலாம்.'

மௌன சுவாமிக்கு
உணவு குறித்தும்
தெளிவு தந்தது
இறை உணர்வே!


திருக்கோகர்ணம்
சென்றார்.
அங்கு சில நாட்கள்.

பின்
உஞ்சேனை மாதாளம்
எனும்
ஊரை
அடைந்தார்.

அவ்வூர்
ஒரு புதிய பாடத்தை
ஒரு புதிய சீடரை
ஒரு புதிய சித்தரை
உலகுக்கு அளித்தது.


உஜ்ஜயினியில்
மகா காலேஸ்வரர்
என்ற பெயரில்
இறைவன்
அருளாட்சி
புரிந்து கொண்டிருந்தார்.

ஒரு முறை
பட்டினத்தார்
பட்டினத்தில் தங்காமல்
ஊரின் 
ஒதுக்குப்புறத்தில்
ஒரு
விநாயகர் கோயிலில்
தங்கி இருந்தார்.

ஒரு கள்வர்
கூட்டம்
விநாயகருடன்
ஒரு
கள்ளக் கூட்டணி
அமைத்திருந்தது.

திருடுவது.
அதில்
ஒரு பகுதியை
விநாயகருக்குத்
தந்து விடுவது
என்பது
கள்வர்களே
போட்டிருந்த
ஒப்பந்தம்.

இந்த
ஒரு தலைத்
திருட்டில்
விநாயகர்
ஒரு
நற்செயலுக்காகக்
காத்திருந்தார்.

அன்று
அரண்மனையில்
பழுத்த வேட்டை.
திருடிய கள்வர்
விநாயகர் கோயிலில்
பங்கு பிரித்தனர்.

ஏதோ
சல சலவென்று
சத்தம் கேட்க
காவலர்கள்
துரத்தி வருவதாக
நினைத்த
கள்வர் கூட்டம்
விலை உயர்ந்த
பதக்கம் ஒன்றை
பிள்ளையார் பங்காக
அவர் இருந்த 
திசையில்
வீசி எறிந்தபடி
தப்பித்து ஓடினர்.

அந்தப் பதக்கம்
இருட்டில்
அமர்ந்த நிலையில்
தவத்திலிருந்த
தவமணியாம்
பட்டினத்தார்
கழுத்தில்
பாங்காக விழுந்து
ஜொலித்தது.

விரட்டி வந்த
காவலாளிகள்
அரண்மனை
நகையோடு
கண்மூடி
அமர்ந்திருந்த
பட்டினத்தாரைப்
பிடித்தனர்.

மௌனம்.
சலனமற்ற முகம்.
எதையும்
தடுக்காத
ஏகாந்த நிலை.

அடித்தார்கள்.
உதைத்தார்கள்.
அரசன் முன்
நிறுத்தினார்கள்.

‘'திருடன்"
என்றான் ஒருவன்.

''திருடர்கள்
தலைவன்''
என்றான்
இன்னொருவன்.

"ஏதோ உளறுகிறான்.
உற்றுக் கோட்டால்
'சிவ சிவ'
என்கிறது உதடு.

சிவனடியாராய்
இருப்பார் போலிருக்கு.''
ஒரு காவலன்
பயந்தான்.

''நம் கடமை
கயவனைப் பிடிப்பது.
தீர்ப்பளிப்பது
அரசன்.'' 

மூத்த காவலன்
கையும் களவுமாகப்
பட்டினத்தாரைப்
பிடித்ததாக
பதக்கத்தைக்
காட்டினான்
அரசவையில்.

அரசன்
சினந்தான்.
''கழுவிலேற்றுங்கள்.’'
ஆணையிட்டான்.

புன்முறுவல்
ஒன்றே
பட்டினத்தாரிடம்
வெளிப்பட்டது.

அது
அரசனை மேலும்
வெறியூட்டியது. 

அடுத்த கணங்களில்
கழுமரம் முன்
பட்டினத்தார்
நிறுத்தப்பட்டார்.

கனிவோடு
மரத்தைக்
கண்ணுற்றார்.

மெலிதாக
அவர் மனது
பாடியது
தத்துவப்
பாடலொன்றை.

''முன் செய்த
தீ வினையோ...
இங்ஙனே
வந்து
மூண்டதுவே!’'

பாடும் போதே
கழுமரம்
தீப்பற்றியது.
எரிந்தது.

பயந்து போயினர்
காவலர்கள்.
செய்தி
போனது
மன்னருக்கு.

அவன்
ஓடோடி வந்தான்.
தவறிழைத்ததாகத்
தாள் பணிந்தான்.

''விசாரிக்காத தீர்ப்பு.
தவறிழைத்தேன்.
மன்னியுங்கள்.”
மனம் ஒடிந்து
கால் பிடித்தான்.

அது போது
ஒரு பாடல்.
அது
அரசனுக்குக்
கேட்டது.

புரிந்தது.
தெளிந்தது சித்தம்.

அக்கணமே
அரச உடைகளை
கம்பீர அணிகலன்களை
உதறினான் அரசன்.

''சுவாமி
என்னை
உங்கள்
சீடனாக்கி
அருள் புரியுங்கள்."

''வா
என்னோடு."
பட்டினத்தாரின்
மௌன பாஷை
புதிய சீடனுக்குப்
புரிந்தது.

திரும்பிப் பார்க்காமல்
பட்டினத்தார் புறப்பட்டார்.
பின் தொடர்ந்தான்
அரசன்.

சிவயோக அனுபவம்
போதித்தார்.

உபதேசம்
பெற்ற மன்னன்
பெரும் பேறு
பெற்றான்.

அவனும்
பின்னாளில்
சித்தரானான்.

அவன் -
இல்லையில்லை
அவர்
பத்திரகிரியார்.

பட்டினத்தாரின்
பாதம் பற்றிய
சிவனடி ஒற்றிய
சீரிய சித்தர்.

குருநாதர்
பட்டினத்தாருக்கு
முன்னரேயே
பரமனடியில்
ஐக்கியமான
புண்ணிய சீடர்.




சேந்தனார்.
ஞாபகமிருக்கிறதா?

பட்டினத்தார்
செம்மையாக
காவிரிப்பூம்பட்டினத்தில்
அசரனுக்கு நிகராக
அருளோடும் பொருளோடும்
வணிகராக
ஆட்சி செய்த காலத்தில்
தலைமைக்
கணக்காயராக
உடனிருந்து உதவியவர்.

பட்டினத்தார்
துறவறம் பூண்ட
பின்னர்
அவரின்
சொத்துக் கணக்கைத்
தெளிவுறச் சொல்ல
முடியாததால்
மன்னனின்
கோபத்திற்குள்ளாகி
சிறைதனில்
தள்ளப்பட்டவர்.

பயந்த நிலையில்
வாழ வழியின்றி
அவரது பத்தினியும்
புத்திரனும்
நாட்டைவிட்டே
தம்மை
நாடு கடத்திக் கொண்டது
நெஞ்சுருகும் நிகழ்வு.

அவர்கள்
அடைக்கலமானது
திருவெண்காடு.



தேச சஞ்சாரத்தில்
மிகவும் பிடித்த
திருவெண்காடு
வந்தார்
பட்டினத்தார்.

சேந்தனார்
மனைவியும்
மகனும்
பட்டினத்தார்
வருகையை அறிந்து
வந்து வழிபட்டனர்.

நடந்த கதையை
நெஞ்சுருகச் 
சொல்லினர்.

யாரிடம்
சொல்வார்
பட்டினத்தார்.

வேறு யாரிடம்
அவர் போவார்?

நெஞ்சினில் இருக்கும்
நஞ்சுண்ட மூர்த்தியைச்
சிந்தையில் துதித்தார்.

தும்பிக்கையோனுக்குத்
தந்தை
தந்தி கொடுத்தார்.

பிள்ளையார்
தும்பிக்கை
நீட்டி
சிறையிலிருந்த 
சேந்தனாரை
விடுவித்தார்.

நம்பிக்கையோடு
பட்டினத்தாரின்
பாதம் பணிந்தது
சேந்தனார் குடும்பம்.

''சேந்தனாரே...
சோர்வடைந்து விடாதீர்.
பரமன்
அருள் தருவான்.

இனித் தொல்லை
உமக்கிருக்காது. 

எப்போதும்
பிள்ளையாரின்
பார்வை
உமக்கிருக்கும்.

தில்லை செல்.

விறகு விற்று
வாழ்க்கை நடத்து.

தினந்தோறும்
சிவனடியார்
ஒருவருக்குப்
பசியாற்று.

பரமன்
வருவார்.
பாதம்
தருவார்.

நல்லதே நடக்கும்."

சேந்தனார்
குடும்பம்
தில்லை சென்றது.

ஆலயப் பணி
தொடர்ந்தது.

பட்டினத்தார்
கூறிய மாதிரி
ஒருநாள்
முதியவர்
ஒருவர்
வந்தார்.

அவருக்குக் களி
தந்தது
சேந்தனார் குடும்பம்.

களிப்புடன்
உண்டார்.

கொஞ்சம்
மேலாடை
விரித்துக்
கட்டியும் கொண்டார்.

விடை பெற்றார்.
விண்ணில் பறந்தார்.

களியமுதைத்
தன் முன்
வந்தவர்க்கெல்லாம்
தந்து மகிழ்ந்தார்.

வந்தவர்
எல்லாம் வல்ல
இறையருள் 
என்பது
புரியுமே!

சேந்தனார்
பெருமையை
உலகறியச் செய்ய
பின்னொரு நாளில்
ஆட்கொண்டார்.
அருள் சொரிந்தார்.

முக்தி பெற்றது
சேந்தனார் குடும்பம்.
அதற்கு
நல்வழி காட்டிய
கருணை வள்ளல்
பட்டினத்தார் அன்றோ!

தான்
ஞானப்பாதை காட்டிய
பத்திரகிரியாரையும்
தன் வழிகாட்டுதலால்
சேந்தனாரையும்
தனக்கு முன்னரே
இறையனார்
ஆட்கொண்டது
பட்டினத்தார்
மனத்தில்
சோர்வைத்
தந்தது.

''எனக்கு
எந்நாளோ?"
என
இறைவனை
நச்சரித்தார்.

பரமனே கனவில்
தோன்றி
''அன்பரே!
பேய்க் கரும்பு
தித்திக்கும்
ஓரிடத்தில்.

அதுவே
உன்
முக்தித் தலம்''
எனச் சொல்லி
மறைந்தார்.

ஒரு நாள்
தில்லையரசனைத்
தரிசித்துவிட்டு
கோயில் தூண் மேலே
சாய்ந்திருந்தார்.
ஓய்ந்திருந்தார்.

பட்டினத்தாருக்கு
லேசாய்ப் பசித்தது.
அப்படிப் பசித்து
வெகு காலமிருக்கும்.

உச்சி கால
பூஜை
அப்போதுதான்
முடிந்திருந்தது.

ஒரு
பெண்
பட்டினத்தார்
அருகில் வந்தாள்.

கையிலே
கோயில் பிரசாதம்.
அடிகளுக்குத்
தந்தாள்.

அவளது
நடை உடை
பாவனை
பட்டினத்தாருக்கு
வித்தியாசமாகப்
பட்டது.

அத்தாயின்
முகம் பார்க்க
நினைத்து
தலை 
உயர்த்தியபோது
அப்பெண்
உணவைத்
தந்து விட்டுத்
திரும்பத் தயாரானாள்.

சிறிது தூரம்
நடை போட்டாள்.
திடுமென
மறைந்து போனாள்.

மறைந்த திசையில்
உள்ளத்தைப் பதித்தார்.

உமையவள்
சிவகாம சுந்தரிதான்
பெண் வடிவில் வந்து
அழுது படைத்தவள்
என்று
புரிந்து போனது.

"அய்யய்யோ!
அன்னை வந்தும்
கவனியாதிருந்து
விட்டேனே!
உணரத் தவறிவிட்டேனே!"
என மனத்திற்குள்ளேயே
புலம்ப ஆரம்பித்தார்.

ஏற்கனவே 
கோலோடு 
நேரில் வந்த 
சிவபிரானை 
உணராமல் 
விட்டவர் அல்லவா!


அடுத்துச்
சென்றது காஞ்சிபுரம்.

அங்கு
அவருக்கு அன்னமிட்டது
அம்பிகை காமாட்சி தேவி.

இம்முறை
ஏமாறவில்லை.
இறைவியைத்
துதித்து மகிழ்ந்தார்.

கச்சித் திருவந்தாதி 
திருவேகம்பமாலை
கச்சித் திருவகவல்
காஞ்சியில் அருளினார். 



தவ யாத்திரை
தொடர்ந்தது.
தல யாத்திரை
நிறைந்து வந்தது.

தேடும்
எதையோ
நெருங்கிக்
கொண்டிருப்பதாய்
மனத்தில் பட்டது.

திருகாளத்தி
செல்ல விரும்பி
பயணம் தொடங்கினார்.

காடு வழிப் பயணம்.
பின்னாளில்
கண்ணப்ப நாயனார்
வாழ்ந்திருந்த
காடு.

காடு வாழ்
மிருகங்கள்
எல்லாம்
அவருக்குப்
பணி செய்தன.

பாம்புகள்
மணி விளக்கேந்தின.
யானைகள்
பாதையைச்
சீர்படுத்தின.

புலிகள்
பட்டினத்தாரின்
திருவடி பதிய இருக்கும்
பகுதியை வாலால்
சுத்தப்படுத்தின.

பறவையினங்கள்
மேலே பறந்து
நிழல் தந்தன.

வியந்தபடி
காளத்தி
ஈஸ்வரனைத்
துதித்தபடி
'என்ன செயல்
என்ன செயல்'
என
மனத்தினில்
பாடியபடி
காடு வழி
நடந்து
காளத்தி நாதரைக்
கனிந்துருகி
துதித்து மகிழ்ந்தார்.



அடுத்து
திருவொற்றியூர்.
மனம் ஒன்றிப் போனது
ஒற்றியூர் நாயகனிடம்.

ஒற்றியூர்
தெருவெல்லாம்
மெல்ல நடந்து
பூரித்துப் போனார்.

பாடல்கள் பல
பாடி மகிழ்ந்தார்.
'பிறவிப் பிணி
தீருவதற்குத்
திருவொற்றியூரே
அருள் மருந்து'
என்றிருந்தார்.

பல சித்துக்கள்
புரிந்தார்.
பார்த்தவர்
பாதம் ஒற்றினர்.
கேட்டவர்
வியந்து ஒன்றினர்.


திருவொற்றியூரில்
தோழர்கள் பெருகினர்.

ஆம்...
சின்னஞ் 
சிறுவர்கள்தாம்
அவர்தம்
பிஞ்சுத்
தோழர்கள்.

பசு மேய்க்கும்
சிறுவர்களுக்குப்
பட்டினத்தார்
மீது
கரிசனம் நிறைய.

மணலைச்
சர்க்கரையாக்கி
அவர்களுக்குத்
தருவார்.

அவர்களை
அழைத்து
குழி பறிக்கச்
சொல்வார்.

குழியினில்
அமர்ந்து
மண் மூடச்
சொல்வார்.

அச் சிறுவர்கள்
மறு பேச்சின்றி
அப்படியே
செய்வார்கள்.

முழுதாய்
மூடிய பின்னர்
திரும்பிப் பார்த்தால்
மணற் குன்றின் மேல்
நின்றபடி
க தட்டி அழைப்பார்.

இப்படிப்
பலமுறை
மாயம் காட்டினார்.

அன்றும்
அப்படித்தான்.

சிறுவர்
படையோடு
சித்தாடல் காட்ட
ஓரிடம் சென்றார்.

கரும்பு 
விளைந்த
கழனி சில
இடையில்
வந்தன.

போகிற போக்கில்
கரும்பொன்றை
ஒடித்தார்.

"பேய்க் கரும்பு...
வேண்டாம்..
வேண்டாம்."
சிறுவர்கள்
தடுத்தனர்.

கரும்பை
ஒடித்துக்
கடித்தார்.

அது
இனித்தது.

உள்ளத்தின்
உற்சாகம்
உடலெங்கும்
பரவியது.

அதன்பின்
சிறிது நேரம் 
விளையாட
சிறுவர்கள்
சூழ்ந்திருக்க
அவர்கள் 
பறித்த குழியில்
பட்டினத்தார் 
அமர்ந்தார்.

என்றும் போல
'ஹே...ஹே’
எனக்
கத்தியவாறே
சிறுவர்கள்
மண் அள்ளித்
தள்ளி
குழியை நிரப்பினர்.

திரும்பினர்.
குன்றைப்
பார்த்தனர்.

பட்டினத்தார்
காணவில்லை.
தேடினர்.
சுற்றும் முற்றும்
ஓடித் தேடினர்.

பட்டினத்தார்
எங்கும்
புலப்படவில்லை.
வெளிப்படவில்லை.

செய்தி பரவியது.
பெரியவர்கள்
வந்தார்கள்.

கலங்கியபடி
சிறுவர்கள்
காத்திருக்க
மூடிய குழியை
மீண்டும் தோண்டினர்.

அங்கே...
பட்டினத்தடிகள்
உடல் இல்லை.
பதிலாக
சிவலிங்கமொன்று
ஒளி பெருக்கிக்
கொண்டிருந்தது.

பெரியவர்களுக்குப்
புரிந்தது.
சிறுவர்களுக்குச்
சொன்னார்கள்.

'சுவாமி
சிவனென்றிருந்தார்.
இன்று
சிவமாகி விட்டார்.'

திரண்ட
ஊர் மக்கள்
சிவனடியார்கள்
'ஹர ஹர'
என
ஓங்கி ஒலித்தனர்.

''இனி
சுவாமி
வர மாட்டாரா?’'
மணல் தள்ளி
விளையாடிய
சிறு குழந்தை
கவலையாய்க்
கேட்டது.

''இல்லை...
அவர்
சாமி ஆயிட்டார்.
நம் கண்ணுக்குத்
தெரிய மாட்டார்.''
அப்பாக்காரர்
தப்பாகச் சொன்னார்.

பட்டினத்தாரை
இன்றும்
எவரும்
பார்க்கலாம்.

அருவுருவாய்
இருக்குமவர்
அதற்கு 
மனம் வைக்க
வேண்டும்.
காலம் நேரம்
கருதாமல்
சிவ சிந்தையில்
இருந்தபடி
நிதம்
அன்னதானம்
செய்தபடி
வாழ்வாங்கு
வாழ்வோருக்குக்
காட்சி தருவார்.

அவர்
லயமான
இடத்தில்
தரிசிப்போருக்கு
மகிழ்ச்சி மயமான
வாழ்க்கை கிட்டும்.

ஓம் நமசிவாய!

(பட்டினத்தார் திவ்விய சரித்திரம் நிறைவு)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

  1. குமார், சேலம்2 ஆகஸ்ட், 2025 அன்று 2:12 PM

    பட்டினத்தார் பற்றிய புதிய செய்திகளை இன்று தெரிந்து கொண்டேன். திரு.மாரிமைந்தன், திரு.பாண்டியராஜ், திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு நன்றி..🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)