சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பாம்பாட்டி சித்தர் (பாகம் 2)
பாம்பாட்டி சித்தர்
(பாகம் 2)
மாரிமைந்தன் சிவராமன்
பாம்பு பிடித்தவன்
பாம்பாட்டி சித்தராக
வலம் வந்த வேளை
பல சித்திகள்
கூடி வந்தன.
தொட்டதெல்லாம்
துலங்கியது.
தொட்ட மனிதர்களின்
நோய்கள் விலகின.
இரும்பைத் தொட்டால்
அது உருமாறிச்
செம்பானது.
செம்பைத்
தொட்டால்
அது நிறம் மாறித்
தங்கமானது.
மணலைத் தொட்டால்
அது இனிப்பானது.
அவன் பார்வைக்கும்
தொடுதலுக்கும்
பலனிருந்தது.
ஒருமுறை
சிறு கற்களை
எடுத்து
உற்று நோக்கினார்.
அவை
நவரத்தினங்களாக
மிளிர்ந்தன.
சித்தர் மனமோ
ஆச்சரியத்தால்
பிரமித்தது.
'என்ன வாழ்க்கை இது!
நாகரத்தினக் கல்
வேண்டி
பாம்பைத்
தேடியவனுக்கு
சாதாரணக் கற்களை
நவரத்தினமாக்கும்
சித்து வேலை
கூடியிருக்கிறது.'
'இது எதற்கு?
தூக்கி எறி.'
மனது கூச்சலிட்டது.
'யார் வைத்த
சோதனையோ..!'
மெலிதாய்ச் சிரித்தபடி
தூக்கி எறிந்தார்.
அவரது
சிரித்த முகம்
அப்படியே
சட்டைமுனியின்
ஜொலித்த முகம்
என
சித்தர் உலகம்
பதிவு செய்தது.
அந்நாளில்
ஓர் அரசன்.
ஆடிப் பாடி
அரசாண்டு
பெண் பல கண்டு
ஓருநாள்
அடங்கிப் போனான்.
மக்களின்
மரண ஓலம்
ஆகாய மார்க்கப்
பயணத்திலிருந்த
பாம்பாட்டி சித்தருக்குக்
கேட்கவே
மனமிரங்கிப் போனார்.
பூமிக்கிறங்கி வந்தார்.
அரசி
மக்கள்
அழுகுரலில்
கிறங்கிப் போனார் .
இரங்கிப் போனார்.
மன்னனது
நேரம்
அந்நேரத்தில்
மரணத்தைத் தந்திருந்தது.
சித்தர் பிரானின்
மனம்
உதவ நினைத்தது.
கூடு விட்டுக்
கூடு பாயும்
கலை
சித்தர்களுக்கு
எளிதாய்க்
கூடி வரும்
சித்து அல்லவா!
தன்னுடம்பைச்
சற்று ஒளித்து
வைத்து விட்டு
ஒரு செத்த பாம்பைக்
கூட்டத்தினுள் வீசினார்
சித்தர் பிரான்.
அரசியைத் தவிர
அனைவரும்
தூர ஓடினர்.
அரசனின்
உடலில்
சித்தர் ஏகினார்.
மெல்ல
அசைந்தது உடல்.
பின்
துள்ளி
எழுந்தார் மன்னராய்.
சற்று சாய்ந்தும்
அமர்ந்தார்.
சுற்றும் முற்றும்
பார்த்த மன்னர்
சற்றுத் தள்ளி
செத்துக்கிடந்த
பாம்பையும்
பார்த்தார்.
அவரின்
பார்வைபட்ட
பாம்பும்
உயிர்த்தெழுந்து
ஊர ஆரம்பித்தது.
"ஏய்...
பாம்பே..!
எங்கே போகிறாய்?
மனைவி மக்கள்
குடும்பம்
எனும்
ஆசை வந்து விட்டதா?
சீ...போ.
மீண்டும் ஏமாறாதே.
உருப்படப் பார்...'
எனக் கோபங் காட்டினார்.
அப்போது
பல பல
தத்துவங்களைப்
பொழிந்தார்.
அவை தாம்
பாடல்களாயின.
அவர்தம் படைப்புகள்
ஆயின.
'ஆடு பாம்பே...
விளையாடு பாம்பே'
என பாம்பாட்டியார்
விளிக்கும்
பாடல்கள்
அரச உருவில்
பாம்பைப் பார்த்து
பகர்ந்தவையே.
அது மட்டுமல்ல...
பின்னர் அவர்
அரசிக்குச் சொன்ன
தத்துவங்களும்
பாடலாயின.
அவையே
சித்தர் தத்துவங்கள்
ஆயின.
‘செத்துப் பிழைத்த பின்
தத்துவ மழை
பொழிகிறாரே'
எனப் பயந்து
வியந்த அரசியைப்
பார்த்து
"செல்வத்தில் மூழ்கி
சீர்கெட்டுப் போவதில்
என்ன லாபம்?"
எனப் பாட
'ஐய்யோ... என்
மனத்தில் எழுகிற
கேள்விக்குப்
பதிலாய்ப் பாடுகிறாரே'
என மேலும்
பயந்து போனாள்.
பாலும் பழமும்
உண்டு
பலவிதப் பெண்களை
ருசிப்பதே
வாழ்க்கை என
இருந்தவர்
இப்படி
மாறிவிட்டாரே!
எப்படி இருந்த இவர்
இப்படி மாறி விட்டாரே
என மனத்தில் நினைத்துத்
திகைத்த போது ..
"பாலும் பழமும் விழுங்கிய
வாய்
உயிர் போன பின்
மண்ணையும்
விழுங்கும்
மறக்கலாமா?"
என
அதற்கும் ஒரு
தத்துவம் சொன்னார்.
அரசிக்குப் புரிந்தது.
தெளிவும் பிறந்தது.
பேசுவது அரசனல்ல.
அரசனின் உடல்
முடிந்த கதை
என
முடிவுக்கு வந்திருந்தவள்
அவளாயிற்றே!
சித்தரிடமே
"யார் நீங்கள்?"
என
வேண்டிக் கேட்டாள்.
பாராளும் மன்னனல்ல.
பாமரச் சித்தரென
பாம்பாட்டி சித்தரென
பதில் வந்தது.
அடுத்து செய்வது
குறித்து
சித்தரிடமே
உதவி கேட்டாள்.
தனது
வாழ்க்கை குறித்தும்
முக்தி குறித்தும்
உபதேசம் கேட்டாள்.
அத்தனையையும்
பாடலாக
உபதேசமாகத்
தந்து விட்டு
ஆசி கூறி
பாம்பாட்டி சித்தர்
விடை பெற்றார்.
அதன் பின்
சில நாள்
அரசி
அரசாண்டு
பின்
முக்தி அடைந்தாள்.
அத்தனைக்கும்
காரணம்
பாம்பாட்டியின்
தத்துவப் பாடல்களே.
அவர்தம்
உபதேசங்களே.
123 வருடங்கள்
பாம்பாட்டி சித்தர்
வாழ்ந்ததாக
ஒரு தகவல் உண்டு.
குரு சட்டைமுனியிடம்
ஞானம் பயின்ற போதே
பஞ்ச பூதங்களை
ஐந்து தலை நாகமாக
மாற்றி விட்டவர் என்ற
குறிப்பும் உண்டு.
12
மனைவியர்
144
குழந்தைகள்
என்கிறது
கோரக்கர்
பாடல்.
பாம்பாட்டி சித்தர்
பாம்பைத் தேடி
அலைந்து திரிந்த மலை.
சிறந்த சித்தரும்
அருள்
நிறை மகா சித்தருமான
சட்டைமுனி
காட்சி தந்த மலை.
அருள் நிறை தந்து
பாம்பாட்டியை
பாம்பாட்டி சித்தராக்கி
ஆட்கொண்ட மலை.
சித்தரான பின்பு
ஆதி சிவனையும்
அழகு முருகனையும்
பிரதிஷ்டை செய்து
அன்றாடம்
வழிபட்டு வந்த மலை.
பாம்பாட்டி சித்தரின்
வழிபாட்டு அம்மன்
மலையரசித் தாய்
வீற்றிருக்கும் மலை.
இறுதியில்
இறையோடு இறையாக
சித்தர் பெருமான்
இரண்டறக் கலந்த மலை.
இன்றும்
அருவாய்
பாம்பாட்டி சித்தர்
அருள் பாலித்து வரும்
மலை.
அது
மருதமலை .
இது
ஊரறிந்த
சித்தர் ரகசியம்.
மருதமலைச் சித்தரெனப்
பெயர் கூட உண்டு
பாம்பாட்டி சித்தருக்கு.
மருதமலைக்கு
நீங்க
வந்து பாருங்க...
அங்க
பாம்பாட்டி சித்தருக்கு
குகை இருக்கு
தவக்
குகை இருக்கு!
தனிச் சன்னதி இருக்கு.
அங்கும் வந்து பாருங்க.
அந்தக் குகை முன்பு
தவக் குகை முன்பு
அருந்தவக் குகை முன்பு
தியானத்தில்
அமர்ந்து பாருங்க!
உலகில்
வேறேங்கும் கிடைக்காத
தியான அனுபவம்
கிடைக்கும் இங்கே!
உலகை மறப்பது
சத்திய உண்மை!
பாம்பாட்டி சித்தரும்
அவர்தம் குரு பிரான்
சட்டைமுனிவரும்
அருள்வதும்
அதை உணர்வதும்
நிச்சயம்!
மருதமலையில்
மருதமரம் சூழ்
வனத்தில்
வீசும் காற்றும்
மரம் தரும் பாலும்
எந்நோயும்
தீர்க்க வல்லவை.
இத்தலத்தில்
பௌர்ணமி
அமாவாசை
ஏகாதசி
பிரதோஷம்
சிவராத்திரி
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம்
போன்ற தினங்களில்
உண்ணா
நோன்பிருந்தும்
மௌன
தியானமிருந்தும்
பற்பல பலன்கள்
பெறுவது
சாத்தியம்.
பல இடங்களில்
ஒரே சமயத்தில்
தோன்றுவது
சித்தர்களின் சித்து.
அதே போன்று
பல இடங்களில்
லயமாவதும்
அவர்தம் போக்கு
இதுவே
சித்தன் போக்கு.
பாம்பாட்டி சித்தர்
மருதமலையில்
மட்டுமல்ல...
துவாரகையிலும்
சங்கரன் கோவிலிலும்
விருத்தாச்சலத்தில்
விருத்தகிரீஸ்வரர்
கோயிலிலும்
சித்தியடைந்ததாக
சித்த வரலாறுகள்
சொல்லிச் சிலிர்க்கின்றன.
இந்நான்கு
இடங்களிலும்
பாம்பாட்டி சித்தரின்
திருவிடங்கள்
அமைந்திருப்பதும்
அங்கு அவர்
அருள்பாலிப்பதும்
அதற்குச் சான்று.
சட்டைமுனி சித்தர்
வாழ்ந்த
இடங்களான
ஸ்ரீரங்கம்
சீர்காழி
புதுவை,
அகத்தியர்
பூமியான
சதுரகிரி
பாபநாசம்
மற்றும்
அறுபடை முருகன்
கோயில்கள்
அத்தனையும்
பாம்பாட்டி சித்தரின்
கிருபை பொருந்திய
திருத்தலங்கள்.
பாம்பாட்டி சித்தர்
129
பாடல்கள் வழியாக
600 வரிகளில்
சொன்ன
தத்துவங்கள்
அத்தனையும்
அருள் சித்தர் வாக்கு.
உலகம் இருக்கும் வரை
உலவும் மெய் வழக்கு.
பாம்பாட்டி சித்தர்
பாடல்கள்
சித்தாரூடம்
வைத்திய நூல்கள்
முதலியன
அவர் தமிழருக்குத்
தந்த அருட்கொடைகள்.
சித்தர்களின்
கடவுள் கொள்கை
கடவுள் ஒருவரே என்பதே.
'தெய்வம் உண்டென்றிரு
அது ஒன்றென்றிரு
அத்தெய்வம்
உன்னுள் என்று இரு'.
என்பதே அவர்தம் வாக்கு.
'சதுர்வேதம்
ஆறுவகைச்
சாத்திரம்
பல தந்திரம்
புராணக் கலை
சாற்றும் ஆகமம்
விதவிதமான வேறு
நூல்களும்
வீணான நூல்கள் என்று
ஆடு பாம்பே...'
என அடித்துச் சொன்னவர்
பாம்பாட்டி சித்தர்.
மருதமலைக் கோயில்
குகை அருகில்
தவமிருந்து
ஆதி மூலஸ்தானத்தில்
முருகனைப்
பிரதிஷ்டை செய்து
வழிபட்டு வந்தவர்
பாம்பாட்டி சித்தர்.
இன்றும்
இருக்கும்
ஆதி கோயிலுக்குப்
பாம்பாட்டியார் சென்று
வந்த
குகைப்பாதை
தனிப் பாதையாய்
தவப் பாதையாய்
அருள்பாலித்துக்
கொண்டிருக்கிறது.
தாய் தந்தையர்
யாரெனத் தெரியா
பாம்பாட்டியார்
பிறந்த நாள்
கார்த்திகை
மிருகசீரிஷம்
பாதம் 3 என
குறிப்பொன்று உள்ளது.
பாம்பாட்டி சித்தரை
வழிபடுவோம்.
அவர்தம்
அடி தொழுவோம்.
வேண்டும்
வரம் யாவும்
சித்தியாகும்.
இப்பிறப்பில் நலம்
பெறுவோம்.
பிறப்பின் பலன்
பெறுவோம்.
மறுபிறப்பு வேண்டாம்.
சாகா வரம் பெறுவோம்.
ஓம் நமசிவாய!
(பாம்பாட்டி சித்தர் திவ்விய சரித்திரம் - நிறைவு)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக