சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - அகப்பேய் சித்தர்


அகப்பேய் சித்தர் 

மாரிமைந்தன் சிவராமன்

கரிகாற் சோழன்.

உலகே வியக்கும்
கல்லணையை
அன்றே
முதலாம்
நூற்றாண்டிலேயே
கட்டிய மன்னன்.

அகண்ட காவிரிக்குப்
பெருமை சேர்த்த
சோழ அரசன்.

சோழ வளநாடு
சோறுடைத்து
எனப்
பெயர் படைக்க
அரசாண்ட
மாமன்னன்.

இமயம் வரை
படையெடுத்துச் சென்று
வழி நெடுக
நாடு பல வென்று
இமயத்தில்
புலிக்கொடி பறக்கவிட்ட
புகழ்மிகு சக்ரவர்த்தி.

கரிகாற் பெருவளத்தான்
அப்போதுதான்
இமயமலையிலிருந்து
நாட்டிற்குத் திரும்பிக்
கொண்டிருந்தான்
வடபுலத்திலும் 
வெற்றி வாகை சூடி
வீரத் திருமகனாக!

தஞ்சையை
நோக்கிய
பயணத்தில்
இடையே
திருவையாறு.

சித்தர்
பெருமான்கள் 
பலருக்குப்
பிரியமான ஊரு
திருவையாறு.

அந்த ஊர் முழுக்க
ஆன்மிகச் சேறு.
தெய்வீக மணம் கமழும்
தேனமுதப் பேரு.

திருவையாறில்
மன்னனின்
தேர்ச் சக்கரம்
மண்ணில்
புதையுண்டது.

எவ்வளவு
முயன்றும்
இம்மியளவும்
இடம் பெயரவில்லை.

போர் பல புரிந்து
எதிரிகளைக்
காலடியில்
விழச் செய்த
கரிகாலனின்
வீரமிகு வீரர்கள்
பிரம்மப் பிரயத்தனம்
செய்தும்
தேர்க்காலை
நகர்த்த முடியவில்லை.

கரிகாலன்
வியந்தான்.

'ஏதோ
என்னவோ'
மனம்
குழம்பினான்.

இறைவன்
மறைவாய்
ஏதோ
உரைப்பதாய்
அவன்
மனதில்
பட்டது.

தேரடி
வரை
மண்
அகற்றியும்
தேர்
நகர மறுக்க
இன்னும்
ஆழமாய்
வெட்டிப்
பார்த்தனர்
சலிப்படையா
வீரர்கள்.

மன்னவன்
மனதில்
பட்டது
சரிதான்!

அங்கே
சிவலிங்கம்.

கூடவே
சக்தி அம்மன்,
விநாயகர்
முருகன்
சப்த மாதாக்கள்
சண்டர்
சூரியன் 
முதலான
திருவுருவச்
சிலைகள்
புதையுண்டிருந்தன.

ஓடித்
தேரடி
நின்றான்
கரிகாலன்.

வணங்கி
மெய் சிலிர்த்தான்.

சிலைகளைச்
சிதைவுபடாமல்
எடுக்கச்
செய்தான்.

கண்களில்
ஒற்றினான்.
கண்ணீர்
மல்கினான்.

சிலையெல்லாம்
எடுத்த பின்னர்
உற்றுப் பார்த்தான்.

ஒரு
முடியின் நுனி
தென்பட்டது.

லாவகமாய்
மன்னனே
எடுத்தான்.

நுனி முடி
சடா முடியாய்த்
தொடர்ந்தது.

சடா முடிக்குரியவர்
ஒரு
ஜடாமுனி.

அவர்
நிஷ்டையில்
இருந்தார்.

கரிகாலன்
மட்டுமல்ல
பரிவாரமும்
அவர்
பாதம்
வீழ்ந்தது.

மெல்லக்
கண் விழித்த
முனிவர்
மெலிதாய்ச்
சொன்னார்.

"மன்னா..!
தமிழ் போற்றும்
மாமன்னா!
இச் சிலைகளைக்
கொண்டு
கோவில் ஒன்று
அமைப்பாயாக!

குடமுழுக்கும்
செய்வாயாக!

மூத்த சித்தர்
நந்தீசரும்
முப்பத்து முக்கோடி
தேவர்களும்
வழிபட்ட
சிலைகள் இவை.

இந்த
மகா லிங்கத்தின்
பூரண சக்தி
பூமியில் பரவட்டும்.

கோயில்
கட்ட
பெரும்
பொருள் குவியல்
இந்த
நந்தியின்
காலடியில்
கிட்டும்!"

தேரடி
முனிவர்
வாழ்த்தினார்.

ஓரடி தள்ளித்
திகைத்திருந்த
மன்னன்
மெய் மறந்தான்.

''மன்னா!
தமிழ் கூறும்
நல்லுலகில்
உன் பேர்
என்றும்
நிலைத்திருக்கும்.

சோழ மன்னர்களில்
உன் பேர்
எப்போதும்
உயர்ந்திருக்கும்.

பார் உள்ளளவும்
கடல் உள்ளளவும்
காவிரித் தாய்
கருணை
உள்ளளவும்
உன் பெயர்
நிலைத்திருக்கும்."

வாழ்த்தினார்
மகாமுனி.

"இதோ...
உனக்கு என்
அன்புப் பரிசு."

'தண்டம்'
ஒன்றை
அவனிடம்
வழங்கி
ஒளி போல் பெருகி
கணத்தில் மறைந்தார்
இறை போலிருந்த
அந்தச் சித்தர்.

அந்தத் தண்டம்
எவராலும்
வெல்ல முடியாத
ஆயுதம்.

சித்தர் பிரான்
அருளிய
சீர்மிகு
போர் தண்டம்.

அது போதே
சித்தர்
வாக்கைச்
செயலாக்க
கோயில் பணி
துவங்கினான்
கரிகாலன்.

போரில்
கிட்டாத பூரிப்பு
வெற்றியில்
எட்டாத
கிறுகிறுப்பு
கோயில்
கட்டுவதில்
கிட்டிற்று
அவனுக்கு.

அற்புதமான
கோயில்.
அதன் பேர்
ஐயாறப்பர்
கோயில்.

அமைந்த இடம்
தேர் புதையுண்ட
அதே
திருவையாறு.

திருக்கோயிலின்
இன்றையப்
பெயர்
திருவையாறு
அருள்மிகு
பஞ்ச நந்தீஸ்வரர்
எனும்
ஐயாறப்பர் கோயில்.

எல்லாம் சரி.
வந்த சித்தர்
யாரப்பா...?

அருள் தந்த
அம் முனி யாரப்பா?

கரிகாலன்
பெயர் விளங்கச்
செய்த
சித்த முனி பேர்
என்னப்பா?

அந்தச் சித்தரே
அகிலம்
வணங்கும்
அகப்பேய் சித்தர்.

அவரைப் பற்றிக்
கொஞ்சம்
காது கொடுத்துக்
கேளப்பா...!

'அகப்பை சித்தர்'
என்றும்
அழைப்பர்
அவரை.

நியமேசர்
என்ற
தவப்பெயரும்
அவருக்குண்டு!

திருவள்ளுவப்
பெருமான்
அவதரித்த
வேளாளர் குலமே
அகப்பேய் சித்தரின்
பெருமை சேர் குலம்.

அவர்
அருளிய
பாடல்களில்
வரியின் இறுதியில்
'அகப்பேய்'
என வருவதால்
அகப்பேய் சித்தர்
என
அழைக்கப்படுவதாக
சித்தர் உலகம்
குறித்து 
வைத்திருக்கிறது.

இப்படித்தான்
சித்தர்களின்
பெயர்க் காரணம்
சுவையாய்
இருக்கும்.

அகமென்னும்
மனத்தைப் பேயாக
உருவகித்துப்
பாடியதால்
அகப்பேய் சித்தரானார்
என்போரும் உண்டு.

இயற்பெயர்
நாயனார்
என்கிறது
ஒரு குறிப்பு.

இன்னொரு
பதிவோ
நாயனார்
ஜாதி
எனப் பகர்கிறது.

குலத் தொழிலான
நெசவும்
துணிமணி
விற்பதுவும்
அவரது
ஜீவனமாயிருந்தது.

வணிகத்தில்
வளமிருந்தாலும்
அகப்பேயாயாருக்கு
அதில் ஏனோ
நாட்டமில்லை.

பொருள் போதும்
அருள் வேண்டும்
என
ஆசைப்பட்டார்.

துணிமணிகள்
விற்கும்போது
மக்கள்
மனங்களைப்
பார்ப்பது
அகப்பேய் சித்தரின்
அன்றாடப் பழக்கம்.

மக்கள் படும்
துயர்.
ஏமாற்றியும்
ஏமாந்தும்
வாழும் போலியான
வாழ்க்கை முறை.

சிந்தித்த சித்தர்
கவலையுடன்
போதிக்க
ஆரம்பித்தார்.

மக்கள் செவி
சாய்க்கவில்லை.
கேலி பேசினர்.

‘மக்களைத்
திருத்துவது
கடினம்.
மன அமைதியே
மாண்டு போகும்'
என
உணர்ந்த
அகப்பேயார்
தனித்திருக்க
ஆரம்பித்தார்.

அமைதி தேடி
தொல்லையில்லாத
அடர் காடு 
புகுந்தார்.

சாதுக்கள்
ஞானிகள்
எனப்
பலரின்
பாதம் பணிந்து
அவர்கள் தந்த
உபதேசங்களைக்
கேட்டறிந்தார்.

காட்டு வாழ்க்கையில்
ஒரு நாள்
பெருத்த
ஜோதி மரம்
கண்டார்.

மரத்தின் அடியில்
ஒரு பெரிய
பொந்து
தென்பட்டது.

தேடிக் கொண்டிருந்த
இடம் இதுதான்
என உணர்ந்தார்.

உட்புகுந்தார்.
நீண்ட
தவத்தில் ஆழ்ந்தார்.

காலம் சுழன்றது.
அகப்பையாரின்
தவம்
வியாச பெருமானைக்
கவர்ந்தது.

ஒருநாள்
வேதங்கள் கொடுத்த
பதினெண் புராணங்கள்
படைத்த
வியாச பெருமான்
அருட்காட்சி தந்தார்.

அரவணைத்துக்
கொண்டார்.

ஆட்கொண்டு
அருளினார்.

உபதேசம்
தீட்சை
என வாரி வழங்கி
முழுச் சித்தராக்கினார்.

கற்ற யாவற்றையும்
எளிமையாக
மக்களிடத்தில் சேர்க்க
ஆணையிட்டு விட்டு
அக்கணமே மறைந்தார்.

பின்னொரு நாள்
திருமூலர்
பெருமானும்
அகப்பேய் சித்தரின்
குருவாய்
வந்து
அருட்காட்சி தந்து
ஞான உபதேசம்
வழங்கி
தடுத்தாட் கொண்டார்.

இருபெரும்
ஞானத் தாத்தாக்களின்
அருள் பெற்ற
அகப்பேய் சித்தர்
ஞானச் சீடராய்
சித்தர் மார்க்கம்
தொடர்ந்தார்.

'இறைவனை
அடைவதற்கு
நஞ்சுண்ண வேண்டாம்.
நாதியற்றுத் திரிய
வேண்டாம்.

வேறு துன்பம்
ஏதும் வேண்டாம்.
மனதை மட்டும்
அலையாமல்
நிறுத்தி விடு.'

இதுவே
அகப்பேயார்
ஞானத் தேடலுக்கு
வழி கூறும் பாங்கு.
பாடலாய்
ஊதும் சங்கு!
ஞானச் சங்கு!

மக்கள் மாண்புற 
ஆனந்த வாழ்க்கை
என்றும் நிலைத்திருக்க
பற்பல
பாடல்கள் புனைந்தார்.

உலகை உய்விக்க
உபதேசம் செய்தார்.

மூட நம்பிக்கைகள்
சாதி மத பேதங்கள்
சாத்திர மறுப்புகள்
அவர் பாடல்களில்
சாடல்களாய்
மிளிறும்.

வாத வைத்தியம்,
யோக, ஞான மார்க்கம்
அகப்பேய் சித்தரின்
ஞான மொழிகளாய்
உலகுக்குக் கிடைத்தன.

'மலையே
அசைந்தாலும்
மனம்
அசையக் கூடாது'
என்பது
அகப்பேய் சித்தர்
தத்துவங்களின்
அடிப்படை அம்சம்.

போகரின் பாடல் 
புகழும்
யோகம் நிறைந்தவர்
அகப்பேய் சித்தர்.

சித்தர் ஞானக்
கோவையில்
நூறு பாடல்கள்
இவர் தனிச் சிறப்பு.
நூறு பாடல்களும்
நூறாயிரத் தத்துவச்
சுரங்கம்! 

சைவ உணவை
வலியுறுத்தியவர்.
'சைவ உணவு உண்டால்
அகப்பேய்
தானாய் அடங்கும்'
என்பார் உறுதிபட.

அகப்பேய் சித்தர்
பாடல்
அகப்பேய்
பூரண ஞானம்
இவ்விரு நூல்களும்
இவர் அருளிய 
ஞானக்
களஞ்சியங்கள்.

அகமெனும் பேய்
தாறுமாறாய்
அலையாதிருக்க
அகப்பேய்
சித்தர் சொன்ன
ஞான வழிகளே
அவர்தம்
பாடல்கள்.

அகப்பேய் சித்தர்
குரு பகவானைப்
பிரதிபலிப்பவர்.

இவரை
வணங்கிடின்
குரு தோஷங்கள்
அகலும்.
புத்திர பாக்கியம்
கிட்டும்.
லட்சுமி கடாட்சம்
பெருகும்.

மாசி மாதம்
ரேவதி நட்சத்திரம்
3-ஆம் பாதம்
மீன ராசியில்
அவதரித்தார்
அகப்பேய் சித்தர்.

16 தலைமுறைகள்
வாழ்ந்து
ஞானத்தைப்
பரப்பினார்.

அகப்பேய் சித்தருக்கு
10 மனைவிகள்
120 குழந்தைகள்
என்கிறார்
கோரக்கர் பெருமான்.

அகப்பேய் சித்தர்
திருவையாறில்
லயமானார்.

அங்கே
இன்றும்
அருள்பாலிக்கிறார்.

என்றும்
அருள்பாலிப்பார்.

'தேனென்ற
காசியிலே
விசுவாமித்திரர்.
திருவையாறு தனில்
அகப்பேய் சித்தர்'
எனப் புகழ் மாலை
சூட்டுகிறார்
போகர் பெருமான்.

ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)