சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - யூகி முனிவர்


யூகி முனிவர்

மாரிமைந்தன் சிவராமன்

யூகி முனியை
அறியும் முன்
ஓர்
எளிய
அறிமுகம்.

சித்த
மருத்துவத்தில்
வல்லவர்
தேரையர்.

தேரையரின்
குரு
அகத்தியர்.

மருத்துவத் துறையில்
அகத்தியரையே
விஞ்சியவர்
தேரையர்.

தேரையரின்
மனதுக்கினிய
சீடரே
யூகி முனி.

மருத்துவத்தில்
மகத்துவம்
நிறைந்தவர்
என்பதாலேயே
தேரையருக்கு
யூகியை
நிரம்பப் பிடிக்கும்.

யூகி முனியின்
ஆய்வுகள்
ஆவணங்கள்
சித்த மருத்துவத்தின்
பொக்கிஷங்கள்.

யூகி முனி
அருளிய
வீர சுண்ணம்
என்ற
மருத்துவ நூல்
ஒப்புயர்வற்றது.

யூகியை
மெச்சும்
தேரையர்
ஒருமுறை
விரும்பி
தனது
குரு
அகத்தியரிடம்
சீடர்
யூகியை
அறிமுகம்
செய்தார்.

அகத்தியர் பெருமானும்
யூகி முனிவரும்
மருத்துவ உலகை
அலசி மகிழ்ந்தனர்.

'வீர சுண்ணம்'
நூலை
அகத்தியரிடம்
வழங்கினார்
யூகி முனி
தேரையர்
முன்னிலையில்.

சுண்ணம்
பற்றி
ஆவலாய்க்
கேட்டார்
அகத்தியர் பெருமான்.

சுற்றும் முற்றும்
பார்த்தபடி
தவ வலிமையால்
ஆங்கொரு
காகத்தை
வரவழைத்தார்.
அக்காகத்தை
அருகில் அழைத்தார்.

தாவித் தாவி
காகம் வந்தது.

அதனிடம்
சுண்ணத்தைத்
தந்தார்.
யூகி.

என்னாகும்
என
அகத்தியர்
யோசித்துக்
கொண்டிருந்த
கணத்தில்
சுண்ணத்தை
உண்ட
கரும் காகம்
வெள்ளை
நிறக் காக்கையாகி
பிரமிப்பூட்டியது.

அகத்தியரே
ஆச்சரியப்பட்ட
அற்புதம் அது.

தனது
சீடனின்
சீடனை
ஆரத் தழுவி
ஆசிர்வதித்தார்
அகத்தியர் பெருமான்.

இடையிலிருந்த
தேரையர்
மிக மகிழ்ந்து
அகம் நிறைந்தார்.

"அப்பா...
உன் திறமை
வியக்க வைப்பது.
மெச்சத் தக்கது.

உனக்கு
'யூகி' என்ற
பட்டத்தை
அளிக்கிறேன்.

இனி
நீ
யூகி முனி."

அகத்தியர்
திருவாயால்
யூகி முனிப்
பட்டம்.

அதுவே
அவர் பேராய்
நிலைத்துப் போனது.

யூகி முனிக்கு
செந்தூரம்
தயாரிப்பது
குறித்துப்
போதித்தார்
அகத்தியர் பெருமான்.

அது
அவருக்கு வாய்த்த
ஞான வாய்ப்பு.

மருத்துவ சிகாமணியாய்
மருத்துவ மாமணியாய்
யூகி முனியாய்
எண்ணற்ற
நூல்களை
அருளினார்.

பன்னிரு காண்டம்
வைத்திய சிந்தாமணி
தத்துவ ஞானம்
வகாரம்
கற்பம்
போன்ற
அவரது படைப்புகள்
எளிமையானவை.

சித்தர்
பாடல்களின்
மறை பொருட்களை
திரை விலக்கி
வெளிப்படுத்தி
அக்காலம் வரை
இருந்து வந்த
மூட விதிகளை
முடமாக்கித்
தெளிவாக்கினார்.

தவறான
புரிதல்களைச்
சாட்டை எடுத்து
அடித்து நொறுக்கினார்.

தப்பானவர்களை
விரட்டித் துரத்தினார்.

வைத்திய முறைகளை
எளிமையாய்ச்
சொன்னதால்
சித்த 
வைத்தியர்களுக்கெல்லாம்
யூகி முனி
மானசீகக்
குருவானார்.

அமுரி
பிண்டம்
சாகாக்கலை
வேகாக் கால்
போகாப் புனல்
போன்ற
சொற்களுக்கு
அதுவரை
கொண்டிருந்த
அர்த்தங்களை
அனர்த்தங்கள்
என்று சொல்லி
சவுக்கடி
வார்த்தைகளால்
கண்டித்து விட்டு
உண்மைப்
பொருளை
தெள்ளத் தெளிவாக்கியது
யூகியின் மகத்துவம்.

அமுரி
என்பது
மூத்திரமல்ல
சமுத்திர நீரே
'ச' வை
எடுத்து விட்டு
மூத்திரமாக்கி
விட்டனர்.

அவர்களைக்
கட்டி வைத்து
உதைக்க
வேண்டும்
எனச்
சவுக்கைத்
தூக்குகிறார்
யூகி முனி.

வழலை
என்பதை
'பிணம்' என்றே
சிலர்
சொல்லி விட்டனர்.

பிண்டம் என்பதை
'இறந்த சிசு'
என்று
புரிதல் ஆகி
பணம் பண்ணும்
பாவிகள்
மனம் இழந்து
மதி இழந்து
இறந்த சிசு தேடி
பாவம்
செய்தார்கள்.

உண்மையில்
பிணம்
என்பது
இரும்பு
என
உடைத்தார்
யூகி முனி.

மறை பொருள்
யாவும்
இவர் திருவாயில்
திரை நீங்கிய
உரை பொருள்
ஆயின.

பூடகங்கள்
இவரிடம்
அறவே
இல்லை.

ரசவாதம்
பற்றி
யூகி முனி
அளவிற்கு
எளிமையாய்ச்
சொன்ன
சித்தர்
எவருமில்லை
என்பது 
பேருண்மை.


தேன் தமிழ் 
சுரக்கும்
யூகி முனியின்
கவிதைகளில்
சித்தர் பரம்பரை
பற்றிய
அவர் பாடல்கள்
தெள்ளிய
நீரோடை போல்
ஓயாமல் பாயும்.

கயிலாயப்
பரம்பரை
பற்றிய
அவர்
பாடலின்
விளக்கம்
வித்தியாசமானது.

சிவன்
உமைக்குச்
சொன்னதை
உமை
நந்திக்குச்
சொன்னார்.

அசுவினி
விசுவின்
தன்வந்திரி
அகத்தியர்
புலத்தியர்
தேரையர்
யூகி... என
அடுத்தடுத்து
தொடர்ந்தது.


இது
யூகி முனி
சொன்னது.

அசுவினியின்
சீடர்
காலாங்கிநாதர்.

அவரிலிருந்து
போகர்
புலிப்பாணி
கொங்கணர்
சட்டைமுனி
கருவூரார்
பாம்பாட்டி
என்று
இன்னொரு
இணை வழிச்
சித்தர் பரம்பரையும்
உண்டு.

அறுநூற்று
எண்பது ஆண்டுகள்
வயது கொண்ட
யூகி முனி
22 தலைமுறைகளைக்
கொண்டவர்.
கண்டவர்.

குறும்பர்
ஜாதி
என்பதும்
சிங்கள
குலத்தில்
பிறந்த
கன்னித் தாய்
பெற்றெடுத்த
பிள்ளை
என்பதும்
உலவும் தகவல்கள்.

ஆவணி
மாதம்
பூசம்
நட்சத்திரம்
3-ஆம்
பாதத்தில்
அவதரித்தவர்
என்பது
யூகி முனி
குறித்துக்
கிடைத்திருக்கும்
அவதாரக்
குறிப்பு.

தமிழின்
ஐஞ்சிறு
காப்பியங்களில்
ஒன்று
பெருங்கதை.

அக்கதை
நாயகன்
வத்சல மன்னனாகிய
உதயணனின்
முதலமைச்சராக
இருந்தவர்
யூகி.

அவரே
பின்னாளில்
துறவறம் பூண்டு
உபதேசங்கள் பெற்று
யூகி முனி
ஆனதாக
ஒரு வரலாற்று யூகம்.

போகர்
பெருமான்
யூகியின்
பிறப்பைச்
சொல்வது
ஆடு மேய்க்கும்
குறும்பர் என்றே.

யூகி முனி
நீண்ட காலம்
இல்லறம்
கண்டவர்.

இருப்பினும்
துறவறம்
பூண்டு
சிறந்தவர்.

துறவறம்
பூண்டு
சமாதிக்கு
இடம்
தேடிய
யூகி முனி 
தட்சிண பிரதேச
மலைகளிடையே
புகுந்தார்.

அங்கு 
வராககிரி
என்ற 
மேருவைக்
கண்டார்.

அம்மலையின்
நடுக்காட்டில்
ஒரு
வித்தியாசமான
குத்துக்கல்.

அக்கல் மேல்
அமர்ந்து
தியானிக்கையில்
மலையே அதிரும்
மாபெரும் ஒலி.

ஒலியினைத்
தொடர்ந்து
ஆயிரம் கோடி
சூரிய ஒளியாய்
ஒரு முனிவர்
அங்கு
தோன்றினார்.

அவர்
சம்பார முனிவர்.

அவரே
யூகியை
யோகம் நிறைந்த
சித்தராய்
மாற்றினார்.
உபதேசங்கள்
அருளினார்.

சித்தர் 
யூகி முனியின்
சித்தம்
அவ்விடத்திலேயே
சமாதி 
கொள்வதாய்
இருந்தது.

அதனால்
அங்கேயே
சிலகாலம்
சமாதி நிலையில்
இருந்தார்.

சமாதி நிலைக்கு
செல்வதற்கு முன்
'பகல் இரவு
இரண்டும்
ஒன்றாய் கலக்கும்
கருக்கல் பொழுதில்
புவி மீது
மீண்டும் வருவதாக
எழுதிவிட்டுச்
சென்றார்.

அவ்விதமே
ஒரு நன்னாளில்
வெளிப்பட்டார்
யூகி முனிவர்.

கூடுவிட்டு 
கூடு பாய்தல்
நவகண்ட யோகம்
பரகாயப் பிரவேசம்
போன்ற
பற்பல சித்துகளை
வெளிப்படுத்தி
சித்தர்களே
போற்றும்படி
வாழ்வாங்கு 
வாழ்ந்தார்.

சமதக்கினி
முனிவரும்
திரனாக்கிய
முனிவரும்
யூகி முனியின்
சீடர்கள்.

எட்டு.
இரண்டு.
எட்டையும்
இரண்டையும்
எளிதாய்
விரிவாய்
விளக்குவார்
யூகி முனி.

அவரளவுக்கு
எவர்க்கும்
புரிகிற மாதிரி
உரைத்தவர்
உலகினில்
சிலரே.

இதற்குள்
இருக்கும் 
வசியத்தை
யூகி முனி
வெளிப்படுத்திய
பாங்கைப்
பாருங்கள்.

முதல்
ரகசியம்
எட்டு
என்பது
ரவி.
இரண்டு
என்பது
மதி.

செம்புக்கு
ரவி
என்றும்
வெள்ளிக்கு
மதி
என்றும்
பேருண்டு.

இரண்டும்
சேர்வதே
வாதம்.
ரசவாதம்.

எப்படி
என்பதும்
எவ்வளவு
என்பதும்
ரகசியத்திற்குள்
ஒளிந்திருக்கும்
ரகசியம்.

செம்புடன்
கந்தகம்
உருக்கின்
செம்பு
சாகும்.

அதனுடன்
அயத்தைக்
கலப்பின்
செம்பொன்
கிடைக்கும்.

அதோடு
எட்டுக்கு
இரண்டு
வெள்ளி
சேர்த்தால்
ஏழு மாற்றுத்
தங்கம் 
கிடைக்குமாம்.

ரசவாதம்
செய்பவர்கள்
சிவனுக்கே
ஒப்பாவர்.

இது
யோகி
யூகி
சொன்ன
முதல் விளக்கம்.

எட்டான
ரவி
என்பது
இடகலை.
இரண்டான
மதி
என்பது
பிங்கலை.

இடகலையும்
பிங்கலையும்
சுழுமுனையில்
சேர்ந்தால்
யோகம்.

அடுத்த
ரகசியம்
வாசி.

வாசி
நீ
வாசிக்க
வாசிக்க
வாசி யோகம்
கை வரும்.

மூன்றாவது
ரகசியம்
முக்கியமானது.

எட்டே
நாதம்.

இரண்டு
என்பது
விந்து.

பெண்ணின்
நாதமும்
ஆணின்
விந்தும்
சேர்ந்தால்
உயிர்.

உலகம்
முழுதுக்கும்
இதுவே
விதி.

உலகுக்கே
இதுதான்
விதி.

புல்
பூண்டு
பூச்சி
புழுக்கள்
மனிதன்
உள்ளிட்ட
அனைத்து
உயிர்களுக்கும்
இதுவே
நியதி.

நாத
விந்துக்கள்
சேர்க்கையே
உயிராய்க்
காணப் பெறும்
உயிர்கள்
அனைத்தும்.

இது
யூகி
வெளிப்படுத்திய
உயிர்த் தத்துவம்.

அடுத்த
ரகசியம்
ஆன்மிக
ரகசியம்.
அது 
நான்காவது 
ரகசியம்.

தமிழில்
அகர
எழுத்து
'அ'
எட்டைக்
குறிக்கும்.

உகர
எழுத்து
'உ'
இரண்டைக்
குறிக்கும்.

அகரமும்
உகரமும்
சேர்ந்து
மகரத்தில்
முற்றுப்
பெறும்போது
ஒலிப்பதே
'ஓம்'
என்கிற
பிரணவம்.

அதுவே
சோதியாய்
ஒளி வெள்ளமாய்
அண்ட சராசரங்களில்
உள்ள
அனைத்தையும் தழுவி
அகில உலகிலும்
வியாபித்து
ஓங்கார நாதமாய்
சக்தி சொரூபமாய்
சிவ சொரூபமாய்
விளங்கும்.

எட்டுக்கும்
இரண்டுக்கும்
உள்ளே
இன்னும்
எத்தனை
ரகசியங்களோ!

யூகி முனியே
அறிவார்.

யூகி முனியின்
சித்தாடல்கள்
பற்றி
போகர் 
ஏழாயிரத்தில்
நிறைய
படித்து உணரலாம்.

திருவண்ணாமலையே
திவ்விய சரித்திரம்
படைத்த
யூகி முனியின்
சமாதித் தலம்.
அண்ணாமலையார் 
கோயிலின் மேற்குப் புறமே
அவர் லயமான இடம்.

யூகி முனிவரை
அண்ணாமலை
சென்று
வணங்குவோர்க்கு
ஞான மார்க்கம்
சித்திக்கும்.
யோக மார்க்கம்
வழிகாட்டும்.


(யூகி முனிவர் திவ்விய சரித்திரம் - நிறைவு)

ஓம் நமசிவாய 🙏

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)