சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - இடைக்காட்டு சித்தர் (பாகம் 1)


இடைக்காட்டு சித்தர் 

(பாகம் 1)

மாரிமைந்தன் சிவராமன்

'திருவண்ணாமலை'
இந்தப் பெயரைச்
சொன்னாலே
உள்ளம் அதிரும்.
அவ்வதிர்வில்
ஆன்மிகம் ஒலிக்கும்.

பிரபஞ்சத்தின்
ஆன்மிக
மையப்புள்ளி
திருவண்ணாமலை
என்பது
அறிவியல் உண்மை.

திருவண்ணாமலைக்கு
ஆயிரமாயிரம்
ஆன்மிகச் சிறப்புகள்.

அதிலொன்று
முதலானது.
முக்கியமானது.

இடைக்காடர்
எனும்
இடைக்காட்டு
சித்தர்
சித்தியடைந்த
திருத்தலம்
திருவண்ணாமலை.

அண்ணாமலையார்
ஆலயத்தில்
அச்சித்த பெருமகன்
லயமானதாலேயே
ஆலயத்தின்
ஆற்றலும் அருளும்
நிரம்பி வழிவதாக
ஓர் ஆன்மிகக் கணக்கு.

லயம் மட்டுமல்ல
அச்சித்தர்
அவதரித்ததும்
அவ்வூரே
என்பதால்
அருள் கணக்கும்
கூடும்.

ஆக
'திருவண்ணாமலை'
‘இடைக்காட்டு சித்தர்'
என உளமாற
உச்சரிக்கும் போதே
வாய் மணக்கும்.
மெய் சிலிர்க்கும்.
தெய்வீகம் கமழும்.
அருளமுதம் பொழியும்.

சித்தர்கள்
வாக்கு
போலவே
அவர்தம்
வாழ்வும்
மறைபொருள்
நிறைந்தது.

இறையருள்
செறிந்தது.

ஒவ்வொரு
செயலிலும்
ஒவ்வொரு
சொல்லிலும்
ஞானம்
மறைந்திருக்கும்.

அவர் பற்றி
அறிவதும்
கேட்பதும்
படிப்பதும்
உரைப்பதும்
புரிவதும்
புண்ணியமே!

எல்லோர்க்கும்
இவ்வாய்ப்பு
எளிதில்
கிட்டாது.

இதோ
இடைக்காடர்
எனும்
இடைக்காட்டு
சித்தரின்
இனிய
அருள்
வரலாறு.


ஆடு மேய்ப்பது
அவன்
தொழில்.

ஊரின்
ஒதுக்குப்புறத்தில்
பசுமை
போர்த்திய
வனச் சூழலில்
அவன்
வாசம்
ஒரு குடிசை.

இன்முகம்
ஒன்றே
அவன்
வெளிப்பாடு.

ஆடு மாடுகளை
மேய்க்கும்
அவன்
ஒருநாளும்
ஐம்புலன்களை
மேயவிடவில்லை.

புலன்களை
அடக்கியதும்
அடக்கத்துடன்
இருந்ததும்
கூடிய விரைவில்
ஒரு நல்ல
பலனைத் தந்தது.

வானுலகில்
சஞ்சரித்துக் 
கொண்டிருந்த
ஒரு
மகா ஞானியின்
கண்களில்
அவன் பட்டான்.

'ஆடு மேய்க்கும்
இடையனிடம்
இப்படி எப்படி
ஞானத்தேடல்?'
மகா சித்தர்
சிந்தித்தார்.

'இப்படிப்பட்ட
சீடனைத் தேடி
எப்படிப்பட்ட
இடமெல்லாம்
அலைந்தோம்'
எனப் புன்னகைத்தார்!

சித்தர்
ஒருவரை
உருவாக்கும்
இறை பணிக்காக
இறங்கி வந்தார்.

இப்படிச் 
சீடரைத் தேடி
குருமார் வருவது
சித்தர் இயல்பு.

வந்தவரை
வணங்கி
தொழுது
அமர வைத்தான்
அந்த ஆட்டிடையன்.

தரையில்
தர்ப்பைப் புல் போட்டு
சிம்மாசனம் தந்தான்.

ஓடிப் போய்
குட்டிகளோடு
முட்டி நிற்கும்
ஆடு ஒன்றின்
மடிப் பால்
கொணர்ந்தான்.

ஏற்கனவே
அகமகிழ்ந்திருந்த
மகா புருஷர்
மனம்
நெகிழ்ந்து
போனார்.

உளம் கனிய
உபசரிப்போருக்கு
எல்லாம்
தேடி வரும்
எனும் வரம்
மெய்ப்படத்
தொடங்கியது.

"தம்பி..!
ஆடு மாடு
மேய்க்க
வந்தவனல்ல.
நீ
மேய்ப்பவன்.

ஆம்...!
உலக மக்களை
மேன்மை கொள்ள
மேய்ப்பவன்.
மேய்ப்பன்!
நல்ல மேய்ப்பன்!

நோயால்
சாய்ந்து போனவர்களை
மருந்தால்
ஓய்ந்து போகாதிருக்கச்
செய்பவன்.

விதி வசத்தால்
சோர்ந்து போன
மக்களை
சோதிடத்தால்
கூர்ந்து பார்க்க
வைப்பவன்.
நிமிர்ந்து வாழ
வைப்பவன்!"
எனப்
பீடிகை போட்டார்.

இடைச் சிறுவனுக்கு
ஏதும்
புரியவில்லை.

ஆடும் மாடும்
அழைக்கும்
'ம் மா'
என்கிற
ஓசையைத் தவிர
ஏதும் அறியாதவனுக்கு
மகான்
சொன்னது
எதுவும்
புரியவில்லை.

ஆனால்
கேட்ட வண்ணம்
இருந்தான்.
ஏதேதோ
சொன்னார்.

கொஞ்சம் புரிந்தது.
இன்னும்
சொன்னார்.
தெளிவாய்ச்
சொன்னார்.

புரிந்தது.
அத்தனையும்
புரிந்தது.

வைத்தியம்
சோதிடம்
ஞானம்
யோகம்
மற்றும்
இன்ன பலவும்
அந்தச் சிறுவனுக்கு
ஞானமாய்
அருளினார்.
ஞான அமுதாய்
ஊட்டினார்.

ஆட்டுப்பால் 
தந்தவனுக்கு
ஞானப்பால் 
தந்தார்.

"இடைக்காடா...!"
இப்படித்தான்
அழைத்தார்
மகா புருஷர்.

ஓ!
அதுதான்
அவன்
திருநாமம்.
அவர் சூட்டிய
நாமகரணம்.

"படிப்பதும்
கேட்பதும்
யார்க்கும்
எளிதே.

கொஞ்சம்
அறிந்ததைக்
கொண்டு
‘எனக்கு
எல்லாம்
தெரியும்’
என
வாய்ப்பந்தல்
போடுதல்
யாருக்கும் வழக்கம்.

மாற்று!
அதை மாற்று!!

நான்
சொன்னதை
முதலில்
நீ கடைப்பிடி.

உன் வாழ்வு
சிறக்கும்.

உன்னால்
உலகம் சிறக்கும்."

எளிமையாய்
உலக வாழ்க்கையை
ரகசியமாய்
உணர்த்தியவர்
உச்சி முகந்து
இடையரை
இடைக்காடரை
இடை அணைத்து
இறுகத் தழுவினார்.

என்ன அதிசயம்!

கடையனாய்
ஆடு மேய்த்து வந்த
இடையன்
நாடு போற்ற உதித்த
இடைக்காடரானார்.

மகாபுருஷர்
சுடர் வித்த
ஞான தீபம்
ஆயிரம் கோடி
சூரியனாய்
ஒளி பரப்பத்
துவங்கியது.

வந்த வேலை
முடிந்த திருப்தியோடு
வான் பறந்தார்
வந்த மகான்.

மகா சித்தர்
விடை பெற்றார்.

இன்னொரு
மகா சித்தர்
உதயமானார்.

ஆடுகள் மாடுகள்
மேய்க்கும் வேலை
தொடர்ந்தது.

மகா சித்தரின்
உபதேசத்தால்
அம்மாடுகள் மீதும்
ஆடுகள் மீதும்
அன்பு
அதிகரித்திருந்தது.

ஆன்ம நேயம்
தளைத்திருந்தது.
மனித நேயம்
முழு நேரச்
சிந்தனையாய் 
இருந்தது.

அப்படித்தான்
ஒரு நாள்....

ஆடு மேய்த்தபடி
ஆன்ம விசாரணையில்
ஆழ்ந்திருந்தார்
இடைக்காடர்.

'இதென்ன
அநியாயம்..!
மனித
உறவு என்பதே
உதட்டளவாய்
அருகி வருகிறதே!

உள்ளம்
கலப்பது
வெறும்
பேச்சளவாய்க்
குறுகி வருகிறதே!

குணம் கெட்ட உறவால்
குற்றங்களே மிகுகிறதே!

பக்தி வேஷமாகி
போலிகள்
ஆட்டம் அதிகரித்து
ஆர்ப்பரிக்கிறதே!

நம்பிக்கை துரோகம்
நயவஞ்சகம்
நர்த்தனமாடுகிறதே!'

கலங்கினார்
இடைக்காடர்.

இதன் விளைவு
எதில் முடியும்?

'மக்கள்
மனம் பாழானால்
மழை நிற்கும்.

வானம்
விசனப்பட்டு
தன்னிலை மறக்கும்.

பஞ்சமே
பஞ்சமின்றி
தஞ்சம் புகும்.'

இடைக்காடர்
கவலை கொண்டார்.

மகா புருஷர்
கற்றுத் தந்த
சோதிடக் கலை
கவனத்தில் வந்தது.

கட்டமிட்டார்.
கவலை மிகக்
கொண்டார்.

'12 ஆண்டுகள்
கடும் பஞ்சம்'
கணிப்பு கதறியது.

இடைக்காடர்
மனம் பதறியது.

'அய்யோ...
ஆடுகள், மாடுகள்
என் செய்யும்?

மக்கள்
என் செய்வர்?'

துடித்தார்.
துவண்டார்.
துடிதுடித்தார்.

விடிவெள்ளியாய்
அக்னிப் பிழம்பொன்று
அகத்தில் உதித்தது.

அடுத்த நாள் முதல் 
செயலில்
இறங்கினார்.

ஆடுகளுக்கு
எருக்கஞ் செடிகளை
உணவாகக் கொடுத்து
பழகச் செய்தார்.

ஆங்காங்கே
சுவர் எழுப்பி
வரகரிசி நிரப்பி
சேறு கொண்டு
பூசி வைத்தார்.

காலம் நகர்ந்தது.
கணித்தபடி
பஞ்சம் நுழைந்தது.

மரம் செடி
கொடிகள் மட்டுமல்ல
மக்களும்
மடியத் தொடங்கினர்.

இடைக்காடர்
மட்டும்
பஞ்ச பாதிப்பு
சிறிதுமின்றி
காலம் தள்ளினார்.

பஞ்ச காலமெனிலும்
காட்டில்
எருக்கங்செடிகளுக்குக்
குறைவிருக்காதே..!

அவை பூத்துக் குலுங்கின.
அவற்றை உண்டு
பழக்கப்பட்டிருந்த 
ஆவினங்கள் 
பசி ஆறின.

எருக்கம் பூ
உண்ட உடம்பை
அரித்துத் தள்ளுமே!

ஆடுகளும் 
மாடுகளும்
அரிப்பு நீக்க
சுவற்றில்
உரசி உரசி
சுகம் கண்டன.

சுவற்றின் உரசல்
உள்ளே இருந்த
வரகரிசியை
வெளிக் கொணர்ந்தன.

அவற்றை
எடுத்து
இடைக்காடர்
அமுது ஆக்கினார்.

ஆட்டுப் பாலில்
கலந்து குடித்துத்
தன் பசி ஆற்றினார்.

இடைக்காடரின்
இந்த யுக்தி
அக்கம் பக்கம்
பரவிய போதும்
பிறரால்
போற்ற முடிந்ததே
தவிர
அவர்தம்
வயிற்றுப் பசி
ஆற்ற முடியவில்லை.

ஒரு காலத்தில்
பைத்தியம்
என
பரிகசித்தவர்கள்
வரகரிசியைச்
சேற்றோடு
கலந்து
சுவர் எழுப்பிய
போது
'இடைக்காடன்
புத்தி
எடக்கு மடக்காகி
விட்டது'
எனக்
கேலி பேசியவர்களில்
செத்தவர் போக
மீதமிருந்தவர்கள்
ஓடோடி வந்தனர்.

இடைக்காடரை
இரு கை கூப்பி
வணங்கி
நின்றனர்.

"சாமி..!
பஞ்சத்தால்
சாவது ஒருபுறம்.
தாகத்திற்கே
தண்ணியில்லை.
எங்களின் சாவும்
நிச்சயம்.

அதுவரை
தண்ணீராவது
கொடுத்து
உதவுங்கள்."

காலைப் பிடித்தனர்.

ஞானப் பழம்
கனிந்துருகினார்.

"வாருங்கள்..."
அவர்களை
அழைத்துச்
சென்றார்.

ஓரிடத்தில்
'குழி'
ஒன்றைப்
பறிக்கச் செய்தார்.

'வந்தது பார்
ஊற்றென...'
ஊற்று நீர்
பீறிட்டது.

திரண்ட
மக்கள்
தாகம் நீங்கி
மனமொப்ப
வாழ்த்தி
வணங்கினர்.

"சுவாமி...
நீங்கள்
எங்கள்
குலசாமி"
கூக்குரலிட்டனர்.

ஊர்க்காரர்களின்
வாழ்த்தொலிகள்
மேலுலகிலும்
எதிரொலித்தன.

அது
நவகிரக
நாயகர்களின்
கூட்டத்தில்
விவாதமானது.

"பஞ்சத்தை
ஏற்படுத்தியது நாம்.

மக்களின்
பாவச் செயல்களால்
தீர்மானிக்கப்படுவது
பஞ்சம்.

அதை மாற்ற
இவர் யார்?"
கோபப்பட்டனர்
கிரக நாயகர்கள்.

"அவர்
மகத்துவம் மிக்க
மகா புருஷரால்
ஞானம் பெற்ற
ஒரு ஞான புருஷர்"
என்றார்
சூரியனார்.

"இடைக்காடர்
திருமாலின் அவதாரம்
என்றொரு பேச்சு
இருக்கிறது"
என ஒரு மெல்லிய
குரல் எழுந்தது.

அது
சந்திரனின் குரல்.

"இடைக்காடருக்கு
ஞானம் தந்த
மகா புருஷர்
யார் தெரியுமா?
போகர்..."
ஒலித்தது
ஓர் ஓங்கிய குரல்
ஆணித்தரமாக!

அக்குரலுக்குச்
சொந்தக்காரர்
குரு பகவான்.

"அந்த
மகானை
நாமும் பார்க்கலாம்.
நியாயம் கேட்கலாம்."
நீதி நாயகன்
சனி பகவானும்
புத்தி நாயகன்
புதனும்
சுக நாயகன்
சுக்கிரனும்
வெற்றி நாயகன்
செவ்வாயும்
தங்கள்
அபிப்பிராயத்தை
ஆழமாய்ச்
சொல்லினர்.

 'கேட்போம்
நியாயம்.'
கூட்டம்
முழுமனதாகத்
தீர்மானித்து.

பூமிக்கு உடன்
விஜயம் செய்தது.

"வாருங்கள்
நவ நாயகர்களே!"
வரவேற்றார்
இடைக்காடர்.

சூரியன்
சந்திரன்
செவ்வாய்
குரு
புதன்
சுக்கிரன்
சனி
இராகு
கேது
எனும்
ஒன்பது
நீதிமான்களும்
புன்னகைத்து
அமர்ந்தனர்
அவரவர்
அமைப்பில்.

கிரக
அமைப்பு
மாறக்கூடாதல்லவா..?
எனவே
அவ்விதம்
அமர்ந்தனர்.

"மகானே!
எங்கள்
சந்தேகம்
நீங்கப் பெற
இங்கு
வந்துள்ளோம்"
சூரியன் ஆரம்பித்தார்.

"எங்கள்
சக்தியை
தாங்கள்
மீறி விட்டீர்கள்"
சுக்கிரன் குற்றம்
சொன்னார்.

"பஞ்சம் என்பது
நாங்கள் நிர்ணயித்தது.
அதை
நீக்கி விட்டீர்கள்."
செவ்வாய் சினந்தார்.

"ஈசனே
ஒருமுறை
எங்கள்
அனுமதியின்றி
செயல்பட்டதால்
அவனே
இயங்காமல்
போய்விட்டான்
தெரியுமா?'

இராகுவும் கேதுவும்
கோபமாய் வெடித்தனர்.

"சர்வ சக்தி
படைத்த
எங்களை மீறி
ஏனிப்படி
நடந்து கொண்டீர்கள்?"
சந்திரன் அமைதியாய்க்
கேட்டார்.

கேட்டார்களே தவிர
மகா புருஷரிடம்
கொஞ்சம்
பயமிருந்தது.
எனவே
பேச்சில்
பணிவிருந்தது.

கருணையோடு
பார்த்த
இடைக்காடர்
"பதிலுக்கு
முன்னர்
உபசரிப்பு"
என்றார்
கனிவான
கண்களால்.

வரகரிசி
ஆட்டுப்பால்
விருந்து.

உண்டனர்
நவ நாயகர்கள்.

உண்ட களைப்போ
வந்த களைப்போ
சில நொடிகளில்
உறங்கிப் போனார்கள்.

இடைக்காடர்
அவர்கள்
துயிலும் அழகை
ரசித்தபடி
சோதிடக் கலையின்
ரகசியத்தை
ருசித்தபடி
கிரக நாயகர்களின்
இடத்தை
மாற்றி அமைத்தார்.

'இனிப்
பிரச்சனை இல்லை.
பஞ்சம் வராது.'

அதற்கேற்ற
கிரக அமைப்பைச்
சரி செய்த
திருப்தியுடன்
நவ நாயகர்கள்
விழித்தெழக்
காத்திருந்தார்.

இடைக்காடர்
அமைத்த
கிரக நிலை 
காரணமாய்
வெளியே
மழை... மழை...
மாமழையாய்ப்
பொழியத்
தொடங்கியது.

மழை
தந்த இளம் குளிரும்
அக்குளிர் ஈரம்
எழ வைத்த
மண் மணமும்
நவ நாயகர்களை
விழித்தெழச் செய்தன.

விழித்த
நாயகர்கள்
முதலில்
உறங்கிய
ரகசியமே 
புரிபடாமல் 
திகைத்தனர்.

அமைதியின்
சொரூபமாய்
இடைக்காடர்
அமர்ந்திருக்க
ஆனந்தம்
தாண்டவமாடியது
அக்குடிசையில்.

மகா புருஷரின்
மகத்துவம்
கிரக நாயகர்களுக்குப்
புரிந்தது.

வெளியே
மழை
வெறித்தனமாய்ப்
பெய்து
கொண்டிருந்தது.

ஒரே நாளில்
பஞ்சம் 
பறந்தோடிவிடும்
பெருமழை.

உலகம் கண்டிராத
பேய் மழை.

"மன்னிக்க வேண்டும்
நாயகர்களே!

மக்கள் துயர் கண்டு
மனம் பொறுக்காமல்
உங்கள் இடங்களை
மாற்றி விட்டேன்.
பஞ்சம் தவிர்த்து
விட்டேன்."

"அபசாரம்...
ஐயனே!
முக்காலம் உணர்ந்தவரே!
உங்கள்
குணம் அறியாது
உங்களைப் போன்ற
சித்தர்களின்
சொல் அறியாது
பிறவியின்
நோக்கம் அறியாது
நாங்கள்தாம்
தவறிழைத்துவிட்டோம்.
ஆசீர்வதியுங்கள்.

உயிரினங்களின் மீது
தாங்கள்
காட்டும்
அன்பும் பரிவும்
வழிபடத் தக்கது.

ஆன்மநேயம்
உய்வுற
வழியாய்ச்
சொல்லத்தக்கது."

அத்தனை
நாயகர்களுக்கும்
அன்று
ஓர்
அதிர்ஷ்ட நாள்.

சித்தர் பெருமானின்
ஆசி
நவகிரக நாயகர்களுக்கு
ஒரு சேரக் கிடைத்தது.

அவர்கள்
வணங்கியபடி
வாழ்த்தியபடி
விண்ணுலகம்
பயணித்தார்கள்.

மழை
பொழிவித்த
புண்ணியரின்
புகழ்
ஊரெங்கும்
பரவியது.

ஆண்டி முதல்
அரசர் வரை
இடைக்காடரைத்
தேடி வந்து
தொழுதனர்.

அவர்களுக்கு
இடைக்காடர்
உபதேசித்தது
இன்று கூட
பொருத்தமான
உபதேச முத்துக்கள்.
உயர்வாக்கும்
ரத்தினங்கள்.

'வெறுமனே
புகழாதீர்கள்.

உள்ளொன்று
வைத்துப்
புறமொன்று 
பேசாதீர்கள்.

உயர்ந்து 
வளர்ந்த
புற்றே உடல்.
அதில் ஒரு
பாம்பு.
அதன் பேர் கோபம்.

அது திடுமெனச் சீறும்.
அடுத்தவரைக் கொத்தும்.
அது இருக்கும் வரை
நல்லது நடக்காது.

நம் புண்ணியத்தை
அழித்துவிடும்.
ஜாக்கிரதை!'
என
வாழ்வியல்
தத்துவங்கள்
சொன்னார்.

'சிவ சிதம்பரனை
சிந்தையில் வையுங்கள்
சிறந்த ஞானம் சித்திக்கும்.

ராமனுக்கும்
கண்ணனுக்கும்
நரசிம்மனுக்கும்
விழா எடுக்கும்
தலங்கள் தோறும்
இன்பம் நிறைந்திருக்கும்'

என இறை விளக்கம்
சொன்னார்.

'வழிபாட்டில்
வஞ்சனை
வேண்டாம்.
வேறுபாடு
வேண்டாம்.
ஆரவாரம்
வேண்டாம்.
பகட்டு
வேண்டாம்.
இவையிருப்பின்
கோயிலின்
இறை சக்தி
மறைந்துவிடும்'

எனக்
கோயில்
இலக்கணம்
உரைத்தார்.

இப்படி
பலப்பல
பகன்றார்.

இவையே
'இடைக்காடர்
உபநிடதமாக'
ஞான வேதமானது.

அவரது
சோதிடமும்
வைத்தியமும்
சித்தர்களே
போற்றிய
சத்திய நூலானது.

(இடைக்காட்டு சித்தர்: பாகம் 2- தொடரும்)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)