சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சுந்தரானந்தர்
சுந்தரானந்தர்
மாரிமைந்தன் சிவராமன்
சுந்தரானந்தர்
அழகிற் சிறந்த
அற்புதச் சித்தர்
சுந்தரானந்தர்.
சித்தாடலில்
அவர் ஒரு
சக்ரவர்த்தி.
சுந்தரானந்தரின்
சித்து விளையாட்டு
பாண்டிய
நாடெங்கும் பரவி
அது
மன்னன்
செவிகளுக்கும்
எட்டியது.
அரசன்
அபிஷேக பாண்டியன்
ஆன்மிக
நாட்டமுடையவன்.
அரசன் என்பதால்
அகங்காரமும்
அதிகாரமும்
அவனுக்கு
இயல்பாய் இருந்தன.
வீரர்களை
அழைத்தான்.
"சுந்தரானந்தரை
அழைத்து வாருங்கள்.
அவரைக் காண
அரசன்
ஆவலாயிருக்கிறார்
எனச் சொல்லி
அழைத்து வாருங்கள்"
என்று
உத்தரவிட்டான்.
வீரர்கள் விரைந்தனர்
சுந்தரானந்தர்
வசிப்பிடத்திற்கு.
"ஐயா!
எங்கள் அரசர்
உங்களைக்
காணக்
காத்திருக்கிறார்.
அழைத்து வரச்
சொன்னார்.
எங்களோடு
வாருங்கள்."
பணிவாகத்தான்
சொன்னார்கள்.
தவசீலர்
மெலிதாகச்
சிரித்தார்.
"என்னப்பா
வேடிக்கையாய்
இருக்கிறதே!
ஆற்றைக் காண
அரசன் விரும்பினால்
அவரல்லவா
ஆற்றுப் பக்கம்
வர வேண்டும்.
ஆற்றை
வெட்டி
அரண்மனைக்கு
அழைத்துச்
செல்வீர்களா?
அழைப்பது
அரசனாயிருக்கலாம்.
அழைக்கப்படுவது
முற்றும் துறந்தவனை.
முக்காலம்
உணர்ந்தவனை.
அரசனைப் பார்த்து
எனக்கு
ஆவதென்ன?
ஒன்றுமில்லை.
'நான்
அரசன்'
எனும்
மமதையால்
மகிழ்ந்திருப்பவனைக்
காண்பதில்
என்ன பயன்?
அரசனைச்
சொல்லிக்
குற்றமில்லை.
அவன்
உத்தரவிடுபவனாகவே
இருக்கிறான்.
பலரும்
இப்படித்தான்.
'நான்'
இருப்பவர்களிடம்
ஞான 'நாண்'
இருக்காது.
அது சேருமிடம்
போய்ச் சேராது."
சுந்தரானந்தர்
கூறியது
வீரர்களுக்குப்
புரியவில்லை.
ஆனால்
அதை
அப்படியே
அரசனிடம்
ஒப்பித்தார்கள்.
அவர்கள்
சொன்னதைக்
கேட்ட
அரசன்
முதலில்
அதிர்ந்தான்.
வியந்தான்.
யோசித்தான்.
உண்மையிருப்பதாய்
உணர்ந்தான்.
துறவி
உரைத்த
ஒவ்வொரு
சொல்லிலும்
லயித்தான்.
அதன்பின்
அவரது
வார்த்தைகள்
நாள் முழுதும்
அசரீரியாய்
உள்ளத்தில்
ஒலித்துக் கொண்டே
இருந்தன.
ஒருநாள்
மதுரை
ஆலவாய் அழகன்
கோயிலில்
மன்னனும்
சுந்தரானந்தரும்
எதிரெதிராக
வந்து போது
சந்திக்க நேர்ந்தது.
உள்ளத்தில்
அவர் பற்றிய
ஓவியம்
உயர்வாயிருந்தாலும்
அரசனென்ற
மிடுக்கு அப்போதும்
மன்னனுக்கு இருந்தது.
"நீர் தான்
மாயங்கள் நிகழ்த்தும்
மாயாவியா?"
திமிர் கொஞ்சம்
வார்த்தைகளில்
வழிந்தது.
"மன்னா!
தப்பாக
நினைத்துள்ளீர்கள்.
மாயம்
என்பது வேறு.
சித்து
என்பது வேறு.
மாயங்கள்
அற்பமானவை.
சித்தர்
சாகசங்கள்
இறையருள்
கொண்டவை.
ஐம்புலன்
சுருக்கி
உள்ளொளி
பெருக்கி
பஞ்சபூதங்களை
வசமாக்கி
பிரபஞ்சம்
அறிந்து
செயல்படுவது
சித்தாடல்.
சித்து
எல்லோருக்கும்
கை வரும்.
அதற்குப்
பயிற்சி
முயற்சி
தேவை.
உமக்கும் வரும்.
இதோ...
இந்த வீரர்கட்கும்
வரும்."
துறவியின் கணீர்
சொற்கள்
கோயில் சுவரில்
முட்டி மோதி
எதிரொலித்தன.
"அப்படியா!
நல்லது.
எங்கே
உங்கள்
தவசத்தியால்
சித்த சாகசத்தால்
இந்தக்
கல் யானையை
உயிருள்ள
யானையாக
உலவச் செய்யுங்கள்
பார்க்கலாம்!"
மன்னன்
சுந்தரானந்தரை
ஆர்வமுடன்
ஆனால் சற்று
ஆணவத்துடன்
கேட்டான்.
அரசனை
ஒருமுறை
பார்த்துச்
சிரித்தபடி
கல் யானையின் மீது
கண் பதித்தார்
சுந்தரானந்தர்.
கல் யானை
உயிர் பெற்றது.
காதுகளை
ஆட்டியபடி
காலடி எடுத்து
வைத்தது.
பிரமித்துப் போயினர்
மன்னரும்
அவரது பரிவாரமும்.
பரிவாரத்தில்
ஓர் ஏவலாளி.
அவன்
கையில்
கரும்பு இருந்தது.
கரும்பைக்
கண்ணுற்ற
கருத்த யானை
தும்பிக்கை நீட்டி
கரும்பைப்
பறித்தது.
சாறொழுக
முழுக் கரும்பையும்
ருசித்து மகிந்தது.
பார்ப்பது
கனவா
எனத் திகைத்த
அபிஷேக பாண்டியனுக்கு
அடுத்த
அதிர்ச்சி காத்திருந்தது.
அரசனின்
கழுத்தை
அலங்கரித்திருந்த
முத்து மாலையை
லாவகமாக
எட்டிப் பறித்தது
விளையாட்டாக .
பதறிப் போனான்
பாண்டியன்.
சித்தரின்
மகத்துவம்
சிந்தையில்
நிறைந்தது.
கல் யானை
சித்த சாகசத்தை
உரை கல்லாக
உணர்த்திய பின்னர்
வேறென்ன இருக்கிறது?
அப்படியே
சுந்தரானந்தர்
அடி விழுந்தான்.
கண்ணீரால்
அவர்தம்
பாதம் துடைத்தான்.
"சுவாமி..!
உள்ளம் தெளிந்தேன்.
சித்தர் மகத்துவம்
அறிந்தேன்.
எனக்கொரு
அருள் வரம்
நீங்கள்
தர வேண்டும்.
எனக்குப்
பிள்ளைப்
பேறில்லை.
அரச குலத்தில்
பிள்ளையில்லாதது
பெரும் அவலம்.
பிள்ளை வரம்
தாருங்கள்!"
காலில் விழுந்தவன்
எழாமல் கேட்டான்.
கைப் பிடித்து
எழச் சொன்ன
இறைமுனி
உறுதி தந்தார்.
"பிள்ளை
பிறப்பான்.
கவலைப்படாதே!"
கண்ணீர்
துடைத்தார்.
மீண்டும்
கல் யானை
ஆவதற்கு முன்னர்
நிஜ யானை
மன்னர்
கழுத்தில்
முத்து மாலையைப்
போட்டு
வாழ்த்தியது.
சித்தரைத்
தாள் பணிந்து
வணங்கியது.
மீண்டும்
கல் யானை
ஆனது.
மன்னனும்
பரிவாரமும்
கை கூப்பித்
தொழ
அவர்கள்
கண் முன்னே
ஆலவாயன்
சன்னதிக்குள்
புகுந்து
மறைந்தார்
சுந்தரானந்தர்.
இன்றும்
மதுரை
மீனாட்சி
சுந்தரேசுவரர்
ஆலயத்தில்
கல் யானை
பார்க்கலாம்.
அருகிருக்கும்
சன்னதியில்
சுந்தரானந்தரை
தரிசிக்கலாம்.
பேரருள் பெறலாம்.
சுந்தரானந்தர்
குறித்து
புராணக் கதைகள்
உண்டு.
சித்தருலகக்
குறிப்புகள் உண்டு.
சுந்தரானந்தரே
மதுரையம்பதியின்
இறைவன்.
சோமசுந்தரர்
என்பதும் அவரே.
ஆம்....
சாட்சாத்
சிவபெருமானே.
இவை
புராணம் கூறும்
தெய்வப் பெயர்களே.
பிட்டுக்கு
மண் சுமந்த
இறைவனை
மன்னன்
கசையடி தர
அத்தனை அடிகளும்
உலக ஜீவராசிகளின்
முதுகில் விழுந்ததாக
படித்த கதை
நினைவிலிருக்குமே!
பிட்டுக்கு
மண் சுமந்த
இறைவன்
சுந்தரானந்தர்
எனும்
சோமசுந்தரரே!
சுந்தரானந்தர்
குறித்து
சித்தர் உலகம்
குறித்து வைத்திருக்கிற
குறிப்புகள்
விதவிதமானவை.
வல்லமைகள்
நிறைந்து
இறைவனாகவே
விளங்கிய
சித்தர் என்பதால்
சுந்தரானந்தரை
வல்லப சித்தர்
என்று
அழைக்கிறது,
சித்தர் உலகம்.
கிஷ்கிந்தா மலை
உச்சியில் வசிக்கும்
உச்ச மகரிஷி
நவகண்ட ரிஷியின்
பேரன்
சுந்தரானந்தர்
என்கிறார் போகர்.
இளமையில்
அழகும் ஆண்மையும்
இரண்டறக் கலந்த
வனப்புமிகு வாலிபனாய்
சுந்தரானந்தர் திகழ்ந்தார்.
அதனாலேயே
அழகு எனப்
பொருள்படும்
சுந்தரர் என்ற
பெயர் கிடைத்தது.
பெற்றோர்
விருப்பப்படி
இளமையில்
திருமணம்.
ஆனால்
அவரது
விருப்பமோ
சிறை ஏதுமில்லா
இறையடி.
சகலகலா சித்தர்
சட்டைமுனியின்
குருவருள்
கிடைக்க
அவருடனேயே
ஆன்மிகப்
பயணம் தொடர்ந்தார்.
காடு மலை
தவம் சித்து
எனப்
பன்னெடுங்காலம்
குருவிடம்
பயின்றார்.
பூலோக க்
கயிலாயம்
சதுரகிரியே
சுந்தரானந்தரின்
இருப்பிடமானது.
சட்டைமுனியின்
சீடராய்
அலைந்தது
திரிந்தது
அமர்ந்தது
சிறந்தது
அங்கேதான்!
சதுரகிரி
தல புராணத்தில்
சுந்தரானந்தரின்
இருப்பு
ஆன்மிகச் செறிவு
மிக்கது.
இறைவனின்
திருமணம்
பொருட்டு
உலகை
சமநிலையாக்க
அகத்திய மாமுனி
தென்திசை
வந்த போது
நிறைவாய்
தங்கி மகிழ்ந்தது
காய சித்தி கற்றது
சுந்தரானந்தர்
தவச் சாலையிலேதான்!
சதுரகிரியே
அக்காலத்தில்
சட்டைமுனி
சுந்தாரனந்தர்
தவச் சிறப்பால்
தவபுரியாய்
விளங்கியது.
அவர்தம்
அர்ப்பணிப்பால்
ஞானபுரியாய்
மிளிர்ந்தது.
தெய்வத் திருமணத்தை
விரும்பும் போது
அகத்தியர் அகமகிழ்ந்து
கண்டு களிக்கலாம்
என
கயிலாயத்தில்
சிவபெருமான்
உறுதி தந்தது
அகத்தியர் பெருமான்
நினைவுக்கு வந்தது
சதுரகிரியில்
சுந்தரானந்தர்
தவக் குடிலில்தான்.
அகத்தியர்
மனமுருகி வேண்ட
சிவபெருமான்
உமாதேவி
சமேதராய்
கல்யாணக் கோலத்தில்
காட்சி தந்தார்.
அப்படியே
திருமணக் காட்சி
என்பதால்
திருமணத்தன்று
வந்திருந்த
அத்தனை
தெய்வங்களும்
ஞானிகளும்
அன்றும்
வந்தனர்.
காட்சி தந்தனர்.
அகத்தியர்
கருணையால்
அன்று
அத்திருமணக்
கோலத்தைத்
கண்டு களித்தார்
சுந்தரானந்தர்.
அது
அவர் பெற்ற பேறு.
அத்தனை
தெய்வங்களையும்
வணங்கி
நிறைந்தார்
சுந்தரானந்தர்.
அது
அவர் பெற்ற
பெரும் பேறு.
அகத்தியர் பெருமான்
காடு மேடு
மலை மக்கள்
ஆறு கோவில்
எனப் பல காலம்
அலைந்து திரிந்து
தென் திசை வர
பட்ட கஷ்டங்கள்
ஏதும் இன்றி
சுந்தரானந்தர்
எளிதாகப்
பார்த்து விட்டார்
தெய்வத் திருமணத்தை
என்றால்
சும்மாவா!
அது அவரது
தவத்தின் பலனன்றி
வேறென்ன!
அகத்திய மாமுனி
சதுரகிரி விட்டு
விடை பெறும்போது
சதுரகிரியில்
தனக்கெனத்
தானே
பிரதிஷ்டை செய்து
வணங்கி வந்த
சிவலிங்கத்தைக்
கேட்டுப்பெற்றார்
சுந்தரானந்தர்.
எப்பேர்ப்பட்ட
சிவலிங்கம்!
அகத்தியர் பெருமானால்
பூஜிக்கப் பெற்ற
பெருமை உடையது.
அருமை
பல கொண்டது.
மகாகுரு அகத்தியர்
அருளிய
சிவலிங்கத்தைத்தான்
சுந்தரானந்தர்
பின் நெடுங்காலம்
பூஜித்து வந்தார்.
தவ பலம் சேர்த்தார்.
அந்த லிங்கமே
இன்று
சதுரகிரியில்
உலகைக் காக்கும்
சுந்தர மகாலிங்கம்!
அகத்தியர்
அருளியிருந்தாலும்
சுந்தரானந்தர்
பூஜித்து வந்ததால்
சுந்தர மகாலிங்கம்
எனப் பெயர்
பெற்றது.
சதுரகிரிக்
காடுகளில்
ஓர்
ஆன்மிகச் சம்பவம்.
அது முன்
ஒரு கயிலாயச்
சம்பவம்.
கயிலாயத்தில்
சிவபெருமானும்
உமாதேவியும்.
அருகே
யாழிசை இசைத்தபடி
யாழ் வல்லத் தேவர்.
சற்று தள்ளி
தேவ மாது எனும்
தேவாமிர்தப்
பெண் அணங்கு.
கயிலாயம்
இசை வெள்ளத்தில்
மூழ்க
இவர்கள் இருவரும்
காதல் மிகுந்து
காமக் கணைகள்
பாய்ச்சினர்.
கவனித்த
பரமேஸ்வரன்
"இன்பம் துய்க்க
கயிலாயம்
சரிப்பட்டு வராது.
பூலோகம் செல்க"
எனத்
தண்டனை தந்தார்.
இருவருமே
பரமன் பாதம்
பற்றிக் கதற
மீண்டும்
சில காலம் கழித்து
கயிலாயம் திரும்ப
இசைவு தந்தார்.
யாழ் வல்லத் தேவர்
பூமியில்
சதுரகிரி அருகே
பச்சைமாலாய்
அவதரித்தார்.
தேவ மாது
அவர்
மாமன் மகளாய்
சடமங்கை
என்ற பெயரில்
பிறப்பெடுத்தார்.
உரிய
வயதில் திருமணம்.
கயிலாயம்
காணாத காமம்
கட்டுக்குள் வந்தது.
காலம்
கனிந்து
வந்தது.
பச்சைமால்
தினமும்
காடுகளில்
மாடு மேய்த்து
கிடைக்கும் பாலை
சடமங்கை
வீட்டிற்கு எடுத்து
வந்து
விற்பது வழக்கம்.
ஒருநாள்
சிவபெருமான்
இருவரையும்
அருள் தந்து
ஆட்கொள்ள
வேடம் தரித்தார்.
அது ஒரு
கிழச் சித்தர்
வேடம்.
சடமங்கை
வரும் வழியில்
அமர்ந்து
அம்மணியிடம்
குடிக்கப் பால்
கேட்டார்.
சித்தர் உருவம்
சடமங்கையை
அற மங்கையாக்கியது.
பால் தந்தாள்.
தினமும்
தந்தாள்.
தொழுதாள்.
மனம் நிறைந்தாள்.
இக்காலகட்டத்தில்
பச்சைமாலுக்கும்
சுந்தரானந்தருக்கும்
பழக்கம் ஏற்பட்டது.
தினமும்
பச்சைமால்
கொண்டு வந்து
தரும்
பச்சைப் பாலால் தான்
சுந்தரானந்தர்
வழிபடும்
சிவலிங்கத்திற்குப்
பாலாபிஷேகம்.
சிவபூஜை
உறவு
பலப்பட்டது.
சித்தராய்
சதுரகிரி வந்த
சிவபெருமான்
காட்டில்
உலவுகையில்
சுந்தரானந்தருக்கும்
சட்டைமுனிக்கும்
பழக்கமானார்.
நெருக்கமானார்.
அவரிடம்
பேசுவது
வாதிடுவது
சட்டைமுனிக்கும்
சுந்தரானந்தருக்கும்
ஞானம் சேர்த்ததால்
இவ்வுறவு
நாளும் வளர்ந்தது.
சுந்தரானந்தர்
கூறும் ஞான
விளக்கங்கள்
சித்தராயிருந்த
சிவபெருமானுக்கு
வெகுவாய்ப் பிடித்தது.
லகுவாய் அணைத்து
உச்சி முகர்வார்.
இந்நிலையில்
தினமும்
பால் குறைவது
பச்சைமாலுக்குக்
கோபமூட்டியது.
ஒருநாள்
மனைவி பின்
சென்றான்.
சடமங்கை
சித்தருக்குக்
குவளை நிறைய
பால் தரும்
காட்சி கண்டான்.
வீடு திரும்பிய
மனைவியை
நையப் புடைத்தான்.
சடமங்கை
அடுத்த நாள்
சித்தரிடம்
வந்து
நடந்ததைச்
சொல்லி அழ
ஆறுதல் சொல்லி
அப்போதே
ஆட்கொண்டார்
சித்தர் வடிவிலிருந்த
கயிலாயநாதர்.
இது சமயம்
பசுவொன்று
காணவில்லை.
பச்சைமால்
பதைபதைப்புடன்
காடெங்கும்
தேடினான்.
ஓரிடத்தில்
கிழ ரூப
சித்தர்
பசுக் காம்பில்
வாய் வைத்து
பாலைப்
பருகிக்கொண்டு
இருந்தார்.
பச்சைமாலின்
கோபம்
பன்மடங்கானது.
மாடு மேய்க்கும்
கம்பால்
சித்தரை
அடித்தான்.
அடித்தான்.
அடித்து ஓய்ந்தான்.
அது நேரம்
சரியாக
சட்டைமுனியும்
சுந்தரானந்தரும்
அங்கு வந்து
சேர்ந்தனர்.
அடித்தவனைக்
கண்டித்து
அடிபட்டவரை
ஆற்றுப்படுத்தினர்.
அப்போது
எளிய சித்தர்
ஏகாந்த
ரூபமெடுத்தார்.
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
விஸ்வரூபம்
எடுத்தார்.
இறையாய்க்
காட்சி தந்தார்.
சுந்தரானந்தர்
சட்டைமுனி
பச்சைமால்
இறையடியில்
நிறை கண்டனர்.
பச்சைமால்
இறையுள்
இணைந்தான்.
சட்டைமுனியும்
சுந்தரானந்தரும்
இறை பணி தொடர
அருள் கேட்டனர்.
ஆண்டவர் தந்தார்.
அங்கே அப்போதே
சிவலிங்கமானார்.
இது
சதுரகிரி
தலபுராணத்தில்
சுந்தரானந்தர்
பெருமை கூறும்
ஒரு சம்பவம்.
ஆம்!
சிவனின்
நேரடிக் காட்சி
இருமுறை
கண்டவர்.
அதிலொன்றாய்
இறையின்
திருமணம் கண்டு
அருளாட்சி
அமையப் பெற்றவர்
சுந்தரானந்தர்.
சுந்தரானந்தர்
அகமுடையார்
என்பது
போகர் போன்ற
சிலரது யூகம்.
ரெட்டியார்
இனத்தின்
குலக் கொழுந்து
என்கிறார்கள்
அகத்தியரும்
கருவூராரும்.
வான்வெளிப்
பயணத்தில்
வல்லவர்
சுந்தரானந்தர்.
ஒரே நேரத்தில்
பல இடங்களில்
காட்சியளிப்பது
இவருக்கான
சித்த வல்லமை.
சுந்தரானந்தர் காவியம்
நிவாரணி
வாக்கிய சூத்திரம்
சிவயோக ஞானம்
மூப்பு விதி
உள்ளிட்ட
பற்பல நூல்கள்
சுந்தரானந்தரின்
அருட் கொடை.
எனினும்
ஜோதிடக் கலையில்
சிறந்த
நூல்கள்
அவர்தம் படைப்பு.
உயிர்க்கும்
பயிர்க்கும்
உறைவிடத்திற்கும்
ஜோதிடம் தந்தது
சுந்தரானந்தர்
சிறப்பு.
வாஸ்து
ருது காலம்
ஜனனம்
பட்சி சாஸ்திரம்
பயிர் சாதகம்
பாப பரிகாரம்
மனையடி
என
அனைத்துக்கும்
ஜாதகம் தரும்
அவரது
சிறப்பு நூலான
ஜோதிட காவியம்.
மதுரை
மீனாட்சி அம்மன்
கோயிலில்
லயமானார்
சுந்தரானந்தர்.
கோயிலில்
துர்க்கை அம்மனுக்கு
இடப்புறம்
'எல்லாம் வல்ல சித்தராக'
இறை நிலை
அடைந்திருக்கும்
சுந்தரானந்தர்
ஓர் அற்புதச் சித்தர்.
ஆண்டவரும் அவரே!
சதுரகிரியும்
மதுரையம்பதியும்
சுந்தரானந்தர்
அருள்பாலிக்கும்
ஆன்மிகத் திருத்தலங்கள்.
(சுந்தரானந்தர் திவ்விய சரித்திரம் - நிறைவு)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
சித்தர்களின் திவ்விய சரித்திரம் ரொம்ப அருமையா இருக்குங்க.
பதிலளிநீக்கு.அரிதான அற்புத தகவல்களுடன் மிகவும் சுவாரசியமாக செல்கிறது. நூலாக வெளி வந்தால் வசதியாக இருக்கும்.