சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - திருமூலர்


திருமூலர் 

மாரிமைந்தன் சிவராமன்


சித்தர்களில்
சிறந்தவர்
திருமூலர்.

கயிலாயப்
பரம்பரையின்
முதன்மைச்
சித்தர்.

ஆதி சித்தரான
சிவபெருமானிடம்
உபதேசம்
பெற்றவர்.

கயிலாய நாதனின்
பிரதம சீடரான
நந்தி தேவரின்
அனுகிரகம் பெற்ற
அற்புதச் சீடர்.

'ஒன்றே குலம்
ஒருவனே தேவன்'
என்ற
சமதர்மக் கோட்பாட்டை
உலகுக்கு அளித்தவர்.

சித்தர் 
பெருமக்களிடையே
தமிழைக் காதலித்து
தமிழாய் வாழ்ந்த
தன்னிகரில்லாச் சித்தர்.

'என்னை நன்றாக 
இறைவன் படைத்தனன்
தன்னை
நன்றாகத் தமிழ் செய்யுமாறே'
எனப் பாடிய
தமிழ் நெஞ்சத்தார்.

'இருக்கும் இடத்தை
விட்டு
இல்லாத இடம் தேடும்
மானிடரே...
உடம்பினுள் உத்தமன்
கோயில் கொண்டான்'
என
உறுதிபடச் சொல்லி
உடம்பே ஆலயம்
உள் உறைபவனே
இறைவன்.
உள்ளத்தே
இருப்பவனே 
இறைவன்
என
புதிய வேதம் 
பகன்றவர்.

பல கோடி யுகங்கள்
வாழ்ந்து
3000 ஆண்டுகளில்
ஆண்டுக்கொன்றாய்
நான்கு அடிகளில்
ஒரு பாடல் பாடி
3000 பாடல்கள் கோர்த்து
'திருமந்திரம்'
எனும்
திருமந்திர மாலை
தந்தவர்.

திருமூலர்
அருளியவை
'திருமந்திரம்
எண்ணாயிரம்'
என
வள்ளல் பெருமான்
போற்றித் துதிக்கிறார்.

திருமூலர் வர்க்கம்
என்று
ஒரு சித்தர் வர்க்கமே
வர்ணிக்கப்படுவதும்
பூசிக்கப்படுவதும் 
உண்டு.

திருமாளிகைத்தேவர்
காலாங்கிநாதர்
கஞ்சமலையார்
இந்திரன்
சந்திரன்
பிரமன்
ருத்திரன்
உள்ளிட்ட
7 சித்தர்கள்
திருமூலரின்
சீர்மிகு சீடர்கள்.

சிதம்பரத்தில்
நேரில்
நடராஜர் நடனத்தைத்
தரிசித்து மகிழ்ந்தவர்.

அங்கேயே
ஆதிமூலநாதர்
சன்னதியில்
மூலவராய்
ஆதி சிவன் ரூபத்தில்
அருள்பாலித்து வருபவர்.

திருமூலரின்
அருமைகளும்
பெருமைகளும்
அளப்பறியன.

வரலாற்றில்
இரண்டு
திருமூலர்கள்
இருந்ததாகச்
சொல்வாருண்டு.

கூடு விட்டுக்
கூடு பாயும்
சித்தர் கலையான
பரகாயப் பிரவேசத்தில்
வல்லவர்
திருமூலர்.

ஆதலால்
வான்புகழ்
பெற்றவர்.

பன்முறை
பரகாயப் பிரவேசம்
செய்திருந்தாலும்
அவரைப் பற்றிய
சித்தர் குறிப்பில்
பதிவாகி உள்ளது
மும்முறையே!

அவற்றைத்
தரிசிப்போமா!



எல்லாச் சித்திகளும்
கைவரப் பெற்று
கயிலாயத்தில்
சிறப்புற்றிருந்த
சுந்தரநாதருக்கு
ஆத்ம நண்பரான
அகத்தியரைப் பார்த்து
வரலாம் என்றொரு
ஆசை உதித்தது.

கயிலாயம் விட்டு
அகத்தியர் வாழும்
பொதிகை மலைக்குப்
பயணித்தார்.

வழியில் 
கேதார்நாத்
(திருக்கேதாரம்)
பசுபதி
நேபாளம்
காசி (கவிமுத்தம்)
விந்தமலை
திருப்பருப்பதம்
திருகாளத்தி
திருவாலங்காடு
காஞ்சிபுரம்
என
சிவ தலங்களை 
அடைந்து 
சிவபாதம் போற்றி 
சிவபுரமாம்
சிதம்பரம் வந்தார்.

சிதம்பரத்தில்
தில்லை நடராஜரின்
திரு நடனம்
கண்டார்.
அது 
அவர்க்குக் கிடைத்த
பெரும் பாக்கியம்.

அடுத்து வந்தது
ஆவடுதுறை.
ஆம்! நம்
திருவாவடுதுறை.

ஆங்கு
காவிரிக் கரையில்
பூசை முடித்து
எழுகையில்
ஓரிடத்தில்
பசுக் கூட்டம்.

அவை
விம்மி விம்மி
செருமி செருமி
அழுத வண்ணம்
இருந்தன.

பசுக்களின் அழுகுரல்
சித்தரின் சித்தத்தை
கலங்கச் செய்தது.

பசுக்களின்
பரிசுத்த
ஆன்மாக்களின் 
கூக்குரல்
சுந்தரநாதரிடம்
துயர் நீக்கக் கோரின.

சுந்தரநாதர்
விசாரித்தார்.

சாத்தனூரைச் சேர்ந்த
மூலன்
எனும் பசுக்களை
மேய்ப்பவன்
மேய்க்கும் போது
அவனுயிர் எய்தி
அவன் மரணித்து
விட்டதாகவும்
அவனின் 
பிரியத்திற்குரிய
பசுக்கள்
பிரிய முடியாதெனத்
துடிதுடித்து 
அழுவதாகவும்
பதில் வந்தது.

பசுக்களின்
துயர் தீர்ப்பது 
தனது
கருணைப் பெருக்கு
எனக் கருதிய 
சுந்தரநாதர்
ஒரு கணம் 
யோசித்துவிட்டு
மூலன்
உடலில்
பரகாயப் பிரவேசம்
செய்ய
முடிவெடுத்தார்.

மூலன்
உயிர்த்தெழுந்தாலே
பசுக் கூட்டம்
மகிழ்வுறும்
என்பதனால்
சித்தர்
தனது உடலை
ஓரிடத்தில் ஒளித்து
வைத்து விட்டு
உயிராய்
மூலன் உடலில்
ஐக்கியமானார்.

துடித்திருந்த 
பசுக்கள்
மூலன்
உடல் 
அசைவதைக்
கண்டதும்
அருகில் ஓடின.
நாவால் அவனை
மேவின.
முகர்ந்தன.
வால் தூக்கித் துள்ளின.
கனைத்தன.
ஆடி மகிழ்ந்தன.

ஏதுமறியாது
எழுந்த மூலன்
மாலை வரை
மாடுகளை
மேய்த்தான்.

இரவு நெருங்க
வழக்கப்படி
பசுக்களை ஓட்டியபடி
வீட்டை நெருங்கினான்.

ஓடி வந்த மனைவி
மூலனை
ஆசையாய்
நெருங்கி
அரவணைக்க முயல
அதிர்ந்து அவன்
தள்ளிப் போனான்.

உண்மை 
உரைப்பதே
உத்தமம் என
மூலன்
மனைவியிடம்
நடந்ததைச் 
சொன்னார்
மூலன் 
உருவிவிலிருந்த
கயிலாய முனி
சுந்தரநாதர்.

ஏற்கவில்லை
அந்த 
அப்பாவிப் பெண்.
ஊரைக் கூட்டினாள்.
பஞ்சாயத்து நடந்தது.

மூலனின்
உருவில் வந்த 
சுந்தரநாதர்
நடந்ததைக் கூறி
நம்ப மறுத்தவர்களிடம்
மூலனின்
உடலைவிட்டு
உயிரைப் 
பிரித்துக் காட்டி
மீண்டும்
அவனைச் சடலமாக்கி
தன் பக்கத்தை
நியாயமாக்கினார்.

வியந்த
ஊர் மக்கள்
சுந்தரநாதரை
வணங்கித் தொழுது
விடை கொடுத்து
அனுப்பினர்.

சுந்தரநாதர்
பசுக்களின் துயர் தீர்த்த
நிறைவில்
மூலன் மனைவி
மறுத்திடாத மகிழ்வில்
தன்னுடலைத் தேடி
கரையோரம் வந்தார்.

உடம்பைத் தேடினார்.
என்ன நடந்ததோ
அப்பூவுடல்
காணவில்லை.
மௌனித்து 
தியானித்தார்.
நடந்தது 
மனத்திரையில்
ஒளிபரப்பானது.

அது 
இறைவனின் சித்தம்
என 
சித்தருக்குப் புரிந்தது.

இறை விருப்பத்தை
உணர்ந்தவர்
மூலனுடைய
உடலிலேயே 
தங்கி விட
முடிவெடுத்தார். 

அது முதல்
சுந்தரநாதர்
திருமூலர் ஆனார்.

இவரை
சுந்தரநாத மூலர்
எனக்
குறிக்கிறது
பக்தி உலகம். 

திருவாவடுதுறை
திருக்கோயிலில்
மூலனுடைய
உடலிலேயே தங்கி
மூவாயிரம் ஆண்டுகள்
வாழ்ந்து
ஆண்டுக்கொரு
பாடலாய்
'திருமந்திரம்' எனும்
மூவாயிரம் 
முத்துக்களைப்
படைத்தார்.

சரியை 
கிரியை 
யோகம் 
ஞானம்
எனும்
நால்வகை
நன்னெறிகள்
விளங்க
அந்நன்னெறிகளுக்கு
உரிய பண்புகளான
யோகம்
ஞானம்
மந்திரம்
தந்திரம்
எந்திரம்
வைத்தியம்
என
சகலமும்
உள்ளடக்கிய
திருமந்திரங்களாக
ஜொலிக்கச்
செய்தார்.

திருமந்திரத்தைக்
கோயிலின்
வெளிப்பிரகாரத்தில்
வடமேற்கு மூலையில்
ஓர் அரச மரத்தின்
கீழ் தங்கி
தவமிருந்து
படைத்தாராம்
திருமூலர் பெருமான்.

அந்நூலுக்கு
அவர்
முதலில்
இட்ட பெயர்
'தமிழ் மூவாயிரம்.'

திருவாவடுதுறையில்
இருந்தே
திருமந்திரத்தை
வெளியிட வேண்டும்
என
வேண்டுகோளாக
வைத்தவர்
ஒரு
பெருமானே!

அவர்
திருவாவடுதுறை
மாசிலாமணிப்
பெருமான்.

திருமூலரின் 
திருமந்திரம் 
தமிழுக்கும் 
சித்தர் உலகுக்கும் 
ஆன்மிகத்திற்கும் 
கிடைத்த ஒரு 
பொக்கிஷம்.

திருவாவடுதுறையில் 
திருமந்திரம் 
மணம் எழுப்பியது
ஒரு சுவையான வரலாறு. 

திருவாவடுதுறை 
திருக்கோயிலுக்கு 
வழிபட வந்தார் 
ஒரு தமிழ் ஞானி.

கோயிலின் 
பலிபீடத்தருகே 
விழுந்து வணங்கி 
எழுந்தபோது 
அவருக்கு 
ஓர் ஆச்சரியம்.

அருகில் இருந்தோரை 
அழைத்து 
''இங்கே தமிழ் 
மணம் கமழ்கிறதே! 
தோண்டிப் பாருங்கள்.. " 
என்றார் ஆர்வமாக.

தோண்டிய போது 
நூல் ஒன்று
இருந்தது.

அது
பரப்பிய 
நறுமணம் 
'கும்' என்று 
கோயிலை நிரப்பியது. 

அந்நூல் 
'திருமந்திரம்'
என்கிறது 
ஒரு வரலாறு.

தமிழ் மணம் 
கண்டறிந்த ஞானி 
தமிழ் மனம் கொண்ட திருஞானசம்பந்தர்.



திருமந்திரம்
வலியுறுத்தும்
தர்மம்
எக்காலத்துக்கும்
பொருத்தமானது.

'இறைவனுக்கு
ஒரு துளசி அல்லது
வில்வ இலை கொடு.
பசுவுக்கு ஒரு வாய்
உணவு.
யாசகர்க்கு 
ஒரு பிடி 
உணவு.
பிறர்க்கு 
இனிய சொல்.
இவையே தர்மம்' 
என்கிறார்
திருமந்திரத்தில் 
திருமூலர்
மென்மையாக.

பத்துப் பெண்களுக்குத்
திருமணம் செய்வித்தால்
குழந்தையின்மை என்ற
பாவமெல்லாம் தீரும்.

தர்மம் மட்டுமே
பூர்வ ஜென்ம
பாவங்களை
நீக்கும்
என்பதும்
திருமூலரின்
திருமந்திரமே.

மறு மந்திரமில்லை
திருமந்திரத்துக்கு!
ஈடில்லை
ஒரு மந்திரமும்
திருமந்திரத்திற்கு!
ஈடில்லை
ஒரு சித்தரும்
திருமூலருக்கு!

இது
சித்த அனுபவம்
சிறக்கப் பெற்றவர்
சீரிய வாக்கு!

திருமந்திரம்
படைத்த பின்னரும்
தொடர்ந்து
மூவாயிரம்
ஆண்டுகள்
திருமுலர்
வாழ்ந்ததாகச் 
சொல்கிறது 
சேக்கிழார் பெருமானின் பெரியபுராணம்.



வேறொரு கதை
இன்னொரு விதமாய்
சதுரகிரி
தல புராணத்தில்.

இதில்
கூடு விட்டுக்
கூடு பாய்ந்த நிகழ்வு
நயம்பட உளது.

பாண்டிய நாட்டில்
ஒரு மன்னன்.
வீரசேனன்
அவன் பெயர்.
மனைவி குணவதி.

ஒருநாள்
நகர சோதனை
சென்று வந்தவன்
தள்ளாடி வந்தான்.
தன்னிலை மறந்தான்.
சில மணித்துளிகளில்
மரணித்தும் போனான்.

இள வயது மன்னன்
இனிய மனதுள்ளவன்
இறந்த செய்தி
மக்களை 
மகாராணியை
ஓலமிடச் செய்தது.

அவர்களின் கூக்குரல்
விண்ணை எட்டியது.

அப்போதுதான்
சரியாக
திருமூலர்
விண் வழியே
பயணித்திருந்தார். 

ஐந்தறிவு கொண்ட
பசுக்களின்
துயரையே
பொறுக்காதவர்
ஆறறிவு படைத்த
மக்களின்
அழுகுரல்
சகிப்பாரோ!

ஒரு கணம் 
யோசித்தார்.

அக்கணமே
மன்னன் சாவை
முறியடிக்க
மன்னன் உடலில்
உட்புகுந்தார்.

அது முன்
தான் தவமிருக்கும்
சதுரகிரியில்
அந்தரங்க சீடன்
குருராஜன் என்பவனை
நியமித்து
தன் பழைய உடலைப்
பத்திரமாய்ப் பாதுகாக்கச்
சொன்னார்.

மன்னர் உயிர்பெற
மாநிலமே மகிழ்ந்தது.
மக்கள் துள்ளி
மகிழ்ந்தனர்.
மகாராணி குணவதி
எல்லையில்லா
மகிழ்வு கொண்டாள்.

ராஜ வாழ்க்கை.
அழகின் விளிம்பில்
அதிசயம் காட்டிய
இளம் மகாராணி
அருகில்...
மிக அருகில்.

நாட்கள் நகர்ந்தன
ஆடலும் பாடலுமாய்
அரசும் ஆட்சியுமாய்.

வீரதேவசேனனாய்
மூலச் சித்தர்
மாறிப் போனார்.

இருப்பினும்
அரசியின் மனத்தில்
சந்தேகம் இருந்தது.

ஒருநாள்
கேட்டே விட்டாள்.

"மன்னன் மறைந்ததை
ராஜ வைத்தியர் 
சொன்னார்.
நானும் உடலைத்
தொட்டுப் பார்த்தேன்.
உணர்ந்தேன்.
மரணமடைந்தார்.
என்பதைப் புரிந்தேன்.

எதிலும்
உங்கள் ஆற்றலும்
அணுகுமுறையும்
வேறாயிருக்கிறது.

அனுதினமும்
இதை
உணர்ந்து
துய்க்கிறேன்.

என் மனம்தான்
ஏனோ
துன்புறுகிறது.

கோபமே
என் மன்னவன்
மரபுக் குணம்.
முற்றிலுமாய்
அது
உங்களிடம் இல்லை.

அவன் நாட்டம்
வேறு.
உங்கள் நாட்டம்
புதிது.

சொல் புதிது
பொருள் புதிது
ஆற்றல் புதிது
அனுபவம் புதிது.

யார் நீங்கள்?
எனக்கேதும்
விளங்கவில்லை.

அறிவால்
அரச சபையும்
அன்பால்
அந்தப்புரமும்
மாறியிருப்பது
அறிய முடிகிறது."

வீரசேனர் மூலர்
உண்மை சொன்னார்.

"விஷப் பாம்பு
ஊறிய
பூவொன்றை
முகர்ந்ததாலே
உன் கணவன்
இறந்து போனான்.

பின்
பிழைத்ததும்
இப்போதும் இருப்பதும்
ஆச்சரியமே.”

அரசனின் பதில்
அரசிக்குக்
குழப்பம் தந்தது.

அடுத்து அவன்
காத்த அமைதியால்
கலங்கிப் போனாள்.

அதன் பின்னே
தன்னுள்
புலம்பி ஓய்ந்தாள்.

ஆனால்
அடுத்த முறை
அரசியார்
அதே கேள்வியைக்
கேட்டபோது
கேட்டுக் கேட்டு
நச்சரித்தபோது
வீரசேன மூலர்
உண்மையைப் 
போட்டு உடைத்தார்.

"அரசியே!
இவ்வுடல் 
உன் தலைவன்
வீரசேனனுக்கு உரியது.

உள்ளிருக்கும்
ஆன்மா
என்னுடையது.

நீ சேர்ந்தது
அவன் உடலிலேயே.
உறவும் பிணைப்பும்
உடலுக்குரியன.
உயிர்க்கு அல்ல.

ஆன்மாவுக்குக் 
களங்கம்
என்றும் கிடையாது."

உடலின்
உண்மையையும்
உயிரின்
மேன்மையையும்
தெள்ளத் தெளிவாய்
எடுத்துரைத்தார்.

நடந்ததனைத்தையும்
நயமாக எடுத்துச்
சொல்லி

''உன்னைச் சொல்லிக்
குற்றமில்லை
என்னைச் சொல்லியும்
குற்றமில்லை.
இது இறையருளின்
கட்டளை"
என
நியாயப்படுத்தினார்.

அரசிக்குக்
குற்ற உணர்வு
குறுகுறுக்கவில்லை.

கற்பு கெட்டதாகக்
கதறவில்லை.

மூலரின் கூற்று
அரசிக்கும்
ஏற்புடையதாயிருந்தது.

அரச சுகமும்
ஆட்சி சுகமும்
மூலன் தந்த
முழு சுகமும்
அவளை அப்படிக்
கட்டிப் போட்டிருந்தன.

இந்த
சாகா முனிவரிடம்
சமரசம்
கொண்டால்தான்
சகல
சௌபாக்கியங்களும்
நிரந்தரமாகும்.
மகாராணியாய்
வலம் வர முடியும்
எனக்
கணக்குப் போட்டாள்.

விதவைக் கோலம்
கண்ணில் விரிய
விவேகமாய்
முடிவெடுத்தாள்
சாதுரியக்காரி. 

வீரசேன மூலனை
ஆரத் தழுவினாள்.

சகலமும்
அறிந்தவரென்றாலும்
அந்த அணைப்பில்
கொஞ்சம்
கிறங்கிப் போனார்.

''ஆமாம் சுவாமி..
உங்கள் உடல்
சதுரகிரியில்
பத்திரமாயிருக்கும்
தானே?

சீடன்
கவனம் அதிலேயே
இருக்குமா?''
சிக்கென
கேள்விக் கணை
எறிந்தாள்.

''பயமில்லை
பாதுகாப்புக்கும்
குறைவில்லை"
என்றார்.

‘'எனக்கென்னவோ
பயமாயிருக்கிறது.
யாரேனும் எடுத்து
செத்த உடம்பென்று
எரித்து விட்டால்?"
சந்தேகமாய்த்தான்
கேட்டாள்.

''முடியாது
யாராலும் முடியாது.
காய சித்தி
அடைந்த தேகம்.

அதனை எரிக்க
சாதாரணத் தீயால்
முடியாது.

வெடி உப்பும்
குங்கிலியமும்
பொரிகாரமும்
போட்டுத்
தூளாக்கி
தேகத்தில்
பூச வேண்டும்.
பின்
விராலி இலைகள்
பரப்பி
மூட வேண்டும்.
அதன் பிறகு
அகில் கட்டைகள்
அடுக்கி
தீ மூட்ட வேண்டும்.
அப்போதே 
சிதை எரியும்.

இந்த ரகசியம்
எவருக்கும் தெரியாது.''
சந்தோஷமாய்ச் 
சொன்னார்.

காமக் கிழத்தியிடம்
ரகசியத்தைச்
சொல்லிவிட்டு
உலகில் இது
யாருக்கும் தெரியாதென
ரகசியமாய்ச் சிரித்தார்
சிதம்பர ரகசியம்
அறிந்த திருமூலநாதர்.

அந்த ரகசியம்
தீயாய்ப் படர்ந்தது
அரசியின் உள்ளத்தில்.

அழகிய இளைஞனாய்
அரசன்.
அமர்க்களமாய்
அரசு கட்டில்.
ஆர்ப்பரிக்கும் 
ராஜ வாழ்க்கை.
எல்லையில்லா இன்பம்.

அரசன் உருவில்
இருக்கும் இந்தக்
கணவன் பிரிந்தால்
எல்லாம் பறிபோகும்.

எவராயிருந்தால் என்ன?

கணவனைப் பிரிய
எந்த மனைவிக்கு
மனம் வரும்!
சொத்து சுகம்
குறைய யாருக்குத்தான்
மனது வரும்?

இது
அரசியின் மனதில்
அதீதக் கொழுந்தாய்
எரிந்தது.

வெளிகாட்டிக்
கொள்ளாமல்
ஒரு திட்டம் தீட்டினாள்.

அவளது திட்டம்
மிகவும் சிறியது.
கனகச்சிதமானது.

நம்பிக்கையான
வீரர்களை
அழைத்தாள்.

மூலரின் உடல்
இருக்கும் இடம்
சொல்லி
எரிக்கும்
முறைகளை
எடுத்துச் சொல்லி
மூலத்தைக்
கொஞ்சமும்
விட்டு விடாமல்
எரித்து வரச்
சொன்னாள்.

அதே சமயம்
'போன குரு
காணலியே'
எனப் புலம்பியபடியே
சீடன் குருராஜன்
மூலனைத் தேடி
மதுரை நோக்கிச்
சென்றுவிட
வீரர்களுக்குக்
காரியம்
எளிதாயிருந்தது.

மூலரின் உடம்பு
அரசி அனுப்பிய
வீரர்கள் 
இட்ட தீயால்
நிர்மூலமாகியது.

இத்தனை நடந்தும்
ஏதுமறியாள் போல்
இனிய முகத்தோடு
வாழ்க்கை தொடர்ந்தாள்
மகாராணி குணவதி.

பின்னொரு நாள்
வீரசேன மூலர்
காட்டிற்குச்
சென்றார்
வேட்டையாட.

அருகில்
ஒளித்து 
வைத்திருக்கும்
உடலும்
உத்தமச்
சீடனும்
நினைவுக்கு வரவே
கண்டு வரலாம்
என குகைக்குச் 
சென்றார்.

குகையில்
வைத்த இடத்தில்
உரம் கொண்ட
உடல் இல்லை.

ராணி செய்த
சூழ்ச்சி
லேசாய்ப் புரிந்தது.

அமைதியாய்
நாடு திரும்பினார்
அவர்.

ஏதுமறியார் போல்
ராணிக்கே
அரசாளும் 
பொறுப்பைத்
தருவதாக
அறிவிப்பு செய்தார்.

அகம் மகிழ்ந்தாலும்
சூதாய்
எரித்த கதை
தெரிந்திருக்குமோ
என அஞ்கினாள்.

நாளாக நாளாக
ராணி
குணவதிக்குத்
தன் தவறு
மெதுவாய்த்
தெரிந்தது.

தனது செயல்
சூழ்ச்சி
துரோகம்
எனப்
பூரணமாய் 
உணர்ந்தாள்.

மூலரின்
காலடி வீழ்ந்தாள்.
தன் அன்பே
காரணம் என
நியாயப்படுத்தினாள்.

வாய்த்த
கணவரை
என்றும்
பிரியாதிருக்கக்
கிடைக்கும்
வாய்ப்புகளை
நழுவ
விடாதவரே
மனைவிமார்கள்
எனத் 
தர்க்கம் 
செய்தாள்.

நம்ப வைத்துச் 
செய்த துரோகம் 
எனினும்
கணவன் வேண்டும்
என்ற மனைவியின்
அடிப்படை ஆசை
யதார்த்தமானது
என்பதை
மூலரும் ஏற்றார்.

''மன்னிப்பீர்களா?''
மகாராணியார்
மூலரின்
மலர்ப் பாதம் 
பணிந்தாள்.

''பரவாயில்லை...
நடந்தது
நடந்ததாய் 
இருக்கட்டும்.

ஒருநாள்
நான் 
சென்றுவிடுவது
நிச்சயம்.
இனி என்னால்
ஒன்று மட்டுமே
தர முடியும்.
அது வரம். 

என்ன வரம்
வேண்டும் கேள்."
திருமூலர்
மனமிரங்கினார்.

பெண்ணின் 
மனமாயிற்றே!
முடிச்சுப் போட்டது.
''நான் என்றும்
சுமங்கலியாய் .
இருக்க வேண்டும்."

ஒரே கல்லில்
எத்தனை மாங்காய்?

'வரம் கேட்பதில்
வல்லவர்கள் 
வனிதைகள்.'
கைகேயி
கேட்ட வரங்கள்
கணப்பொழுது
நினைவுக்கு வந்தன.
மூலர் சிரித்துக்
கொண்டார்.

இனி இந்தச்
சித்தாதி சித்தர்
நம்முடனேதான்
இருந்தாக வேண்டும்.
உடல் மாறாது.
உயிர் போகாது.
சிந்து பாடியது
அவள் உள்ளம்.

ஆனால்
திருமூலரின்
சிந்தனை
வேறாயிருந்தது.

ஒருநாள்
நள்ளிரவு.
அரண்மனை துறந்து
காடேகினார்.
சதுரகிரி மலை
ஏறினார்.



சதுரகிரி
போகும் வழியில்
ஓர் அந்தணன்.
கற்சிலை போல்
நின்று கொண்டிருந்தான்.
அவனுக்குதவ
அருகில் சென்றார்
வீரசேன மூலர்.
பிரமித்து நின்றார்.

அவர் 
கை பட்டபோது
அவன் உயிர்
விடை பெற்றிருந்தது.

ஏனிப்படி?
என்ன நேர்ந்தது
அவனுக்கு?

சிந்தையில் ஆழ்ந்தார்.
காட்சி விரிந்தது.
நடந்தது தெரிந்தது.

ஜம்புகேஸ்வரம் எனும்
திருவானைக்காவலில்
ஜம்புகேசுவரன்
எனும் பெயரில்
வாழ்ந்தவன் அவன்.

குரு துணையின்றி
பிராணாயாமம்
செய்திருக்கிறான்.

வெளியே
மூச்சை
விடக் கற்றவனுக்கு
உள்ளே
காற்றை
இழுக்கத்
தெரியவில்லை.
மறந்துவிட்டான்.

அருகே
குருவோ வேறு
யாருமில்லை.

ஆட்டம் காலி.

வீரசேனன்
உருவிலிருக்கும்
திருமூலருக்குக்
கூடு விட்டுக்
கூடு பாய்தல்
கை வந்த
கலை அன்றோ!

சவமாயிருந்த
ஜம்புகேஸ்சுவரனின்
உடம்பில் ஏகினார்.

அருகிருக்கும்
மரப் பொந்தொன்றில்
வீரசேனன்
உடலை வைத்தார்.

அது எப்போதும்
அழியாதிருக்க
ஜோதி 
மரப் பூக்களை
சிற்சில 
மூலிகைகளைக்
கலந்து அரைத்து
தன் 
மந்திர சக்தி ஏற்றி
அரசன் உடலில்
பூசினார்.

இலை தழை
மரப்பட்டைகளால்
மரப் பொந்தினை
மூடினார்.

‘அழியாத 
அரசன் உடல்.
தீர்க்க சுமங்கலியாய் 
அரசி.'
கொடுத்த வாக்கு
நிறைவேற்றிய 
திருப்தியில்
அடுத்த கட்டத்திற்குப்
பயணமானார் திருமூலர்.

இப்போது மூலர்
ஜம்புசேசுவர மூலர்.

மூன்றாம் மூலர்.

சதுரகிரியில்
நீண்ட காலத் தவம்.
மீண்டும்
காய சித்தி.

சித்தர்களே வியக்கும்
அழகிய இளைஞரானார்.

காலப்போக்கில்
சீடர்கள் பெருகினர்.

சீடன்
குருராஜனும் 
சேர்ந்துகொள்ள 
சதுரகிரி மலையே 
மூலரின்
தவச்சாலையாய் 
ஒளிர்ந்தது. 
ஓங்கி உயர்ந்தது.

சுமங்கலியாய்
நாடாண்டு வந்த
குணவதி
கால முதிர்ச்சியில்
நம்
சதுரகிரிச் சித்தர்
பற்றி
அறிந்து
அவர் யாரென
அறியாமலேயே
மலைக்கு வந்து
உதவி கோரினாள்.

தன் துயர் 
துடைக்க வேண்டி
தாள் பணிந்து 
நின்றாள்.

மகா யோகியான 
தன்
கணவர் கிடைக்க
வேண்டும்.
பந்தம் தொடர
வேண்டும்
என்பதே அவள்
பிரார்த்தனை.

தன் தவ சக்தியால்
அந்த மாமுனி
அரசன் உடலை
ஒரு மரமாக
உருவாக்கினார்.

அந்த மரமே
அதுமுதல்
அரச மரம் என
அழைக்கப்படுகிறது.

" இம்மரத்திற்குப்
பூசை செய்.
அதுவே
உனக்கான சேவை.
பதி சேவை
செய்.
பலன் கிட்டும்."
ஆசியுடன்
சொன்னார்.

அரசி
அழுத வண்ணம்
அரச மரத்தைத்
தொழுதாள்.
விடை பெற்றாள்.

பின் பல காலம்
நாடாண்டாள்.


இந்நிகழ்சிக்குப் 
பின்னர்
திருமூலரது
சித்தர் பணி
உலகை
உய்வித்தது.

சீடர்களை
ஊக்குவித்தார்.
மக்களை
மேம்படுத்தினார்.
29-க்கும் மேற்பட்ட
நூல்களைப் படைத்தார்.

தவம் செய்தோருக்கு
உதவி செய்தார்.
உபதேசம் தந்தார்.

துவாரகை பதியான
கிருஷ்ணனுக்கே
உபதேசம்
செய்ததாக
அகத்தியர்
மூலர் புகழ்
பாடி உள்ளார்.

அதே போன்று
மார்க்கண்டேயரையும்
மகிழ வைத்திருக்கிறார்
திருமூலர்.

''நீ சாகா வரம்
பெற்றிருக்கலாம்.
இருப்பினும்
சுழுமுனையில்
நிலைத்து நின்று
தவம் செய்"
என மார்க்கண்டேயருக்கு
உபதேசித்ததாக
அகத்தியர்
அகம் மகிழ்ந்து
சொல்கிறார்.

கயிலாயத்திலும்
பூலோக க்
கயிலாயத்திலும்
திருமூலருக்குச்
சீடர்கள்
இருந்தனர்.

பன்னிரண்டு
மடங்களை
நிறுவி
மக்கள் தொண்டே
மகேசன் 
தொண்டெனப்
பணி செய்தார்.

சனகர்
சனந்தனர்
சனாதனர்
சனத்குமாரர்
ஆகிய
நான்கு
சனகாதி முனிவர்கள்
பதஞ்சலி மாமுனிவர்
அகத்தியர் ஆகியோர்
திருமூலரின் 
சமகாலத்தவர்கள்.

ஒரு சாலையில்
பயின்றவர்கள்.
அவர்களுக்கு
நந்தீசரே
குருவாயிருந்தவர்.

வாழ்ந்த காலமெல்லாம்
வள்ளலாய் இருந்தவர்
தக்க தருணம் வரவே
'இதுவே நல்ல சமயம்'
என்றெண்ணி
இறையோடு இறையாய்
இரண்டறக் கலந்தார்.

இது
நிகழ்ந்த தலமே
சிதம்பரம்.
மூலர் லயமான இடமே
ஆதிமூலநாதர்
சன்னதியானது.

திருமூலர்
சமாதியை
மூலவராகக் கொண்டு
கருவூரார்
அமைத்த கோயிலே
சிதம்பரம் நடராஜர்
கோயில் என்கிறது
கருவூர் புராணம்.

லிங்க வடிவிலிருக்கும்
திருமூலரைத்
தரிசிக்க
தியானிக்க
எண்ணியதெல்லாம்
எண்ணியவாறு
கைகூடும்
என்பதே
திருமூலரின்
இறைச் சிறப்பு.
கொடைத் தன்மை.

திருமூலரின்
கிருபை
பொருந்திய
இடமாகக்
காட்டுமன்னார் கோயில்
அருகே
திருநாரையூர் 
பொல்லாப் பிள்ளையார் 
கோயிலைச்
சொல்கிறார்கள்.

தமிழ் நாட்டில்
மூலனூர்
என்ற
பெயரிலிருக்கும்
அத்தனை ஊர்களும்
மூலரின்
கிருபை பெற்ற
தெய்வத் தமிழ்த்
தலங்களே.

சதுரகிரி மலையில்
இன்றும்
உலா வருகிறார்
திருமூலர்.

அங்கு
அவரது தவக் குகை
ஆழ்நிலை தவத்திற்கு
அடித்தளமாய்
இன்னமும் இருக்கிறது.

9 மனைவிகளோடு
90
மக்கள் செல்வங்களோடு
வாழ்வாங்கு வாழ்ந்த
திருமூலர்
புரட்டாசி
அவிட்டம்
3-ஆம் பாதத்தில்
அவதரித்தார்.
அவரை வழிபடத்
தக்க நாள் இது.

ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)