சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - குதம்பை சித்தர்
குதம்பை சித்தர்
மாரிமைந்தன் சிவராமன்
சித்தர் இலக்கியம்
தமிழின் பொக்கிஷம்.
இதைத்
தொட்டவர்கள் சிலரே.
நேர்பொருள்
உட்பொருள்
மறைபொருள்
என
ஆயிரமாயிரமாய்
விரியும்
களஞ்சியங்கள்
அவை.
பாட்டாய் இருக்கும்.
கவிதையாய்த் தெரியும்.
இலக்கணத்திற்கு உட்படும்.
இலக்கணம் மீறும்.
தமிழ்
பேசும்
அவ்விலக்கியம்
வேறெந்த
மொழியும்
பகராதது.
மருத்துவமும்
சோதிடமும்
வானியலும்
வாழ்வியலும்
மரணமிலாப்
பெருவாழ்வும்
யோகமும்
ஞானமும்
தோண்டத்
தோண்ட
ஊறும்
ஞானக்
கேணி
அது.
சித்தர் பாடல்கள்
பெரும்பாலும் கடினமே.
நேரடி அர்த்தம்
அனர்த்தமாயிருக்கும்.
எளிமை நிறைந்த
பாடல்கள் உண்டு.
குதம்பை சித்தர்
பாடல்கள்
அதற்கு
எடுத்துக்காட்டு.
அவர் பாடிக்
கிடைத்திருப்பது
32 பாடல்களே.
246 கண்ணிகளே.
அவை அத்தனையும்
மிளிரும் ரத்தினங்கள்.
அவை
பாடப் புத்தகத்தில்
பதிவானால்
இளைய சமுதாயம்
இருள் நீங்கி
ஒளிரும்.
புது உலகே உதிக்கும்.
குதம்பை
சித்தரின்
திவ்விய சரித்திரம்
மிகச் சில
குறிப்புகளையே
கொண்டது.
ஆயினும்
ஆன்மிகச்
சிறப்புகள் நிறைந்தது.
அந்த
ஆண் மகவு
பிறந்த போது
தாய்க்கும்
தந்தைக்கும்
அவ்வளவு மகிழ்ச்சி.
கரு கரு கேசம்.
குழி விழும் கன்னம்.
சுறுசுறு கண்கள்
எனப்
பார்த்தவர் எவரையும்
ஈர்த்தது அக்குழந்தை.
வீட்டுக்கு வந்த
தெய்வம்
அத்தெருவுக்கும்
அவ்வூருக்கும்
குழந்தையாயிருந்தது.
அழகு மிளிர்ந்ததால்
அம்மாவுக்குக்
கொஞ்சம் சஞ்சலம்.
ஊர்க் கண்கள்
பட்டால்?
சீவிச்
சிங்காரித்துப்
பொட்டிட்டு
கன்னத்தில் கருப்பாய்
திருஷ்டிப் பொட்டிட்டு
தொட்டிலிலிடுவாள்
அன்னை.
அப்போதும்
அக்குழந்தை
காதிலாடும்
குதம்பை
ஊர்க் கண்ணை
ஈர்த்திழுக்கும்.
'ஆண்
குழந்தைக்கென்ன
பெண் போல
காதில்
குதம்பை?'
ஆனாலும்
அழகோ அழகு.
ஊர் மெச்சும்.
திருஷ்டி கூடும்.
ஆண் குழந்தை
எனினும்
பெண் போல்
உடை அணிவித்தும்
அலங்கரித்தும்
பார்ப்பது
அக்கால
வழக்கம்!
'குதம்பைக்
கண்ணு’
என்றழைப்பாள் தாய்.
'குதம்பைப் பாப்பா'
என்றது சுற்றம்.
பெண்கள்
காதில்
அணியும்
அணிகலனே
குதம்பை.
ஆக
'குதம்பை' என்ற
பெயரே
அந்த
ஆண் குழந்தைக்கு
நிலைத்துப் போனது.
நீடித்துப் போனது.
கண்ணபிரான்
அவதரித்த
யது குலத்தில்
தோன்றியது
அக்குழந்தை.
ஆடி மாதம்
விசாக நட்சத்திரத்தில்
அவதரித்ததால்
அம்பாளின் சொரூபம்
அப்படியே
அமைந்ததாகச்
சொல்லி வியந்தனர்
சோதிடம் அறிந்தோர்.
அப்பா கோபால்
பக்தி அதிகம்
கொண்டவர்.
அம்மா முத்தம்மாள்
சொல்லவே
வேண்டாம்.
கோயில் என்பதே
இன்னொரு வீடு
குதம்பையின் தாய்க்கு!
குழந்தை வளர்ந்தது.
நாள் முழுதும்
கோயில்.
அங்கே
ஆராதனை
அபிஷேகம்
அர்ச்சனை.
அவற்றைப்
பார்க்கும்
ரசிக்கும்
குழந்தையின்
உள்ளத்திலும்
அத்தனையும்
நடந்தன.
பக்திப் பிழம்பாய்
ஞானக் குழந்தையாய்
குதம்பை
வளர்ந்தது
தெய்வ அருளால்.
பதினாறு வயதில்
பருவக் குதம்பையின்
உடல்
ஆணென்று
இருந்தாலும்
பெண் போல
வலம் வந்தது
இறைச் சித்தம்.
பசுக்கள்
வளர்ப்பது
பால்
கறந்து
அதை
ஏழை எளியோருக்கும்
பசி ஏந்தி வரும்
அடியார்களுக்கும்
வழங்குவது
குதம்பையின் வழக்கம்.
வேதம் ஓதும்
வேதியர்க்கு
எழும்
உடற் சூடு தணிக்க
வெண்ணெயும்
நெய்யும்
வழங்கி மகிழ்வதும்
குதம்பையின்
பழக்கம்.
இறை
அடியாரிடம்
புராணம் கேட்பது
விளக்கம் பெறுவது
ஆசிகள் யாசிப்பது
குதம்பையின்
அன்றாட
நிகழ்ச்சி நிரல்.
அப்படித்தான்
ஒரு நாள்
ஒரு
சித்தர்
வந்தார்.
அவர்
'மாயவர்'
என்கிறது
ஒரு புராணக் குறிப்பு.
அவருடனான
அரிய சந்திப்பு
குதம்பையின்
வாழ்வில்
ஒரு
திருப்பம் கண்டது.
ஆம்...
ஒரு மாபெரும்
மாயம்
செய்தார்
மாயவர்.
"குதம்பாய்
இது
போன ஜென்மத்துத்
தொடர்ச்சி.
சென்ற
பிறப்பில்
நீ
தவத்தில் இருந்தாய்.
உயர்
சிவத்தை
நெருங்கி வந்தாய்.
வெண்ணெய்
திரண்டு
வரும் போது
தாழி
உடைந்த
கதையாய்
எல்லாம்
கைகூடி வரும் வேளை
காலன்
வந்தான் - குறுக்கே!
அவன்
உன் கணக்கை
முடித்தான்
ஒருநாள்.
சிவம் தேடிய நீ
சவமானாய்.
இருப்பினும்
உன்
தவ ஆற்றல்
பிறவிகள் கடந்தது.
ஜென்மங்களில்
தொடர்வது.
அதனாலே
நீ
மீண்டும்
பிறப்பெடுத்து
உள்ளாய்.
இதுவே
இறைச் சித்தம்.
அற்புதங்கள்
உரைக்கிறேன்.
மந்திரங்கள்
தருகிறேன்.
இனி
எல்லாம்
உனக்கு
சித்தியாகும்."
தவயோகி
காலில்
விழுந்தார்
குதம்பை.
காதில்
மெலிதாய்ச்
சொன்னார்
மாயவர்.
ஒவ்வொரு
சொல்லும்
குதம்பையை
மெருகேற்றியது.
உருமாற்றியது.
அருள்
உபதேசத்தால்
குதம்பையின்
உடல் முழுதும்
ஒவ்வொரு அணுவும்
தெய்வீக
ஆற்றல் பெற்றன.
பிறவியின்
தொடர்ச்சியால்
பிறவிப்
பயன்
அடைந்தார் குதம்பை.
குருவாய் வந்தவர்
விடை பெறும்
தருணம்...
''குருவே... குருநாதா!
இப்படி
ஒரு சேர
அத்தனை
அருளும்
தந்தருளி
உள்ளீரே..!
கைமாறு என்ன
செய்வேன்?
குருவே!
காணிக்கை
எது தருவேன்?''
கண்ணீரால்
குருவின்
பாத மலர்களைக்
குளிர்வித்தார்
குதம்பை.
தலையில்
கை வைத்து
உச்சி முகர்ந்து
உள்ளங்கையால்
குதம்பையின்
முதுகை மெல்லத்
தடவியபடி
மாயவர் சொன்னார்.
''குதம்பாய்!
நான்
உனக்குரைத்த
தத்துவங்கள்
சித்தாந்தங்கள்
உலகில்
உலவுபவையே.
ஆனால்
அவை
மறை பொருளாய்
பாறையிலும் கடுமையாய்
யாருக்கும் புரியாமல்
ஒளிந்து கிடக்கின்றன.
அவற்றை
ஒளிர்விக்க வேண்டியது
உன் பொறுப்பு.
பயமுறுத்தும்
பாடல்களை
ஓரங்கட்டி
எளிய மொழியில்
நீ சொல்லு...
மக்கள் பயனடைவர்.
நீயும்
பிறவிப் பயன்
அடைவாய்.
வரட்டுமா
குதம்பாய்!"
விடைபெற்றார்
விடைகளின் நாயகர்
மூலவர் மாயவர்.
அதன் பின்னர்
குதம்பையின்
வாழ்வு
மாறிப் போனது.
பருவ வயதில்
ஒரு யோகியாய்
ஞான ஒளியாய்
உலா வரலானார்.
ஊரும் உறவும்
அவர் நினைத்த
மாதிரி இல்லை.
கோபம்
சாபம்
மோகம்
போட்டி
பொறாமை
என
மக்கள்
உழல்வதும்
சாதி
சமயம்
இனம்
எனச்
சகதியில்
புரள்வதும்
குதம்பையை
வாட்டியது.
எங்கேனும்
அமைதியாய்
ஒளிந்து கொள்ளவே
விரும்பினார்
ஒளி பொருந்திய
குதம்பையார்.
ஒரு நாள்
நள்ளிரவு
காட்டிற்குள்
படையெடுத்தார்
ஞானக் கோட்டை
அமைக்க!
ஆங்கே
ஓர் ஆலமரம்.
பல்லாண்டு
வாழ்ந்து வரும்
பரந்துபட்ட மரம்.
அதில்
ஓரிடத்தில் ஒரு
பெரும் பொந்து.
பொந்தில்
நுழைந்தவர்
தடையேதும்
வந்து தொல்லை
தராதிருக்க
ஒரு சந்து கூட
இல்லாததாக்கி
அடைத்து
அவ்விடம்
அமர்ந்தார்.
அகம்
நிறைந்தார்
தவம்
தொடர்ந்தார்.
எத்தனை நாட்களோ
எத்தனை ஆண்டுகளோ
கழிந்தன அமைதியாய்.
ஒருநாள்
குதம்பை
குதம்பை சித்தராய்
வெளி வந்தார்.
நேரிலும் பின்
குதம்பையாரின்
மா தவத்திலும்
வந்த
மகா சித்தர்
மாயவர்
அருளிய
உண்மையெல்லாம்
பாட்டில் படைத்தார்.
அத்தனை பாக்களும்
அவ்வளவு எளிமை.
பாமரர்க்கும் புரியும்
பைந்தமிழ்க் கவிதை.
அவை மட்டும்
புரிந்து படித்து
உணர்ந்து வாழ்ந்தால்
போதும்.
வாழ்க்கை உயரும்.
மரப்பொந்தை
விட்டு
வெளி வந்து
உலக
சஞ்சாரம்
செய்த போதிலும்
அவருக்குப்
பிடித்ததென்னவோ
'அரு' உரு தான்.
தன் உடலை
அணுக்களாகக்
கரைத்து
அருள்
நுண்ணுடல்
கொண்டு
உலவிய நாட்களே
மிகமிக அதிகம்.
பக்குவம்
கொண்ட மாந்தரை
அடையாளம் கண்டு
அருளினார்.
பற்பல
ஆற்றல்களை
அவர்கட்கு
வழங்கினார்.
பன்னெடுங்காலம்
இப்புவியில்
உலா வந்தார்
என்ற பெருமை
குதம்பை சித்தருக்கு
உண்டு.
160 ஆண்டுகள்
என்கிறது
ஒரு சித்தர் குறிப்பு.
பாடல்களில்
குதம்பாய்
என
எழுதியதால்
அவர் பெயர்
'குதம்பை சித்தர்'
என்றானது
என்பார் உண்டு.
இவ்விதம்
ஏதோ ஒரு
காரணப் பெயர்
கொண்டு
சித்தர்களுக்கு
நாமகரணம்
சூட்டும் வழக்கம்
தமிழுலகில் உண்டு.
குதம்பை சித்தர்
ஒரு பெண் உடலில்
கூடுவிட்டுக் கூடு
பாய்ந்து
பெண் சித்தராக
வாழ்ந்தார் என்றும்
ஓர் ஆச்சரியக்
குறிப்பு உண்டு.
குதம்பையாரை
‘பெண் ரூபங் கொண்ட
சித்து’
என்று
வர்ணிக்கிறார்
போகர் பெருமான்.
மயிலாடுதுறையில்தான்
குதம்பை சித்தரின்
அருவும் உருவும்
பாடி மகிழ்ந்தன.
அவர்
சித்தி பெற்றதும்
மயிலாடுதுறை
மயூரநாதர்
ஆலயத்திலேயே!
மனித குலத்தின்
மகத்துவத்தை
மேம்படுத்தும்
பாடல்களே
குதம்பை சித்தரின்
ஞானப் பாடல்கள்.
ஒவ்வொரு
பாடலுக்கும்
அர்த்தங்கள்
ஆயிரம்.
பொருளுணர்ந்து
சொல்பவரின்
ஞான
நிலைக்கேற்பவே
பொழிப்புரை
இருக்கும்.
குதம்பை சித்தர்
மரப் பொந்தில்
தவத்திலிருந்த போதே
மாயவரிடம்
வேண்டுகோள் ஒன்று
வைத்தாராம்.
பரந்தாமனின்
பாதம் சேர
வைகுண்டம்
விரையவே
அவர் தம்
அடி மனத்து
ஆசை.
''குதம்பாய்...
இப்போது வரவேண்டாம்.
உலகம் செழிக்க
உன் பங்கு
உன்னில் உண்டு.
வருண மந்திரம்
சொல்லித் தருகிறேன்.
அதை
உச்சரித்தால்
மழை வரும்.
உலகம் உய்யும்.
நீயிருப்பது
விந்திய மலையில் .
அங்கே
மலை போல்
யானைகள்
நிறைய உண்டு.
நீ
வருண மந்திரம்
உச்சாடனம் செய்.
யானைகளுக்கு
மந்திரங்களை
ஈர்க்கும்
சக்தி உண்டு.
உனது
உச்சரிப்பு
யானைகளை
எட்டும்.
பின் அவை
பிளிறும்.
பிளிறலில்
மந்திரம்
மீண்டும் மீண்டும்
ஓங்கி ஒலிக்கும்.
அதனால்
அதுபோது
மழை கொட்டும்.
காடு செழிக்கும்.
நாடு நலம் பெறும்.
சொல்வாயா?''
குருநாதர் கேட்டார்.
குரு சொல்லுக்கு
மறு பேச்சு
நினையாத
சீடர் குதம்பை சித்தர்
அவ்விதம் செய்தார்.
காடெங்கும்
நாடெங்கும்
கடும் மழை
பொழிந்து
கூடவே
அருள் மழையும்
சுரந்தது.
இன்று கூட
வாசி யோகம்
பயின்றவர்
ஆழ்நிலையில்
குதம்பை சித்தரை
குருவெனக் கொண்டு
வணங்கித்
தொழுதால்
வறண்ட காலத்திலும்
வான் மழை
பொழியும்
என்பது
சர்வ நிச்சயம்.
நவகிரகங்களில்
கேது பகவான்
குதம்பை சித்தரின்
அம்சமே.
சித்த பிரமை
மனோ வியாதி
மன வளர்ச்சி
குன்றியிருப்போர்
நல் நிலை
ஏற்பட நல் வாழ்க்கை
அமைந்திட
வழிபடத்தக்க
சித்தர் பெருமான்
குதம்பை சித்தரே!
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க
என
இயல்பாய்ச் சொல்வதும்
ஜீவகாருண்யமுமே
அவரது
வாழ்வியல் சூத்திரம்.
இவ்விஷயங்களில்
வள்ளல் பெருமானின்
முன்னோடி சித்தர்
குதம்பையாரே!
சான்றுக்கு
ஒரு
பாடல்.
'கொல்லா விரதம்
குளிர் பசி நீக்குதல்
நல்ல விரதமடி
குதம்பாய்
நல்ல விரதமடி!'
இப்படி
எளிய பாடல்கள்.
இன்னும்
பல ஞானப் பாடல்கள்!
அவை
படிப்பதும் எளிது.
புரிவதும் எளிதே!
கேட்பதும் சுகம்.
அதன்படி
நடப்பது நலம்.
அதுவே
சித்தர் பாதையெனக்
குதம்பை சித்தர்
குறித்துக் காட்டும்
அருள் நெறிப் பாதை.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக