சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பட்டினத்தார் (பாகம் 2)
பட்டினத்தார்
(பாகம் 2)
மாரிமைந்தன் சிவராமன்
தராசின்
இரு தட்டுக்களும்
சமமானதும்
சிவ சர்மர்
தம்பதியினரின்
தெய்வக் குழந்தை
பட்டினத்தார்
தம்பதியினரின்
வசமானது.
அதே நேரம்
தங்கத் தேர்
ஒன்று
தயங்கியபடி
வந்தது.
அத்தேர்
பட்டினத்தாரின்
செல்வச்
செழுமையைக்
காட்டும்
திருத்தேர்.
சிவ சர்மரும்
சுசீலையும்
கண்ணீர் மல்க
அமர
பெரும் செல்வத்துடன்
திருவிடைமருதூர்
நோக்கிப் பயணமானது.
நன்றியோடு
சில தூரம்
பட்டினத்தார்
தொடர்ந்து வர
சிவ சர்மர்
கைகள் தூக்கி
வணங்கி
விடை கொடுத்தார்.
பட்டினத்தார்
அரண்மனையில்
செல்வச் செழிப்போடு
அன்போடு அருளோடு
அக்குழந்தை வளர்ந்தது.
'மருதவாணர்'
இறை பெயரே
குழந்தைக்குச்
சூட்டப்பட்டது.
இறையே
குழந்தை எனில்
திரு
விளையாடல்களுக்குக்
கேட்கவா
வேண்டும்!
ஒருமுறை
மற்ற சிறுவர்கள்
சகிதம்
மரக்கலப் பயணம்.
மருதவாணர்தான்
தலைமை.
நடுக்கடலில்
திடுமென எழுந்த
திமிங்கலம்
ஒரு பையனை
'லபக்' எனப் பிடித்து
‘கபக்' என விழுங்கியது.
சிறுவர்கள் துடித்தார்கள்.
பயந்து நடுங்கினார்கள்.
''மருதவாணா...
திமிங்கலம்''
எனக்
கூக்குரலிட்டார்கள்.
மருதவாணர்
எழுந்தார்.
திமிங்கலம்
படகு அருகே
வந்தபோது
எட்டி உதைத்தார்.
செத்து விழுந்தது
திமிங்கலம்.
சிறுவர்கள்
வியந்தார்கள்.
மருதவாணரைக்
கட்டிப் பிடித்து
நன்றி சொன்னார்கள்.
செத்த
திமிங்கலத்திலிருந்து
ஒரு மனிதன்
வெளிப்பட்டான்.
அவன்
விண்ணில்
எழுந்தபடி
செல்லத்
தொடங்கினான்.
"தெய்வமே!
நான்
மணிக்கிரீவன்
எனும்
கந்தர்வன்.
ஒருமுறை
ஒரு சித்தரை
அவமதித்தேன்.
அவர் விட்ட
சாபத்தால்
திமிங்கலமானேன்.
என்
அழகு காரணமாக
அகந்தை மிகுந்து
ஆட்டம் போட்டதால்
இந்தக் கோலம்.
திமிங்கல வேடம்.
ஒரு
தெய்வமகன்
வருவார்.
அவர்
உன்னைக் காலால்
உதைப்பார்.
அப்போது
சாபம் நீங்கும்
என
அந்தச்
சித்தர்
சொல்லியிருந்தார்.
தெய்வமே!
வணங்குகிறேன்."
வணங்கியபடியே
மறைந்து போனான்
அந்தக் கந்தர்வன்.
சக
சிறுவர்களுக்கு
ஏக
அதிர்ச்சி.
ஒரு தோழன்
தட்டுத் தடுமாறி
மருதவாணரிடம்
சொன்னான்.
"நம் நண்பன்
எங்கே?
திமிங்கலம்
சாப்பிட்டு விட்டதே!"
சிரித்த
மருதவாணர்
செத்து மிதக்கும்
திமிங்கலத்தை
உற்று நோக்கினார்.
உண்ணப்பட்ட சிறுவன்
உடலெங்கும் சூடப்பட்ட
முத்து மாணிக்க
தங்க
ஆபரணங்களுடன்
நடுக் கடலில் நடந்து
மரக்கலம் ஏறினான்.
"டேய்....
வேண்டுமானால்
நீங்களும் சென்று
இன்னொரு
திமிங்கலத்திடம்
அகப்படுங்கள்....
மருதவாணன்
காப்பாற்றி விடுவான்...
உங்களுக்கும்
ஆபரணங்கள் கிடைக்கும்."
குழுவிலிருந்த
குட்டிச் சிறுவன்
கலகலப்பூட்டினான்.
தாவிக்குதித்து
படகையே
ஆட்டம் காண வைத்த
அத்தனை சிறுவர்களும்
ஒருவழியாகக்
கரை திரும்பினர்.
கடலில் நடந்தது
ஊருக்குள்
வியப்பான
செய்தியானது.
ஊர்
மருதவாணரைக்
கொண்டாடத்
துவங்கியது.
பட்டினத்தார்
பூரித்தார்.
பரமனுக்கு
நன்றி சொன்னார்.
மருதவாணர்
நாளொரு மேனியும்
பொழுதொரு
வண்ணமுமாய்
வளர்ந்தார்.
வாலிபர் ஆனார்.
பதினாறு வயதிலேயே
கல்வியிலும்
வணிகத்திலும்
அருளாற்றலிலும்
சிறந்து விளங்கினார்.
ஒரு தடவை
ஒரு முத்துக்கு
விலை நிர்ணயிப்பதில் வணிகர்களுக்கு
இடையே
குழப்பம் வந்தபோது
மருதவாணர்
தந்தை பட்டினத்தாரின்
கணிப்பையும்
தவறு எனக் கூறி
ஒரு விலையை
நிர்ணயித்தார்.
வாணிப உலகம்
வணங்கிப் போற்றியது.
'இது.... இதுதான்...
சரியான நேரம்...
திரைகடலோடி
திரவியம் தேட...'
பட்டினத்தார்
கணித்தார்.
மருதவாணர்
புன்னகைத்தார்.
'ஆம்...
இது.... இதுதான்..
சரியான தருணம்.'
மருதவாணரது
கணக்கு வேறாக
இருந்தது.
அது இறை கணக்கு.
தெய்வமாய் வந்த
மருதவாணரின்
தெய்வீகக் கணக்கு.
கடல் கடந்த வணிகம்....
கட்டிளம் காளை
மருதவாணர்....
ஊரே திரண்டு வந்து
வாழ்த்த
புறப்பட்டது
காவிரிப்பூம்பட்டினத்து
கடல் வணிகக்குழு.
நாட்பட்ட பயணம்.
ஆட்பட்ட வணிகம்.
மேம்பட்ட பொருளீட்டல்...
நாடு திரும்பிக்
கொண்டிருந்தது கப்பல்.
வழியில்
நடுக்கடலில்
ஒரு நாள்
கப்பல் குலுங்கியது.
பேய்மழை...
பெரும் காற்று...
கடும் குளிர்....
கப்பலில் இருந்த
வணிகப் பெருமக்கள்
நடுங்கினர்.
ஒடுங்கிப் படுத்தனர்.
நடுக்கம் பெரிதாகி
நாடினர் மருதவாணரை.
"பயப்பட வேண்டாம்"
என தைரியம் சொல்லி
அவர்களுக்குக்
காய்ந்துபோன
சில வறட்டிகளைத்
தந்தார்.
எதற்கென
அவர்கள் வினவ
அவைதான்
தன் வணிகத்தில்
தான் சம்பாதித்தது
எனச் சிறிதும்
கவலையின்றிச்
சொன்னார்.
கூடவே
தான் கொடுக்கும்
வறட்டிகளை
ஊர் திரும்பியதும்
அவர்கள்
தந்துவிட வேண்டும்
எனப் பத்திரத்தில்
கையொப்பம் கேட்டார்.
மருதவாணருக்கு
ஏதோ பைத்தியம்
பிடித்துவிட்டது
என்று அவர்கள்
நினைத்தாலும்
"நீங்கள்
என்ன சொன்னாலும்
கேட்கிறோம்....
எங்களை உயிரோடு
காப்பாற்றினால் போதும்...
இப்போது குளிர் போக்க
வறட்டி தாருங்கள்..."
உறைந்து போன
குரல்கள் ஒலித்தன.
எரிக்கப்பட்ட
வறட்டி
தந்த சூடு
அவர்களுக்கு
இதம் தந்தது.
கொஞ்ச நாழிகையில்
புயல் ஓய்ந்து
கப்பல்
ஆட்டமும் நின்றது.
அதோ
கரை தெரிகிறதே!
காக்கைகளும்
கழுகுகளும்
வட்டம் இடுகின்றனவே!!
ஓ.…காவிரிப்பூம்பட்டினம் வந்துவிட்டதோ!!!
கப்பல் வரும்
நாளைக்
கணித்திருந்த
காவிரிப்பூம்பட்டினம் களைகட்டியிருந்தது.
மகன் மருதவாணர்
பொருளோடும்
புகழோடும் வருவதால்
தனது கஜானாவை
முழுவதும் திறந்து
வாரி வழங்கினார்
பட்டினத்தார்.
கப்பல்
நிற்கும் இடம்
கடலில்
சற்றுத் தொலைவில்.
மகனை அழைத்து வர
படகில் போனார்
பட்டினத்தார்.
எதிரில் வந்த
பயணி ஒருவர்
"ஐயா...
உங்கள் மகனுக்குப்
பைத்தியம்
பிடித்துவிட்டது.
அறை முழுக்க
வறட்டிதான்
வைத்திருக்கிறான்.
உடன்
வைத்தியம் பாருங்கள்."
படகு போகிற போக்கில்
சொல்லிச் சென்றார்.
இன்னொரு படகில்
மருதவாணர்
கரைக்குச்
சென்று கொண்டிருக்கும்
செய்தியை
இன்னொருவர்
சொன்னார்.
பைத்தியம் என்று
கேள்விப்பட்டதால்
பயந்துபோன
பட்டினத்தார்
உடனே
சிலரை அனுப்பி
கரையில்
ஒரு மண்டபத்தில் வைத்து
மகனைக் காவல் காக்க
உத்தரவிட்டார்.
கப்பலேறி
வணிகம் செய்து
திரும்பிய மகனின்
வணிக வல்லமையைப்
பார்க்க நினைத்துப்
படகைக் கப்பல் பக்கம்
விடச் செய்தார்.
கப்பலில்
மருதவாணர் அறையில்
சில மூட்டைகளும்
பல வறட்டிகளும்
தென்பட்டன.
மகனுக்குப்
பைத்தியம்தான்
பிடித்து விட்டதோ என
மிரண்டார் பட்டினத்தார்.
"அடச்சே!
இதையா சம்பாதித்து
வந்திருக்கிறான்.
இருக்கட்டும்...
பைத்தியம்
பிடித்து விட்டதாக
சக பயணி
சொன்னானே!
உண்மையாய்
இருக்குமோ?
புத்தி பேதலித்துப் போயிருந்தாலென்ன.....
பத்திரமாய்
வந்து சேர்ந்தானே ...
அது போதும்...!"
ஒரு பெட்டியில்
வறட்டி ஒன்றைப்
பாதுகாப்பாய்
வைத்திருந்தார்
மருதவாணர்.
கோபமாய்
வறட்டியை
எடுத்து
கப்பல் சுவற்றில்
வீசி எறிந்தார்
பட்டினத்தார்.
வறட்டி உடைந்து
அதிலிருந்து
மாணிக்கப் பரல்கள்
சிதறின.
மூட்டை முழுவதும்
அழுக்குத்
துகள்கள் அல்ல.
அத்தனையும்
தங்கத் துகள்கள்.
'இதற்குத்தானே
ஆசைப்பட்டீர்
பட்டினத்தடிகளே!'
எப்போதும் கேட்கும்
தெய்வக் குரல்
எள்ளி நகையாடியது.
அருகில் சில தாள்கள்..
அது சக வணிகர்களின்
கையொப்பம்
கொண்ட பத்திரங்கள்.
ஊர் திரும்பியதும்
இதேபோன்ற
வறட்டிகளைத்
திருப்பித் தரவேண்டும்
என்ற கண்டிப்பான
வாசகங்களோடு.
பட்டினத்தார்
வியப்பில் ஆழ்ந்தார்.
'என்னே திறமை
என் மகனுக்கு!
எவ்வளவு செல்வம்...!'
திரும்பக் கரைக்கு
விரைந்து
போகச்சொல்லிப்
படகோட்டியை
விரட்டினார்.
தரை தட்டியதும்
மகனைத் தழுவ
மண்டபத்திற்கு
ஓடினார்.
"ஐயா...
எவ்வளவு சொல்லியும்
கேட்காமல் எப்படியோ
தப்பித்து விட்டார்
சின்னையா...."
வீட்டிற்கு ஓடினார்
பட்டினத்தார்.
வழியில்
ஓரிடம் விடாமல்
கண்களால்
துழாவித் தேடினார்.
வீட்டில் தாயும்
மனைவியும்,
"இப்பத்தான்
வெளியே போனான்.
வந்துவிடுவான்..."
என்று
சாதாரணமாகச்
சொல்லியபடி
மருதவாணர்
வாங்கி வந்திருந்த
பொருட்களைக்
காட்டினர்.
பொறுமை இழந்த
பட்டினத்தார்
மகனைத் தேடி
வெளியே கிளம்பினார்.
ஊர் முழுக்கத் தேடியும்
மகனைக் காணவில்லை.
சக வணிகர்களை
வரவழைத்து
விசாரித்தார்.
அவர்களுக்கு
வறட்டிகளைத்
திரும்பத் தருவதில்
பிரச்சனை.
வைரம் வைடூரியம்
கொண்ட வறட்டிகளை
அல்லவா
திருப்பித் தரவேண்டும்?
வீணாய் சிலவற்றை
நெருப்புக்கு அல்லவா
இரையாக்கிக்
குளிர் காய்ந்தனர்
அவர்கள்.
ஒரு வணிகர்
சொன்னார்
"ஊர் திரும்பியதும்
திருவிடைமருதூர்
போகவேண்டும் '
என்று
சொல்லிக்கொண்டிருந்தார்.
அங்கு சென்றிருப்பார்..."
அதே நேரத்தில்
மருதவாணர்
திருவிடைமருதூரில்
சிவ சருமர் சுசீலை
தம்பதியினர்
முன் இருந்தார்.
பதினாறு
வருடங்கள்
கழித்துப் பார்க்கும்
தெய்வ மகனை
அடையாளம் கண்ட
அவர்கள்
தாய் தந்தை
என்பதையும் மறந்து
மருதவாணர்
திருவடி வணங்கினர்.
அதே கணம்
அவர்கள் இருவரும்
இறையோடு இறையாய்
சிவனடி கலந்தனர்.
சிவன் தந்த வாக்கு
சரியாக 16 ஆண்டில்
சித்தியானது.
இறைவன் திருவுளம்
அன்றி வேறென்ன?
'மருதவாணர்
திருவிடைமருதூர்
சென்று இருக்கலாம்.
வந்தவுடன்
பேசிக் கொள்ளலாம்'
என்ற எண்ணத்தில்
வீடு திரும்பினார்
பட்டினத்தார்.
கொஞ்சம் ஏமாற்றத்தோடு.
நிறையக் குழப்பத்தோடு.
"மருதவாணன்
வீட்டை விட்டு
அவசரமாக
போகும் வேகத்தில்
ஒரு பெட்டியை
உங்களிடம்
கொடுக்கச் சொன்னான்."
ஒரு
சிறு பெட்டியைத்
தந்தாள்
மனைவி சிவகலை.
அவசர அவசரமாய்
பெட்டியைத் திறந்தார்
பட்டினத்தார்.
உள்ளே
காதற்ற ஊசி
ஒன்று.
ஓலைத் துணுக்கு
ஒன்று.
திருப்பித் திருப்பிப்
பார்த்தவர்
ஓலைத் துணுக்கில்
சிறிய எழுத்தில்
எழுதியிருந்ததைப்
படித்தார்.
'காதற்ற ஊசியும்
வாராது
காண் கடை வழிக்கே!'
எங்கிருந்தோ
ஓங்கி அடித்தது
ஒரு பலத்த அடி.
ஏற்கனவே
பார்வை
நயனம்
ஸ்பரிசம்
பாவனா
உபதேசம்
போன்ற
தீட்சைகளைப்
பெற்றிருந்த
பட்டினத்தாருக்குப்
புதிய தீட்சை.
ஞான
தீட்சை!
கற்பூர மலை
சட்டெனப்
பற்றியது.
எல்லாமே
புரிய ஆரம்பித்தது.
மருதவாணர்
சொல்லாமல்
சொன்ன
சிவ ரகசியம்
புரிந்தது.
சட்டென
எழுந்தார்.
ஆடைகளையும்
ஆபரணங்களையும்
அப்போதே
களைந்தார்.
கோவணத்துடன்
வாசல் நோக்கினார்.
மனைவி
அதிர்ந்தார்.
தாயோ
தவித்தார்.
''தம்பி...
வாழ்வில்
கடைசிக்
கட்டத்தில்
நிற்கிறேன்.
எனக்கு
ஈமச் சடங்கு
செய்த பின்
துறவு
மேற்கொள்ளேன்."
கண்ணீர் மல்க
தாய் கேட்டார்.
ஏற்கவும் இல்லை.
மறுக்கவும் இல்லை.
ஈமச் சடங்கு
முடித்த கையோடு
தேச சஞ்சாரம்
என முடிவெடுத்தார்.
வீட்டை விட்டு
வெளியேறும்
தருணம்
மனைவி
காலைப் பிடித்தார்
கண்ணீர் மல்க.
‘'என் கதி?’'
"கவலைப்படாதே!
சிவபக்தி
அடியார் பக்தி
இரண்டுமே
உனக்குப் போதும்.
சிவகதி அடைவாய்.
என் பின்னால்
வராதே.
சிவம் முன்னால்
தொழுதபடி வாழ்."
தத்துவம் சொன்னார்.
கணவனே கதி
என வந்த
கற்புடை நல்லாள்
கணவன் பேச்சை
மீறாது
கண்ணீர் துடைத்தார்.
அடுத்து
வீசினார்
அணுகுண்டு ஒன்றை.
‘'இந்தச்
சொத்துகளை
ஊர் மக்கள்
விரும்பிய வரை
எடுத்துச் செல்லலாம்.''
உத்தர விட்டார்
கணக்காயர்
சேந்தனாரிடம்.
அடுத்து
அவர் பாதம்
பட்ட இடம்
பூம்பட்டினத்தின்
பொதுச் சத்திரம்.
ஏராளமான
சொத்து...
கணக்கிட முடியாத
பொக்கிஷம்.
பட்டினத்தார்
பட்டினத்தடிகளாகி
சூறையாடச்
சொல்லி விட்டார்.
புகாராய்
மன்னரிடம்
சேதி போனது.
விரைந்து வந்து
சொத்துக்களைக்
கைப்பற்றி
உரிமையான
உறவினர்க்குத்
தந்தது போக
மீதியைக்
கஜானாவில்
சேர்த்தார்.
''இதை முழுதும்
அறப் பணிகளுக்கு
மட்டும்
செலவிடுக!''
ஆணையிட்டார்
அரசர்.
சொத்து
மதிப்பீட்டை
முழுதாய் அறிய
சேந்தனாரை
மிரட்டிப் பார்த்தார்
மன்னர்.
அவருக்கே
கணக்குத்
தெரியவில்லை.
அத்தனை
சொத்து.
சேந்தனாரைச்
சிறை செய்தார்.
பலனேதும் இல்லை.
பட்டினத்தாரையே
பார்த்து விடலாம்
என
மன்னர்
சத்திரம் வந்தார்.
'‘பட்டினத்தாரே!
வணிகர் குலத்
தலைவரே!
செல்வமெல்லாம்
துச்சமெனக் கருதி
தூக்கி எறிந்து விட்டு
இப்படிப்
பரதேசி போல்
உட்கார்ந்திருக்கிறீர்களே!''
நெஞ்சுருகிக் கேட்டார்.
ஒரு கணம்
மன்னரை
உற்றுப் பார்த்த
பட்டினத்தார்
"மன்னா!
நாடாளும்
நீ
நின்றிருக்கிறாய்.
நானோ
உட்கார்ந்திருக்கிறேன்.
இதுவே
என் நிலையின்
விசேஷம்.’'
விஷமாய்ச்
சொல்லவில்லை.
விஷமமாயிருந்தது
வித்தகமாயிருந்தது
அவர் தத்துவம்.
மன்னருக்குப் புரிந்தது.
வணங்கியபடி
விடை பெற்றார்.
ஊர் முழுக்க
பட்டினத்தார் பற்றியே
பரபரப்பான பேச்சு.
ஏளனம்
எகத்தாளம்
கேலி
கிண்டல்
என
வரைமுறையற்று
வார்த்தைகள்
வலம் வந்தன.
பட்டினத்தாரின்
சகோதரிக்குத்
தாங்க முடியவில்லை.
குடும்பத்திற்கு
அவப்பெயர்.
வெளியே
தலைகாட்ட
முடியவில்லை.
குடும்ப கௌரவம்
கும்மியடித்தது.
''ஒருமுறை
வீட்டுப் பக்கம் வா!
வீடுபேறு
காணவிருக்கும்
நீ
எங்களை
வாழ்த்து.''
பாசவலை
விரித்தார்.
பட்டினத்தார்
ஒரு நாள்
வீட்டுப் பக்கம்
வந்தார்.
வீட்டினுள்
செல்லாது
வாசலில்
நின்றார்.
வீட்டாருக்கு
ஆசி தந்தார்.
தத்துவ மழை
பொழிந்தார்.
பின்
வழக்கம் போல்
பிச்சை கேட்டார்
தமக்கையிடம்.
உணவு
எடுத்து வருவதாகச்
சொல்லி
அப்பங்களோடு
வந்தார் தமக்கை.
'இன்றோடு
ஒழியட்டும்
இவன் கதை.
குடும்ப மானம்
பெரிது
இவன்
உயிரை விட'
என
இனிப்பு அப்பத்தில்
விஷம் கலந்தார்
வினயமான சகோதரி.
கையிலிருந்த
அப்பத்தை
சகோதரி
வீட்டின்
ஓட்டில் வீசி
''தன்வினை
தன்னைச்
சுடும்.
ஓட்டப்பம்
வீட்டைச் சுடும்''
எனத்
தத்துவம் சொன்னார்.
என்னே...
அதிசயம்!
அவ்வீடு
தீப்பிடித்தது.
பின்
ஊரார் கால் பிடிக்க
தீயணைக்கவும்
பட்டினத்தாரே
கருணை
காட்டினார்.
உறவே
விஷம் வைக்க
முயற்சித்தது
ஊர்ப் பேச்சானது.
பட்டினத்தாரின்
அடுத்த கட்டம்
துவங்கியது.
சிவனடியார்களே
சுற்றத்தார்.
எல்லா உயிர்களும்
குழந்தைகள்.
அறியாமையே
பகை.
அன்பே சிவம்.
அருளே சிவம்.
குழுந்தைகள்
அவரின் அணுக்கத்
தோழர்களாயினர்.
அவர்களோடு
விளையாடுவது
குப்பை கூளங்கள்
பாராமல்
கட்டிப் புரள்வது
குட்டிகரணமிடுவது
வழக்கமாய்ப் போனது.
ஒருநாள்
திருவெண்காடு
சென்று
ஆலயத்தில்
தியானத்தில்
இருந்தபோதுதான்
தாயாரின் மரணம்
நடந்தது.
தாயாருக்குக்
கொடுத்திருந்த
வாக்கை
மெய்ப்பிப்பதற்காக
மெய் தந்த
தாயை நாடி
வந்தார்.
வாழை மட்டையில்
தாயின் சடலத்தை
வைத்து
தாயை நினைத்து
கொந்தளித்துப் பாடியது
அக்னியாய்
வாழை மட்டையோடு
தாயையும்
எரித்துச் சாம்பலாக்கியது.
தாயின் மரணம்
பட்டினத்தாருக்கு
விடுதலை தந்தது.
தமிழுக்கு
வாழ்வியல்
உண்மையை
வாழ்வின்
நிலையாமையை
வடித்து இயம்பும்
பாடலாய் நின்றது.
ஒருநாள்
திருவிடைமருதூர்
கோயில் வாசல்
அருகில் இருக்கும்
ஒரு வீட்டுத்
திண்ணையில்
இருந்தார்
பட்டினத்தார்.
சமீப காலத்து
வசிப்பிடம்
அதுதான்.
நிஷ்டையிலிருந்த
பட்டினத்தாரை
'பட் பட்' என்றொரு
சப்தம் எழுப்பியது.
கண்விழித்தவர்
கண்ணில் பட்டது
ஒரு கோல்.
அது தட்டிய
சத்தமே 'பட்... பட்.'
கோலுக்குரியவரைத்
தலை உயர்த்திப்
பார்த்தார்
பட்டினத்தார்.
அவர்
அரசர் போலிருந்தார்.
அத்தனை கம்பீரம்.
குரலே தனி மிடுக்கு.
அரசன்தான்.
அரசனேதான்.
''யார் நீ?"
அரசன் கேட்டான்.
''நானா?
நான் என்பது...
என் உடம்பா
தோலா நரம்பா
சதையா ரோமமா
எலும்பா இரத்தமா
மூளையா மூச்சா
மனமா...?"
அரசனை
அசத்திய
பட்டினத்தார்
பதில்
நீண்டு கொண்டிருக்க
மன்னர்
திடுமென மறைந்து
போனார்.
'அட...
வந்தது
மன்னனல்ல.
மருதூர் ஈசன்.
தெய்வமே
நேரில்
வந்து
பேசியும்
அறிந்து கொள்ளாமல்
அலட்சியமாய்
இருந்து விட்டேனே!’
அருவியென
கண்களில் நீர் வர
மருதூர் ஈசன்
நின்ற இடம்
சாய்ந்தார்.
தரை மண்
எடுத்து
நெற்றியில்
ஒற்றினார்.
அப்படியே
திண்ணையில்
சாய்ந்தார்.
தவத்தின்போது
மன்னன்
கோலத்திலேயே
மகேசன் வந்தார்.
''அன்பரே...
இனி
நானிருக்கும்
கோயில்களை
நாடிப்
பாடு."
ஆணையிட்டார்
இறைவன்.
இது
அடுத்த கட்டம்.
(பட்டினத்தார் பாகம் 3 தொடரும்)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக