சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பட்டினத்தார் (பாகம் 1)
பட்டினத்தார்
(பாகம் 1)
மாரிமைந்தன் சிவராமன்
ஊரின்
ஒதுக்குப்புறம்.
அது ஒரு
சுடுகாடு.
உற்றார்
ஒரு சிலர்
சூழ்ந்திருக்க
எரியூட்டுவதற்குத்
தயாராக
ஒரு பிணம்.
விராட்டிகள்
அடுக்கப்பட்டு
விடைபெறுவதற்குக்
காத்திருக்கிறது
அப்பூத உடல்.
அதோ...
வெறும்
கோவணமும்
உடல் முழுக்கத்
திருநீறும்
அணிந்து
சாமியார்
ஒருவர்
வருகிறார்.
வந்தவர்
ஓரிரு
நிமிடங்கள்
பாடையைத்
தரிசிக்கிறார்.
'அம்மா'
என்கிற குரல்
அவர்
அடிவயிறிலிருந்து
மெல்ல எழுகிறது.
விராட்டிகளைச்
சூழ வைத்திருந்த
விறகுக் கட்டைகளை
விரைந்து விலக்குகிறார்.
'ஐயிரண்டு திங்களாய்
அங்கமெல்லாம் நொந்து
பெற்று...'
பாடலாய்
வடிவெடுக்கிறது
அவரின் துயரம்.
விறகுகளையும்
விராட்டிகளையும்
தள்ளி விட்டு விட்டு
தன் தாயை
அரவணைத்துத் தூக்கி
அருகிருக்கும்
வாழை மட்டை மீது
வைக்கிறார்.
அவரது வாய்
தாயை
தாய் அன்பை
தாய் உறவை
ஒப்பாரியாய்
உணர்ச்சிப் பூர்வமாய்
ஒலித்துக்
கொண்டிருக்கிறது.
'முன்னை இட்ட தீ
முப்புறத்திலே
பின்னை இட்ட தீ
தென் இலங்கையிலே!
அன்னை இட்ட தீ
அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ
மூள்க மூள்கவே.'
என்று பாடுகிறபோது
வாழை மட்டை
தானே
தீப்பிடிக்கிறது.
புத்தம் புதிய
ஈர வாழை மட்டை
தீப்பிடித்து எரிவதை
வியப்பாய்
உறவினர் பார்த்து
வியந்திருக்க...
பாடை எரிகிற
பாங்கைப்
பார்த்தபடி
அவ்விடம் விட்டு
விலகுகிறார்.
அவர்...
பட்டினத்தார்.
அவரைப்
பட்டினத்தடிகள்
திரவெண்பர்
சுவேதாரண்யர்
பட்டினத்துப் பிள்ளையார்
என்றெல்லாம்
அழைப்பார்கள்.
தாய்க்குச்
செய்ய வேண்டிய
கடமைக்காகப்
பிறந்து வளர்ந்து
செல்வச் சீமானாக
இருந்த
காவிரிப்பூம்பட்டினத்தில்
ஓர் ஒதுக்குப்புறத்தில்
பொதுச் சத்திரத்தில்
துறவறம் பூண்டு
காத்திருந்தவர்.
சிதைக்குத் தீ மூட்டி
கடன் அடைத்தார்.
கிளம்பி விட்டார்.
பற்றற்றவருக்குத்
தாய் மீது பற்று.
ஓர் ஒட்டு.
தாமரை
இலை நீர் போன்றது
அவ்வொட்டு.
பின்
பித்தனைப் போல்
சித்தனைப் போல்
ஊர் ஊராய்
தேச சஞ்சாரம் செய்யத்
துவங்கி விட்டார்.
பட்டினத்தாரின்
திவ்விய சரித்திரம்
வித்தியாசமானது.
சிவமான
அவரது சரிதை
சிவம் நோக்கிய
ஒரு வழிப் பாதை.
சிவநெறிப் பாதை.
சிவபிரான்
அம்பிகையுடன்
ரிஷப வாகனத்தில்
வெளியே
திரு உலாவிற்குப்
புறப்பட்டுக்
கொண்டிருந்தார்.
தெய்வங்களும்
முனிவர்களும்
ரிஷிமார்களும்
இறைவன்
இறைவியுடன்
பயணம் காணத்
தயாராய் இருந்தனர்.
'ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர'
என
அவர்கள் ஒலித்த
இறையம்ச
மந்திரங்கள்
சூழலைத்
தெய்வீகமாக்கிக்
கொண்டிருந்தன.
அதுபோது
குபேரன்
அங்கு வந்தார்.
இறைவன்
புறப்படும் சூழலை
அறிந்த அவர்
இரு கைகளையும்
தூக்கி வணங்கியபடியே
உலாவிலும் பங்கேற்றார்.
பற்பல
தலங்களைத்
தரிசித்த
இறைவனின் குழு
திருவெண்காடு
வந்தது.
அருகிருக்கும்
காவிரிப்பூம்பட்டினம்
அனைவரையும்
கவர்ந்தது.
ஆனால்
குபேரனை
ஈர்த்தது அதிகம்.
அவ்விடத்தை
விட்டுச் செல்ல
மனம் வரவில்லை.
சிவபெருமானிடம்
மெதுவாகச்
சொன்னார்.
"இறைவா...
இந்த இடம்
எனக்கு
மிகவும் பிடிக்கிறது.
கொஞ்ச காலம்
தங்கிவிட்டு
வரவா?"
இறைவன்
புன்னகைத்தார்.
இதற்குத்தானே
ஆசைப்பட்டார்
இறைவன்!
திரு உலாவின்
நோக்கமே
அதுதானே!
"குபேரா...
யோகமயமான
உடம்பு பெற்ற
உனக்கு
இப்படி ஒரு
ஆசை எப்படி
வந்தது?
சரி... சரி
ஆசைப்பட்டு
விட்டாய்.
ஆசையே
பிறவிக்கான
விதை.
நீ
பூமியில்
பிறப்பாய்."
'கொஞ்ச காலம்
என்பதை
சிவபெருமான்
இப்படிப் புரிந்து
கொண்டாரே'
என்று
பயந்து போன
குபேரன்
"சுவாமி...
இப்படி
குபேரனாகவே
கொஞ்ச காலம்
இருக்கத்தான்
நினைத்தேன்.
நீங்கள்
மானுடப்
பிறப்புக்கு
வரம்
தந்து விட்டீர்களே!
ஏற்கிறேன்
பிரானே...
ஆனால்
உரிய காலத்தில்
எனை நீங்கள்
தடுத்தாட் கொள்ள
வேண்டும்.
உறுதி தாருங்கள்."
"உறுதி!"
என்றார்
உலகாளும்
உமையவளின்
உள்ளம் கவர்ந்தவர்.
திரு உலா
முடிவுற்றது.
இறைவன்
திருவுளப்படி
குபேரன்
பூமியில்
ஜனிக்க
ஒரு
கரு
காத்திருந்தது.
அது
சிவ சிந்தையோடு
தவ வாழ்வோடு
பரோபகாரியாகக்
காவிரிப்பூம்பட்டினத்தில்
வாழ்ந்து வந்த
சிவ நேசர்
என்பாரின்
நேச மனைவி
ஞான கலாம்பிகையின்
சிவஞானக் கரு.
அக்கரு
திருவாகி
உருவாகி
ஒருநாள்
பூமியில்
ஜனித்தது.
இப்படித்தான்
குபேரன்
காவிரிப்பூம்பட்டினத்துச்
செல்வச் சீமான்
சிவநேசத் தம்பதிக்கு
திருவெண்காடராக
பின்னாளைய
பட்டினத்தாராக
அவதாரம் கண்டார்.
ஐந்து வயதிலேயே
ஞானம் பேசியது
குழந்தை.
சிவ சிந்தனையே
வளர்ப்பாயிருந்தது.
ஒருநாள்
சிவபெருமான்
கனவில் வந்தார்.
பின்னொரு நாள்
நேரில் வந்தார்.
வந்த இறைவன்
பட்டினத்தார்
நெற்றியில்
விபூதியிட்டு
ஆசி தந்து
அவரது
விசாரணைக்கெல்லாம்
விடை சொன்னார்.
"திருவெண்காட்டுக்குப்
போ..
சுவேதாரண்யப்
பெருமானையும்
அம்பிகையையும்
பூஜை செய்.
அடியார்களுக்கு
அன்னமிடு.
காத்திரு.
தக்க நேரத்தில்
ஒரு சன்னியாசி
வருவார்.
அந்த ஒழுக்க சீடர்
உனக்கொரு
சிவ லிங்கம் தருவார்.
தீட்சை அளிப்பார்.
மந்திர உபதேசம்
தருவார்.
முழுமை அடைவாய்."
சிவனே
சொல்லி விட்டார்.
எதற்குக்
காத்திருக்க வேண்டும்?
புறப்பட்டார்
திருவெண்காடு
ஆலயத்திற்கு.
தாய்தான்
யோசித்தாள்.
'சிறு வயதே'
எனக்
கலங்கினாள்.
"அம்மா...
கொஞ்சம்
வயதாகி
இளைஞனாகி
பூஜையில்
இறங்கு என்கிறாய்.
தாயே...
மார்க்கண்டேயருக்கு
என்ன வயது?
சிவ பூஜை செய்து
அக்னிப் பதவியை
அடைந்த போது
துருவனுக்கு
ஏழு வயதே.
திருப்பாற்கடலை
சிவபிரானிடம்
வேண்டிப் பெற்ற
உபமன்யு
கிழவரா என்ன?
ஞானத் திருவடியில்
சங்கமமான
சம்பந்தருக்குப்
பன்னிரண்டு
வயதம்மா.
வயது
தடையில்லை தாயே.
விடை தாருங்கள்."
அம்மா
சம்மதித்தாள்.
திருவெண்காடு
திருக்கோயிலே
பட்டினத்தார்
உறைவிடம்
ஆனது.
முக்கண்ணன்
சொல்லியிருந்த
மாதிரியே
சிவந்த திருமேனி
சடைமுடி
விபூதி
ருத்ராட்சம்
சகிதம்
வேத மந்திரங்கள்
சொல்லியபடி
ஒரு நாள்
பிரம்மச்சாரி ஒருவர்
கோயிலுக்கு வந்தார்.
வந்தவர்
வினவியது
"பட்டினத்தார் எங்கே?
பார்க்க வேண்டும்
அவரை."
முதல் நாள் இரவு
'நாளை ஒரு
பிரம்மச்சாரி வருவார்'
என்று
கனவு சொல்லியிருந்தது
பட்டினத்தாரிடம்.
இறையருள் நிரம்பிய
இருவரும்
சந்தித்தனர்
கோயில் வாசலில்.
பிரம்மச்சாரி
கோயிலைத்
திறக்கச் சொன்னார்.
அப்போது
கோயிலில் இருந்தவர்கள்
யாராலும்
திறக்க முடியவில்லை.
'திருவெண்காடா!
நீ திற'
கட்டளையிட்டார்
பிரம்மச்சாரி.
‘எங்கேயோ
கேட்ட குரல்
போலிருக்கிறதே!'
பட்டினத்தார்
கை தொட்டார்.
காத்திருந்தது போல்
பட்டுத் துணியால்
மூடப்பட்டிருந்த
சம்புடம்
திறந்தது.
உள்ளே...
கோடி சூரியப்
பிரகாசத்தில்
சிவ லிங்கம்.
உடன்
அருளுக்கு
அருள் கூட்ட
அழகிய
விநாயகப் பெருமான்
சிலை ஒன்று.
காவிரிக் கரையில்
பிரம்மச்சாரி
சொன்ன மாதிரி
பூஜை புனஸ்காரங்கள்
செய்து
பஞ்சாட்சாரத்தைத்
தியானித்துப்
பட்டினத்தார்
ஞானப் படிகளில்
ஏறத் தொடங்கினார்.
மனதில்
ஏதேதோ
சொற்கள்
தவித்து நின்றன.
வெளிப்படுத்த
வேண்டுமென்று
துடித்தார்.
பிரம்மச்சாரியைத்
தேடினார்.
அவரைக்
காணவில்லை.
அவர்
சற்று முன்
தான்
வந்த காரியம்
இனிது
முடிந்ததென்று
இடம் பெயர்ந்து
விட்டார்.
அக
வார்த்தைகளின்
சங்கமத்தில்
பட்டினத்தார்
துடிக்கையில்
ஓர் அசரீரி
எழுந்தது.
"திருவெண்காடா...
இனி
உனக்கு
எல்லாக் கலைகளும்
சித்தியாகும்."
அட...
அதே குரல்
பிரம்மச்சாரியின்
குரலை ஒத்த குரல்.
எங்கேயோ
கேட்ட குரல்
யாருடைய குரல்?
மனதில்
விசாரணை
தொடங்கியது.
கனவிலும்
நேரிலும்
காட்சியளித்த
பிரம்மச்சாரியின்
மந்திரக் குரல்.
இரண்டும் ஒன்றே.
அது
சர்வ வல்லமை
கொண்ட
சர்வேஸ்வரனின் குரல்.
ஆம்...
சிவ பெருமானின்
தெய்வக் குரல்.
"பூஜை
தானம்
இரண்டிற்கும்
இரவு பகல்
பார்க்காதே!"
'இருபத்து நான்கு
மணியும்
எக்காலமும்
இவையே
இருக்கட்டும்.'
பட்டினத்தாரின்
மனம்
ஓயாது
நச்சரித்தது.
தாயாரின்
மனமோ
இன்னொரு
விதமாய்
நச்சரிக்க
ஆரம்பித்தது.
'திருவெண்காடனுக்குத்
திருமணம்.'
தாயின்
விருப்பம்
மறுக்காது ஏற்றார்.
அடியார் உறவு
அரன் பூஜை
அரும் பெரும்
வணிகம்
இவற்றோடு
புதிய உறவு
மணமாய் மலர்ந்தது.
சிவகலை எனும்
மங்கை நல்லாள்
சிவமைந்தனின்
மனைவியானார்.
காலச் சக்கரம்
விரைந்து சுழன்றது.
இப்போது
பட்டினத்தாரின்
வயது
முப்பத்தைந்து.
ஊரே
போற்ற
வாழ்ந்த
அவர் வீட்டில்
ஓடி விளையாட
ஒரு
குழந்தைச் செல்வம்
பூக்கவில்லை.
வழக்கம் போல்
இறையைச்
சரணடைந்தது
பட்டினத்தார்
குடும்பம்.
பரமன்
இக்குறை தீர்க்க
நாளொன்று
குறித்தார்.
திருவிடைமருதூரில்
ஒரு சிவ தம்பதி.
சிவ தொண்டே
அவர் வாழ்வு.
அடியார்க்கு
உணவிட்டு
உபசரித்தலே
அவரது மன நிறைவு.
அவர் பெயர்
சிவ சர்மர்.
மனையாள்
சுசீலை.
ஒரு நாள்
அத் தம்பதியினர்
அயர்ந்து போயினர்.
காரணம்
அடியவர்களுக்கு
உணவிட
வீட்டிலும்
கையிலும்
ஏதுமில்லை.
செல்வமில்லாது
அன்னதானம் எப்படி?
அப்போது
சிவபெருமான்
ஒரு முதியவர்
வேடத்தில்
வந்து
அன்னம் கேட்டார்.
"அம்மா... தாயே
பசிக்கிறது."
திருவிளையாடல்
புரிவது
மருதீஸ்வரப் பெருமான்
அல்லவா!
வந்த அடியவர்க்குக்
கொடுக்க ஏதுமில்லை
எனத்
தம்பதியினர்
துடிப்பதை
ரசித்த
சிவபெருமான்
கோயிலில் படைத்த
நைவேத்தியத்தைப் போல
பற்பல மடங்கு
வரவழைத்து
உண்டார்.
அவர்கள்
திகைத்திருக்க
அவர்கள்
கண்பட
ஓரமாய்
ஓய்வெடுத்தார்
காதுபடப்
பெரிதாய்
ஏப்பம் விட்டபடி.
மனைவி
சுசீலை
மெதுவாய்க்
கணவரின்
காது கடித்தாள்.
"வந்திருப்பவர்
எழுந்தவுடன்
அடியவர்களுக்குத்
தொடர்ந்து
தொண்டு செய்ய
கொஞ்சம்
ஐஸ்வர்யம்
வேண்டுமெனக்
கேளுங்கள்.
மாயமாய்
வரவழைத்து
உண்ட மகானுபாவர்
கண்டிப்பாய்
ஏற்பாடு செய்வார்."
காத்திருந்தார்
சிவ சர்மர்.
விழிப்பாய்
சுவாமி
எழும் நேரம்
எதிர்பார்த்திருந்தும்
கண் சிமிட்டும்
கண நேரத்தில்
மறைந்து போனார்
மருதீசர்.
தம்பதியினர்
தவித்தனர்.
மறுநாள்
கவலையோடு
கண்ணயர்ந்தனர்.
இரவில் இருவர்
கனவிலும் வந்தார்
ஈஸ்வரன்.
"திருவிடைமருதூர்
காருண்யாமிர்தத்
தீர்த்தக் கரையில்
வில்வ மரத்தடியில்
யாமே
ஒரு குழுந்தையாய்
இருப்போம்.
காலையில் சென்று
அக்குழந்தையை
எடுத்து
காவிரிப்பூம்பட்டினத்தில்
எம் நினைவாய்
வாழும்
பட்டினத்தார் வசம்
ஒப்படையுங்கள்.
குழந்தைக்கு
எடைக்கு எடை
தங்கம் கேளுங்கள்."
கனவு
கலைந்தது.
அடுத்த நாள்
காட்சி ஆனது.
வில்வ மரத்தடியில்
வீரிட்டு அழுத
தெய்வக் குழந்தையை
சிவ சர்மர் தம்பதி
கண்டெடுத்து
உச்சி முகர்ந்தனர்.
பரவசத்தில்
திளைத்தனர்.
இறைவன்
சொன்னபடி
பட்டினத்தாரைப்
பார்க்க
ஆயத்தமானார்
சிவ சர்மர்.
மனைவி
சுசீலைக்கு
எல்லையில்லா
வருத்தம்.
‘தெய்வக் குழந்தையைத்
தருவதா?
தெய்வமே குழந்தையாகி
மகனாகக்
கிடைத்திருக்கும்
வாய்ப்பை இழப்பதா?
தங்கத்திற்காகக்
குழந்தையை
விற்பதா?
பெறத்தான்
முடியவில்லை.
வளர்க்கும்
பாக்கியம்
வாய்க்காதா!'
மன சஞ்சலம்
மாறி மாறிக்
குடைந்தது.
சிவ சர்மர்
மனைவியின்
குரலுக்கு
செவி சாய்க்க
மறுத்து விட்டார்.
மகேஸ்வரனின்
குரல்தானே
அவருக்கு உயிர்.
இதற்குள்
ஆண் மகவோடு
அரும் தொண்டர்
சிவ சர்மர்
வரும் தகவலைப்
பட்டினத்தார்
கனவில்
சுட்டியிருந்தார்
சிவபெருமான்.
அந்தக் காட்சி
காவிரிப்பூம்பட்டினம்
கண்டிராத
காட்சி.
அருள் செல்வமும்
பொருள் செல்வமும்
நிரம்பப் பெற்றிருந்த
பட்டினத்தார்
வந்தவர்க்கெல்லாம்
வாரி வழங்கினார்.
மகன்
வந்த சந்தோஷம்.
எப்போதுமே
தான தர்மம்
நடக்கும்
அவர் வீட்டில்
ஞானக் குழந்தை
தானம்.
நேரம் வந்தது.
பெரிய தராசு
ஒன்றில்
ஒரு தட்டில் குழந்தை.
இன்னொரு தட்டில்
தங்கம்
மாணிக்கம்
வைரம்
வைடூரியம்.
வள்ளல்
பட்டினத்தார்
கையே
வலித்துவிட்டது.
எவ்வளவு
நிரப்பியும்
இரு தட்டுகளும்
சமமாகவில்லை.
எவ்வளவு தரவும்
பட்டினத்தார்
தயாராய் இருந்தும்
வைத்து நிரப்பியும்
சரிசமமாகவில்லை
தராசுத் தட்டுகள்.
ஒரு தட்டில்
இருப்பது
இறையல்லவா?
எப்படி
நிறைவாகும்!
சிவ சர்மர்
'போதும் போதும்'
என
நெஞ்சுருக
ஈஸ்வரனை
வணங்கி
அழுதார்.
இறைவன்
சிவ சர்மரின்
காதினுள்
சொன்னார்.
"கவலை
கொள்ளாதே
சிவ சர்மரே!
இவற்றை
ஏற்று
எடுத்துச் செல்.
இது
தப்பில்லா
வருமானம்.
தீதில்லாச்
சொத்து.
தான தர்மம்
பூஜை யாவும்
விரும்பியபடி
செய்து வா...
சரியாக
பதினாறு ஆண்டுகள்.
நானே வந்து
உன்னை
ஆட்கொள்வேன்."
"சரி"என்றார்
சிவ சர்மர்.
தராசுத் தட்டுகள்
சமமாயின.
(பட்டினத்தார்: பாகம் -2 தொடரும்)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக