சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - தேரையர்
தேரையர்
மாரிமைந்தன் சிவராமன்
ஆதி சித்தர்
சிவபெருமான்.
அவருக்கு
அடுத்த
அருட்பெரும் சித்தர்
அகத்தியர் பெருமான்.
அகத்தியருக்குச்
சீடர் பலர்.
அவருள் சித்தில்
சிறந்த சித்தர்
தேரையர்.
தேரையரின்
முற்பிறப்பு
இராமதேவர்
என்றும்
யாகோபு
என்றும்
பெரும் பேறுகள்
கொண்ட
சிறப்புடையது.
தேரையர்
வேறு
இராமதேவர்
வேறு
என
அடித்துச்
சொல்வோரும்
உண்டு.
கடந்த பிறப்பில்
இராமதேவருக்கு
அகத்தியர் மேல்
அலாதி பக்தி.
அவரிடம்
குருகுல வாசம்
வேண்டிப் பெற்றார்.
அந்த
வாய்ப்பு
சில காலமே
சிறந்திருந்தது.
அப்பிறப்பில்
போதிய காலம்
இல்லாது போனதால்
மறு பிறப்பிலேனும்
அகத்தியர்
அடிமனதில்
ஆழ்ந்து அமர
மறு பிறப்பு எடுத்தார்.
புதிய பிறவியில்
பிறப்பால்
அவர் ஓர் ஊமை.
அந்தணர் ஒருவர்
பரிந்துரை செய்ய
அகத்தியர் ஏற்றார்
அவரை.
அவரே
காலப் போக்கில்
தேரையர் ஆனார்.
காலம் கடந்த
சித்த புருஷர்
ஆனார்.
அகத்தியரிடம்
அழைத்துச் சென்று
சேர்த்து விட்டவர்
ஒளவைப் பாட்டியே
என்பாரும் உண்டு.
பேச்சுதான்
இல்லையே தவிர
ஊமைச் சிறுவன்
உன்னதமானவன்.
கெட்டி.
படு சுட்டி.
அகத்தியர் பிரானுக்கு
அவனைப் பிடித்துப்
போகவே
அந்த ஊமைச்
சிறுவனை
உடன் வைத்துக்
கொண்டார்.
வைத்தியம்
மருந்து என
அனைத்தும்
கற்பித்தார்.
இப்பிறவியின்
நோக்கமே
அதுதானே?
'சிக்' கெனப்
பிடித்துக்
கொண்டார்
சீரிய சீடரும்.
ஒரு சமயம்
ஒரு முனிவர்.
பற்றில்லா அவரைத்
தீராத தலைவலி
பற்றிக் கொண்டது.
அகத்தியரை
நாடி வந்தார்.
அகத்தியர்தான்
மாஸ்டர் ஆப்
சர்ஜரி ஆயிற்றே!
முனிவரின்
மூளைக்கான
அறுவை சிகிச்சைக்கு
ஆயத்தமானார்
அகத்தியர்.
முனிவரின்
கபாலம் திறந்தார்.
உள்ளே
ஒரு
சிறு உயிரினம்.
சிறு தேரை.
அந்தத் தேரை
அங்குமிங்கும்
ஆர்ப்பரித்துக்
கொண்டிருந்தது.
அதுதானே
தலை விதி?
அதனால்தானே
தலைவலி!
தேரையை
வெளியே எடுக்க
அகத்திய முனி
ஆன மட்டும்
பாடுபட்டார்.
தேரையோ
பிடிக்கப் போனால்
எதிர் திசை
ஓடி ஒளிந்தது.
மிகவும் முயன்றால்
மூளை சிதையும்
அபாயமிருந்தது.
அகத்தியரின்
முயற்சி
ஒரு புறம்
இருக்க
அருகிலிருந்த
ஊமைச் சீடன்
ஆர்வமுடன்
இதைக்
கவனித்திருந்தான்.
திடுமென
அவன் ஒரு
காரியம் செய்தான்.
ஒரு
தாம்பாளம் எடுத்து
அதில்
தண்ணீர் நிரப்பி
அருகினில் வைத்தான்.
தண்ணீரைக்
கண்ட தேரை
தாவிக் குதித்தது
அச்சிறு
தாம்பாளத் தடாகத்தில்.
பிறகென்ன?
அகத்தியர் மகிழ்ந்து
முனிவரின்
மண்டையை
மூடினார்
சந்தான கரணி
எனும்
மூலிகையால் .
தலைவலி
போயே
போச்சு...!
அகத்தியர் வியந்தார்.
சீடரின் விவேகத்தைப்
பாராட்டி நெகிழ்ந்தார்.
முனிவரும்
உயிருடன்
எழுந்தார்.
முனிவரையும்
குருவையும்
வணங்கி நின்றார்
சீடர்.
"வாழ்க நீ...
நீ விவேகி...
உன் பெயர்
இனி
ஊமையன் இல்லை.
நீ தேரையன்
'உன் பேர்
இனி தேரையன்"
எனப் பெயர் சூட்டி
வாழ்த்தினார்
அகத்தியர்.
முனிவர்
வழிமொழிந்தார்.
நோய்ப் பட்ட
முனிவரும்
வாழ்த்தவே
நெகிழ்ந்து
போன
அகத்தியர்
"நீயே என் குரு.
நீயே என் தெய்வம்.
குலக் கொழுந்து"
எனத் தேரையை
உச்சி முகர்ந்து
பாராட்டினார்.
அதோடு விடவில்லை
அகத்தியர் பெருமான்.
தன்
தவ ஆற்றலால்
ஊமைத் தன்மையைப்
போக்கி
ஊர் வியக்கப்
பேசவும் வைத்தார்.
இதுவே
ஊமையன்
தேரையரான
கருத்துமிகு
நிகழ்வு.
தலைவலி
நீங்கப் பெற்றவர்
சங்கப் புலவர்
திரணாக்கிய
முனிவர்
என்றும்
காசி வர்மன்
என்ற
மன்னன் என்றும்
இந்திரன் என்றும்
இல்லையில்லை
நக்கீரன் என்றும்
பல்வேறு
கருத்துகள் உண்டு.
திரணாக்கிய
முனிவர்தான்
பின்னாளில்
அகத்தியரின்
சீடராகி
தொல்காப்பியம்
படைத்த
தொல்காப்பியர்
என்பது இன்னுமொரு
இலக்கியச் செய்தி.
அகத்தியரின்
பெருமை கூடியது
அருந்தவச் சீடனால்.
சீடனின் பெயரும்
புகழும்
ஊர் முழுக்க
உயர்ந்தது.
பாண்டிய மன்னன்
ஒருவன்.
அவன்
கூன் பாண்டியன்.
அவனுக்கு
அசிங்கமாய்
கூன் முதுகு.
மக்கள் பரிகாசம்
ஒருபுறமிருக்க
அவனுக்கே அவனைப்
பிடிக்காமல் போனது.
அகத்தியரிடம்
அடைக்கலமாய்
வந்த மன்னன்
நோய் தீர்க்க
வேண்டிக்
கதறி நின்றான்.
கும்பமுனி
குறை தீர்ப்பார்
என
பக்தியுடன்
காத்திருந்தான்
பாராளும்
மன்னன்.
மூலிகைத் தைலம்
தயாரானது.
தேரையரிடம்
முக்கியப் பொறுப்பை
ஒப்புவித்து விட்டு
அகத்தியர் பெருமான்
அவசர வேலையாய்
வெளியே
சென்றிருந்தார்.
கொப்பரையில்
தைலம்
கொதித்துக்
கொண்டிருக்க
தேரையர்
தைலப்
பதத்திற்கான
தருணம்
பார்த்திருந்தார்.
அது ஒரு
புது முயற்சி.
தேரையர்
கவனம்
பிசகாமல்
காத்திருந்தார்.
அப்போது
மேற்கூரையில்
சடசடவென
சத்தம்.
'டப்... டுப்' என
அதிர்வு ஒலி.
மேலே
பார்த்தார்
மருத்துவச் சீடர்.
உடனே
கருத்தொன்று
கருக் கொண்டது.
கொதிக்கும்
தைலம்
கொடுத்த ஆவி
மேலே
கூரையில்
வளைந்திருந்த
கம்புகளை
நேராக
நிமிர்த்திக்
கொண்டிருந்தன.
அதனாலே தான்
தைலம் சுடச் சுட
சட சட சத்தம்.
'ஆஹா...
இதுவே
நல்ல தருணம்'
எனத் தீர்மானித்தார்
தேரையர்.
மூங்கிலின்
கூன் நிமிர்ந்ததும்
இந்தப்
பதமே
மன்னனின்
கூன் நிமிர்த்தும்
தைலத்தின்
பதம் என
கணத்தில்
முடிவெடுத்து
கொப்பரையின்
கீழிருக்கும்
தீயணைத்தார்.
அகத்தியர்
வந்தார்.
நடந்தது கண்டார்.
பதமான தைலம்
இதமாகத் தடவ
மன்னன்
கூன்
நிமிர்ந்தது.
கேள்விக்குறி
போலிருந்த
உடம்பு
ஆச்சரியக்
குறி போல்
அதிசயம் கண்டது.
குரு அகத்தியர்
சீடர் தேரையரின்
உச்சி முகர்ந்தார்.
உலகின்கண்
தேரையர் பெயர்
மேலும் உயர்ந்து
உலவத் தொடங்கியது.
பிறிதொரு சமயம்.
அகத்தியர்
ஆசிரமத்தின்
அருகிலிருந்த
சித்தர்
ஒருவருக்குத்
தீராத வயிற்று வலி.
ருத்ராசாரர் என்பது
அவரது திருப்பெயர்.
சித்தர்களுக்கே
நோய் தீர்க்கும்
மருத்துவ மாமணியாம்
அகத்தியரை நாடினார்
அந்தச் சித்தர்.
மருந்து தந்த
மாமுனி அகத்தியர்
பத்து நாள்
பத்தியமும் சொன்னார்.
பத்தாம் நாள்
சித்தர் தந்த தகவல்
அகத்தியருக்கே
பேரதிர்ச்சி தந்தது.
மருந்து வேலை
செய்யவில்லை.
வயிற்று வலியும்
போன பாடில்லை.
அகத்தியர்
சீடனை அழைத்து
சித்தரைப் பார்த்து
வரச் சொன்னார்.
தேரையர் போனார்.
சித்தரைச் சோதித்தார்.
மருந்தையும் சோதித்தார்.
"சுவாமி!
கவலை வேண்டாம்
வயிற்று வலியை
உடனே போக
வைக்கிறேன்!"
என ஆறுதல்
சொன்னார்.
குழல் போன்ற
ஒரு குச்சியை எடுத்து
சித்தர்
வாயினுள் நுழைத்து
அதன் துளை வழியே
அகத்தியர் தந்திருந்த
அதே மருந்தைக்
கொடுத்தார்.
என்ன மாயம் !
கணப் பொழுதில்
வயிற்று வலி
காணாமல் போச்சு!
ஞானி
ருத்ராசாரருக்கு
மகிழ்ச்சி,
நெகிழ்ச்சி.
"குருவை மிஞ்சிய
சீடனாயிருக்கிறாயே..!"
வியந்தார்.
முதுகில் தட்டி
வாழ்த்தினார்.
இங்குதான்
வந்தது வினை.
கவனியுங்கள்...!
உலகைக் காக்கவல்ல
சித்தர் ஒருவருக்கு
வயிற்று வலி.
மகா சித்தர் ஒருவரின்
மருந்து
தீர்க்கவில்லை.
அவர்தம் சீடர்
அதே மருந்து தர
தீர்ந்தது வலி.
"என்ன நடந்தது?
எப்படித் தீர்த்தாய்?"
அகத்தியர் கேட்டார்
கொஞ்சம்
ஆற்றாமையுடன்.
"குருவே!
தாங்கள்
தந்த மருந்து
பல்லில் பட்டால்
பல் விஷம் பட்டு
மருத்துவ குணம்
முறிந்துவிடும்.
அதனால்
பல்லில் படாமல்
குழல் குச்சி மூலம்
தந்தேன்.
வலி தீர்ந்தது"
என நோய் தீர்ந்த
வழிதனைப்
பகன்றார்.
பெருமிதம் கொண்ட
அகத்திய மாமுனி
அப்படியே அணைத்து
ஆசி தந்தார்.
ஆனாலும்
கூடவே கொஞ்சம்
பொறாமை துளிர்ந்தது.
அடுத்த சில நாட்களில்
அகத்தியரைப் பார்த்து
நன்றி சொல்ல வந்த
ருத்ராசாரரின்
பாராட்டில்
'குருவை
மிஞ்சிய சீடன்'
என்ற
வாசகம்
தூக்கலாயிருக்க
எழுந்தது
அந்த
வினை
விஸ்வரூபமாய்!
சீடரை
அழைத்த
சித்தர் பெருமகன்
அகத்திய மாமுனி
அமைதியாய்ச்
சொன்னார்.
அதில் ஏனோ
கொஞ்சம்
காரம் இருந்தது.
"இரு கத்திகள்
ஓர் உறையில்
இருக்கக் கூடாது...
இனி
உன் வழி தனி வழி...
இந்த இருப்பிடம்
வேண்டாம்.
கிளம்பு.
உன் விருப்பிடம் செல்.
செல்லுமிடம்
தொண்டு
செய்."
குருவின் கட்டளை.
அடிபணிந்த சீடர்
அவர் அடி பணிந்து
வேறிடம் சென்றார்.
சென்ற இடத்தில்
மகத்துவம் கற்க
சீடர்கள் குவிந்தனர்.
குருவாய்
அவர்களுக்குப்
போதித்தார்.
தவம்
தொண்டு
மருத்துவம்
கற்பித்தல்
என்பதோடு
எழுத்தும் அவரது
பணியாய் ஒளிர்ந்தது.
பதார்த்த
குண சிந்தாமணி
நீர்க்குறி நூல்
நெய்க்குறி நூல்
தைல
வருக்க சுருக்கம்
வைத்திய
யமக வெண்பா
மணி வெண்பா
மருத்துவப் பாரதம்
முதலான
ஒப்பில்லா நூல்களை
உலகுக்குப் படைத்தார்.
அந்தக்
காட்டு வாழ்க்கையில்
அநாமயம்
என்ற வனத்தில்
தேரையர் வசித்த
பகுதியில்
பஞ்சம் வந்தது.
அது
பாண்டிய நாட்டிற்கு
வந்த சோதனை..!
மக்கள்
தேரையரிடம்
ஓடி வந்து
பஞ்சம் தீர்க்க
வேண்டி நின்றனர்.
"சுவாமி....
தங்கம் தயாரித்துத்
தாருங்கள்.
அண்டை நாட்டில்
தங்கம் தந்து
தானியம் பெற்று
வறுமையைப் போக்கிக்
கொள்கிறோம்."
தாழ்பணிந்து
உருகினர்.
உரியவர்க்கு
உதவுவதுதானே
சித்தர்கள்
வாழ்வின் சீரிய
நோக்கம்!
மலையைச் சுற்றி
இருந்த
காய்ந்த மரம்
செடி கொடிகளை
ஓரிடம் நிரப்பித்
தீ மூட்டினார்
தேரையர்.
இப்படித்
தங்கம் தயாரிக்கும்
சித்து வேலையைத்
துரிதமாய்த்
தொடங்கினார்
பாரை
வியக்க வைக்க
தேரையர்.
ஒரு சித்தர்
கூட்டத்திற்கு
இச்செயல்
எரிச்சலை மூட்டியது.
'தாங்கள் தவம்
செய்யுமிடத்தில்
தீ மூட்டுகிறாரே
தேரையர்'
எனக்
கொந்தளித்து
அகத்தியரிடம்
சென்று
கோபக் கனலைப்
பற்ற வைத்தனர்.
தேரையரை
அழைத்து வர
ஆணையிட்டார்
கோபப்பட்ட
அகத்தியர்.
குரு முகம் பார்த்து
குருவடி தொழ
வந்த
தேரையரை
ஏதும் விசாரிக்காமல்
கோபம் குறையாமல்
அவரது
இரு கால்களையும்
பிடித்து
இரண்டாகக்
கிழித்தெறிந்து விட்டுத்
திரும்பிப் பார்க்காமல்
போய்விட்டார்
கும்பமுனி.
குருவின் அருளும்
குணமும்
மட்டுமல்ல...
சூதும், சினமும்
அறிந்தவராயிற்றே
சீடர் தேரையர்.
முன்னேற்பாடாக
கிழிந்த சதைகளைக்
கட்டவும்
பிரிந்த உயிர்களைச்
சேர்க்கவும்
மூலிகை தயாரித்து
தனது சீடர்களிடம்
தந்திருந்தார்
தேரையர்.
அதனால்
மீண்டும்
உயிர் பெற்றார்
சீடர்கள் உதவியால்
நம் சித்தர் பிரான்.
ஊர் மக்கள்
அகத்தியர்
செயல் கண்டு
அவர் மீது
கோபமாய் மொய்க்க
அவரோ
தன் பங்குக்குப்
பஞ்சம் தீர்க்க
மழை பொழிவித்தார்.
பஞ்சம் பறந்தோட
பிரச்சனை ஓய்ந்தது.
தங்கம்
தயாரிக்கவல்ல
ரசவாத சித்தர்
தேரையர்
என்பதே
இச்சம்பவம்
உரைக்கும்
தங்கத் தகவல்.
அகத்தியர் கோபம்
ஆபத்து!
மிகுந்தால் விடுவார்
சாபம் என
அதன்பின்
வெகு தொலைவில்
வாழ்ந்து
தவமும் தொண்டும்
மருந்தும் மார்க்கமும்
தடங்கலில்லாமல்
செய்து வரலானார்
தேரையர் பெருமான்.
காலம் சுழன்றது.
காட்சிகள் மாறின.
வயது மிகுந்ததால்
வாலிபம் தளர்ந்தது.
தவக் கோலம்.
கூடவே
முதுமைக் கோலம்.
வயதான
அகத்தியருக்குக்
கண் பார்வை
மங்கியது.
மருத்துவருக்கே
யார்
மருத்துவம் பார்ப்பது?
அகத்தியரின் சீடர்கள்
அநாமயம் காட்டிலிருக்கும்
சித்தரைப் பற்றி
சிலாகித்துச் சொன்னார்கள்.
"என்னினும்
வல்லவனா?"
கிழட்டுச் சிங்கம்
உறுமியது.
வம்புப் பேச்சும்
வீம்பு குணமும்
கண் பார்வையைத்
திரும்பத் தந்திடாதே!
"அழைத்து வாருங்கள்
பார்க்கலாம்"
எனக் கொஞ்சம்
இறங்கி வந்தார்.
அநாமய
காட்டு சித்தர்.
தனது சீடன்
தேரையரென்பது
அகத்தியருக்குத்
தெரிந்திருக்கவில்லை.
"சீடர்களே..!
அடர்ந்த காடு.
பார்த்துச்
செல்லுங்கள்.
போகும் போது
புளிய மர நிழலில்
ஒதுங்கிச்
செல்லுங்கள்"
எனக்
கட்டளையிட்டார்
மரம் செடி கொடி
மருத்துவம் அறிந்த
அகத்தியர் பிரான்.
சீடர்களும்
அவ்வாறே சென்று
அகத்தியரின்
அற்புதச் சீடர்
தேரையரைக்
கண்டனர்.
தாடி மீசை
வயதான உருவம்.
அடையாளம்
தெரியவில்லை.
குருவுக்குக்
கண் பார்வை
குறைந்த
நிலை நினைத்து
துடித்த தேரையர்
இரு நாட்களில்
வருவதாகச் சொல்லி
வந்த சீடர்களை
வழி
அனுப்பி வைத்தார்.
புறப்படும்போது
அந்தச் சீடர்கள்
ரத்த
வாந்தி எடுக்கவே
எளிமையான
மருந்தொன்றைச்
சொல்லி
அனுப்பி வைத்தார்
தேரையர் தாத்தா.
திரும்பும்போது
வேப்ப மர நிழலில்
ஓய்வெடுத்துச்
செல்லச் சொன்னார்.
அதுவே மருந்து.
அப்படியே செய்ய
உடல் நலன் தேறிய
சீடர்கள்
தேரையர் சித்தரை
வாழ்த்தினர்.
வணங்கினர்
மனங்களில் நிறுத்தி!
கவனித்தீர்களா..?
ரத்த வாந்தி
மருத்துவத்திலும்
குருவை
மிஞ்சிய
சீடராய்
ஜொலித்தார்
தேரையர்.
புளிய மரக் காற்று
பேய்க் காற்று
நோய் தந்தது.
வேப்ப மரக் காற்று
அருள் நிறை
உயிர்க்காற்று.
உயிர்ப்பித்தது.
இன்றைய
அறிவியல்
உண்மை
இதுதானே?
இரு நாளில்
இருள் நீக்கி
அருள் பொழியும்
தேரையர்
குரு இடம் வந்தார்.
குருவிடம் வந்தார்.
கண் மூடி
அமர்ந்திருந்த
அகத்திய மாமுனியின்
மங்கிய கண்களில்
கொண்டு வந்த
மூலிகைச் சாற்றைப்
பிழிந்தார்.
மறுகணமே
பழுதான
பார்வை
தெளிவாகத்
தெரிய ஆரம்பித்தது.
பார்வையில்
பட்ட
தேரையரைப்
பார்த்த
அகத்தியர்
வியப்பு காட்டாமல்
"சடைமுடி தரித்தால்
அடையாளம்
தெரியாதா?
தேரையா...
உன்னை
வரவழைக்கவே
இத்தந்திரம்
செய்தேன்"
எனச் சொல்லிச்
சிரித்தார்.
குரு - சிஷ்ய
சந்திப்பு!
அவர்களுக்குள்
ஆயிரம் இருக்கும்.
எப்படியோ முடிவில்
நான் அடிமை என்று
சீடன் தொழுததும்
குரு நெகிழ்ந்ததும்
இனிதாய் இருந்தன.
அகத்தியரின்
நடத்தையை
தந்திரம்
சூழ்ச்சி
என்று
பழிப்பாரும் உண்டு.
சித்தர்களுக்கு ஏது
பகை உணர்வு ?
குரு வைத்த
சோதனைகளே
யாவும் என
பதிலளிப்போரும்
இருப்பர்.
சில நாள் கழித்துத்
தன்னுடன்
தங்கியிருந்த
தேரையை அழைத்து
"கண் வெடிச்சான்
மூலிகை
வேண்டும்"என்றார்
குருநாதர் அகத்தியர்.
திகைத்துப்
போனார்
சீடர் தேரையர்.
கண் வெடிச்சானைப்
பறித்தாலே
புகை கிளம்பும்.
அப்புகை
அருகிருப்பவர்
கண்களைப்
பொசுக்கி விடும்.
ஆம்...
கண் வெடிக்கும்.
கண்களைக் கெடுக்கும்.
அப்புகை
கண்ணுக்குப் பகை.
குருவின் தந்திரம்
இதுவோ?
இதுவும் சோதனையாய்
இருக்குமோ?
குருவின் சொல் மிக்க
மந்திரமில்லை
எனக்
கிளம்பிவிட்டார்
காடு நோக்கி.
காட்டில்
கண் எதிரே
கண் வெடிச்சான் செடி.
எட்டிப் பறிக்கலாம்.
பார்வை
பறி போய்விடுமே!
குருவின்
மந்திரச் சொல்
இப்படித் தந்திரம்
நிறைந்திருக்கிறதே!
என்ன செய்வது?
கண் மூடினார்
தேரையர்.
தவம் நாடினார்.
பொதுவாக
சித்தர்கள்
அம்மன்
பக்தர்களாயிருப்பர்.
தேரையர் தவத்தில்
தேவி
தோன்றினாள்.
ஆம்...
அம்பிகை தவத்தில்
வந்தாள்.
"தேரையன்
தேறவில்லை
என எனக்கு
அவப் பெயர்
வராமல்
காப்பாய் தேவி'"
உள்ளம் குமுறி
வேண்டினார்.
"கவலையை விடு.
நான் பறித்துத்
தருகிறேன்"
அறிவித்தாள்.
அடுத்த நொடிகளில்
அந்த மூலிகை
பாதுகாப்பாக ஓர்
இலையில் சுற்றப்பட்டு
தேரையர் முன்பு
இருந்தது.
அப்படி
அம்பிகை
பாங்காய்
எடுத்து வைத்தாள்.
மூலிகையோடு
திரும்பிய
தேரையரை
உளமகிழ்ந்து
வரவேற்றார்
அகத்திய மாமுனி.
"அப்பா தேரையா..!
தப்பாய் நினைக்காதே!
அத்தனையும் உனக்கு
நான் வைத்த தேர்வுகள்!
அனைத்திலும்
தேறிவிட்டாய்.
உன் குரு
என்பதில் எனக்கு
எல்லையில்லா மகிழ்வு!
நான் பெற்ற பேறு."
வாயார
வாழ்த்தினார்.
குரு அகத்தியர்
செய்த
சோதனைகள்
யாவும்
ஒன்றன் பின்
ஒன்றாய்
தேரையர்
மனக் கண்ணில்
வந்து மறைந்தன.
குருவின் காலடி
வணங்கி
குருவின் குரலுக்கு
ஏங்கி நின்றார்.
"தேரையா..!
மலைக் காடுகளில்
அலைந்து திரிந்த
உனக்கு அதிசய
மூலிகைகள் பற்றி
அதிகம் தெரியும்.
மூலிகை பற்றியும்
அதன்
பண்புகள்
மாண்புகள்
குறித்தும்
நூலொன்று எழுது.
அது
உலகுக்குப்
பயன்படட்டும்.
உன்னையன்றி
அந்நூலெழுத
தகுதி படைத்தோர்
உலகில் இல்லை."
குருவின் குரல்
சீடன் செவிகளில்
உத்தரவாய்
சான்றிதழாய்
தேன் துளியாய்
நுழைந்தது.
'வசிஷ்டர் வாயால்
பிரம்மரிஷி பட்டம்.'
குஷியானார்
கூர்மதி தேரையர்.
அதன்
பின்னர்தான்
'குண பாடம்'
என்னும்
அரிய
மருத்துவ நூலை
அருளினார்
அகத்தியர் சீடர்.
அந்நூல்
ஜெகம் புகழும்
ஈடிணையில்லா
மருத்துவ நூல்.
தேரையர்
மேல்
அகத்தியர்
காட்டிய
கோபம்
ஒட்டிய
சாபம்
விரட்டிய
போக்கு
எதையும்
போட்டி
பொறாமை
எனக்
கருதுதல்
வேண்டாம்.
இவை
யாவும்
குரு
சீடருக்கு
வைத்த
கடினத்
தேர்வு.
இறைநிலை
அடைய
குரு
வைக்கும்
நுழைவுத் தேர்வு.
இன்றும்
அருவாய்
உருவாய்
அருவுருவாய்
உலவும்
தேரையர்
பொதிகை மலையில்
தோரண மலையில்
சித்தியானார்.
மேற்கு
கேரளாவில் உள்ள
அந்தப் பகுதிக்கும்
ஆசிரமத்திற்கும்
வந்து வணங்கும்
பக்தர்களுக்கு எல்லாம்
அருள்பாலித்து வருவது
உண்மையிலும் உண்மை.
தேரையர் சொன்ன
மருத்துவ போதனைகள்
எக்காலத்துக்கும்
எந்நாட்டவர்க்கும்
எந்த மருத்துவத்திற்கும்
ஏற்புடைய ஒன்று.
உதாரணத்திற்கு
இப்போது
இங்கு ஒன்று.
கேட்பீர்... நன்று.
நடப்பீர்...
பயன் அடைவீர்... என்றும்!
இதோ-
அந்த எளிய பாடல்.
'உண்பது
இருபொழுது
ஒழிய
மூன்று பொழுது
உண்ணோம்.
உறங்குவது
இரா
ஒழியப்
பகல் உறக்கம்
செய்யோம்.
பெண் கடமை
திங்களுக்கோர்
காலன்றி
மருவோம்.
பெருந்தாகம்
எடுத்திடினும்
பெயர்த்து நீர்
அருந்தோம்.
மண் பரவு
கிழங்குகளில்
கருணையன்றிப்
புசியோம்.
வாழை இளம்
பிஞ்சு
ஒழியக்
கனியருந்தல்
செய்யோம்.
நன்பெற
உண்ட பின்பு
குறு நடையும்
கொள்வோம்!'
பங்குனி
மாதம்
பூராடம்
3-ம் பாதம்
தனுசு ராசியே
தேரையர்
அவதரித்த
அருள் நிறை நேரம்.
நிறைவாக
தேரையரைத்
தேடி
ஊர் ஊராகப்
போக வேண்டாம்.
சதுரகிரி
கொல்லிமலை
பொதிகைமலை
தேரையர்
இன்றும்
பவனி வரும்
மலைகள்.
அவர்
அருள்
அள்ளித் தரும்
அருள் மன்றத்
தொகுதி.
'தேரன் புகுந்தால்
ஊறு அங்கு ஒழியும்'
என்று ஒரு
பழமொழியே உண்டு.
அது தேரையர்
மாண்பைக் குறிக்கும்
உலக மொழி வழக்கு.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக