சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சட்டைமுனி


சட்டைமுனி 

மாரிமைந்தன் சிவராமன்


சட்டைநாதர்
சட்டைமுனி நாயனார்
கயிலாயக்
கம்பளிச் சட்டை முனிவர்
என
சட்டைமுனிக்கு 
நிறையப் பெயர்கள் 
உண்டு.

அவர்
அரங்கனை வணங்கிய
வைணவர்
சிவனைப் போற்றிய
சைவர்
என்ற
பேதமும்
வாதமும்
உண்டு.

ஆதிகுரு
தட்சிணாமூர்த்தியின்
மாணவர்.

உரோமரிஷிக்கு
மருத்துவம் சொன்ன
மகோன்னதமிக்கவர்.

தட்சிணாமூர்த்தியும் 
நந்திதேவரும்
அகத்தியரும்
சட்டைமுனியின்
ஞானவழிக்
குருநாதர்கள்.

அவரை
உருவாக்கிய
அருள்நாதர்கள்.

சுந்தரானந்தர்
பாம்பாட்டி
இருவரின்
குருநாதர்
சட்டைமுனி.

சித்தர் பரம்பரையின்
சீர்மிகு
தொடர்பில் 
வரலாறாய் 
வாழ்ந்தவர்.

மூத்த சித்தர்களுக்குக்
கட்டுப்படாது
சிவபெருமானாலேயே
கட்டுப்படுத்தப்பட்டவர்
சட்டைமுனி.

சித்த மருத்துவத்திற்கு
இலக்கணம் 
இவரெனத் துணிந்து
சொல்லலாம்.

அதே சமயம்
சித்தர் இலக்கணத்தைத்
தகர்த்தெறிந்த
புரட்சிச் சித்தர்
எனப்
புகழ்ந்தும் போற்றலாம்.

போகர் பெருமானே
சட்டைநாதர்
வரலாற்றுக் குறிப்பை
போகர் ஏழாயிரத்தில்
பாடலாய்ப்
பகிர்ந்திருக்கிறார்.

அகத்திய முனிவரும்
அகத்தியர்
பனிரெண்டாயிரத்தில்
சட்டைநாதர் பற்றிப்
பல
பாடல்கள் 
புனைந்திருக்கிறார்.
வாழ்த்திப்
புகழ்ந்திருக்கிறார்.

ஸ்ரீரங்கநாதரே
சட்டைமுனிதான்
என்றும்
கொங்கணரின்
குருநாதர்
என்றும்
குறிப்புகள்
உள்ளன.

சதுரகிரி தல புராணத்தில்
சட்டைமுனி வரலாறு
முக்கியமான இடத்தில்
முத்தாய் ஒளிர்கிறது.

இவையே
சட்டைநாதராம்
சட்டைமுனி பற்றி
அறிய உதவும்
ஆதாரப் பதிவுகள்.



இலங்கை தேசமே
சட்டைமுனியின்
பூர்வீகம்.

அங்கே தேவாதி
தேவர்களை
தெய்வங்களைப்
போற்றிப் பணி செய்யும்
தேவதாசிப்
பெண்ணொருத்தி.

அவளுக்கு ஒரு
தமிழரின்
காதல் கைகூட
அவரைக் கணவராக
ஏற்று
அழகாய் ஓர்
ஆண் மகவு பெற்றாள்.

ஏழைக் குடும்பம்.
வறுமை விரட்ட
தாயும் சேயும்
தந்தையுமான மூவரும்
பிழைப்புத் தேடித்
தமிழகம் வந்தனர்.

வறுமை தொடர்ந்தது.
விவசாயக் கூலி
வேலைதான் 
கிடைத்தது.

தாயும் தந்தையும்
வேலை செய்தும்
அரை வயிறே
அன்றாடம் நிறைந்தது.

சின்னக்குழந்தை
சட்டைமுனி 
கோயிலில்
தட்டேந்திப்
பிச்சை எடுப்பார்.

அந்த யாசகமே
மீதி வயிற்றை
நிரப்ப முயன்றது.

காலம்
இப்படித்தான்
கனியாமலேயே
கடினமாய் நகர்ந்தது.

உரிய வயதில்
வாலிபம் கண்ட
சட்டைமுனிக்குத்
திருமணம் நடந்தது.

அதென்ன
ஊர் வியக்கும்
திருமணமா?

வறுமைக் குடும்பத்தில் 
ஓர் உறுப்பினர் கூடினார்
அவ்வளவுதான்!

ஏனோ
சட்டைமுனிக்குக்
குடும்ப வாழ்வில்
குதூகலம் இல்லை.

அது
பிடிக்கவும் இல்லை.
அதில் பிடிப்பும் இல்லை.

மனது மட்டும்
எதையோ தேடி
அலைந்தது.

ஒருநாள்
பிச்சை எடுத்துக்
கொண்டிருந்த
சட்டைமுனி
முன்பாய்
சடைமுடி கொண்ட
சாது
தென்பட்டார்.

அவர் கண்பட்ட
மாத்திரத்தில்
சட்டைமுனிக்குள்
ஏதோ மாற்றம்.

அபூர்வ சக்தியொன்று
அவரிடம் இருப்பதை
உணர்ந்தார்.

சொல்லாமல்
கொள்ளாமல்
அவரடி தொடர்ந்தார்.

சட்டைமுனியின்
ஞானவேட்கை
முனிவருக்குப்
புரிந்தது.

அவரும்
அவருக்குத்
தெரிந்தன எல்லாம்
ஞான உபதேசமாய்ச்
சொன்னார்.

ஒருநாள்
சட்டைமுனியைத்
தட்டிக் கொடுத்து
அடுத்து ஒரு
ஞான முனிவரைக்
கண்டடையச்
சொன்னார்.

போகரே
சட்டைக்கேற்ற
ஞானத்தைத்
தரவல்ல குருவென
அடையாளம் சொன்னார்
அந்தச் சித்தர்.

அதன் பின்
காடு மேடெல்லாம்
அலைந்து திரிந்து
எப்படியோ
போகரிடம்
ஒருநாள்
போய்ச் சேர்ந்தார்
சட்டைமுனி.

காலம் கனிந்தது.

சட்டைமுனியின்
வாழ்க்கை
ஆதிகுரு
தட்சிணாமூர்த்தியால்
நேர்த்தி ஆனது.
சித்தர் மார்க்கத்தில்
பூர்த்தி ஆனது. 

போகருடன்
இருந்த காலம்
சட்டைமுனிக்கு
ஞானக் காலமாய்
விரிந்து படர்ந்தது.

கொங்கணர்
கருவூரார்
என
ஞானப் பெட்டகங்கள்
சட்டைமுனிக்கு
அறிமுகம் ஆயினர்.

மொத்ததில்
சட்டைமுனி
பற்பல
சித்தர்களால்
பட்டை தீட்டப்பட்ட
ஒரு சித்த மணி
ஆனார்.

அகத்தியரிடம் 
சில ஆண்டுகள் 
சட்டைமுனி
அன்பு அருளோடு
இருந்ததாகத் தகவல்
உண்டு.

இத்தனை ஞானிகள்
சகவாசம்
சித்தர் உலகில்
எத்தனை பேருக்குக்
கிடைத்திருக்கும்?

ஞானத் தேனியாய்த்
தேடலில் இருந்தவர்
ஞான உச்சத்தில் 
இராணித் தேனியாய் 
உலா வரத் தொடங்கினார்.

மனித குலம்
முழுமைக்கும்
தான் பெற்ற
ஞானத்தைத்
தாரை வார்க்க
தவறில்லாமல் 
வார்க்கத்
தீர்மானித்தார்.

சித்தர் உலகைப்
படைப்பதில்
முனைப்புக் காட்டினார்.

பொதுவாக
சித்தர் கருத்துக்கள்
சாதனைச் செயல்கள்
மருத்துவ நுணுக்கங்கள்
தீயவர் கைகளில்
அகப்படக் கூடாது என்பது
சித்தர்கள் எண்ணம்.

அதனாலேதான்
அவர்கள் படைத்த
அத்தனையும்
ரகசிய மொழிகளில்
பரிபாஷைகளாலேயே
பம்மிப் பதுங்கின.

இது
அக்கால மரபு.
சித்தர்களின் சிறப்பு.

இந்த மரபைத்தான்
சுக்கு நூறாய்
உடைத்து எறிந்தார்
சட்டைமுனி.

'பரிபாஷை எதற்கு?
எல்லோரும் அறியட்டும்.
பாமரனும் ஞானம்
பெறட்டும்.
உலகம் உய்யட்டும்'
என்பதே சட்டைமுனியின்
நிலைப்பாடு.

எளிய மொழியில்
எழுத ஆரம்பித்தார்.
அது
மூத்த சித்தர்களுக்குக்
கோபத்தை மூட்டியது.

திருமூலர்
எரிந்து விழுந்தார்.
கோபத்தில்
சட்டைமுனி எழுதிய
தீட்சா விதி
எனும் நூலைக்
கிழித்து எறிந்தார்.

அப்படியும்
அவர்கள் கோபம்
தணியவில்லை.

உரோமரிஷியும்
கோபம் கொப்பளிக்க
சட்டைமுனியின்
நூல்கள் சிலதைச்
சுக்கு நூறாய்க்
கிழித்து எறிந்தார்.

அப்படியும்
சினம் குறையவில்லை.

பெரும் சண்டையே
வந்ததாம்
சதுரகிரியில்.

பதிலுக்கு
உரோமரிஷியின்
உயிரான படைப்புகளை
சட்டைமுனி
கிழித்தெறிய முயல
அவற்றைக் காப்பாற்ற
உரோமரிஷி
காகபுஜண்டரிடம்
பாதுகாப்பாய்க் கொடுத்து
வைத்தாராம்.

தப்பித்த நூல்களை
காகபுஜண்டர்
பின்னாளில்
அகத்தியரிடம்
சேர்ப்பித்தராம்.

இப்படி
சட்டைமுனி
சண்டைமுனியாய்
பண்ணிய புரட்சி
பெரும் பிரச்சனையாய்
வெடித்தது.

மூத்த சித்தர்கள்
மூத்த குருவாம்
சிவபெருமானிடம்
புகாராய்ச் சொல்ல
விசாரணைக் கமிஷன்
விரைந்து வந்தது.

வழக்கை விசாரித்த
ஞானப்பெரும் சித்தர்
ஆதிநாதர்
ஞான நூல்களை
வெளிப்படையாக
எழுத
தடை உத்தரவே 
போட்டதாக
வரலாறு சொல்கிறது.

அதன்பின்
சட்டைமுனியின்
நூல்கள் யாவும்
எவர் கைக்கும்
செல்லாமல்
குகைக்குள்
வைக்கப்பட்டன.

இப்படி சட்டைமுனி
பிற சித்தர்களிடம்
பட்ட பாட்டை
நீண்ட கதைபோல
வரிசைப்படுத்தலாம்.

சட்டைமுனியின்
நிகண்டு
வாத காவியம்
சரக்கு வைப்பு
நவரத்தின வைப்பு
வாகடம்
முன் ஞானம் பின் ஞானம்
கற்பம்
உண்மை விளக்கம்
முதலான நூல்கள்
சித்தர் உலகின்
நிரந்தரப் பொக்கிஷங்கள்.

மூத்த சித்தரும்
முதன்மைச் சித்தருமான
சிவபெருமான்
சட்டைமுனிக்கு
எதிராய்த்
தீர்ப்பு சொன்னாலும்
இருவரின்
உறவும் நட்பும்
குறைபடவில்லை.

அடிக்கடி
கயிலையங்கிரி
சென்று
ஆதி குருவைப்
பார்ப்பதும்
அளவளாவுவதும்
சட்டைமுனியின்
வழக்கமாயிருந்தது. 

கயிலையில் 
கம்பீரமாய்
கம்பளிச் சட்டை
அணிவதும் வழக்கம்.
அதனாலேயே
கயிலாய
கம்பளிச் சட்டை முனிவர்
என்ற பெயரும்
கிடைத்தது.

சண்டையிருந்தாலும்
மருத்துவச் சந்தேகங்களை
உரோமரிஷி
சட்டைமுனிவரிடமே
கேட்டுத் தெளிவாராம்.

காரணம்
சித்த மருத்துவத்தின்
சிகரமாய்த் திகழ்ந்தவர்
சட்டைமுனி.

மருந்துகளின் தன்மை
தயாரிக்கும் செய்முறை
புடமிடுதல் 
பத்தியம்
நோய் தீரும் கால
அவகாசம்
என ஐந்திலும்
வல்லவர் சட்டைமுனி.

சட்டைமுனியின்
மருந்துகள்
கடும் பத்தியம்
கொண்டவை.
இருப்பினும்
நித்தியமானவை.

சட்டை முனியின்
இறுதிக் காலம்
ஞானமுடையோருக்கே
கிடைக்கும் பேறு.
சித்தர் பிரான்களுக்கே
வாய்க்கும் வாய்ப்பு.

சட்டைமுனி
ஊர் ஊராய்
உலா வந்த சமயம்
தூரத்தில்
ஒரு கோபுரமும்
கோபுரத்தின் கலசமும்
கண்ணில் பட்டது.

அது
திருவரங்கம்
அரங்கநாதர் ஆலயம்
என்பது
சட்டைமுனியின்
மனத்திற்குப் புரிந்தது.

இரவுக்குள்
சன்னதியை அடைந்து
இறைவனின்
தாள் பணிந்திட
வேண்டுமென
வேகமாய் நடை
போட்டார்.

வயது
மிகுந்திருந்ததால்
அவரது 
ஓட்டத்தை விட
கால ஓட்டம்
அதிகரித்திருந்தது.

அதனால்
அவர் போய்ச் சேர்ந்த
நேரம்
கோயில் நடையைச் 
சாத்தி விட்டார்கள்.

சோர்வு உடலில்தான்
மனத்தில் இல்லையே!
"அரங்கா ...
அரங்கா...
அரங்கா..."
எனக் கதறினார்.

அவரின் குரல்
அரங்கனை எட்ட
ஓர்
அற்புதம் நிகழ்ந்தது.

கோயிலில்
மேள தாளங்கள் தாமாய்
முழங்கின.
கோயில் மணிகள் ஓங்கி
ஒலித்தன.
கதவுகள் ஓசைபட
முழுதாய்த் திறந்தன.

அரங்கன் புன்னகை தவழ
வைர வைடூரிய
தங்க ஆபரணங்கள்
தகதகவென ஜொலிக்க
அருட்காட்சி தந்தார்.

அத்தரிசனம் கண்டார்
சட்டைமுனி.

திறந்திருந்த கதவுகள்
அச்சமயம்
வந்தோருக்குச்
சந்தேகத்தைக் கிளப்ப
திருடன் வந்திருப்பானென
திரண்டது கூட்டம்.

உள்ளே வந்து
பார்த்தால்
அரங்கனின்
ஆபரணங்கள்
ஒன்று விடாமல்
சட்டைமுனியை
அலங்கரித்துக்
கொண்டிருக்கும்
கோலம்.

''ஆசையைப் பாரு...
அரங்கன் நகைகள்
அற்பத் திருடனுக்கா!"
என கூட்டத்தின்
ஒரு பாதி
நகைகளைப் பறித்தது.

சட்டைமுனியைச்
சாப வார்த்தைகளால்
அர்ச்சித்தபடியே
இன்னொரு பாதி
நகைகளைச்
சுத்தம் செய்து
அரங்கனுக்கே சாத்தியது.

'சாமி குத்தம்'
என ஓலமிட்டது
கோயிலைச் சேர்ந்த
ஒரு கூட்டம்.

பிடித்து இழுத்து
அரசன் முன்
நிறுத்தியது
இன்னொரு
முரட்டுக் கூட்டம்.

"என்ன நடந்தது?"
அரசவை அதிரக்
கேட்டான் மன்னன்.
அக்குரல் 
அந்தப்புரம் வரை 
கேட்டது.

"எனக்கெதுவும்
தெரியாது.
இது
அரங்கனின்
திருவிளையாடல்."
அமைதியாய்ச் 
சொன்னார்
சட்டைமுனி.

''திருவிளையாடலா?
என்ன கதையா?
நடந்தது என்ன?’'
மீண்டும் கேட்டான்
மீளாச் சினத்துடன்.

நடந்ததனைத்தையும்
மெலிதாய்ச் சொன்னார்
மெய்ஞானச் சித்தர்.

'உண்மையாய்
இருக்குமோ?'
மன்னன் மனதில்
எழும்பியது கேள்வி.

''கோயில் வாயிலுக்கு 
அழைத்துச்
செல்லுங்கள்.
இவர்
அழைக்க
நாதன்
வருவாரா
எனப்
பார்த்துவிடலாம்... "
கட்டளை இட்டான்.

கோயில் சாத்தப்பட்டது.
கோயில் வாசலருகே
மீண்டும் சட்டைமுனி.

இம்முறையும்
''அரங்கா அரங்கா அரங்கா’'
என
மும்முறை கூவினார்.

இம்முறை அக்குரலில்
ஏதும் பதட்டமில்லை.

என்ன அதிசயம்!
அரங்கன் வந்தான்
முன்பு போலவே.
மேளங்கள் மணிகள்
முரசுகள் முழங்கின.

தட் தடார்
என
ஆனை போல்
பிளிறி
இரண்டு கதவுகள்
விரிந்து திறந்தன.

விண்ணுக்கும்
மண்ணுக்குமாய்
அரங்கன்
வெளிப்பட்டான்.

அரங்கனின்
ஆபரணங்கள்
அவனது
திருமேனியிலிருந்து
தாமாகக் கழன்று
சட்டைமுனியின்
மேனியில்
கழுத்தில்
தலையில்
கைகளில்
நிரம்பத் தொடங்கின.

அரங்கனைப் போல
சட்டைமுனியும்
ஜோதியாய் ஜொலித்தார்.
மக்கள் அனைவரும்
வியந்து நின்றனர்.

கொஞ்சம் பயந்தும்
நின்றனர்.

அரங்கனும் 
அவரின்
அன்பனும் 
ஒன்றென
உலகுக்குக்
காட்டிய நிகழ்வென
அரசனும் ஆன்றோரும்
வியந்து போற்றி
வணங்கி நின்றனர்.

''அரங்கா
அரங்கா ...
அரங்கா ..."
என சட்டைமுனி
உருகிக் குரலிட
அத்தனை பேரும்
''அரங்கா'' என 
விண்ணதிரப்
போற்றி வணங்கினர்.

அப்போது
அங்கோர்
அற்புதம்
இனிது நிகழ்ந்தது.

அகிலம் வணங்கும்
அரங்கனின்
திரு உருவோடு
திருவோட்டுடன்
வாழ்க்கையைத்
துவக்கி
இன்று
அரங்கனின்
ஆபரணங்களோடு
ஒளிர்ந்து கொண்டிருந்த
சட்டைமுனி
ஒளியாய்
எழும்பி
பேரொளி வீசிய
பெருமாளோடு
இரண்டறக் கலந்தார்.

கண்ணுற்ற மக்கள்
இறை முழக்கம்
செய்ய...
இறைவனும்
சித்தனும்
மறைந்து போனார்கள்.

மெய் சிலிர்க்கும்
இப்புராண வரலாறு
சட்டைமுனி
வைணவர்
என்பாரின் வரலாற்றுப்
பதிவாய் உள்ளது.

அதற்குச் சாட்சியாக
ஸ்ரீரங்கத்தில்
சட்டைமுனியின்
ஜீவசமாதி உள்ளது.


சட்டைமுனி
சைவர்தான்.
அவர் பெயரே
சட்டைநாதர் 
என்பதுதான்.
அவர் பெயரே 
அதற்குச் சான்று
என்போரும் உண்டு.

சட்டைநாதர்
சித்தி பெற்றது
சீர்காழியில்
என்பது
அவர்கள் கருத்து.

போகரும்
சட்டைமுனி
சித்தி பெற்றது
சீர்காழியில்தான்
எனத்
தனது ஞான சாகரத்தில்
கூறி மகிழ்கிறார்.

இவ்விரு கருத்துகளும்
உண்மையே.

அரியும்
சிவனும் ஒன்றுதானே
எனச்
சொல்வோர்
சித்தர்கள்.

திருவரங்கத்திலும்
சீர்காழியிலும்
லயமான 
சட்டைமுனியை
சட்டைநாத சித்தரைத்
தரிசிப்போருக்கு
நன்மைகள் பல
நாள்தோறும் நிகழ்கிறது.

அதனால் 
அங்கு 
பக்தர் கூட்டம் 
அலைமோதும்
ஆன்மிகச் சூழல்
அன்றாடம் தவழ்கிறது.

சட்டைமுனி
சித்திரை மாதம்
மிருகசீரிஷம்
3-ஆம் பாதத்தில்
அவதரித்தார்.

வாழ்ந்த காலம்
800 ஆண்டுகள்
14 நாட்கள்.
சட்டைமுனிக்கு
10 மனைவிகள்
100 குழந்தைகள்
என்கிறார்
கோரக்கர்.

உங்களுக்குத் தெரியுமா?

ஞானசம்பந்தருக்குப்
பார்வதி தேவி
ஞானப்பால்
தந்த இடம்தான்
சீர்காழி.

சட்டைநாதர்
லயமாகியிருக்கும்
கோயில் 
குளக்கரையில்தான்.

போவோமா?
ஓர் ஊர்கோலம்
சீர்காழிக்கும்
ஸ்ரீரங்கத்திற்கும்?

ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)