சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - புலிப்பாணி சித்தர்


புலிப்பாணி சித்தர் 

மாரிமைந்தன் சிவராமன்

போகருக்கு
இணையான
யோகர்
எவருமில்லை.

சித்தர்களில்
சிறந்தவர்
போகர் பெருமானே.

அப்படிப்பட்ட
போகரின்
ஞான வழித்
தோன்றலே
புலிப்பாணி சித்தர்,

போகரின்
சீன வாழ்வு
சிறப்புமிக்கது.

குரு
காலாங்கி நாதரின்
கட்டளையை ஏற்று
சீனாவிற்குச் சென்று
சீன மக்களுக்கென
வாழ்ந்தவர்
போகர்.

சீன மக்களை
உயர்த்தியவர்.
சீன நாட்டை
மேம்படுத்தியவர்
போகர்.

சீனாவிலிருக்கும்
போது
அவருக்குக் கிடைத்த
அற்புதச் சீடரே
புலிப்பாணி.

சீன நாட்டின்
'யூ' எனும்
இளைஞன்
போகர் மொழி
கேட்டு
அவரது
சீடரானான்.

அடிக்கடி
உலகம் சுற்றும்
போகர்
உலகில்
தான் கண்டதைச்
சுவைபடக் கூறுவார்.

அவரது உரை கேட்டு
மறை மொழி கேட்டு
அவரைச் சிக்கெனப்
பற்றிக் கொண்டான்
சீடன் 'யூ'.

ஒருமுறை
காய கற்பத்தைத்
தான் மட்டும்
உட்கொண்டால்
போதாது எனத்
தன்னுடன்
எப்போதுமிருக்கும்
நாய்க்கும்
கூடவே இருக்கும்
சீடர்களுக்கும்
தந்தார்
போகர் முனி.

உட்கொண்ட நாய்
உடனே செத்து
விழுந்தது.

அடுத்து
எடுத்துக் கொண்ட
'யூ' வும்
அரை நொடியில்
மரணித்தான்.

இதைக்
கவனித்திருந்த
சீடர்கள்
'விட்டேன் சவாரி'
என
அடுத்த வினாடி
ஓடி மறைந்தனர்.

எல்லாம் அறிந்த
போகர் பிரான்
சிரித்தபடி
நாயையும்
'குருவே எல்லாம்'
என்று வீழ்ந்திருந்த
'யூ'வையும்
உயிர்ப்பித்தார்.

எப்போதும்
உடன் வைத்துக்
கொண்டு
சீனத்து யூவுக்கு
உபதேசம் தந்தார்.

எல்லாம் கற்பித்தார்.
ஞானம்
கை கூடச் செய்தார்.

அந்த ‘யூ' வே
அந்த சீனத்து 'யூ' வே
பாரதத்துப் புலிப்பாணி.

இப்படி ஒரு வரலாறு
இயம்பிச் சிலிர்க்கிறது.


இன்னொரு
கதையும் உண்டு.

எப்போதும்
புலி மீதேறி
பவனி
வருவது
இவரது
வழக்கம்.

புலியை
வசியப்படுத்தும்
வல்லமை
கொண்டிருந்ததால்
புலிப் பயணம்
இவருக்குச்
சாத்தியமாயிற்று.

ஒரு நாள்
போகர் பிரான்
குடிப்பதற்குத்
தண்ணீர் கேட்க
'குருநாதர்
கேட்டு விட்டாரே'
என்ற
அவசரத்தில்
புலி மீதேறிக்
காட்டிற்குச் சென்று
கை நிறையத்
தண்ணீர் கொண்டு
வந்தார்
தன்னிகரில்லாச் சீடர்.

காட்டில்
மூலிகை பறிக்கவும்
சஞ்சாரம் செய்யவும்
இவர் பயணித்தது
புலிமேல்தான்
என்பது
கூடுதல் செய்தி.

புலிப்பாணி பற்றிய
தகவல்கள் கொஞ்சமே.

ஆயினும் அவரது
பங்களிப்பு
சித்தர்கள் உலகிற்குக்
கொஞ்சமில்லை.

போகருடன்
இறுதி வரை
இருந்தவர் புலிப்பாணி.
அதுவே
இவரை ஆக்கியது
ஞானக் கேணி.

போகருடன்
இருந்ததாலேயே
திருமணம் செய்து
கொள்ளவில்லை.

பிரமச்சாரியாகவே
உடனிருந்தார்.
அவருக்கு
உதவி புரிந்த வண்ணம்
அருகிருந்தார்.

பாரத தேசம்
திரும்பிய
போகர்
பழனிக்கு வந்தபோது
பாலதண்டாயுதபாணி
சிலை செய்யும்
பாக்கியம்
கிடைத்தது.

பழனியில்
முருகப் பெருமானே
சிலை அமைக்க
போகரைக்
கேட்டுக் கொண்டதாகப்
புராணம் கூறுகிறது.

எச்சூழலிலும்
சிதையாத
நவபாஷாணச் சிலையை
போகர் அமைத்தார்.

அச்சிலை செய்தது
போகருக்கே சாத்தியம்
என
இன்று வரை
வியக்குது உலகு.

அச்சிலை
வடிக்கும் பணியில்
போகரின்
மூன்றாவது கரமாக
விளங்கியது
புலிப்பாணியே.

புலிப்பாணியின்
புலிப் பவனியை
ரசித்து
அவரது
தவ வலிமையைப்
பாராட்டி
"புலிப்பாணி
பாத்திர சாமிகள்'
என்றே போகர்
அழைப்பாராம்.

பழனி
முருகன் சிலையைப்
பாங்குற
அமைத்த
அந்த அரிய வகைச்
சிலையைப்
பாதுகாக்கவும்
பூசைகள் செய்யவும்
புலிப்பாணியாரையே
நியமித்தார்.

அவ்வளவு
நம்பிக்கை
சீடர் மீது!

நிறைவான
போகர்
ஆரத்தழுவி
ஆசிர்வதித்து
விடை பெறும்போது
புலிப்பாணி
ஓர் அனுமதி கேட்டார்
குருவிடம்.

'எதையும் கேட்டிராத
புலிப்பாணியிடமிருந்து
வேண்டுகோளா!'
வியந்தபடி 
என்னவெனக் கேட்டார்
எதையும் அருளவல்ல
போகர் முனி.

"காலங்காலமாய்
நவபாஷாணச் சிலையைப்
பூசை செய்யும்
பாக்கியம்
எனக்குக்
கிடைக்க
அருள் தர வேண்டும்
சுவாமி."

சின்னக் 
குழந்தை போல்
புலிப்பாணி கேட்க
"அதற்கென்ன
ஆகட்டும்"
என்றார்
போகர் பிரான்.

பழனியில்
காலையில்
எழுவார்
புலிப்பாணி.
அதிகாலைப்
பூசையில்
புகுவார்.

பின்
சண்முகா நதியில்
தூய நீராடல்.

குடம் நிறைய
நீர் எடுத்து
பழனிமலை அடிக்கு
வருவார்.

அடிவாரத்தில்
ஒரு புலி
காத்திருக்கும்.

அதன் மேலமர்ந்து
காடு மலை
கடந்து
முருகன்
சன்னதி
அடைவார்.

புலிப்பாணி
இறங்குவார்.
புலி
ஓடிப் போகும்.

இதுவே
புலிப்பாணியின்
வழிபாட்டு முறை.

அதன்பின்தான்
300 வருட
பிரமச்சரிய வாழ்க்கைக்கு
விடை தந்துவிட்டு
திருமணம் புரிந்தார்
புலிப்பாணி.

சந்ததி பெருகியது.

நீண்ட காலமாய்
அவரது பரம்பரையே
நவபாஷாண
தண்டாயுதபாணி
சிலையைப்
பூசித்து வந்தது.

புலிப்பாணியிடம்
பொறுப்புகளை
ஒப்படைத்த
பின்னர்
சீனா சென்று
தத்துவங்களைச்
சீர்படப் பரப்பினார்
போகர்.

காலம்
கோலாகலமாய்
விரைந்து
சுழன்றது.

போகர்
அங்கிருக்க
பழனியிலிருந்த
புலிப்பாணி
முருகனடிமையாய்
புரிந்த பூசையோடு
சேவையோடு 
சேவையாய்
தமிழ் நூல்கள் பல
படைத்தார்.

அவை யாவும்
சித்தர் இலக்கியத்தின்
கலை ஞானப்
பொக்கிஷங்கள்.
மருத்துவ உலகின்
மகத்துவங்கள்.
சோதிடக் கலையின்
களஞ்சியங்கள்.

வைத்தியம்
சோதிடம்
வைத்திய சூத்திரம்
பூஜா விதி
சண்முக பூஜை
தமிழ் வித்தை
சூத்திரம் மற்றும் ஞானம்
ஜாலம்
என
நூல்கள்
பல படைத்தார்.

அத்தனையும் அமிழ்தம்.
தமிழ்ப்பா அமுதம்.

அருட்பாக்
கடலில்
கடைந்தெடுத்த
ஞான அமிர்தம்!

பின்னாளில்
சீனாவில்
போகரின்
நிறைவு காலத்தில்
தவ வலிமை
குன்றிப் போனது.

அவரைத் 
தாய் மண்ணிற்கு
அழைத்து வர
சீடர் புலிப்பாணி
சீனா சென்றார்.

உலகையே
உவகையுடன்
சுற்றி வந்த
போகர்
ஓரடி கூட
நகர முடியாத
நலிவு நிலை.

புலிப்பாணி
அவரைத்
தன் முதுகில்
அமர்த்தி
ககன மார்க்கத்தில்
தமிழகம் கொண்டு
வந்தார்.

பழனியில் வைத்து
குருவுக்குத்
தொண்டு செய்தார்.

குருவுக்குக்
காணிக்கையாய் 
எதுவும்
செலுத்தவில்லையே
என்ற எண்ணம்
அந்தக் குறைவிலாச்
சீடரிடம்
குறையாயிருந்தது
போலும்.

ஒருநாள்
தன் தவவலிமை
அனைத்தையும்
குருவுக்குக்
காணிக்கையாய்த் தந்து
மகிழ்ந்தார்.

குருவிற்குச்
சீடர் தந்த 
இந்தக்
காணிக்கை
சித்தர் உலகு 
காணாத ஒன்று.

குருவுக்கும்
சீடருக்கும்
இலக்கணம்
சொல்வதென்றால்
இவர்களைச் 
சொல்லலாம்.

குருவின்
ஆசியால்
சீடரும்
சீடரின்
காணிக்கையால் 
குருவும்
மகிழ்ந்திருப்பதும்
உயர்ந்திருப்பதும்
பழனி மலையில்!

போகரின்
கடைசி
மாணவரான
புலிப்பாணியை
வேடவர் குலம்
என்கிறார்
போகர்.

சதுரகிரித்
தலபுராணமோ
பொன் வணிகர்
எனப்
புகழ்கிறது.

புரட்டாசி
மாதம்
சுவாதி நட்சத்திரம்
நான்காம் பாதத்தில்
துலாம் ராசியில்
பிறந்தவர்
புலிப்பாணி சித்தர்.

பழனியிலேயே
போகர் சித்தியடைந்த
பழனிமலையின்
காலடியிலேயே
அதாவது
அடிவாரத்திலேயே
சீரிய சீடர்
புலிப்பாணியும்
ஒரு நாள்
சித்தியடைந்தார்.

பழனிமலை
செல்வோர்
அடிவாரத்தில்
கிழக்குப்புறம்
மலையேறும் பாதை
அருகில்
புலிப்பாணி சித்தர்
லயமான இடத்தில்
வணங்கி
தவம் மேற்கொண்டு
மேலே பயணித்தல்
மிகுந்த பலன் தரும்.

பக்தர்
வருகையைப்
பதிவு செய்பவர் அவரே.
உடனே
போகருக்கும்
அவர் மூலம்
முருகப் பெருமானுக்கும்
பரிந்துரைப்பவரும்
புலிப்பாணி சித்தரே.

முதலில் புலிப்பாணி.
அடுத்து
முருகப் பெருமான்.
அதற்கடுத்து போகர்
என்பதே
பழனிமலை வழிபாட்டின்
வழிபாட்டுக் குறிப்பு.
அதுவே சிறப்பு.

சித்தர் நினைப்பே
ஒரு தவம்!
சித்தரைப் படிப்பது
ஒரு தவம்!
சித்தர் பற்றிக் கேட்பது
இன்னொரு தவம்!
சித்தர் வழி நடப்பது
ஒரு பெருந்தவம்!
சித்தர் நிலை எய்துவது
தவத்திற்கே தவம்!
சித்தர் தேடல்
ஓர் ஈடற்ற தவம்!

தேடுவோருக்கு
அத்தவமே சிவம்.
அருள்தரும் சிவம்.
அன்பே சிவம்.

ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)