சாக்கிய நாயனார் புராணம்
63 நாயன்மார்கள் வரலாறு
சாக்கிய நாயனார் புராணம்
தொண்டை நாட்டில்
மதில் சூழ்
காஞ்சிபுரம்
அடுத்துள்ள ஊர்
திருச்சங்கமங்கை.
இங்கு
சாக்கியர்
என்றொரு
வேளாளர் குடி
திருமகனார்.
சொல்லிலும்
செயலிலும்
நல்லவர்.
நிறைய
படிப்பவர்.
நுனிப்புல் மேயாமல்
ஆழ்ந்து படிப்பவர்.
அவற்றை ஆய்பவர்.
அன்றாடம் கற்பவர்.
எல்லா
உயிர்களிடத்தும்
அன்பு கொண்டவர்.
அதனால்
எல்லோரின்
மதிப்புக்கும்
பாத்திரமானவர்.
அவருள்
எப்போதும்
தேடல் இருக்கும்.
அது இறை தேடல்.
மெய்ப்பொருள் தேடல்.
பிறப்பு ஏன்?
இறப்பு ஏன்?
என்ற கேள்வி
அன்றாடம் எழும்.
பதில் கிடைக்காது.
தேடல் தொடரும்.
மாறி மாறி வரும்
பிறப்பையும்
இறப்பையும்
நோய் என்றே
கருதினார்.
அந்த நோயை
ஒழிக்க
ஆவல் கொண்டார்.
'பிறந்தும் இறந்தும்
வரும்
பிறவித் தொடர்
மென்மேலும்
செல்லாமல்
இப்பிறவிலேயே
அதனை விட்டு
நீங்குவேன்'
எனச் சபதம்
கொண்டார்.
திருச்சங்கமங்கையில்
எப்பதிலும்
கிடைக்காததால்
மதிநுட்பம் வாய்ந்த
விடைக்காகவும்
மெய்யறிவு பெறுவதற்குரிய
பல வழிகளை நாடியும்
அருகிருக்கும்
காஞ்சிபுரம் சென்று
தேடல் தொடர்ந்தார்.
காஞ்சிபுரத்தில்
கற்றறிந்த
ஆன்றோர்களையும்
சமயச்
சான்றோர்களையும்
சந்தித்துத்
தெளிவு பெற
முயற்சித்தார்.
முதலில்
சாக்கியர்களிடம்
போனார்.
பௌத்தர்களான
அவர்கள் பற்பல
உபாயங்களை
விளக்கினர்.
அவர்கள் உரைத்த
தர்ம வழியில் நின்று
பிறப்பறுக்கும் வழியை
ஆராய்ந்தார்.
பௌத்த நூல்கள்
பலவற்றைத்
துணைக்கு
வைத்துக் கொண்டு
கனவு மெய்ப்பட
கருத்தைச் செலுத்தினார்.
பௌத்த மதத்தைத்
தழுவி
உடை மாற்றித்
துறவி போல் ஆனார்.
ஆனாலும்
தேடல் தொடர்ந்தது.
பிற
சமய நூல்களையும்
ஆராய்ந்தார்.
அவற்றின் பொருளைக்
கேட்டு அறிந்தார்.
பௌத்த சமய
முடிவுகளையும்
பிற சமய
முடிவுகளையும்
ஆராய்ந்து
பார்த்துவிட்டு
ஒரு முடிவுக்கு வந்தார்.
அவை எவையும்
உண்மைப் பொருளை
உணர்த்துவன அல்ல
என்ற முடிவுக்குத்தான்
வந்தார்.
தேடல் தொடர்ந்தது.
ஒரு கட்டத்தில்
அது நிறைவுற்றது.
காரணம்
உண்மை புலப்பட்டது.
'உண்மைப்
பொருளைத் தேடி
எங்கும் அலையத்
தேவையில்லை.
அழிவில்லாத
சிவ நன்னெறியே
உண்மைப் பொருள்'
என்ற நல்லுணர்வுக்கு
வந்து சேர்ந்தார்.
செய்யப்படும் வினையும்
வினையைச்
செய்கின்ற உயிரும்
வினையின் பயனும்
பயனைச்
செய்த உயிருக்கே
சேர்ப்பிக்கும் என்ற
பேருண்மை
சிவனெறி அல்லாத
பிற சமயத்தில் இல்லை
எனத் தெளிந்தார்.
கற்றிருந்த
ஆழ் தவத்தில்
மேலும் பல
பேருண்மைகள்
தெளிவு தந்தன.
'சிவமே பரம்பொருள்.
பிறப்பறுக்க
உறுதுணை
சரணாகதியே.
ஒருவன்
எத்திசையில் நின்றாலும்
எக்கோலம் பூண்டாலும் சிவபெருமானின்
திருவடிகளை
மறவாதிருத்தல் ஒன்றே
உண்மைப் பொருள்.
இறைவனை
மறவாமையே
பிறவாமைக்குக்
காரணமாயிருக்கும்.
சிவலிங்க
வழிபாடே சிறந்தது.'
பிறகென்ன?
தவம் வழிநடத்த
சமணம் விடுத்து
சைவம் திரும்பினார்.
சிவபிரானைத்
தொழ ஆரம்பித்தார்.
ஆனால் ஏனோ
பௌத்த ஆடையை
நீக்கவில்லை.
காவி ஆடை
அணியவில்லை.
எல்லாச் செயல்களும்
சிவன் செயல்
என்றே நினைத்தார்.
திளைத்தார்.
அவரது
சிவ வழிபாடு
சிவலிங்க வழிபாடு
வித்தியாசமானது.
சைவத்துக்கு மாறி
ஒரு பகுதியில்
சென்று
கொண்டிருந்தபோது
வெட்ட வெளியில்
சிவலிங்கம்
ஒன்று கண்டார்.
'அருவத்திற்கும்
உருவத்திற்கும்
காரணமாய்
விளங்குவது
சிவலிங்கம்.
மாலும் அயனும்
பிணங்கிய போது
இடையில்
ஜோதி வடிவாய்
நின்ற குறிப்பே
சிவலிங்கம்'
என்று
அவரது மனக்குரல்
உரத்துச் சொன்னது.
'ஆன்ம சோதி
அருட் சோதி
சிவ சோதி
மூன்றும்
கூடியதே சிவலிங்கம்.
சிவலிங்கத்திற்கு
அடிவட்டம்
ஆன்ம சோதி.
சிவலிங்கத்தைச்
சூழ்ந்திருக்கும்
ஆவுடையார்
அருட் சோதி.
மேல்நோக்கி
இருக்கிற
சிவலிங்கமே
சிவ சோதி.'
ஆன்ம விசாரணை
அர்த்தம் சொன்னது.
வெட்ட வெளியில்
இருந்த
சிவலிங்கத்தை
நெஞ்சுருக
வழிபட்ட
பின்னர்
உணவருந்தினார்.
இந்தப் புதிய
அனுபவம்
அவருக்குள்
ஓர் ஆன்மிக
விதை போட்டது.
'நாள்தோறும்
செல்லும் வழியில்
ஒரு
சிவலிங்கத்தைக்
கண்டு
தரிசித்து
மகிழ்வு கொண்டு
பின்னரே
உணவருந்த வேண்டும்.'
நாளொரு வண்ணமும்
பொழுதொரு வண்ணமுமாய் சாக்கியரது
சிவ வழிபாடு
மெருகேறிக்
கொண்டிருந்தது.
ஒரு நாள்
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
கண்ணுதற் கடவுளைக்
காண முடியவில்லை.
சாக்கியனார்
கலக்கமுற்றார்.
பரிதவித்தார்.
பதை பதைத்தார்.
உலகை இயக்கும்
சிவனாரின்
திருவிளையாடல்
தொடங்கியது.
கொஞ்ச நேரத்தில்
வாடிப்போன
சாக்கியனாரின்
முகம்
பொலிவுற்றது...
கொஞ்ச தூரத்தில்
பேரொளி வீசும்
சிவலிங்கம் ஒன்று
பிரகாசித்தது.
தாய்ப் பசுவைத்
தேடி ஓடும்
இளம் கன்றைப் போல்
துள்ளி ஓடினார்.
கன்றுக் குட்டியைப்
போலவே
தட்டுத் தடுமாறி
தாறுமாறாய்
சிவலிங்கத்தை
நெருங்கினார்.
பரவசம் கொண்டவராய்
என்ன செய்வதென்று
அறியாதவராய்
அருகில் இருந்த
சிறிய கல் ஒன்றை எடுத்து
சிவலிங்கத்தின் மீது
எறிந்து பூசித்தார்.
அன்பு நெறி
வழக்கத்தால்
அடியார்கள் புரியும்
செயல் இறைவனுக்குப்
பூசை தானே?
ஈனக்
கண்களுக்குத்தான்
அது வெறும் கல்.
ஈஸ்வரன்
கண்களுக்கு
அது நறுமலர்.
இறைவன் பூரித்து
சாக்கியரது
கல்லெறியும் பூசையை
ஏற்றுக் கொண்டார்.
இதுபற்றி
ஏதும் அறியாதவராய்
சாக்கியர்
உணவு தேடிப் புறப்பட்டார்.
மறுநாள்
இன்னொரு இடம்.
இன்னொரு சிவலிங்கம்.
அப்போதுதான்
முதல் நாள் நடந்த
கல் எறி
ஞாபகத்திற்கு வந்தது.
பெரும் பாவம்
செய்து விட்டதாக
அஞ்சினார்.
குமுறினார்.
உள்ளிருக்கும்
கடவுள்
மெலிதாக
ஒன்றை
நினைவுக்குக்
கொண்டு வந்தார்.
'எச்செயலும்
சிவன் செயலே.
அவன் திருவுளமே.'
மனத்திருப்தி
கொண்டார்.
அன்றும்
அருகிருந்த
கல் ஒன்றை எடுத்து
சிவலிங்கத்தின்
மேல் எறிந்து
பூசித்தார்.
பூப்போல
ஏற்றுக்கொண்டார்
புவனசுந்தரர்.
கண்ணப்பரின்
செருப்படியையே
ஏற்றுக்கொண்டவர்
ஆயிற்றே!
சாக்கியரின்
கல்லெறியை
ஏற்க மாட்டாரா
என்ன!
பின்னொரு நாள்
அறிவுத் தெளிவிருந்தும்
ஆண்டவன் அருகிருந்தும்
அன்றும்
ஒரு பிழை
செய்தார் சாக்கியர்.
அவர்
என்ன செய்வார் பாவம்?
ஆண்டவன் கணக்கு
அப்படி!
சிவ பூசை
செய்யாமல்
மகேஸ்வர பூசையில்
இறங்கிவிட்டார்
சாக்கியர்.
ஆம்....
உணவருந்த
உட்கார்ந்து விட்டார்.
திடுமெனத்
தவறை உணர்ந்தவராய்
உண்ணாமல்
எழுந்து
சிவலிங்கம்
தேடி ஓடினார்.
"உலகாளும் தேவனே!
உமையொரு பாகனே!
பாவியானேனே!
என் பிழையைப்
பொறுத்தருள்வாயா?
தண்டனை தந்து
விடுமய்யா.."
கண்ணீர் மல்க
நெடுஞ்சாண் கிடையாக
லிங்கம் முன் சாய்ந்தார்.
அப்போது
ஒரு பேரொலி
விண்ணிடை எழுந்தது.
சற்றே தலை தூக்கி
ஆகாயம் நோக்கினார்
சாக்கியர் பெருமான்.
விண்ணில்
அவர் அன்றாடம் தொழும்
ஆடல்வல்லான்
உமை உடனிருக்க
காட்சியாய்த் தோன்றினார்.
"அரிய பக்தனே!
உனது அன்பு அறிவோம்.
உள்ளம் அறிவோம்.
புறச் செயலால்
உள்ளன்பு
தெரியாமல் போகாது.
நீ
இருக்க வேண்டிய
இடம் இதுவல்ல.
வா...
எங்களுடனேயே வா.
சிவலோகம் செல்வோம்."
உமையும்
உமையொருபாகனும்
புன்னகைத்து விடைபெற
வானில் இருந்து
கற்கள் அல்ல...
வானவர்கள் எறிந்த
பூக்கள் விழுந்தன.
சாக்கியனார்
சாக்கிய நாயனாராகப்
பதவி உயர்வு பெற்று
கயிலாயம் பயணித்தார்
அம்மை அப்பன்
இருவருடனே .
மார்கழி பூராடம்
சாக்கிய நாயனாரின்
குருபூசை நாள்.
'வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்' - சுந்தரர்.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக