சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பாம்பாட்டி சித்தர் (பாகம் 1)
பாம்பாட்டி சித்தர்
(பாகம் 1)
மாரிமைந்தன் சிவராமன்
பாம்பு என்றால்
யாருக்குமே
பயம் தரும்.
பெரும்
படையே நடுங்கும்.
அதே சமயம்
பாம்பை
எவருக்குமே
பிடிக்கும்.
தூரத்திலிருந்தோ
பாதுகாப்பாய் இருந்தோ
பாம்பின் செயல்களைப்
பார்க்க வியக்க
ஒரு புறம் பயமிருப்பினும்
எவருக்கும் பிடிக்கும்.
பாம்பு எனில்
பக்தியும் எழும்பும்.
அது பயபக்தி.
நாக வழிபாடு
இந்திய
சீன
இயற்கை
வழிபாடு.
கோயிலிலும்
மரத்தடியிலும்
பாம்பு உருவ
நடுகற்கள்
நம்மை
ஒழுக்கத்துடனே
வழிபட வைக்கும்.
பாம்புப்
புற்றென்றால்
நம் மனமும்
கைகளும்
அனிச்சையாய்
வணங்கும்.
பாம்பு...
தெய்வங்களுக்குப்
பிடித்த ஜந்து.
நல்ல பாம்பு
சிவபெருமானின்
திருச்சடையில்...
செவிக் குண்டலங்களில்...
உமையவள்
கைவிரல் மோதிரத்தில்...
வினை தீர்க்கும்
விநாயகப் பெருமானின்
அரை ஞாண் கயிற்றில்.
பாற்கடலில்
பரந்தாமனின்
படுக்கையில்.
கார்முகில்
கண்ணனின்
குடையாய்.
சூரிய சந்திரனை
மறைக்கும்
ராகுவாய்
கேதுவாய்
பாம்பே...
இவை
பாம்பின்
பன்முகம்.
ஆக
எவருக்கும்
பிடிக்கும்
கடிக்குமெனினும்!
அறிவியல் அற்புதம்
ஆயிரம் கொண்டவை
பாம்புகள்.
பாம்புப் புராணம்
இருக்கட்டும் ஒருபுறம்.
பாம்பைப் பிடிப்பதும்
அதன்
விஷத்தை எடுத்து
விற்பதும்
பாம்புக் கடிக்கு
மருந்தளிப்பதும்
தொழிலாய்க் கொண்ட
ஒருவனைப் பற்றியும்
அவன்
சித்தரானது பற்றியும்
இனிக் காண்போம்!
'ஆடு பாம்பே
நெளிந்து ஆடு பாம்பே
சிவன் சீர்பாதம்
கண்டு
தெளிந்து ஆடு பாம்பே.'
என்ற பாடல்
கேட்காத
தமிழ்ச் செவிகள்
இருக்க முடியாது.
இந்த பாம்புப் பாடல்
படைத்த சித்தர்
‘பாம்பாட்டி சித்தர்'.
அவர்
பாம்பைப் பாடி
வடித்த தத்துவம்
ஆயிரம் ஆயிரம்.
வாழ்வியல்
ஆன்மிகம்
இறை தத்துவம்
சித்தர் சித்தாந்தம்
கண்ட
அவரது சரித்திரம்
அற்புதமானது.
ஆனந்தமானது.
இறை நிறை கண்டது.
சித்தர் சொல்லாகக்
கொண்டது.
கேட்கக் கேட்க
இனிக்கும்.
மணக்கும்.
மனமெங்கும்
மகத்துவம்
நிறைக்கும்.
நதி மூலம்
ரிஷி மூலம்
மட்டுமல்ல
ரகசியங்கள்
நிறைந்த
சித்தர் மூலமும்
அறிவது அரிது.
செவி வழிச்
செய்திகளும்
அகத்தியர்
போகர்
போன்றோர்
எழுதி வைத்த
பாடல்களுமே
உலவி வரும்
சித்தர் கதைகளுக்கு
உதவி வரும் ஆதாரம்.
முதலில்
'பாம்பாட்டி சித்தர்’
எனப்
பெயர்
வந்த
கதையைக் கேட்போமா?
அது ஓர்
அடர் காடு.
இடர் தரும்
மிருகங்கள்
துயர் தரும்
பாம்புகள்
உலவிடும் காடு.
ஆங்கோர் இளைஞன்.
அந்த வனத்தில்
இருள் சேர் இரவில்
சரசர என ஓடும்
பாம்புகளைப்
பரபரவெனப்
பாய்ந்து
துருதுருவெனப்
பிடித்துத்
தரையில்
ஓங்கி அடித்து
விஷம்தனைப் பிரித்து
செத்த பாம்பையும்
சேகரிக்கும்
விஷத்தையும்
விற்பது ஒன்றே
அவனது வாடிக்கை.
அதுவே
அவனது
வாழ்க்கை.
பலருக்கு
எமனாயிருக்கும்
பாம்புகளுக்கு
அவனே எமன்.
அவனைக்
கண்ட மாத்திரத்தில்
அத்தனை பாம்புகளும்
ஓடி ஒதுங்கும்.
அவன் வாசம்
உணர்ந்த மாத்திரத்தில்
பாம்புகள் அனைத்தும்
பம்மிப் பதுங்கும்.
அப்படி ஓர் இரவு
அவன்
பாம்புகள் தேடி
அலைந்த வேளை...
அவன் முன்
காடே அதிர
ஒரு சிரிப்பொலி
எழுந்தது.
ஒலித்ததன்
எதிரொலி
காடு முழுதும்
மீண்டும் மீண்டும்
ஓங்கி ஒலித்தது.
பாம்பேதும்
சிக்காத
கவலையில்
இருந்த
கட்டிளம் காளைக்கு
சிரிப்பொலி எந்த
பயத்தையும்
தரவில்லையே தவிர
காட்டில் ஏது
இப்படியொரு சத்தம்
என
அதிர்ச்சி எழுந்தது.
அக்கணத்தில்
அடுத்த அதிசயம்
சட்டென
நிகழ்ந்தது.
ஆம்...
சோதியாய்
பெரும் சோதியாய்
அருட்சோதி ஒன்று
தோன்றி...
அதிலிருந்து
சிரித்தபடியே
சித்தர் உருவில்
ஒருவர் வந்தார்.
அப்படியொரு
ஒளியை
ஒளி முகத்தை
ஒளிபடைத்த
திருமேனியை
இத்தனை நாளில்
அவன்
கண்டதில்லை.
வியந்தான் வாலிபன்.
விக்கித்து நின்றான்.
"தம்பி
என்ன தேடுகிறாய்?"
கேள்வி வந்தது
சித்தரிடமிருந்து.
"ஐயா...
நானொரு பாம்பு
பிடிப்பவன்.
பாம்பும், விஷமும்
விற்பது தொழில்."
பணிவுடன்
சொன்னான்
பாம்புப் பிடாரன்.
''என்ன பாம்பு?"
விஷமமாய்க் கேட்டன
சித்தரின் சொற்கள்.
"ஏதோ
நாகரத்தினப்
பாம்பாம்.
நள்ளிரவில்
மாணிக்கக்
கல்லொன்றை
உமிழ்ந்து
அதனொளியில்தான்
இரை தேடுமாம்
அந்தப் பாம்பு.
அந்த மாணிக்கம்
அதிக விலை
போகுமாம்.
வியாபாரிகள்
சிலர்
விலை தரக்
காத்திருக்கிறார்கள்.
அதைத் தேடி
இன்று வந்தேன்.
பாம்பைத்தான்
எங்கும் காணோம்!"
அவன்
வாசம் கண்டு
பதுங்கிய
பாம்புகளைத்
தேடிய வண்ணம்
சொல்லிச்
சலித்தான்.
பின் அவனே,
"அது சரி அய்யா...
எனக்கொரு கேள்வி.
நீங்கள் யார்?
மாணிக்கக் கல்லின்
ஒளியெல்லாம்
சிறு துளியே எனும்
வகையில்
சோதியாய்
ஜொலிக்கும்
நீங்கள் யார்?"
வியந்து கேட்டான்
அந்த வாலிபன்.
"தம்பி...
என் பெயரில்
என்ன இருக்கிறது?
காடெல்லாம் சுற்றும்
பற்றில்லாக் கட்டை
நான்.
சட்டைமுனி என்பர்
எனைச்
சாதுக்கள் சிலர்.
சித்தர்
பரம்பரையில்
வந்ததொரு
பாமரச் சித்தன் நான்."
மெலிதாய்ச்
சிரித்தபடி
மீசையையும்
தாடியையும்
மெல்ல நீவினார்.
"அது சரி தம்பி...
ஏனிப்படி
வேண்டாத வேலைக்கு
வீணாய் அலைகிறாய்?
வேண்டாம் இந்த
பாம்பு வேட்டை.
வீரமுள்ள நீ
விவேகமாய்ச் சிந்தி.
உல்லாசமானதோர்
உயர்ந்த பாம்பு
உன் உடம்பில்
இருக்கிறது.
அது உன்னுடலில்
குடி இருக்கிறது.
ஒடுங்கி இருக்கிறது.
அந்தப் பாம்பை
அறிந்தவன் சித்தன்.
ஆட்டுவிப்பவன்
பெரும் சித்தன்.
இதைக்
கூட்டுவிப்பவன்
இறைவன்.
நீ சித்தனாயிரு.
உண்மையான
பாம்பை
உணர்ந்து
பித்தனாகு.
சிவம்தேடும்
பக்தனாகு."
அவர்
சொல்லச் சொல்ல
என்னமோ
ஏதோ
அந்தப்
பாம்பாட்டியின்
மண்டைக்குள்
பிசைந்தது.
நெற்றி மத்தியும்
மண்டை உச்சியும்
வலது கண்ணின்
உகார மையமும்
ஒருசேர
உத்தரவிட
சித்தரின்
காலடி வீழ்ந்தான்.
சித்தர் பிரான்
அவன்
தலை தடவி
முகம்தனைத் தூக்கி
கண்கள் நோக்கித்
தொடரலானார்.
"தம்பி...
மனித உடம்பில்
காலங்காலமாக
ஒரு பாம்பு
தலைகீழாய்த்
தொங்கிய
வண்ணம்
இருக்கும்.
அதன் பெயர்
குண்டலினி.
பரத்தைத் தொழுதால்
சிவத்தை உணர்ந்தால்
சுவாசம் ஒடுக்கினால்
குண்டலினி பாம்பு
விழிக்கும்.
தலை
கீழேயிருந்தாலும்
மெல்ல மெல்லத்
தலையை
மேலே தூக்கும்.
வால் கீழ் போகும்.
தியானம் மூலம்
மேலெழும் பாம்பை
நம் விருப்பப்படி
ஆட்டிப் படைக்கலாம்.
ஓடி ஆடும்
அந்தப் பாம்பு
தவத்தால்
மெல்ல
சிவத்தை அடையும்.
அதுவே முக்தி.
அதுவே முடிவில்
முத்தேக சித்தி.
ஆனந்தம்!
பேரானந்தம்!!
பரமானந்தம்!!!
மனித
வாழ்க்கையின்
நோக்கம் இதுவே.
பிறப்பின்
ரகசியம் இதுதான்."
குருவாய்
இன்னும் பல
மென்மையாய்ச்
சொன்னார்.
சீடனாய்
பாம்பாட்டியும்
உபதேசம் பெற்றான்.
"சுவாமி...
ஊர்ந்து வரும்
பாம்புகளைச்
சோர்வின்றிப்
பிடித்துப் பிடித்து
வாழ்க்கையை
வீணடித்து விட்டேன்.
ஐயா...
இனி உவமையில்லா
உண்மைப் பாம்பை
உங்கள் சொல்படி
உறுதியாய்ப்
பிடிப்பேன்.
நானும் உயர்வேன்.
இது சத்தியம்.
இனியென்
வாழ்க்கையே இதுதான்."
பொலிவுடன் எழுந்தான்
வாலிபன்.
சித்தர் மகிழ்ந்தார்.
நல்லதொரு சீடனை
உருவாக்கிய மகிழ்வில்
"நீ
வெற்றி பெறுவாய்.
கண்டிப்பாய் நீ
இக்கானகம்
போற்றும்
சித்தனாவாய்..."
ஞான நிலையில்
வாழ்த்தி மகிழ்ந்தார்.
விடைபெறும் தருணம்.
"ஆமாம் தம்பி...
கேட்க மறந்துவிட்டேன்.
உன் பெயர் என்ன?"
சித்தர் வினவினார்.
'என் பெயரா...
அது... அது
ஏதுமில்லை சுவாமி
நான்... நான்
ஒரு பாம்பாட்டி
அவ்வளவுதான்."
விசித்திரமாய்
விடையளித்தான்.
"சரி... சரி...
இன்று
நீ பாம்பாட்டி...
எதிர்காலத்தில்
பாம்பாட்டி சித்தன்."
பெயர் சூட்டினார்
பெருமான் சட்டைமுனி.
அந்தப் பெயரே
காலம் கடந்து
நிலைத்தது.
பின்னாளில்
அகிலம்
அவரைத்
துதித்தது.
சட்டைமுனி
ஆசி தந்து
மறைந்தார்.
அந்த இருளிலும்
அவனுள் ஓர் ஒளி
தீபமாய் ஒளிர்ந்தது.
சோதியாய் எழுந்தது.
அது சித்தரின்
கருணை.
அவன் செய்த பேறு.
வேறென்ன இருக்கும்?
பாம்பாட்டி
அதுகணமே
தொழில் மறந்தான்.
உண்மைப் பாம்பைத்
தன்னுள்ளே
தேடத் தொடங்கினான்.
ஏதுவான காடு.
போதுமெனும் மனம்.
சாதுக்களுக்குரிய
தவம்...தவம்...தவம்.
காலம் கனிந்தது.
அவனுள் எழும்பிய
அந்தப் பாம்பு...
அவனைச்
சிவத்திடம் சேர்த்தது.
பாம்பு பிடித்தவன்
பாம்புக் கடி
மருத்துவனானான்.
அந்தக் காட்டிலேயே
பாம்புக் கடிக்கு
மனை திறந்தான்.
மருத்துவமனைதனைத்
திறந்தான்.
காட்டு வாழ் மக்களுக்குக்
கடவுள் போலானான்.
பாம்பாட்டி
எனும்
சாதாரணன்
பாம்பாட்டி சித்தர்
என்ற
அசாதாரணர்
ஆனார்.
(பாம்பாட்டி சித்தர்: பாகம் -2- தொடரும்)
ஓம் நமசிவாய 🙏
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
ஆன்மீக அன்பர்களுக்கு கருவூர் சிவ. நாகேந்திர கிருஷ்ணனின் சித்தர் வணக்கம். பாம்பாட்டி சித்தரின் வரலாறை மிகவும் அறிந்து கொண்டோம்
பதிலளிநீக்கு