சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - இடைக்காட்டு சித்தர் (பாகம் 2)


இடைக்காட்டு சித்தர் 

(பாகம் 2)

மாரிமைந்தன் சிவராமன்

சித்தர் பிரான் 
இடைக்காடர் 
இவ்வுலகில்
வெகு காலம்
வாழ்ந்தார்.

காய கற்பம்
கொண்டு
அழியா
உடல் பெற்று
வாழ்வாங்கு
வாழ்ந்தார்.

தவ ஞானம்
மிக அதிகம்.
தவ வாழ்வு
வெகு காலம்.

ஒரு
தவ ஞான
சிரோன்மணியே
இடைக்காடர்.

கோரக்கர்
கமலமுனி
போகர் 
போன்றோரைக்
குருவாகக் கொண்டு
வழிபட்டார்
இடைக்காடர்.

போகர் பெருமான்
சமாதி
கொள்ளும் முன்
சீடர்
இடைக்காடரை
அழைத்து
திருவண்ணாமலையில்
இறைபணி
ஆற்றி வருமாறு
கட்டளையிட
இடைக்காடர்
திருவண்ணாமலை
சென்று சித்தி
அடையும் வரை
இறைபணி தொடர்ந்தார்.

இவ்விதமே
புலிப்பாணியை
அழைத்த
போகர் பெருமான்
பழனிக்குச்
சென்று
பணி செய்ய
ஆணையிட்டதாகக்
குறிப்பிருக்கிறது.

பல்லாண்டு காலம்
சித்தர் நிலை தொடந்து
இறைபணி செய்து
திருவண்ணாமலையில்
சித்தியானார்
ஞானச் சித்தர்
இடைக்காடர்.

சித்தர் உலகில்
இடைக்காட்டு சித்தர்
போன்று
சங்க காலத்தில்
இடைக்காட்டு
புலவர்
ஒருவர்
இருந்தார்
என்று ஒரு
தகவல்
உண்டு.

சங்க
இலக்கியங்களில்
சிங்கமென
வலம் வரும்
புலவர்
இடைக்காடனார்
வேறொருவர்
என்றொரு
ஆய்வு இருப்பினும்
பெருமை மிக்கவை
அவர் குறித்த
சில குறிப்புகள்.

மதுரையம்பதி
மன்னன்
குலசேகர
பாண்டியன்
பாண்டிய
மன்னர்களில்
சிறப்புடையவன்.

தென் மதுரை
தமிழ்ச் சங்கத்துப்
புரவலன்.
புலவனும் கூட.

கபிலர்
அவன் காலத்துக்
கவிஞர்.

இடைக்காடர்
கபிலருடன்
சென்றார்.
அரசனைப் பாடி
அவன் தமிழ்ப் பற்றைப்
போற்றி
பிரபந்தங்கள் படைக்க!

இடைக்காடரது
தோற்றம்
எளிமை
செறிந்தது.

எனவே
மன்னனை
ஈர்க்கவில்லை.

கவனியாது
மதியாது
அவமதித்தான்.

இடையனார்
வருத்தம்
கொண்டார்.

தமிழுக்கும்
தமிழ்ப் புலவனுக்கும்
கிடைத்த
அவமரியாதை
கண்டு
மனமுடைந்தார்.

அரசவை விட்டு
வெளியேறினார்.
வேறு திசை
பயணமானார்.

அவமதிப்பைக்
கண்ணுற்ற
கபிலரும்
ஆதியர் என்ற
பெரும் புலவரும்
மதுரைக் கடவுளும்
அரசவையை
விட்டு
வெளியேறினர்.

அந்தக் காலத்தில்
நடந்த
வெளிநடப்பு இது.

அத்தனை
புலவர்களும்
ஆதி தேவனும்
வெளியேறி
சபையே
வெறிச்சோட
மன்னனுக்கு
இடையனாரின்
மகத்துவம்
புரிந்தது.

ஓடோடிச்
சென்று
இடைக்காடரை
வடமதுரையில்
இடைமறித்து
மன்னிப்புக்
கோரி
மன்றாடி
திரும்ப
அழைத்து
வந்தான்.

யானை ஒன்றைப்
பரிசளித்துப்
போற்றி மகிழ்ந்தான்.

பாண்டிய
மன்னர்
பரம்பரைக்கு
அவதூறு
நீக்கி
பெருமை
சேர்த்தான்.

அச்சமயத்தில்தான்
திருவள்ளுவர்
திருக்குறளை
அரங்கேற்றம்
செய்தார்.

அரங்கேற்றம்
முடிந்தபோது
அங்கிருந்த
இடைக்காடர்
பாடிய
சாற்றுக் கவிதான்...

'கடுகைத் துளைத்தேழ்
கடலைப் புகட்டி
குறுகத்
தரித்த குறள்'
என்னும்
சிறப்புப்பாயிரம்.

சங்க காலத்தில்
ஏக சந்தக கிராகி
துவி கந்த கிராகி
என்று
இரு பெரும் புலவர்கள்.
பெரும் தலை கனத்தர்.

பாட்டோடு
வரும் புலவர்களைப்
பழம் கதைகள்
எனச் சொல்லி
விரட்டி விடுவார்கள்.

இதையறிந்த
இடைக்காடனார்
ஒரு நூலோடு
வந்தார்.

'ஊசி முறி'
என்ற பேரில்
அதைப்
பாடினார்.

கேட்ட
இரு கவிகளும்
பாட
வார்த்தையின்றித்
தவித்தனர்.

அதுமட்டுமல்ல,
'எம்
ஆணவம்
இன்றோடொழிந்தது’
என
இடைக்காடனார்
தடை சொல்லியும்
தாள் பணிந்து
வணங்கினர்.

'ஊசி முறி'
கிராகிகளின்
செருக்குமுறி
பாடல்கள்
என்பது
வரலாறு.


ஒரு காலத்தில்
ஆன்றோர் சிலருக்கு
ஒரு
சந்தேகம்
எழுந்தது.

தசாவதாரத்தில்
வணங்கத்தக்க
அவதாரம்
எது?
என்பதே
அவர்களது
ஆர்வம் கலந்த
சந்தேகம்.

பதிலளித்த
இடைக்காடனார்
'ஏழை
இடையன்
இளிச்சவாயன்'
என
மூன்று பேரைச் சொல்ல
புலவர்களுக்குப்
புரியவில்லை.

ஏழை
என்பது ராமன்.
அரச குமாரனாய்ப்
பிறந்தும்
வனத்தில்
ஏழை போல்
வாழ்ந்தவன்.
இடையன்
என்பது
இடையர் குல
கிருஷ்ணன்.
இளிச்சவாயன்
என்பது
நரசிம்மரைக்
குறிக்கும்.

தூணிலும்
துரும்பிலும்
இறைவன்
இருக்கிறான்
என்ற
உண்மையை
உலகுக்குச்
சொல்ல
'வாய் திறந்து'
இளிச்ச வாயனாய்
நின்றவர்
நரசிம்மர் அல்லவா?

ராமாவதாரமும்
கிருஷ்ணாவதாரமும்
நரசிம்ம அவதாரமும்
வழிபடச் சிறந்தது
என்ற
பொருள்
இடைக்காடரின்
பதிலில்
பொதிருந்திருந்தது.

சங்க 
இலக்கியங்களான
அகநானூறு
புறநானூறு
நற்றிணை
குறுந்தொகை
இவற்றில்
இவரது வரிகள்
கம்பீரமாய்
வீற்றிருக்கின்றன.

இவையெல்லாம்
இடைக்காடனார்
பற்றிய
பெருமிதக் குறிப்புகள்.

ஒருக்கால்
இப்படியும்
இருக்கலாம்.

பல காலம்
வாழ்ந்த
இடைக்காடர்
இடையில்
சில காலம்
புலவராய்
உலவி
இருக்கலாம்.

சித்தர்களுக்கு
இது
இயல்பு தானே!

யார் கண்டது?

ஆயினும்
காண நினைப்பவர்
இடைக்காட்டு
சித்தரை
இன்றும் காணலாம்.
அவர்
அருள் பெறலாம்.

திருவண்ணாமலை
சதுரகிரி
கொல்லிமலை
இடைக்காட்டூர்
இந்நான்கும்
அவரிருக்கும்
திருத்தலங்கள்.

இடைக்காடர்
அவதரித்த
ஊர் பற்றி
நிறையத் தகவல்
உண்டு.

தொண்டை 
மண்டலத்தின்
'இடையன் திட்டு'
என்பர் சிலர்.

மலையாள நாட்டின்
இடைக்காடு
என்பார் இன்னும் சிலர்.

முந்தைய
காலத்திலிருந்த
இடைக்கழி எனக்
குரலிடுவார் சிலர்.

மதுரைக்குக் கிழக்கே
இடைக்காட்டில்
பிறந்தார் என்பர்
வேறு சிலர்.

பாண்டிய நாடே
பூர்வீகம்
என ஆதாரம் 
காட்டுவர் சிலர்.

'இல்லை இல்லை..
திருவண்ணாமலையே’
இடைக்காட்டு சித்தரின்
பிறந்த ஊர்
என்பாரும் உண்டு.

இவை யாவும்
ஆய்வுக்குரியவை.

எங்கு பிறந்தால்
என்ன!
அவர் பிறந்த நாடு
தமிழ் நாடே.
ஆன்மிகம் தவழும்
அற்புதப் பூமியே.

இடைக்காடர்
பிறந்த குலம்
குறித்தும்
சர்ச்சைகள் உண்டு.

'கோனார்’
'இடையர்’
என்கிறார்
ஆய்ந்தவர் பலர்.

'கானகக் குறவர்'
என்கிறது
ஓர் ஆய்வு.

எக்குலமாய்
இருந்தால் என்ன!
அவர் பிறந்தது
சித்தர் குலம்.
மனிதனாய்ப் பிறந்து
மகானாய் மாறிய
சித்தர் சாதி.

இடைக்காடர்
படைத்த
இடைக்காடர் 
உபநிடதம்
இடைக்காடர்
ஞான சூத்திரம்'
வருடாதி
முதலிய
சித்த நூல்கள்
காலக் கணிதம்
ஜோதிடம்
மருத்துவம்
சித்த தத்துவம்
நிறைந்த நூல்கள்.

'திருவள்ளுவ மாலை'
எனும்
மாலையாகச் சூட்டியவர்
இடைக்காட்டு சித்தர்.

அகநானூறு
புறநானூறு
நற்றிணை
குறுந்தொகை
ஆகிய
சங்க இலக்கியங்களில்
காணப் பெறுபவர்
புலவர் இடைக்காடனார்.
அவர்
சங்க காலத்தவர்
என்று
இருவேறு
காலத்தைக் கணிப்பர்.

எக்காலத்தில்
பிறந்திருந்தால் என்ன!
அவர்
தமிழுக்குத் தந்ததும்
தமிழர்க்கு அருளியதும்
பொக்கிஷம்.
ஞானப் பொக்கிஷம்.

இடைக்காடர்
சித்தி அடைந்த
திருத்தலங்கள்
குறித்தும்
வெவ்வேறு
கருத்துக்கள் உண்டு.

திருவண்ணாமலை 
என
உறுதிபடக் கூறுவர்
பலர்.

இதை
ஜனன சாகரத்தில்
உறுதிப்படுத்தி
போகர் பாடுகிறார்.

சிவகங்கை மாவட்டம்
மானாமதுரைக்கருகில்
இடைக்காட்டூரே
இடைகாட்டு  சித்தர்
சித்தி அடைந்த ஊர்
என்பாரும் உண்டு.

எந்த ஊரில்
சித்தி
அடைந்திருந்தால் என்ன!
அச்சித்தர்
இன்றும்
என்றும்
கருத்தாய்க் காத்து
வருகிறார்
அணுகி வரும்
அத்தனை பேரையும்.

ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)