தண்டியடிகள் நாயனார் புராணம்
63 நாயன்மார்கள் வரலாறு
தண்டியடிகள் நாயனார் புராணம்
சோழவள நாட்டில்
திருமகள் வழிபட்ட
பேறு பெற்ற ஊர்
திருவாரூர்.
திருமால்
உரிமையுடன் பூசித்த
செல்வத் தியாகர்
எழுந்தருளியுள்ள
புண்ணியத் தலமும்
திருவாரூரே.
அவ்வூரில்
ஒரு சிவனடியார்.
தண்டியடிகள்
அவர்தம் பெயர்.
இரு கண்களிலும்
பார்வை இழந்தவர்.
புறக்கண்
இல்லாதிருப்பினும்
சதாகாலமும்
வேதங்கள் ஓதியபடி
சிவபிரானின்
திருவடிகளை
அகக் கண்ணால்
கண்டு களிக்கும்
சீரிய சிவபக்தர்.
அவர்
புறக்கண்ணே
விரும்பாதவர் போல்
பிறந்ததிலிருந்தே
காணுவதற்குரிய
நெற்றிக்கண்
உடையோனை
மனக்கண்ணால்
காணப் பெறுவதே
மெய்த் தொண்டு
எனக் கருதி
வாழ்ந்து வந்தார்.
அனுதினமும்
அகம் நிறைந்த
ஆதி பகவனை
திருவாரூரில்
புற்றிடம் கொண்ட
புனிதனைப்
போற்றியபடி
தேவாசிரியன்
மண்டபத்தை
மனம் குளிரக்
கடந்து
'நமசிவாய'
என்னும்
ஐந்தெழுத்தை
பேரன்போடு ஓதியபடி
வணங்கி நெகிழ்ந்து
பேரானந்தம் கொள்வார்.
அதன்
பின்னரும்
நாள் முழுதும்
சிவமயமாகவே
திகழ்வார்.
திருக்கோயிலுக்கு
மேற்குப் புறத்தில்
ஒரு தீர்த்தக் குளம்.
அதனைச் சுற்றி
சமணர்களால்
ஆக்கிரமிக்கப்பட்ட
வீடுகள்.
அவர்களால்
அலட்சியப்படுத்தப்பட்டு
அசுத்தமேறி நாறிக்
கேட்பாரற்றுக்
குறுகிப் போயிருந்தது
புனித நீர்க் குளம்.
பல காலம்
தூர்வாரப்படாமல்
தீர்த்தமே
களங்கமுற்றது போல்
கலங்கிய நிலையில்
காட்சியளித்துக்
கொண்டிருந்தது.
ஒரு நாள்
தண்டியடிகள்
அவ்வழி வந்தபோது
ஒரு யோசனை
மனதில் எழுந்தது.
அது
இயல்பாய் எழுந்த
யோசனை அல்ல.
இயக்குபவன்
தோற்றுவித்த
ஆலோசனை.
குளத்தின் பரப்பைப்
பெரிதாக்க வேண்டும்.
மண்டிக் கிடக்கும்
அசுத்தக் குப்பைகளை
அகற்ற வேண்டும்.
தூர்வாரி
நீர் பெருக்க வேண்டும்.
ஆலோசனை
ஆசையாக
உருவெடுத்தது.
அதனைச் செயலாக்க
முடிவெடுத்தார்
தண்டியடிகள்.
ஆனால்
ஒரு பிறவிக் குருடரால்
தன்னந்தனியாக
பெரிதாக என்ன
செய்து விட முடியும்?
முக்கண்ணர்
துணையிருக்கும் போது
கண்ணில்லார்க்கு
குறை ஏதும் இல்லை
அன்றோ!
மறுநாளே
களத்தில்
குளத்தில்
இறங்கினார்
தண்டியடிகள்.
தூர்
எடுக்க வேண்டிய
குளத்தின் பகுதியில்
ஒரு கோலை நட்டார்.
குளக்கரையில்
இன்னொரு கோலை
ஆழப் பதித்தார்.
இரு
கோல்களையும்
ஒரு
நூல் கயிற்றால்
இறுக்கமாக
இணைத்தார்.
மண்வெட்டி
கூடை சகிதம்
கயிற்றைத் தடவியபடி
குளம் இறங்கினார்.
குளத்தில்
மண்ணை வெட்டி
மண் கூடையில் நிரப்பி
கயிற்றைத்
தடவியபடி
மேலேறி வந்து
கரையில்
மண்ணைக்
கொட்டுவார்.
பின்
வெறும் கூடையோடு
கயிற்றைப்
பிடித்துக் கொண்டு
மண்ணெடுக்கும்
இடத்திற்குத்
துரிதமாகச்
சென்று விடுவார்.
இத்தனை
வேலைகளினூடே
ஐந்தெழுத்தை
அவர் உதடுகள்
உதிர்த்த வண்ணம்
இருக்கும்.
இந்தத்
தெய்வீகப் பணி
குளத்தைச் சுற்றி
ஏகபோகமாக
வாழ்ந்திருந்த
சமணர்களுக்குக்
கோபமூட்டியது.
பொறாமையில்
வெகுண்டெழுந்த
அவர்கள்
ஒன்று கூடிப் பேசினர்.
நயமாகப் பேசும்
ஒருவகை
சாமர்த்தியத்
திட்டத்தோடு
தண்டியடிகளிடம்
வந்தனர்.
அல்லனவற்றை
நல்லன போல்
சொல்லுவதே
அவர்கள்
குயுக்தித் திட்டம்.
"ஏனப்பா ....
என்ன செய்கிறாய் நீ?
மண்ணை வெட்டாதே!
அதனை நம்பி
அதனுள் வாழும்
பூச்சி புழுக்கள்
துண்டித்துச் சாகாதா?
ஒரு ஜீவனின்
பரிதாப மரணத்திற்குக்
காரணமாவதே
மிகப் பெரிய பாவம்.
இம்மண்ணில்
எத்தனை கோடி
உயிரினங்கள்
வாழ்கிறதோ!
இதை உனது
சைவமும் விரும்பாது!
எங்கள் சமணமும்
ஏற்காது...
இதற்கு மேலாக
நீயும்
இப்படித் துன்பமுற
வேண்டாமே!"
சமணர்கள்
இப்படி
மென்மையாகப்
பேசினாலும்
அவர்கள்
திட்டத்தில் இருந்த
வன்மையை அறிந்த
தண்டியடிகள்
கோபத்தின் உச்சியில்
குடி அமர்ந்தார்.
"அறிவிலிகள் போல்
பேசாதீர்கள்.
சிவபிரானுக்குச்
செய்யும் திருப்பணி
எதுவும் குற்றமாகாது.
அறமே ஆகும்.
எம்பிரான்
கருணையால்
எவ்வுயிர்க்கும்
தீங்கு நேராது.
இது
உங்களுக்குப் புரியாது"
என்று
உரத்துச் சொல்லிவிட்டுப்
பணி தொடர்ந்தார்
தண்டியடிகள்.
"நாங்கள்
இத்தனை பேர்
கூறிய
அறிவுரைகளைக்
கேளாது இருக்கிறாயே!
இத்தனை காலம்
கண்கள்தாம் இல்லை
என்று நினைத்திருந்தோம்.
இப்போது
காதுகளும் இல்லை
என்று
தெரிந்து கொண்டோம்."
தண்டியடிகளின்
குறைபாட்டை
அவமதித்துக்
கூச்சலிட்டனர்
சமணர்கள்.
'சிவ...சிவ'
என தன்னைச்
சாந்தப்படுத்திக்
கொண்டதோடு
சிவனையும்
துணைக்கழைத்துக்
கொண்டபடி
"மந்த புத்தியும்
காணாக் கண்ணும்
கேளாச் செவியும்
உங்களுக்கே!
திரிபுரத்தை எரித்த
விரிசடைக் கடவுளின்
திருவடிகளைத் தவிர
வேறொன்றையும்
என் கண்ணால்
காண மாட்டேன்.
அவர்
திருப்புகழைத் தவிர
வேறு எதையும்
காதால் கேட்க மாட்டேன்.
இந்த மதிநுட்பம்
மந்த புத்தி உடைய
உங்களுக்குப் புரியாது.
நான் செய்து
கொண்டிருப்பது
திருநீற்றையே
சாந்தாக எண்ணிப்
பூசும் சிவனுக்கான
திருப்பணி."
சாந்தமாகப் பதிலளித்தார்
தண்டியடிகள்.
ஆனால்
சமணர்கள்
தரப்பிலிருந்து
கேலியும்
அலட்சியமும்
அவமதிப்புமே
வெளிப்பட்டன.
நிலைமை
எல்லை மீறிப் போகவே
"நிலையில்லாத
நிலையினை
உடையவர்களே!
நீங்கள்
உணர்வும்
கண்ணும் இழந்து
உலகமெல்லாம்
அறியும் படி
நான்
காணக் கண் பெற்றால்
நீங்கள் என்ன செய்வீர்கள்?"
உணர்ச்சிப் பிழம்பாய்
வார்த்தைகளை
உதிர்த்தார்
என்ன பேசுகிறோம்
என்று கூட
அறிந்திரா வண்ணம்.
அப்போதும்
"உன் தெய்வத்தின்
வல்லமையால்
நீ கண் பெற்றால்
இந்த ஊரிலேயே
நாங்கள்
இருக்க மாட்டோம்."
சப்தமாக
சபதம் செய்தது
சமணர் கூட்டம்.
அவர்கள்
அதோடு
விட்டு விடாமல்
தண்டியடிகள்
கையில் இருந்த
மண்வெட்டி
மண் சுமக்கக்
காத்திருந்த
மண் கூடை
அவருக்குத் தடம் காட்டி
உதவி வந்த கோல்கள்
பிடித்து இறங்கியேறக்
கட்டியிருந்த கயிறு
முதலானவற்றை
முரட்டுத்தனமாய்
பலாத்காரமாய்ப்
பறித்து
வீசி எறிந்து
வீராப்புக் காட்டினர்.
தண்டியடிகள்
தடுமாறிப் போனார்.
சொல்லொணா
வேதனையுடன்
இறைவன்
பூங்கோயில்
முன் நின்று
"எம்பெருமானே!
அமணர்கள் செய்த
அவமானம் தாங்காமல்
மனம் உடைந்திருக்கிறேன்.
அது தீர
அருள் புரிய வேண்டும்"
என்று உரத்து
முறையிட்டு
நிலமுற வீழ்ந்தார்.
அழுது புலம்பியபடி
தனது
இருப்பிடத்திற்குச்
சென்று
தொடர்ந்து
புண்ணியப்பணி
செய்ய இயலாமல்
போய்விடுமோ
என அஞ்சியவாறு
துயரத்தோடு
தூங்கிவிட்டார்.
கனவில் வந்தார்
அகிலமெல்லாம்
அறிந்த
அடியார்க்கு நல்லான்.
"தேவரீர்.....
சிவப் பணியை
நிந்தனை புரிந்து
அடியேனையும்
அவமதித்த....."
அதற்குள்
இடை மறித்தார்
அடியார்க்கு இனியன்.
"அன்பனே !
மனக்கவலையை விடு.
உன் கண்கள்
பார்வை பெற்று
அச்சமணர்களுக்குக்
கண்கள்
மறைவதைக்
காண்பாய்.
அஞ்ச வேண்டாம்."
சொப்பனத்திலேயே
மறைந்து போனார்
சொக்கநாதர்.
அதே சமயம்
சோழ மன்னனின்
கனவிலும்
தோன்றினார்
உலகாளும் மன்னன்.
"தண்டி என்பவன்
நமக்காக
திருக்குளம் கட்டினான்.
அதைப்
பொறுக்காமல்
சமணர்கள்
இடையூறு செய்து
அவனது
திருத்தொண்டைத்
தடுத்தார்கள்.
நீ
அவனிடம் சென்று
அவன் குறிப்பால்
அவன் கருத்தை
முடிப்பாயாக....."
உத்தரவிட்டு மறைந்தார்
உருத்திர மூர்த்தி.
அதுபோதே
மன்னன்
திடுமென விழித்தான்.
மயிர்க் கூச்செறிய
கனவை மீண்டும்
ஒருமுறை
காட்சியாய்க்
கற்பனை
செய்து விட்டு
மனம்
உருகிப் போனான்.
மறுநாள்
விடிந்ததும்
மறுவேலை
பார்க்காமல்
மகாதேவனைத்
துதித்து விட்டு
தண்டியடிகளைத்
தன்மையாய் அழைத்து
தான் கண்ட
கனவு குறித்துக் கூறி
புளகாங்கிதம்
அடைந்தான்.
தண்டியடிகளும்
நடந்ததையும்
பேசியதையும்
அவமதித்ததையும்
ஒன்று விடாமல் கூறி
தக்க நீதி கேட்டு
வேண்டி நின்றார்.
மன்னன்
சமணர்களை
அழைத்து
விசாரித்தான்.
அவர்கள் நடந்ததை
நயம்படக் கூறி
போட்ட சபதத்தை
உறுதி சொன்னார்கள்.
தண்டியடிகள்
கண் பார்வை
பெற்றால்
தாங்கள்
ஊரைவிட்டே
சென்று விடுவதாக
உறுதிபடக்
கூறினார்கள்.
மன்னன்
அனைவரையும்
அழைத்துக்
கொண்டு
குளக்கரைக்குச்
சென்றான்.
அங்கு
சோழ மன்னன்
தண்டியடிகள்
முகத்தை நோக்கி
"சிவனேசரே....
சிவனருளால்
கண் பெறுதலைக்
காட்டுக"
என்று
கனிந்து கூறினான்.
தண்டியடிகள்
குளமிறங்கி
தண்ணீரில் நின்று,
"நான்
சிவபெருமானுக்குத்
தொண்டு செய்வது
உண்மை என்றால்
நான்
கண் பெறவேண்டும்.
திருவாரூர்ச்
சமணர்கள்
கண்
இழக்க வேண்டும்"
என்று கூறிவிட்டு
'நமசிவாய' என்று
தொடர்ந்து
உச்சரித்தபடி
குளத்தில் மூழ்கினார்.
அங்கு
ஒரு கணம் நிலவிய
அமைதியைக்
கலைக்கும் வண்ணம்
தண்டியடிகள்
மூழ்கி எழுந்தார்.
ஆடல் நாயகனின்
திட்டப்படி
இரு கண்களும்
பார்வை பெற்று
முகப் பொலிவோடு
பணிந்து நின்றார்
சிவக்கொழுந்து
தண்டியடிகளார்.
அப்போது
வானத்திலிருந்து
தேவாதி தேவர்கள்
பூமழை பொழிந்து
நாயனார்
தண்டியடிகளைப்
போற்றி வாழ்த்தினர்.
அதே நேரம்
சமணர்களுக்குக்
கண் பார்வை
காணாமல் போனது.
அவர்கள்
தடுமாறினார்கள்.
நடப்பது அறியாது
செய்வது அறியாது
நிலை குலைந்து
தாறுமாறாய்த்
திணறினர்.
மன்னன்
தன்
வீரர்களை அழைத்து
சமணர்களை
ஊரை விட்டே
விரட்டி அடிக்க
உத்தரவிட்டான்.
வீரர் படை
ஓட ஓட விரட்டியது.
கண்ணிழந்த சமணர்கள்
முட்டி மோதி விழுந்தனர்.
குழிகளில்
விழுந்தவர்களின்
கை கால்கள் ஒடிந்தன.
சமாளித்து நடக்க
கோல்களைத் தேடினர்.
கால்களில்
தட்டுப்பட்டதெல்லாம்
கற்களும் முட்களுமே.
எப்போதும்
கையில் வைத்திருக்கும்
மயில் பீலிகளை
தரையெல்லாம்
துளாவினர்.
ஒன்று கூடக்
கிடைக்கவில்லை.
துடித்தார்கள்.
துவண்டார்கள்.
எல்லை வரை
துரத்தி அடிக்கப்பட
நாற்புறமும் சிதறினர்.
அது போதும்
பொய்ப்பொருளை
மெய்ப்பொருளெனக்
கொண்டு அழிந்தோம்
என்று அவர்கள்
உணர்ந்தார் இல்லை.
சிவனுக்குச்
செய்த தீவினை
மறுபிறப்பில்
தான் எய்தும்.
சிவஞானிக்குச்
செய்வது
அப்பிறப்பிலேயே
எய்தும் '
எனும்
பேருண்மையை
தண்டியடிகள்
புராணத்தைப்
படிப்போராவது
உணர்வோம்.
'முகத்திற் கண்கொண்டு
காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண் கொண்டு
காண்பதே ஆனந்தம்'
எனும் திருமூலரின்
மந்திரம் உணர்வோம்.
'நாட்டமிகு தண்டிக்கும்.....
அடியேன்' என்கிறார்
சுந்தரமூர்த்தி நாயனார்.
(தண்டியடிகள் நாயனார் புராணம்- நிறைவு)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக