சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - வியாக்ரபாதர்


 வியாக்ரபாதர் 

மாரிமைந்தன் சிவராமன்


பெயரே
வித்தியாசமாய் 
இருக்கிறதே!
வடநாட்டுச்
சித்தரா?
எனக்
கேட்கத் தோன்றும்.

இன்று வரை கூட
யாருக்கும்
தோன்றாத
வரம் ஒன்றை
இறைவனிடம்
இறைஞ்சிக்
கேட்டுப்
பெற்ற
பாக்கியசாலி
அவர்
என்பதை
அறிந்தால் 
வியப்பு மேலிடும்.

வியாக்ரபாதர்
பற்றிய தகவல்கள்
சுவாரஸ்யமானவை.

சிவ பக்தரான
மத்யந்தன 
முனிவர்
தவம் செய்து 
இறையருளால் 
ஒரு மகவு பெற்றார்.

அக்குழந்தையின் 
பெயர் மழன்.

நூல்கள் 
பல படித்து
வேதங்கள் பயின்று
இறைதேடல் 
மிகுந்தவர் ஆனார்
மழன்.

தந்தை 
மத்யந்தன
முனிவரிடம்
மழன் ஒரு சந்தேகம் 
கேட்டார்.

"தந்தையே 
இறைவனை 
அடையும் வழி 
தவமா?"

"யார் சொன்னது?

தவம் செய்தால் 
சொர்க்கம் அடையலாம்.
ஆனால்
மறுபிறவி இல்லாத
மகத்துவம் பெற
இறை பக்தி 
ஒன்றே வழி.

மழனே...
மகனே..

தில்லை செல்.
அதுவே ஓர் 
அடர் வனம்.
அங்கிருக்கும் 
தில்லையம்பதியை
வழிபட்டு
பூசைகள் செய்து வா.

உன் விருப்பமே 
உமையொரு பாகன்
விரும்பி வழங்கும்
வரமாகி
நீ நினைப்பதும் 
நிறைவேறும்.
நினைத்திராததும்
நிகழ்ந்து விடும்.

உன் பிறவியின் 
நோக்கம்
பூரணமடையும்."

தந்தை சொல் மிக்க 
மந்திரம் இல்லை.
மத்யந்தன முனிவர்
சொல்மிக்க
இறை அடையும் 
தந்திரம் இல்லை.

மழன்
தில்லைக்குச் 
சென்றார்.

பக்திச் சிரத்தையோடு
அர்ப்பணிப்பின்
அதி உச்சத்தோடு
சிவ வழிபாடு
செய்யத் துவங்கினார்.

எந்த சுகமும் நாடாது
சிவ முகமே போதும்
என வழிபட்டார்.

கண் துஞ்சாமல்
பற்றற்ற நிலையில்
சிவ பாதத்தையே
பற்றுக் கோடாகக் 
கொண்டு
வாழத் தொடங்கினார்.

தந்தையாகிய 
குரு அருளால்
ஆதி தந்தையாகிய
திருவருளால்
ஒரு நன்னாளில்
'மழ முனிவர்'
 ஆனார்.

மழ முனிவர் 
தொடக்கம்.
வியாக்ரபாதர்
நீடிக்கும் 
நிறைவு நிலை.

தில்லை
வனத்தில்
மூலநாதரைப்
பூசித்து வந்தார்
வியாக்ரபாதர்.

மலர்களைப்
பறித்து
இறைவனைப்
பூசிப்பது
அவருக்குப்
பிடித்தமான
ஒன்று.

பூசைக்காக
பூக்களைப்
பறிப்பதற்கும்
இலக்கணம்
உண்டு.

வாசமற்ற
பூக்கள்
இறைவனுக்கு
ஆகாது.

பூச்சிகள்
அமர்ந்ததும்
புழுக்கள்
நெளிந்ததும்
தூய்மையான
மலர்களல்ல.

பூக்களைப்
பறிக்கும்
போது
வெடுக்கெனப் 
பிடுங்காது
செடிக்கும்
வலிக்கும்
காம்புகளும்
துடிக்கும்
என்பது மாதிரி
மெல்லக்
கொய்ய
வேண்டும்.

கண்ட நினைப்பில்
மனக் குழப்பத்தில்
பறிக்கக்
கூடாது.

அனைத்துக்கும்
மேலாக
பறிக்கும் போது
இறை சிந்தனை
மட்டுமே
இருக்க வேண்டும்.

மந்திரத்தைச்
சொல்லிப்
பறிக்கும் போது
உமிழ் நீர்
மலர்களில்
பட்டுவிடக் கூடாது.

வாயில்
துணி கட்டிக் கொண்டு
பறிப்பதே சிறந்தது.

வியாக்ரபாதருக்குப்
பூக்களைப்
பறிக்கும்
விதிகள்
விளக்கமாய்த் 
தெரியும்.

வேத சாஸ்திரங்கள்
விளம்பியபடி
பறிப்பார்.
பூசிப்பார்.

தில்லை
வனத்தில்
தேனீக்கள்
அதிகம்.

அவை
அதிகாலையிலேயே
சுறுசுறுப்பாய்த்
தேன் எடுக்கும்
வேலையில்
இறங்கிப்
பூக்களை
மொய்த்து
விடும்.

தேனீக்கள்
கூட
தொடாத
பூக்களைப்
பூசைக்கு
விரும்பும்
வியாக்ரபாதர்
இறைவனிடம்
கனிந்துருகி
வேண்டுகோள்
ஒன்றை
வைத்தார்.

"இறைவா...
என் தலைவா...

எனக்குப்
புலிக் கால்களைக்
கொடு.
இரவிலும்
நன்கு
தெரியும்
கண்களைத்
தா."

வித்தியாசமாக
வேண்டிய
வியாக்ரபாதர்
வேண்டுதலை
ஏற்ற
இறைவன்
அதைக் காட்சியாய்
ரசித்தபடி
வழங்கினார்.

ஒளி வீசும்
கண்களுடன்
பின்
இரவில்
அதிகாலையில்
சத்தம்
எழுப்பாத
புலிப் பாதத்தோடு
மரமேறி
தேனீக்களும்
தொடாத
மதுவும்
மணமும்
நிரம்பிய
பூக்களைப்
பறித்து
பூசிக்க
ஆரம்பித்தார்
வியாக்ரபாதர்.

பறிக்கப்பட்டு
சன்னிதானத்தில்
வைக்கப்படும்
மலர்கள் மீது
பாதம் பட்டாலும்
அவை
மெத்தென்ற
புலிக்கால்களால்
மிதிபட்டு
வாடாமல்
இருக்குமல்லவா?
அதற்காகத்தான்
புலிக்கால்கள்.

அது முதல்
'புலிக்கால் முனிவர்'
என்ற
பெயரையும் பெற்றார்.

சமஸ்கிருதத்தில்
'வியாக்ரம்' என்றால்
'புலி' என்று பொருள்.

பதஞ்சலி முனிவரைப்
போல
திருமூலநாதரைப்
போல
சித்தர் பிரான்களில்
சிறந்தவர்.

அவர்
லயமான இடங்கள்
பாதம் பட்ட தலங்கள்
ஆன்மிக அதிர்வுகள்
அதிகம் கொண்டவை.

திருப்பட்டூர்
பூவுலகப்
புண்ணிய தலம்.

இங்கிருக்கும் 
பிரம்மபுரீஸ்வரர் 
ஆலயத்தில் 
படைத்த 
கடவுளெனினும் 
நாடி வரும் பக்தர்களின்
பிறவித் துயர்களை
மடைமாற்றம் செய்யும்
பிரம்மா 
கோயில் 
கொண்டிருக்கிறார்.

அருகிலேயே
பதஞ்சலி முனிவர்
சமாதி கொண்டிருக்கிறார்.
அங்கு தவம் செய்வது
பிறவிப் புண்ணியம்.

இத்திருக்கோவிலுக்குச்
சற்றுத் தள்ளி
கொஞ்ச தூரத்தில்
காசி விஸ்வநாதர் 
ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில்
வியாக்ரபாதர்
ஜீவசமாதி
கொண்டிருக்கிறார்.
இச்சமாதி முன்
அமர்ந்தால் போதும்
ஆன்மிக அதிர்வு
ஆட்கொள்ளும்.

ஆலயத்திற்கு 
மிக அருகில்
வியாக்ரபாதர் 
உருவாக்கிய
திருக்குளம்
உள்ளது.

'காசிக்கு 
நிகரான ஆலயம்.
கங்கைக்கு 
நிகரான தீர்த்தம்'
எனும் 
பெருமை கொண்டது
இந்த 
ஆலயமும் குளமும்.

சித்தர்
வியாக்ரபாதர்
பாதம் பட்ட
திருத்தலங்கள்
சிவாம்சம் நிறைந்தவை.

அவர் வழிபட்ட 
தலங்கள் 
புலியூர் தலங்கள் 
என 
அழைக்கப்படுகின்றன.

பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
திருப்பாதிரிப்புலியூர்
எருக்கத்தம்புலியூர்
ஓமாம்புலியூர்
சிறுபுலியூர்
அத்திப்புலியூர்
தப்பளாம்புலியூர்
கானாட்டாம்புலியூர்
பெரும்புலியூர்.

இத்திருத்தலங்களில்
சிவபெருமானின்
ஆனந்தத் தாண்டவ
தரிசனம்
காணும் பேறு பெற்றார்
சித்தர் வியாக்ரபாதர்.

தந்தை
மத்யந்தன முனிவர்
வியாக்ரபாதருக்கு 
வழிகாட்டியதைப் போல
தந்தை 
வியாக்ரபாதர்
நமக்கும் 
நல்வழி காட்டுவார்.

வாருங்கள்
அவர் புகழ் பாடுவோம்!
அவர் பாதம் பட்ட 
தலங்களைத் தரிசிப்போம்.
பிறவிப் பயனடைவோம்.

ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)