சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கொங்கணர்
கொங்கணர்
மாரிமைந்தன் சிவராமன்
சித்தர்களில்
சிறந்தவர்
கொங்கணர்.
அகத்தியர்
திருமூலர்
போகர்
கொளதம மகரிஷி
திருமழிசை ஆழ்வார்
திருமாளிகைத் தேவர்
என
மூத்த சித்தர்களின்
குருவருள்
பெற்றவர்.
குறிப்பாக
ஈடிணையற்ற
திருமாளிகைத் தேவரிடம்
தீட்சை பெற்று
நிறைவடைந்தவர்.
கொங்கணரின்
வரலாறு
சுவாரஸ்யமானது.
அடிப்படையில்
அம்மன் பக்தர்
கொங்கணர்.
அம்மன் வழிபாடே
அவருக்கு
அனைத்துமாய்த்
திகழ்ந்தது.
பொதுவாக
சக்தியே
தாயே
அன்னையே
என
சித்தர் பாடல்களில்
அம்மன் வழிபாடு
அதிகமாயிருக்கும்.
கொங்கணர்
மாரியம்மன் பக்தர்.
மாரி மைந்தன்.
கொங்கணரின்
அவதாரத் தலம்
கொங்கண நாடு.
வட கேரளா
கர்நாடகத்தின் சில
பகுதிகள்
மராட்டியத்தின் மேற்குக்
கரையோரப் பகுதிகள்
இணைந்ததே
கொங்கண நாடு.
தமிழகத்தில்
கொங்கு நாட்டில்
தாராபுரம் அருகே
ஊதியூர் எனும்
சிற்றூர்.
ஊதிய மலையில்
கொங்கணர்
பிறந்தார்
என ஒரு
வரலாறு உண்டு.
இரும்பை உருக்கிக்
கலன்கள் தயாரித்து
சிவன் கோயிலில்
விற்பது
இவர் பெற்றோர்
மேற்கொண்டிருந்த
குலத் தொழில்.
அழகிய
சிறுவனாய்
கொங்கணர்
சிரித்து மகிழ்ந்து
விளையாடிய போதும்
அவர் சிந்தையில்
எப்போதும்
அம்பிகை இருந்தாள்.
இளைஞராய்
வாலிபராய்
வலம் வந்த போதும்
அம்மனே அவர்
கனவிலும்
நினைவிலும்
அன்னையாய்க்
கலந்திருந்தாள்.
முக்தி என்பாளுடன்
திருமணம் நடந்தது.
மனைவியுடன்
மகிழ்ந்திருந்த
போதும் கூட
மாரி அம்மனே
மனதில் நிறைந்திருந்தார்.
இந்நிலையில்
அடிக்கடி
அவர் பாதை
வேறென
ஓர் எண்ணம்
எழுந்து
உள்ளத்தை
உசுப்பியது.
வாய்த்த மனைவி
பேராசைக்காரி.
பணம் பணம்
என்பதே அவளது
நிரந்தரப் பல்லவி.
'செல்வமே
சக்தி'
என்பது
முக்தியின்
வேதம்.
'சம்பாதிப்பவனே
சிறந்த மனிதன்
மற்றவன் எல்லாம்
பேடி'
எனப்
பரிகசிப்பாள் அவள்.
கொங்கணர்
அவள் நச்சரிப்பால்
தொழிலில்
கவனம்
அதிகம் கொண்டார்.
நல்ல வருமானம்
நாளும் பெருகியது.
ஆனால்
அவர் மனத்தின்
ஓரத்தில்
ஏதோ உறுத்தியது.
அவர் மனம்
ஆன்மிகம் தேடியது.
மனைவி
பெயரில்தான் முக்தி.
கொங்கணர் நாடிய
முக்தியை
சக்தியை
அவள் தரவில்லை.
விரக்தியே மிச்சமாய்
விஞ்சி நின்றது.
வேதியரை
ஞானியரை
சாதுக்களைக்
கண்டால் போதும்
ஓடியோடி
அவரடி தொழுவது
கொங்கணர் பழக்கம்.
அவர்களுக்கு
பசும்பால் தந்து
உபசரிப்பார்.
வந்தவர்கள்
பதிலுக்கு
ஞானப்பாலைக்
கொங்கணருக்கு
ஊட்டுவர்.
இருப்பினும்
'இன்னும் சம்பாதிக்க
வேண்டும்.
சொத்து சுகம்
பெருக்க வேண்டும்'
என்ற
தலையணை மந்திரம்
பெரிதாய்
கொங்கணிரிடம்
வேலை செய்தது.
நிறைய சக்திகள்
பெற வேண்டும்.
சித்திகள் பெற்று
உயர்நிலை
அடைய வேண்டும்.
இரும்பைத்
தங்கமாக்கிப்
புகழ் பொருள்
பெற வேண்டும்.
இம்சை அரசி
இல்லாளிடம்
நற்பெயர்
பெற வேண்டும்.
அதற்கு
தவசி முனிவர்
யோகி சித்தர்
என யாரிடமாவது
கற்றுணர வேண்டும்
என்றெல்லாம்
அடிக்கடி அசை
போட்டார்.
ஆசை அதற்கோர்
நாள் பார்த்தது.
எளிமைக்கு
இலக்கணமாய்ச்
சித்தர்கள் திகழ்வர்.
இதற்கு
முற்றிலும்
மாறுபட்டவராய்க்
கொங்கணர் இருந்தார்.
ஆசை
செல்வம்
படோடாபம்
கோபம்
அலட்சியம்
வேகம்
மனைவி
சொல்லே வேதம்
என
பலப்பல
பன்முகக்
குணாதிசயங்கள்
அவரிடம்
அதிகமிருந்தன.
அத்தனைக்கும்
பின்னால்
அவர்
மணந்தவள் இருந்தாள்.
மனையாட்டி
ஆட்டியபடி
மணி ஆடியது,
சத்தமும்
எழுந்தது.
ஆனால்
அது
வெளிக்கு!
உள்ளே
அவர் நிலை
தேடல்களால்
நிரம்பி இருந்தது.
இரண்டு நிலைகளால்
இருண்ட குழப்பமே
நிதமும் தொடர்ந்தது.
'காடு மலை
குகை
சென்று வந்தால்
குருவைக்
காணலாம்.
அவர்
சொல் வழி
நடந்தால்
அம்பிகையை
அடையலாம்'
என
மனக்குரல்
தினம் தினம்
சொல்லச் சொல்ல
அவர்
யாரிடமும்
சொல்லாமல்
ஊரிடமும் சொல்லாமல்
கானகம்
செல்ல
விருப்பப்பட்டார்.
அதற்கெனத்
திட்டமிட்டார்.
அது சமயம்
ஒரு சித்தர்
திருவாவடுதுறை
வந்திருப்பதாகக்
காற்று வாக்கில்
சேதி வந்தது.
காற்றை விட
ஆடுதுறைக்கு
அதிவேகமாக
ஓடினார்.
அவரைத் தேடி
அலைந்தார்
திரிந்தார்.
ஒரு நாள்
அவருக்குத்
திருநாளாய்
அமைந்தது.
அடர்ந்த
மரத்தடியில்
ஓர்
ஒளி சிந்தும்
சித்தரைத்
தரிசித்தார்.
அவர்
போகர்.
ஆச்சரியத்தோடு
'அடைக்கலம்'
என்றபடி அவர்
பாதமலர்களைப்
பற்றினார்.
கண்களால்
ஒற்றினார்.
நெற்றியால்
வருடினார்.
ஸ்பரிசம்
பட்டதும்
தவத்திலிருந்த
போகர்
விழித்தெழுந்தார்.
பார்த்த மாத்திரத்தில்
கொங்கணரைப்
பிடித்துப் போயிற்று
போகருக்கு.
கொங்கணர்
சிங்கமென
சிலிர்த்து
தங்கமென
ஒளிரப் போவது
அவருக்குத்
தெரிந்து போயிற்று.
''யாரப்பா நீ?"
''அடியேன்
தேவிதாசன்.
அம்பாள் பக்தன்.
அவளடி வாழ்பவன்.
அவளை அடைய
வழி தேடி வந்தேன்.
நீங்கள்
போதிக்க வேண்டும்.''
ஒரே மூச்சில்
சொல்லி முடித்தார்.
"உன் பெயர்?"
பதிலில்லை.
"எங்கிருந்து வருகிறாய்?"
''கொங்கண
தேசத்திலிருந்து.''
கதைச் சுருக்கம்
தந்தார்.
"ஓ...
கொங்கண
நாட்டுக்காரனா?
உனைக்
‘கொங்கணர்’
என்று அழைக்கிறேன்."
அந்தத் திருநாமமே
நிலைத்துப் போனது.
போகர் சூட்டிய பெயர்
பார் உள்ளளவும்
கடல் உள்ளளவும்
நிலைத்து நிற்குமன்றோ?
நின்றது.
நிற்கிறது.
கொங்கண சித்தர்
கொங்கண முனிவர்
கொங்கண நாதர்
கொங்கண நாயகர்
என
அப்பெயரே
விரிந்தும்
திரிந்தும்
சிறந்தும்
வியாபித்தது.
பின்
பிடித்துப்போன
கொங்கணருக்கு
அம்பிகையை
அவள்
திருவடிகளை
இறுகப் பிடித்துக் கொள்ள
மந்திரத்தை
வழிபாட்டைப்
போதித்தார் போகர்.
''கொங்கணா!
உன் முயற்சி
பலிக்கட்டும்.
மனிதர்
தொல்லையில்லா
இடம் சேர்.
தவம் செய்
எல்லாம்
செயல் கூடும்."
ஆசிர்வதித்தார்.
விடை கொடுத்தார்.
காடேகும்
காலம்
வந்த மகிழ்வில்
கொங்கணர்
காடு புகுந்தார்.
காட்டில்
அவரின் தேடலில்
அற்புத மலை
ஒன்று
அவரை அழைத்தது.
மேலேறினார்
தவத்தில் ஆழ்ந்தார்.
ஓங்காரியிடம்
ஒன்றிப் போனார்.
தவத்தில்
இருந்தபோது
'யாகம் செய்
அதில் தான்
நிறைந்த பலன்கள்
விரைவில் கிடைக்கும்'
என
அசரீரி கேட்டது.
கொங்கணர்
தவம் விழித்தார்.
'தவமா?
யாகமா?'
மனத்தில் போராட்டம்.
எதுவாயினும்
விரைந்து
கிடைக்க
வேண்டுமென்பதில்
அவருக்கு
ஆர்வம் இருந்தது.
சீக்கிரமே
எதையும்
அடைந்து விட வேண்டும்
எனும்
பேராசை இருந்தது.
மனைவியிடம்
நற்சான்றிதழ்
பெற வேண்டும்
என்ற
ஏக்கமிருந்தது.
எனவே
போகர்
சொல்லிய
தவத்தை விட்டு
யாகப் பாதைதான்
யோகப் பாதை
எனக்
களத்தில் இறங்கினார்.
அபூர்வ சக்திகள்
அவரை அடைந்தன.
முத்திகள் சிலவும்
சித்தி ஆயின.
சக்தி மிக்கவராய்த்
தன்னை உணர்ந்தவர்
தலைக் கனமாய்க்
காட்டில் நடந்தார்.
வழியில்
ஒரு சமாதி
தெரிந்தது.
அருகினில்
சென்றார்.
அகல விரிந்த
சமாதியிலிருந்து
சித்தர் ஒருவர்
எழுந்து வந்தார்.
ஒளி..!
பேரொளி!
கொங்கணரின்
கண்கள்
ஒளி வெள்ளத்தில்
சுருங்கிப் போயின.
வந்தவர்
கௌதம மகரிஷி.
எடுத்தவுடன்
கேட்டார்
''ஏனப்பா
தவம் நிறுத்தினாய்?"
"யாகம்
வேண்டாம்.
தவத்தைச் செய்து
சிவத்தை அடைவது
சித்தர் பாரம்பரியம்.
உன் செயல் தவறு.
சித்துக்கள் எல்லாம்
தெய்வ
சத்துக்கள்
கொண்டவைதான்.
இருப்பினும் அவை
வீணானவை.
வெத்து வேட்டுகள்!"
எச்சரித்தார்.
அவர் சொல்வது
புரிவது
போலிருந்தாலும்
புரியாதது போலும்
இருந்தது.
கௌதம சித்தர்
எச்சரிக்கையை விட
மன நச்சரிப்பே
வெற்றி கொண்டது.
மீண்டும்
யாகம் தொடங்கினார்.
துவக்க நேரத்தில்
மீண்டும் வந்தார்
கௌதம மகரிஷி.
"சொன்னால் கேள்.
பின்னால் வருந்த
நேரிடும்.
கடவுள் கூட
உனைப்
போன்றோருக்குச்
சில சித்திகள்
தருவார்.
அதிலிருந்து
மீள வேண்டும்.
அதற்கு
அடுத்த படிகள்
ஏற வேண்டும்.
மீளாதவர்
அச்சித்துகளைக்
கொண்டு
சித்தாடிவிட்டு
ஒருநாள் போவர்
சரிந்து.
அவர்
நிலை
ஒரு நாள்
சவமாகும்.
சாகா நிலை
எனும்
சிவம்
எய்ய
தவம் கொள்.
அதுவே நல்லது."
கௌதமரின்
குரல்
கொங்கணரின்
சிந்தனையில்
ஏறவில்லை.
யாகம்
தொடர்ந்தார்.
இன்னும் பல
சித்திகள்
கைகூடின.
பற்பல
குளிகைகள்
செய்தார்.
அவற்றின்
பலனால்
அற்புதங்கள்
நிகழ்த்தினார்.
உலகம்
மெச்சியது.
சந்தித்த
முனிவர்களிடம்
சாதிக்க
பலவற்றைக்
கேட்டுக்
கற்றார்.
ஒருநாள்
திருமழிசை ஆழ்வாரைத்
தரிசிக்க நேர்ந்தது.
அவரிடம்
தன்னிடமிருக்கும்
செம்பைப்
பொன்னாக்கும்
குளிகையைக் காட்டி,
"சுவாமி...
இது
காணி கோடியை
போதிக்கும்"
எனப் பெருமையாய்ச்
சொன்னார்.
ஆழ்வாரோ
அதிசயப்படாமல்
தன் உடல்
அழுக்கைத் திரட்டிக்
கூட்டி
அந்த
உருண்டையைக்
காட்டி
இது
எண்ணற்ற
சங்கதிளை
உருவாக்கும்.
இது காணி
கோடியை
ஆக்கும்"
என்றார்.
யாகப் பலனாய்ப்
பெற்ற
அதிசயக்
குளிகையைத்
திருமழிசை ஆழ்வார்
அரை நொடி
அழுக்கில்
திரட்டித் தந்து
கூறிய வார்த்தை
கொங்கணர்
செவிகளில்
தேளாய்க்
கொட்டியது.
ஓர் அடி
கொங்கணர்
தலையில்
அதிரடியாக
விழுந்தது.
அது
அவரது
தலைக்கனத்திற்குக்
கிடைத்த
முதலடி.
பேரிடி.
எளிமையாய்ச்
சொன்னார்
ஆழ்வார்.
''அப்பனே!
சித்திகளில்
மகிழாதே.
விளம்பரம்
தேடாதே.
விபரீதமாய்ப்
போகும்.
உன்
எல்லை
அவைதான் என
இறைவன்
அறிந்தால்
உன் நிலை
மேலேறாது.
அப்படியே
நின்றுவிடும்.
ஏற்ற வேண்டியது
குண்டலினி.
இதெல்லாம்
இடையில் கிடைக்கும்
அருள் தீனி
அவ்வளவே.
வெறும்
நொறுக்குத் தீனி
பசியாற்றாது.
பரமன்
பதம்
சேராது.
இறை
பற்றாது.
கரை
சேராது.
தவமே
சத்தியம்.
தவம்..!
ஆழ் தவம்...!!
பெருந் தவம்..!!!
நீள் தவம்...!!!!
அத்தவம் கொள்."
ஆழ்வார்
சொல்லிவிட்டு
மறைந்தார்.
போகர்
கற்பித்தது
கௌதமர்
எச்சரித்தது
இப்போது
திருமழிசையார்
வலியுறுத்தியது
தவமே.
கொங்கணர்
மனம்
கொஞ்சம்
மாறியது.
தவத்தைப்
பார்க்கலாம் என
முடிவு செய்தார்.
ஆழ்ந்த தவத்தில்
அமிழ்ந்து போனார்.
யாகத்திற்கும்
தவத்திற்கும்
இருக்கும்
மலைநிகர் பேதம்
புரிந்த நிலையில்
அகம் விழித்தது.
அக்கணமே
அவருக்குக்
கிடைத்திருந்த
'முழுச் சித்தி'
ஏவலுக்குக் காத்திருந்தது.
அந்த சக்தி
அந்த சித்தி
ரசவாத வித்தை.
இம்முறை
கொங்கணரின்
மனம்
கூத்தாடவில்லை.
அவ்வித்தை
அற்புதம்தான்.
ஆனால்
அந்த மாபெரும்
சொத்தை
அவர் விரும்பவில்லை.
சிவம்
தேடுவோருக்கு
அது
அவஸ்தை
என
உணர்ந்தார்.
அது வெறும்
சொத்தை
என
நினைத்தார்.
எளிமையே
ஆபரணம்
எனத்
தெளிந்தார்.
பக்குவ நிலைக்குப்
பாய் விரித்து
சேய் போல்
அதனில்
தவழ்ந்து மகிழ்ந்தார்.
அதன் பின்
உணவு கூட
பிச்சை
எடுத்தே
உண்டு
திரிந்தார்.
ஆனால் ஏனோ
கோபமும்
சாபமும்
அவருடனேயே
இருந்தது.
அதற்கும் ஒருநாள்
படிப்பினை கிட்டியது.
ஒரு நாள்
பகல் பிச்சைக்குப் பின்
மரத்தடி ஒன்றில்
தவமிருந்தபோது
கொங்கணர்
கைகளில்
பறவையொன்றின்
எச்சம்
எச்சில் போல்
தெறித்து விழுந்தது.
நிஷ்டை கலைந்து
கொங்கணர்
கண் விழித்தார்.
கண்களைக்
கோபமாய்ச்
சுழற்றினார்.
மேலே பார்த்தார்.
மரக்கிளையில்
கொக்கு ஒன்று
ஏதுமறியாததாய்
ஏகக் களைப்பில்
அமர்ந்திருந்தது.
கொங்கணர்
பார்வை பட்ட
நொடிகளில்
அந்தக் கொக்கு
பஸ்பமானது.
செருக்கோடு
நினைத்தார்.
'நம் பார்வைக்குத்தான்
எத்தனை பலம்.
கோபப் பார்வை
சாபப் பார்வையாய்
அக்னி ஆனதே!'
வியந்தார்.
பின்னொரு நாள்
வழக்கம் போல்
பிச்சை எடுத்துப்
புசிக்கும் வேளை.
ஒரு வீட்டு
வாசலில்
கொங்கணர்
நின்றார்.
''அம்மா...
அம்மா...''
இருமுறை
அழைத்தார்.
உள்ளே
ஏதோ குரல்கள்
அவருக்குக் கேட்டது.
தான் அழைத்தது
அப்படித்தானே
உள்ளேயும்
ஒலித்திருக்கும்.
அதை விட்டு
என்ன அலட்சியம்!
திமிர் பிடித்த குடும்பம்.
கோபத்தின்
உச்சியில்
கொங்கணர்
வெகுண்டார்.
சற்று நேரத்தில்
வீட்டம்மாள் வெளியே
வந்தாள்.
வரும் போதே
தட்டு நிறைய சாதம்.
சத்தான கூட்டு வகைகள்.
சித்தரை வணங்கி
வலம் வந்து விருந்தை
சித்தர் திருவோட்டில்
நிறைத்து நின்றாள்.
அவள் முகத்தில்
ஆயிரம் விளக்குப்
பிரகாசம்.
அத்தனை அமைதி.
கொங்கணரின்
முகத்தில்
கோபக் கனல்
அக்னிச்
சிவப்பாய் எரிந்தது.
உடல் முழுதும்
எள்ளும் கொள்ளும்
எரிந்து தெறித்தது.
கோபம் கொப்பளிக்கப்
பார்வையை வீசினார்.
அதிதியின் பார்வை
அந்த மகராசிக்கு
அதிர்ச்சியாய்த் தெரிந்தது.
விஷயம் புரிந்தது.
ஒரு கணம்தான்.
ஒரே கணம்தான்.
அக்கணமே
ஓங்கி ஒலித்தாள்.
"கொக்கென்று
நினைத்தாயோ
கொங்கணவா?''
மூன்றே வார்த்தைகள்
மூவுலகமும் அதிர்ந்தது.
முனிவர் கூட
ஆடிப் போனார்.
'என் பெயரும்
கொக்குக் கதையும்
இவளுக்கு
எப்படித் தெரிந்தது?'
தடுமாறிப் போனார்.
எங்கோ
ஒரு சம்மட்டி அடி
அவரின் மண்டையில்
அடித்தது போலிருந்தது.
இது இரண்டாவது அடி.
"அய்யா...!
என் கணவருக்குப்
பணி செய்து
கொண்டிருந்தேன்.
அவரே எனக்குத்
தெய்வம்.
அவரை விட
எவரும் எனக்குப்
பெரிதல்ல.
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
அன்புக் கணவனே
பெண்ணுகுச் சொத்து.
அவர் பணி
செய்வதே
தெய்வமே போற்றும்
அணிகலன்.
இதுவே
கற்பு.
பெண்மையின்
சிறப்பு."
சின்னப் பெண்மணி
சிந்திய சொற்கள்
சித்தர் மனத்தைக்
கத்தியாய் அறுத்தது.
ஒரு கணம்
மனைவி
முக்தியின்
உருவம்
கொங்கணர் மனத்தில்
நிழலாடியது.
ஒருக்கால்
இந்நிலையில்
அவள்
இருந்திருந்தால்
என்ன
சொல்லியிருப்பாள்!"
நினைத்து
அதிர்ந்து
ஒரு நொடி
சிரித்தார்.
'பதி விரதையே
மன்னிப்பாயா?'
மனம் நெகிழ்ந்து
கை கூப்பினார்.
அந்தப் பெண்மணி
வாசுகி அம்மை.
தெய்வப் புலவர்
வள்ளுவப் பெருமானின்
உத்தம பத்தினி.
உதாரண பத்தினி!
அத்தோடு
முடிந்து விடவில்லை
கொங்கணருக்குக்
கிடைத்த
அனுபவப் பாடம்.
வள்ளுவர் வீட்டை
விட்டு
வேறோர் ஊருக்குச்
சென்றார்.
அவ்வூரில்
கொங்கணரைப்
பார்த்ததும்
பணிவுடன்
வணங்கிய
வாலிபன் கேட்டான்.
"சுவாமி
வாசுகி அம்மையார்
எப்படி இருக்கிறார்?
நலமா? சுகமா?"
அடுத்த அடி
வாலிபன்
வார்த்தைகளால்
தடியாய்
விழுந்தன.
இது மரண அடி.
அடி மேல் அடி.
எப்படி?
இதற்கு
அவர் பெற்றிருந்த
தவபலம் கூட
பதில் தர
இயலவில்லை.
அந்த
இளைஞனின்
முகத்தையே
பார்த்திருந்தார்.
அவனே
தொடர்ந்தான்.
"சுவாமி...
என் பெயர்
தர்ம வியாதன்.
அம்மா அப்பாவைத்
தெய்வம் என
உணர்ந்தவன்.
அவர்கள்
பணி செய்வதே
என்
வாழ்க்கையென
வாழ்பவன்.
உங்கள் மனத்தில்
எழும்
சந்தேகம் கூட
எனக்குத் தெரிகிறது.
பதிபக்தியால்
வாசுகி அம்மைக்கு
ஏதோ ஒரு சக்தி.
பெற்றோரைக்
காப்பதால்
எனக்குள்ளும்
ஒரு சக்தி.
இதுவே
எங்களுக்கு
உங்கள்
செயல்கள்
தெரிந்திருக்கக்
காரணம்.
தன்னடக்கத்துடன்
தர்மப்படி
கடமை
செய்வதே
தெய்வ
வழிபாடு.
இதுவே
தெய்வ சக்திகளை
அளிக்க வல்லது.
இது முற்றும்
அறிந்த
தங்களுக்கா
தெரியாமலிருக்கும்?"
தர்ம வியாதன்
வியப்புடன்
கேட்டான்.
இக்கேள்வி
கேட்டு
அடித்தவன்
சிறுவன்
எனினும்
அத்தனை
தலைக் கனத்தையும்
சிதறடித்து
விட்டானே...!
கொங்கணருக்குப்
புதிய கல்வி
புதிய பாடம்
பதிய பாதை
அவனால் கிடைத்தது.
வாழ்த்தினார்.
அவனைக் குரு போல்
எண்ணி
வணங்கினார்.
விடைபெற்றார்.
அதன் பின்னர்தான்
கொங்கணர்
மனம் மாறத்
தொடங்கியது.
குணம் கூட
மாறிப் போனது.
மீண்டும்
போகரைத்
தரிசித்தார்.
ஆர்ப்பாட்டம்
அகம்பாவம்
அற்ற
அமைதி
வேண்டினார்.
உபதேசங்கள்
பல சொன்ன
போகர்
''நான் உன்
போதக ஆச்சார்யன்.
அடுத்து நீ
ஒரு
சாதக ஆச்சார்யனைத்
தரிசி.
போதகம்
என்றால்
ஞானம்.
ஞான
ஆசிரியராய்
நான்
உனக்குப்
போதித்தேன்.
சாதகம்
என்பது
பயிற்சி.
பயிற்சி
தரும்
முதிர்ச்சி
பெற்றவரே
சாதக ஆச்சாரியர்.
சாதகத்திற்குச்
சரியான நபர்
திருமாளிகைத் தேவர்.
போகர் காட்டிய
திசையில்
திருமாளிகைத் தேவரைச்
சந்தித்தார்.
முழுதாய்ச்
சரணடைந்தார்.
தேவர்
உபதேசித்தார்.
எஞ்சியிருந்த
மன
இருட்டும்
இருட்டுணர்வும்
குருவருளால்
நீங்கியது.
தீட்சைகள் தந்த
திருமாளிகைத் தேவர்
ஓர்
அருட்பாதை
காட்டினார்.
அத்திருப்பாதையின்
முடிவில்
திருப்பதி
இருந்தது.
இடையில்
திருத்தணி
வந்தது.
திருமாளிகைத் தேவர்
காட்டிய பாதையின்
தொடக்கம்.
அதுவும்
தவமே.
தவமாய்த்
தவமிருந்தார்.
திருத்தணி சென்றார்.
எஞ்சியிருந்த
கொஞ்ச நஞ்ச
கர்வம் முற்றிலும்
தணிந்தது.
அங்கே ஆலயத்தில்
வீரட்டேஸ்வர மூர்த்தியின்
மீது தனது
தவ சக்தியால்
உருவாக்கிய
குளிகை ஒன்றை
வைத்தார்.
மூர்த்தியோ
அக்குளிகையை
அமைதியாய்
வைத்த கணத்தில்
மறையச் செய்தார்.
கொங்கணரின்
முகம்
தொங்கிப் போனது.
மன்றாடியே
இறையிடமிருந்து
மீட்டார்
அக்குளிகையை.
'கிஞ்சிற்று
தலைக்கனமும்
தீர்த்துவிடும்
கணக்கை'
என்று
சொல்லாமல்
சொல்லிற்று
அக்குளிகை.
குளிகை
ஒன்றும்
மாளிகை அல்ல.
அதற்கும் மேலே
ஆயிரம்
பேரிகை
இருக்கு.
அந்த
ஜெயபேரிகைக்குத்
தவமே வழி.
இறை மூர்த்தி
மௌனமாய்க்
கற்பித்தார்
இந்த உபதேசம்.
கொங்கணர்
பற்றி
அகத்தியர்
கூறிய
கதை ஒன்று
உண்டு.
அது
கொங்கணர்
வளர்ந்த கதை.
கொங்கணரும்
திருமூலரைப் போல
கூடுவிட்டுக்
கூடு பாய்ந்த
கலையை விவரிக்கும்
கதை அது.
மூலிகைகளைத்
தேடி
கொங்கண முனி
காடுகளில்
அலைந்திருந்த போது
ஓரிடத்தில்
பளிங்கர்
இன
மக்கள்
ஒன்று கூடி
அழுதபடி
இருந்தனர்.
அன்றுதான்
திருமணமான
தம்பதியரில்
மணமகன்
மரணம் காண
மணமகள்
துடித்துப் போனாள்.
உற்றாரும்
சுற்றத்தாரும்
அழுது புரண்டதைப்
பார்த்த
கொங்கணர்
மனம் கலங்கினார்.
அவர்களுக்கு உதவ
முடிவெடுத்தார்.
கூடு விட்டுக்
கூடு பாய்ந்து
மணமகன் உடலில்
ஐக்கியமானார்.
மாப்பிள்ளை
மயங்கியவர் போல்
எழுந்ததும்
மணமகளுக்குக்
கண்ணீர் நின்றது.
கதறிய
உறவினர்
களிப்படைந்தாலும்
மாண்டவன்
மீண்ட ரகசியம்
ஆய்ந்தனர்.
'இது
இறைவனின் சித்தம்'
என்றார் சிலர்.
'இல்லையப்பா...
இது யாரோ ஒரு
சித்தரின்
திருவிளையாடல்'
என
மூத்த கிழம்
முத்து உதிர்த்தது.
அதை
ஏற்ற
மக்கள்
விரைந்து
கொங்கணரின்
உடலைத் தேடி
எரித்தார்கள்.
மணமகன்
உருவிலிருந்த
கொங்கணர்
மீண்டும்
காயகல்பம் எடுத்து
புத்துடலைக்
காய சித்தி செய்து
பளிங்கராய்ப்
பவனி வந்தார்.
அதுபோது
அற்புத அருளாளர்
கருவூராரைக்
கண்டு
ஆசி பெற்றார்.
அனுபவங்களை
ஆற்றலை
நூல்களாக்கினார்.
பதினாறு நூல்கள்.
அத்தனையும்
பித்தனையும்
சித்தனாக்கும்
தந்திரங்கள்.
சித்தர் கலைகளின்
சிறந்த
மந்திரங்கள்.
திருப்பதியில்
தவமிருந்த
காலத்தில்
வலவேந்திரன்
எனும்
சிற்றரசன்
கொங்கணரைக்
கண்டான்.
அவரே குருவெனச்
சரணடைந்தான்.
காலம் கனிய
ஞானம் பெற்ற
வலவேந்திரன்
ஞாலம் சிறக்க
குருவிடம்
வேண்டுகோள்
ஒன்றை
விரும்பி வைத்தான்.
"சுவாமி...
தங்கள் நூல்கள்
உயர்ந்தது.
சிறந்தது.
ஆனால்
பாமரர்களால்
புரிய முடியாதது.
அவர்களுக்கு உதவ
எளிமையாய்த்
தாருங்கள்.
கும்மியடிப்
பாடலாய்ப்
படையுங்கள்.
மக்கள்
படிப்பர்.
சிறப்பர்."
சீடனின்
வேண்டுகோளை
ஏற்று
கொங்கணர்
சிலவற்றைக்
கும்மிப் பாடல்களாய்ப்
படைத்தார்.
யோகம்
ஞானம்
வாதம்
கற்பம்
முதலான
துறைகளில்
படைத்தார்.
ஆம்...
சித்த வாழ்வின்
நிறைவில்
திருப்பதியில்
சித்தி அடைந்தார்.
சித்தர்கள்
லயமான
திருத் தலங்களே
கீர்த்தி மிக்கது.
சக்தி மிக்கது.
தெய்வீக அருள்
நிறைந்தது.
திருப்பதியின்
அருள் வளம்
பொருள் வளம்
என
நாளும் பெருகும்
மக்கள் வெள்ளத்திற்குக்
காரணம்
கொங்கணரே.
கொங்கணர்
தஞ்சையில்
சித்தி
அடைந்தார்
என்றும் சிலர்
சொல்கிறார்கள்.
தஞ்சை
மேல வீதியில்
இருக்கிறது
அந்த ஆலயம்.
இறையின் திருநாமம்
கொங்கணேஸ்வரர்.
கொங்கணரின்
கிருபை பெற்ற
தலங்களில்
திருப்பதி திருமலை
காங்கேயம் ஊதியூர்
சதுரகிரி
கோடித்துரை
திருக்கணங்கி
முதலியவற்றில்
கொங்கணரது
அருளாட்சி
இன்றும்
உணரக் கிடைக்கிறது.
எண்ணற்ற சீடர்கள்
கொங்கணர்
பெருமானுக்கு.
திருமலையில்
பாப விநாசனம்
ஆகாச கங்கா தீர்த்தம்
செல்லும் வழியில்
வேணுகோபால் சுவாமி
சன்னதியில்
கொங்கணரின் சீடர்
பத்து பேர்
ஜீவ ஐக்கியம்
பெற்றுள்ளதாக
ஐதீகம்.
திருப்பதி
ஏழுமலையானின்
கருவறையே
கொங்கணரின்
சொரூப சமாதி
என்பாரும்
உண்டு.
திருமலையில்
கோயில் குளத்தின் தெற்குப்பகுதியில்
எட்டாம் படிக்கட்டில்
அடக்கமாகி
இருப்பதாகவும்
எட்டாவது மலையில்
பெருமாள்
பாபாஜி
என்ற பக்தருடன்
சொக்கட்டான்
ஆடிய இடத்தில்
அடக்கமாகி இருப்பதாகவும்
சொல்கிறார்கள்.
இங்கு செல்பவர்கள்
அவரது
ஜீவசமாதிக்கு
மேல் உள்ள மரத்தின்
இலையை வைத்து
வழிபாடு செய்வது சிறப்பு.
திருப்பதி
வேங்கடவனின்
சிலைக்குத் தனது
பிராணப் பிரதிஷ்டையால்
நெற்றி (ஆக்கினை)
விசுத்தி (தொண்டையில்)
அனாகதம் (மார்பில்)
என்ற
மூன்று சக்கரங்களைக்
கொங்கணர்
திறந்து வைத்ததால்தான்
ஒரு நொடியே
தரிசிக்க முடிந்தாலும்
அத்தனை ஈர்ப்பு
ஆண்டவர் சிலைக்கு.
அதுதானே
திருமலையின் சிறப்பு!
'திருப்பதி சென்று
திரும்பி வந்தால்
திருப்பம் நிகழும்'
என்பது நிஜம்.
வேங்கடவனோடு
கொங்கணரையும்
தரிசித்து
வந்தால்
அத்திருப்பம்
மலையளவாய்
ஏழுமலை போல்
ஏழு மடங்காய்ப்
பெருகி
எண்ணற்ற மடங்காகச்
சிறக்கும்.
வாழ்வு முழுதும்
ஒளிரும்.
இது சத்தியம்.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக