சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பதஞ்சலி முனிவர்
பதஞ்சலி முனிவர்
மாரிமைந்தன் சிவராமன்
பல இடங்களில்
பல படங்களில்
நாம் தரிசிக்கும்
பதஞ்சலி முனிவரின்
தோற்றம்
வித்தியாசமாய்
இருக்கும்.
இடுப்புவரை
மனித உடல்.
இடுப்புக்குக் கீழே
நாகத்தின் உடல்.
தலைக்கு மேலே
ஐந்து தலை நாகம்
குடைபோல இருக்கும்.
இவர்
ஆதிசேஷன்
அம்சம் என்பதால்
வாயில்
கோரைப் பற்கள்
இருக்கும்.
பதஞ்சலி முனிவரின்
திவ்விய சரித்திரமும்
வித்தியாசமானது.
சுவாரசியமானது.
இன்று உலகெங்கும்
சிறந்து
விளங்கிக்
கொண்டிருக்கிற
யோகக் கலையை
அன்றே
விளக்க வந்த
மாமுனியே
பதஞ்சலி.
யோகத்தின்
அடிப்படை
ஆதார நூலான
'யோக சூத்திரம்'
என்ற நூலை
அருளுவதற்கே
அவதரித்தவர்
பதஞ்சலி முனிவர்.
பத்துத் தலங்களில்
சமாதியானவர்
பதஞ்சலி முனிவர்
என்கின்றன
வடநாட்டு யோக
நூல்கள்.
இது சாத்தியமா
என
வியப்போருக்கு
சத்தியமே
என்கின்றன
அந்நூல்கள்.
சித்தர்
பெருமான்களுக்கு
எல்லாமே
சாத்தியம்.
வியத்தகு
சக்திகள்
முக்திகள்
சித்திகள்
சாத்தியமே.
இறைநிலை
அடைந்தவர்கள்
இறையாய்
இருப்பவர்கள்
சித்தர்கள்.
அவர்கட்கு
எதுவும்
சாத்தியமே.
காலம்
கடந்த
சித்தர்களுக்கு
இனம்
மொழி
வடநாடு
தென்னாடு
கயிலாயம்
வைகுந்தம்
பூலோகம்
என்றெந்த
எல்லையும்
கிடையாது.
அப்படியொரு
அசாத்திய
சித்தரே
ஞான சித்தரே
பதஞ்சலி முனிவர்.
அத்திரி
மகரிஷிக்கும்
அனுசுயா தேவிக்கும்
பிறந்த
அருந்தவப் புதல்வனே
பதஞ்சலி மகரிஷி.
ஆதிசேஷனின்
அவதாரம்
என்பதால்
பதஞ்சலியைப்
புராணங்களும்
சித்தர் உலகும்
புகழும்.
வணங்கும்.
'மும்மூர்த்திகளும்
தனக்குக்
குழந்தைகளாகப்
பிறக்க வேண்டும்
என்ற அத்திரியின்
வேண்டுகோளுக்கு
இணங்கப்
பிறந்த
மூன்று
குழந்தைகள்தாம்
தத்தாத்ரேயர்
துர்வாசர்
பதஞ்சலி .
இம்மூவரைத்
தவிர
அருந்ததி
என்ற
பெண் குழந்தையும்
அத்தம்பதியினருக்கு
உண்டு.
அருந்ததிதான்
பின்னாளில்
வசிஷ்டரின் மனைவி'
என்கிறார் திருமூலர்.
ஒரு சமயம்
தாருகாவனத்தில்
சிவபெருமான்
ஆனந்தத்
தாண்டவமாடிக்
கொண்டிருப்பதை
ஆதிசேஷனைப்
படுக்கையாய்க்
கொண்டு
ஏகாந்தத்தில்
இருந்த
விஷ்ணு பிரான்
கண்டு
களித்தார்.
அக்களிப்பு
ஆனந்தக் களிப்பு.
பரமானந்தக் களிப்பு.
பள்ளி கொண்டிருந்த
ஸ்ரீமன் நாராயணன்
துள்ளித் துள்ளி
ரசித்ததால்
ஆதிசேஷன்
பாரம்
தாங்காமல்
தவித்தார்.
தத்தளித்தார்.
விஷ்ணு பிரானை
மெதுவாய்க்
கேட்டார்.
'ஏனிந்தக்
துள்ளல்...
என்ன
கண்டீர் சுவாமி?'
விஷ்ணு பிரான்
சிவ தாண்டவத்தின்
சிலிர்ப்பை
விவரிக்க
நெகிழ்ந்து போனார்
ஆதிசேஷன்.
சிவ தாண்டவம்
பார்ப்பது
என்பது
எவர்க்கும்
கிட்டாத பேறு.
தன் பிறவிப்பயன்
சிவ நடனம்
காண்பதாக
இருக்கட்டும்
என
உறுதி பூண்டார்
ஆதிசேஷன்.
இறைவனைக்
காண
எளிய வழி
தவம்.
அவன்
திருநடனம்
காணவும்
அதுவே வழி.
சிவ விதி.
கயிலாயத்திலேயே
நீண்ட
நெடிய தவம்.
ஆதிசேஷன்
முன்பு
பரமன் தோன்றினார்.
''அப்பனே!
திருநடனம்
காண
தில்லைக்குப்
போ.
உன்னோடு
வியாக்ரபாதரும்
உடனிருக்க..
களி நடனம்
காண்.
களிப்புறு..."
அப்பன்
சொல்லி
மறைந்தான்.
அதன்பின்
ஆதிசேஷனான
பதஞ்சலி
தில்லை வந்தார்.
அங்கு
மூலநாதரின்
பக்தனாய்
வலம்
வந்து
கொண்டிருந்த
வியாக்ரமருடன்
சிவ தாண்டவம்
கண்டு மகிழ்ந்தார்.
பிறவிப்பயன்
எய்தி நெகிழ்ந்தார்.
திருமூலரும்
இவ்விருவருடன்
திருநடனம்
கண்டதாகத்
குறிப்பொன்று
காணக் கிடக்கிறது.
தில்லைக்கு
வந்தவருக்குத்
தில்லை
பிடித்துப் போயிற்று.
தில்லையின்
மகிமை அது.
இறையே
விரும்பும்
திருத்தலம் அல்லவா
தில்லை!
வாழ்வில்
தொல்லை
மிகுந்தோருக்கு
இல்லை
இனிக் கவலை
என
அடைக்கலம் தரும்
ஆடல்வல்லானின்
அருள் நிறை
உறைவிடம் அல்லவா
தில்லை!
பதஞ்சலி முனிவர்
அருளிய
பதஞ்சலி யோகம்
நூலை
'ஈடு இணையற்ற
ஞானப் பொக்கிஷம்.
யோக சூத்திரங்கள்
நிரம்பிய
அட்சய பாத்திரம்.
அடிப்படைக் களஞ்சியம்.'
என்பர் ஆன்றோர்.
பதஞ்சலி யோகம்
உருவான
விதம் ஓர்
உணர்ச்சிக் காவியம்.
தில்லையம்பலத்தில்
மொத்தம்
ஐந்து சபைகள்.
அதிலொன்று
ராஜ சபை.
ஆயிரம் தூண்கள்
கொண்ட
மண்டபம்
அதன்
சிறப்பு.
தில்லைக்காரராகவே
மாறிப் போன
பதஞ்சலி முனிவருக்குச்
சீடர்கள்
பெருகினர்.
அவர்தம்
உபதேசங்களுக்காக
அவர்கள்
ஏங்கினர்.
பதஞ்சலி முனிவருக்கும்
தான்
கற்றுணர்ந்ததை
எளிமையாய்ச்
சீடர்களுக்குத் தர
ஆசைதான்.
ஆனால்
அதில்
ஒரு
பிரச்சனை
இருந்ததது.
ஆதிசேஷனான
பதஞ்சலியின்
மூச்சுக் காற்றுப்
பட்டாலே
எதிரில் உள்ளோர்
விஷம்
தீண்டியவராய்
மரணித்துப் போவர்.
அவர் என்ன
சாதாரணப் பாம்பா?
ஆதிசேஷன்
என்ற
விசேஷ பாம்பே!
விஷம் வீசும் பாம்பே!
யோசித்தார்.
இடையில்
ஓர்
இரும்புத் திரை
இட்டால்...?
பிரச்சனை
தீர்ந்தது.
ஆயிரங்கால்
மண்டபத்தில்
ஒரு புறம்
அமர்ந்து
இடையே
இரும்புத் திரையிட்டு
மறுபுறம்
மாணாக்கர்களை
அமரச் செய்து
தான்
ஏற்கனவே
எழுதியிருந்த
வியாக்கரண
சூத்திரத்தை
விளக்கமாக
உபதேசிக்க
ஆரம்பித்தார்.
வரும்
சீடர்களுக்கு
ஓர்
உபதேசம்
கண்டிப்பாய்
இருந்தது.
யாரும்
திரை விலக்கி
குருவைப்
பார்க்க
முயற்சிக்கக்
கூடாது.
உபதேச
சமயத்தில்
யாரும்
வெளியே
செல்லக் கூடாது.
இது உபதேச
எண் இரண்டு.
பதஞ்சலியின்
வகுப்பு
சீரோடும்
சிறப்போடும்
உபதேச
மொழிகளால்
பேரோடும்
புகழோடும்
தவழ்ந்து வந்தது.
பார்க்கத் தடை
என்கிற போது
பார்க்க வேண்டும்
என்கிற துடிப்பு
இயல்புதானே?
அத்துடிப்பு
பல சீடர்களுக்கு
இருந்தது நிஜம்.
புஜங்கள் துடிக்கப்
பொறுத்திருந்தனர்.
எப்படியாவது
என்றாவது
திரை
விலக்கி
குருவைத் தரிசிக்கக்
காத்திருந்தனர்.
பாவம்
அவர்களுக்குத்
தெரியாது...
திரை
விலகினால்
குருவான
ஆதிசேஷனின்
அனல்மிகு
மூச்சுக் காற்று
விஷ மிகுதியால்
சீடர்களைச்
சிதைத்து விடும்.
எரித்துச்
சாம்பலாக்கி விடும்
என்பது.
சீடர்களில்
ஒருவன்
துடிப்பு மிக்கவன்.
ஒரு நாள்
வகுப்பில்
ஆயிரம் சீடர்கள்
அமர்ந்திருந்தனர்.
உரத்த
குரலில்
உபதேசம்
உள்ளிருந்து
வந்து கொண்டிருந்தது.
ஆர்வ மிகுதியால்
அச்சீடன்
இரும்புத் திரையை
இழுத்தான்.
உள்ளே
பாம்பாய்
விஸ்வரூபமாய்
ஆதிசேஷனாய்
ஆயிரம்
தலைகளோடு
காட்சி
அளித்தார்
குரு பதஞ்சலியார்.
அடுத்த நொடியே
விஷக் காற்று
விரைந்து
விரவி
ஆயிரம்
சீடர்களும்
கணப்பொழுதில்
மாண்டனர்.
ஆயிரங்கால்
மண்டபத்தில்
ஆயிரம்
பிணங்கள்.
அதிர்ச்சியிலிருந்து
மீளாமல்
ஆயிரம் தலைகளுடன்
ஆதிசேஷன்
எனும்
பதஞ்சலி மகரிஷி
பரிதவித்தார்.
கௌட பாதர்
என்ற
சீடன் மட்டும்
அன்று
வகுப்புக்கு
மட்டம்
போட்டு விட்டு
வெளியே
சென்றதால்
தப்பித்தான்.
இடையில்
செல்லக்கூடாது
என
கட்டாய விதி
இருந்தும்
விதி வசத்தால்
வெளியே
சென்று
தப்பித்தான்
கௌட பாதர்.
பதஞ்சலியின்
கோபம்
அவன்
மீது பாயவில்லை.
ஒரு
சீடனானவது
உயிர்
பிழைத்திருக்கிறானே
என மகிழ்வே
கொண்டார்.
"உன்மீது
கோபப்பட மாட்டேன்"
என
கௌட பாதரை
அழைத்து
சகல கலைகளையும்
உபதேசித்தார்.
தான்
கற்றிருந்த
கை மண்ணளவை
தவ ஆற்றலால்
உலகளவாக்கி
உபதேசித்தார்.
கௌட பாதருக்கும்
மரணித்த
மாணவர்களுக்கும்
பதஞ்சலி விளக்கமாய்
உபதேசித்த
வியாக்கரண சூத்திரமே
பதஞ்சலி யோகம்
எனும்
ஒப்பற்ற யோக நூல்.
கௌட பாதர்
பதஞ்சலியின்
சீடர்.
பாதரின்
சீடரே
கோவிந்த பகவத் பாதாள்.
கேட்டிராத
இப்பெயர்
சாதாரணமானதல்ல.
ஒப்புயர்வற்ற
ஞானாசிரியர்
ஆதிசங்கரரின்
குருவே
கோவிந்த பகவத் பாதாள்.
என்னே
பேறு!
எவர்க்குக்
கிடைக்கும்
இந்த ஞானச் சீரு..!
பதஞ்சலி
முனிவர்
பற்றி
பற்பல
சர்ச்சைகள்
உண்டு.
திருமூலரும்
பதஞ்சலியாரும்
ஒரே காலத்தில்
வாழ்ந்ததாயும்
பதஞ்சலி முனிவர்
சமஸ்கிருதத்தில்
எழுதிய
மஹா பாஷ்யத்தின்
தமிழாக்கம் தான்
திருமூலரின்
“திருமந்திரம்”
என்று
சொல்வோரும்
உண்டு.
வடநாட்டு
பதஞ்சலி வேறு.
தமிழ்நாட்டு
பதஞ்சலி வேறு
எனக்
கூறுவோர்
உண்டு.
வடமொழியில்
பதஞ்சலி
அருளிய
மகாபாஷ்யம்
தமிழில்
படைத்த
யோக சூத்திரம்
இவ்விரண்டின்
ஞானச் சாறும்
ஒன்றே!
என
உறுதிபட
விவாதிப்போரும்
அதிகம்.
பல்வகை
சித்திகள்
நிறைந்தோருக்குப்
பல மொழிகள்
அறிவதும்
அம்மொழிகளில்
புனைவதும்
இயலாத
ஒன்றல்லவே!
தமிழ்நாட்டில்
நீண்ட காலம்
வாழ்ந்தவர்
பதஞ்சலி.
நிறைவடைந்ததும்
தமிழ்நாட்டில்தான்.
எனவே
அமிர்தத் தமிழ்
அவர் நாவில்
எழுத்தில்
வடிவெடுத்தில்
வியப்பிருக்க
முடியாது.
பங்குனி
மாதம்
மூல
நட்சத்திரத்தில்
அவதரித்த
பதஞ்சலி முனிவர்
5 யுகம்
7 நாட்கள்
பவனி வந்ததாக
பரவசம் நிறைந்த
தகவல் உள்ளது.
பத்து
இடத்தில்
லயமான
பதஞ்சலி முனிவர்
விரும்பி வாழ்ந்த
தமிழ்நாட்டிலும்
சித்தியாகி
சித்தர் பெருமையை
வழங்கி
இருக்கிறார்.
திருச்சி
அருகே
திருப்பட்டூர்
அவர்
லயமான
திருத்தலங்களில்
பெருமை
கொண்ட
சிற்றூர்.
பிரம்மபுரீஸ்வரர்
கோயிலில்
திருப்பட்டூரில்
பதஞ்சலியை
தியானிப்போர்
கொடுத்து வைத்தவர்கள்.
அப்படியொரு
ஆன்மிக அதிர்வு
பூமிதனில்
எங்கேயாவது
இருக்குமா
என்பது
சந்தேகமே.
இராமேஸ்வரத்தில்
இராமநாத சுவாமி
ஆலயத்தில்
லயமாகி
அருள்
பாலித்துக்
கொண்டிருப்பவர்
பதஞ்சலி முனிவரே.
யோகம்
நிறைந்தவர் மட்டுமே
யோக சாஸ்திரம்
தந்த
யோக முனிவராம்
பதஞ்சலியின்
பாதம் பணிந்து
மேன்மை அடைவர்.
(பதஞ்சலி முனிவர் திவ்விய சரித்திரம் - நிறைவு)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக