சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - புலத்தியர்
புலத்தியர்
மாரிமைந்தன் சிவராமன்
அகத்தியர் பெருமானின்
அகம் நிறை சீடர்
புலத்திய பெருமான்.
அகத்திய முனி
அருளிய பாடல்கள்
சிலவற்றில்
'பாரப்பா புலத்தியனே!
பண்புள்ளானே!'
என்றே
வரிகள் தொடங்கும்.
அந்த அளவிற்கு
இருந்தது
குரு - சீடர் உறவு.
குருவைப் போலவே
சீடர் புலத்தியரும்
வைத்தியக் கலையில்
வல்லவர்.
உலகம் சமநிலை
அடைய
அகத்தியர் பெருமான்
தென்னாடு வருகையில்
அவரோடு
உடன் வந்தவர்
புலத்தியர்.
அகத்தியர் பெருமானின்
அருந்தவச் சீடராம்
தேரையருக்குப்
புலத்தியர்
நெருக்கமிகு தோழர்.
தோழரெனினும்
தேரையருக்கு
ஞான உபதேசம்
வழங்கி
குரு போலவும்
திகழ்ந்தவர்
புலத்தியர்.
பூமியில்
எவராலும்
கூற இயலாது
புலத்தியர் பிறப்பை
எனப் பெருமை
சேர்க்கிறார்
போகர் பெருமான்.
இருப்பினும்
புலத்தியர்
பிறப்பு
பற்றி
ஒரு புராணச்
செய்தி
உண்டு.
திரணபந்து
என்றொரு
அறம் செறிந்த
மன்னன்.
அவனது
தவச்சாலையில்
தங்கி
புலத்தியர்
தவமிருந்து வந்தார்.
அரண்மனைப்
பெண்கள்
அங்கு அடிக்கடி வந்து
ஆடியும் பாடியும்
அமைதி கலைத்தனர்.
நீர் விளையாடி
கேலியும் கிண்டலுமாய்
தவச் சூழலைச்
சிதைத்தனர்.
இதுவே
நாளும் தொடர்ந்தது.
தவத்திற்கு
எழும் தடையில்
எரிச்சலுற்றார்
புலத்தியர் பெருமான்.
கோபமுடன்
சாபமும் தந்தார்.
"இனி
என்னெதிரில்
எவரேனும்
பெண்கள் வந்தால்
அவர்கள்
கர்ப்பமடைவீர்கள்."
கடுமையான
சாபம்தான்!
என்ன செய்வது?
விடுத்தவர்
சித்தர் பெருமான்
அன்றோ!
ஒரு நாள்
சாபம் குறித்தோ
தவம் இருக்கும்
சுவாமிகள் பற்றியோ
ஏதுமறியா
திரணபந்துவின்
அழகு மகள்
ஆவிர்ப்பு
அங்கு வந்தாள்.
புலத்தியர்
சாபம்
கணப் பொழுதினில்
பலித்தது.
அரண்மனைப்
பெண்டிரோ
அரசரின்
மகளோ
என
வித்தியாசம்
பார்க்குமா
முனிவரின்
சாபம்?
கன்னி ஆவிர்ப்பு
கர்ப்பமுற்றாள்.
கண்கலங்கிய
நிலையில்
அவள் துடிக்க
கருவுற்ற செய்தி
மன்னன்
திரணபந்துக்குப்
போய்ச் சேர
அவனும்
துடிதுடித்தான்.
புலத்தியரிடம்
ஓடி வந்தான்
புவியரசன்.
கெஞ்சினான்.
நியாயம்
கேட்டான்.
குமுறினான்.
கதறினான்.
முடிவாக
தனது
மகளை
மணம்
செய்து கொள்ள
வேண்டினான்.
ஒரே வழி
மணம்தான்
என்று
இறைஞ்சினான்.
மண்டியிட்ட
மன்னவனின்
கன்னல்
கனி
மகளை
மணமுடித்தார்
புலத்தியர்.
இல்லறமெனும்
நல்லறம்
இரு மகன்களைத்
தந்தது.
அதிலொருவன்
விசிவரசு.
புலத்தியர்
ஆவிர்ப்புவின்
அன்பு மகன்
வளர்ந்தான்.
அரசனானான்.
குடும்பம்
வளர்த்தான்.
தந்தையானான்.
அவன்
குழந்தைச்
செல்வங்கள்
யாரென
அறிந்தால்
வியந்து போவீர்கள்!
யார் தெரியுமா?
அவர்கள்தான்
இராவணன்!
கும்பகர்ணன்!
விபீஷணன்!
சூர்ப்பனகை!
ஆக
இலங்கேசுவரன்
இராவண
சகோதர
சகோதரியின்
தாத்தாவே
புலத்தியர்.
ஞாபகம் வருமே!
இலங்கேசுவரனுக்கும்
அகத்தியப்
பெருமானுக்கும்
ஒரு முறை
இசைப் போட்டி.
இசைக்கருவியை
மீட்கும்
இராவணன்
'ஹம்சத்வனி
அமைத்தவன்
நானே'
எனக்
கர்வத்தோடு
மீட்டும் போது
கருவியின் நரம்புகள்
அறுந்து போகும்.
இராவணன்
தோற்றுத்
தலைகுனிவான்.
குறுமுனி
நிமிர்ந்து
பார்த்து
செருக்கில்லாமல்
புத்தி பகர்வார்.
அன்று
குரு
அகத்தியரின்
வெற்றியை
பேரன்
இராவணனின்
தோல்வியை
அருகிருந்து
பார்த்தவர்
புலத்தியர்.
புலத்தியரின்
தங்கை
உலோபமுத்திரையை
மணந்தார்
அகத்தியர்.
மாமன்
மச்சான்
உறவு.
போகர் பெருமான்
ஒரு பாடலில்
கமலமுனிச் சித்தரின்
பேரன்
புலத்தியர் என்கிறார்.
ஆவணி மாதம்
அனுஷ நட்சத்திரம்
துலாம் பாதத்தில்
அவதரித்தவர்
புலத்தியர்.
பிறக்கும்போதே
பக்திப் பழம்.
ஆம்...
ஞானக் குழந்தை.
பின்னாளில்
சிவராஜயோகி.
திருமந்திர
உபதேசம்
பெற்றவர்.
இவ்விதம்
புகழ் பாடுகிறார்
புலத்தியர் பற்றி
போகர் பெருமான்.
சிங்கள மரபில்
வந்தவர்
புலத்தியர்
என்பதும்
போகரின் கணிப்பு.
அதுதான்
புராணம் சொல்லும்
இராவண உறவு.
இலங்கைத் தொடர்பு.
புலத்தியர் கோபம்
பிரசித்தி பெற்றது.
கோபம் வந்தால்
யாரெனப்
பார்ப்பதில்லை.
தயங்காது
சாபம் இடுவார்.
ஒரு நாள்
தாயார்
சரஸ்வதி தேவியைப்
பார்க்கப் போனார்.
ஆம்...
சரஸ்வதி
புலத்தியரின்
தாய் என்கிறது
ஒரு புராணம்.
மகனை
ஆசை வெறி
இல்லாமல்
அன்பு நெறி
காட்டாமல்
ஏனோ தானோவென்று
வரவேற்றார்
கலைமகள்.
கோபம் வந்தது.
சாபமும் வந்தது.
"நீ நதியாக ஓடு..."
தாய் சரஸ்வதிக்கே
விட்டார் சாபம்.
குட்டி பல அடி
பாய்ந்தால்
தாய் சில அடியாவது
சீறாதா?
‘நீ
அரக்கன்
விபீஷணனாகப்
பிறப்பெடுப்பாய்'
எனத்
தாய் விட்ட
சாபமும்
பலித்தது.
அரக்க வம்சத்தில்
விபீஷணனாய்
உருக்கொண்டது.
இக்கதைப்படி
பார்த்தால்
கலைமகளின்
தலைமகன்
புலத்தியர்.
பேரன்
விபீஷணன்
புலத்தியரே
என்கிறது
மற்றொரு
குறிப்பு.
மகனிட்ட
சாபம்
சரஸ்வதி நதியாய்
புண்ணிய நதியாய்
உருக்கொண்டது.
நீண்ட காலம்
சமாதி நிலைக்குச்
சென்று விடுவது
புலத்தியர் பெருமானின்
தவவலிமைக்குச் சான்று.
போகரைப் போன்றே
சீன தேசத்தில்
சஞ்சரித்தவர்
புலத்தியர் பெருமான்.
சீன தேச
கடலோரத்தில்
தங்கியிருந்த போது
அங்கு வந்த
தேரையரோடு
பொதிகை மலை
திரும்பினார்.
பொதிகை மலையில்
நீண்ட நெடுங்காலம்
சமாதி புகுந்தார்.
இடையில்
வெளிவந்து
தேரையருக்கு
வைத்திய ரகசியம்
சொல்லித் தந்துவிட்டு
மீண்டும்
சமாதி நிலைக்கு
விரைந்தோடிச் சென்றார்.
புலத்தியர்
அகத்தியரின்
மகன் என்றும்
புலத்தியருக்கு
அகத்தியர்
என்ற பெயர்
இருந்ததாகவும்
குழப்புவார்
உண்டு.
வைத்திய வாதம்
வாத சூத்திரம்
ஞான சூத்திரம்
வழலைச் சருக்கம்
கற்ப சூத்திரம்
உள்ளிட்ட
ஒன்பது நூல்கள்
புலத்தியர் அருளிய
ஞான யோக நூல்கள்.
அகத்தியர்
தேரையர் சகிதம்
பொதிகை மலையில்
இருந்த
புலத்தியர் பெருமான்
பாபநாசத்தில்
சமாதி அடைந்தார்.
சமாதியிலிருந்து
வெளியே வந்தவர்
இரண்டாம் முறையாக
ஆவுடையார் கோவிலில்
இறைநிலை
அடைந்தார்.
இறையோடு
இறையாக
இரண்டறக் கலப்பதே
நிறைவான
சித்தர்களின்
வாழ்க்கை நிறைவு.
அப்படித்தான்
ஆவுடையார் கோவிலில்
இறைவனோடு
ஐக்கியமானார்
புலத்தியர் பெருமான்.
பாபநாசமும்
ஆவுடையார் கோவிலும்
புலத்தியர் பெருமான்
அருள்பாலிக்கும்
அருந்தவத் தலங்கள்.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக