சோமாசிமாற நாயனார் புராணம்


63 நாயன்மார்கள் வரலாறு

சோமாசிமாற நாயனார் புராணம்

சோழவள நாட்டில்
மாஞ்சோலைகள்
நிறைந்த 
புனிதத் தலம்
திருவம்பூர்.

இவ்வூரில்
கட்டுமலை மேல்
ஒரு திருக்கோயில்.

இக்கோயிலில்
சிவலிங்கத்திற்குப்
பின்புறம்
அம்மையப்பர்
திருவுருவம்
அருமையாக 
அமைந்திருக்கும்.

பார்ப்பதற்கே
ஏகாந்தமாய்
இருக்கும்.
தரிசிப்பதற்குச்
சொல்லவே 
வேண்டாம்.

'அம்பர்திருப்
பெருங்கோயில்
அமர்கின்றான் 
காண்'
என்கிறது
தேவாரம்.

கோசெங்கட்
என்னும் 
சோழ மன்னன்
மாடக்கோயில்கள்
கட்டுவிப்பதில்
ஆர்வம் கொண்டவன்.

எழுபது 
மாடக்கோயில்கள்
கட்டியுள்ளான்.

முதலில் கட்டியது
திருவானைக்கா கோயில்.
முடிவாகக் கட்டியதுதான்
அம்பர் 
பெருந்திருக்கோயில்.

ஊர்ச் சிறப்பும் 
கோயில் சிறப்பும் 
ஒருங்கே கொண்ட 
திருவம்பரில் 
ஒரு சிவ பக்தர்.

அந்தணர் குலம்.
திருநாமம் 
சோமாசியார்.

ஒரு சிவபக்தர் 
நாயன்மாராக 
பதவி உயர்வு 
பெற முடியும் 
என்பதற்கு 
உதாரண புருஷர்
சோமாசியார் 
என 
உரத்துச் சொல்லலாம்.

பொதுவாக 
சிவபிரான்
சோதனைகள் செய்தே 
திருவிளையாடல் புரிந்தே
நாயன்மாரைத்
தெரிவு செய்வார் 
என்பார்கள்.

விதிவிலக்குகளில் 
ஒருவர் சோமாசியார்.

அவரை 
'நாயன்மார்'
என்றழைத்து 
ஆடலரசன் 
அரவணைத்து 
அருகில் 
வைத்துக் கொண்டதற்கு
அடிப்படையாய் 
ஆதாரமாய் அமைந்தது 
ஐந்து அருட்செயல்கள்தான்.

ஒன்று 
ஈஸ்வர பக்தி.

இரண்டு 
அடியவர் 
எக்குலத்தவராயினும் 
வேறுபாடு பார்க்காமல் 
பணிவிடை செய்து 
திருவமுது படைத்தது.

மூன்று
எவ்வித பிரதிபலனும் 
எதிர்பார்க்காமல் 
இறையனாரை 
வழிபடும் 
சிவ வேள்வியில் 
யாகம் செய்தது.

நான்கு 
உயரிய குருவைத்
தேடி உணர்ந்து 
சரணாகதி அடைந்தது.

ஐந்து 
'நமசிவாய' என்னும் திருவைந்தெழுத்தை 
விதிப்படி 
சதா நேரமும் 
ஓதி வந்தது.

சற்று விரிவாகப் 
பார்ப்போமா?


சோமாசியார் 
இயல்பிலேயே 
குறையொன்றும்
இல்லாத 
இறைதேடல் மிக்கவர்.

அடியவர் தன்மை.
எளிய வாழ்வு.
கூடவே
ஈசனைப் போற்றும் 
பூரணம்.

அடியார்கள் 
உள்ளத்தில் 
சிவபெருமான் 
எப்போதும் உறைவதால்
அடியாரை வணங்குதல் 
சோமாசியாரின் 
பக்தி நிலைப்பாடு.

சிவனடியார் 
எக்குலத்தவராயினும் 
வேறுபாடு பார்க்காமல் 
பணிவிடை செய்து 
திருவமுது படைத்து 
அடியவர் மனம் 
நிறையச் செய்து 
மனம் நிறை கொண்டார்.

எத்தன்மையினராயினும் 
ஈசனுக்கு அன்பர் என்றால் அத்தன்மையர்தான் 
நம்மை ஆள்பவர் 
என்ற கொள்கையை 
மெய்யறிவால் உணர்ந்து 
சிவப்பணி செய்தார்.

ஓர் 
அந்தணராயிருந்தும் 
அக்காலத்திலேயே 
குல வேறுபாடு பார்க்காமல் 
இறை அடியவர்களிடம்
பக்தி வைத்ததும் 
பணிவிடை செய்ததும் 
கற்பனைக்கு 
அப்பாற்பட்டது. 

அது மட்டுமா?

வயது 
ஏழை 
செல்வந்தர் 
என்று 
ஏதும் பார்க்க மாட்டார்.
அப்படிப்பட்ட 
ஆன்மநேயர். 

அது போலவே 
யாகம் செய்வதில் 
மிகுந்த ஈடுபாடு.

தன்னலமின்றி 
விருப்பு வெறுப்பு
எதுவும் இல்லாமல் 
எவ்வித 
புகழ் பயன் 
எதிர்பார்க்காமல் 
யாகத்தை 
இறையாகத் தொழும் 
சிவ வேள்வியாகச் 
செய்வார்.

ஏழு உலகங்களும் 
உவப்ப நியதியாக 
அவ்வேள்வியைச் 
செய்வார்.

திருவருள் பெற 
குருவருளே சாதனம் 
என்பதை உணர்ந்த 
மெய்ஞானி.
கர்ம யோகியும் கூட.

அதனால்தான் 
அவருக்கு ஒரு 
குரு கிடைத்தார்.

குருவை 
இறுகப் பற்றிக்கொண்டு 
இறைவனை அடைந்தார்.

அந்த 
நல்ல குரு 
யார் தெரியுமா?

வன்தொண்டர் 
என்று வணங்கப்படும் 
சாட்சாத் 
சுந்தரமூர்த்தி 
நாயனார்தான்
கிடைத்தற்கரிய 
அந்த நல்ல குரு.

தொடர்ந்து பல்வேறு 
யாகங்கள் செய்து வந்த 
சோமாசியாருக்கு 
ஓர் ஆசை எழுந்தது. 
அது பேராசை.

இறைவனே 
நேரில் வந்து 
யாகத்தின் 
பலன்களை
அவிர்பாகத்தைப்
பெற்றுக்கொள்ள 
வேண்டுமாம்.

உலகுக்கே 
வழங்கிக் 
கொண்டிருக்கும்
வள்ளலுக்கு
இவர் வழங்க 
நினைத்தார்.

நடக்கிற 
காரியமா இது?

ஆனால் நடந்தது!

அதுவும் 
எளிதாக நடந்தது.

அருகில் 
திருவாரூரில் 
வசித்து வந்த
சுந்தரரை
நினைவில்
குருவாக ஏற்று 
சரணாகதி அடைந்தார். 
குரு அருள் பெற்றார்.

குருவருள் பெற்றால் 
திருவருள் கிடைத்துவிடும் 
எனப் பெரிதும் நம்பினார்.

அந்த நம்பிக்கை 
அடுத்த சில 
தினங்களில் 
அம்மையப்பர் அருளால் 
மெய்ப்படத் தொடங்கியது.


ஒரு நாள் 
ஆரூராருக்குத் 
திடீரென 
இருமல் மிகுந்தது.
நெஞ்சில் கபம் கட்டி 
வாட்டி எடுத்தது.

வைத்தியர் பலர் 
பார்த்த வைத்தியம் 
பலனற்றுப் போனது.

இச்செய்தி 
சோமாசியாருக்குத் 
திருவம்பர் வந்த 
திருத்தொண்டர் 
ஒருவர் சொல்ல 
பரிதவித்துப் போனார்.

'பழக்கமில்லையே...
பார்த்ததில்லையே...
சுந்தரர் 
பார்க்க விரும்புவாரோ?'
பலவாறு யோசித்தார்.

தர்மபத்தினி 
சுசீலா தேவியை அழைத்து 
தூதுவளைக் கீரை தந்து 
சுந்தரரிடம் 
எப்படியாவது 
சேர்ப்பிக்கச் சொன்னார்.

பார்வதி கடாட்சம் 
நிரம்பிய 
சுசீலையின் 
அணுகுமுறையால் 
தூதுவளைக் கீரை 
கஷாயமாய் 
சுந்தரர் 
வயிற்றில் 
பால் வார்த்தது.

நோய் 
பறந்து போனது.

மூலிகை 
கொண்டு வந்தது 
யார் என 
அறிய விரும்பினார்.
நன்றி கூற விரும்பினார் 
நம்பியாண்டார் நம்பி.

சுந்தரரின் மனைவி
சங்கிலி அம்மையார் 
கொண்டுவந்து 
கொடுத்தவரை 
ஞாபகத்தில் 
வைத்திருந்தார்.

அப்புறம் என்ன?

சுந்தரர் 
திருவம்பர் வந்தார்.
மாகாளம் கோயிலில்
மாகாள நாதரைத் 
தரிசித்தார்.

அருகிருந்த 
சோமாசியாரை 
இறுகத் தழுவி 
இணைத்துக் கொண்டார்.

கண்ணோடு 
கண்ணினை நோக்கி
அன்பர் ஆக்கிக் கொண்டார்.

சோமாசியார் 
சுந்தரரைக் குருவாகத்
தாள் பணிந்தார்.

இப்படி அதிசயமாக
குரு சீடரைத்
தேடி வருவதை 
'இறைவன் 
கூட்டுவிப்பதாக'
ஆன்றோர் சொல்வர்.

அதன் பிறகு
சோமாசியார் 
அடுத்தடுத்து 
திருவாரூர் 
சென்று வந்தார்.

குரு சீடர் உறவு 
சீர்பட வளர்ந்தது.

ஒருமுறை 
சோமாசியார் 
தன் நெடுங்கால 
ஆசையான 
சோம யாகம்  
பற்றிக் கூறி 
இறைவனே
நேரில் பங்கேற்று
அவிர்பாகம் 
பெற்றுக் 
கொள்ள வேண்டும் 
என்ற விருப்பத்தை 
ஏக்கத்துடன் தெரிவித்தார்.

'அதற்கென்ன 
அழைத்து விடுவோம்'
என ஆடலரசனை 
அழைத்து 
விஷயத்தைச் சொன்னார்
சுந்தரமூர்த்தி நாயனார்.

சுந்தரர்க்கும் 
இறையனாருக்கும் 
உள்ள நட்புதான் 
ஏழு உலகமும் 
அறிந்ததாயிற்றே!

மறுப்பேதும் 
சொல்லாமல் 
மகேஸ்வரன் 
சம்மதித்தார்.

வைகாசி ஆயில்ய
நட்சத்திரத்தில் 
வருவதாக வாக்களித்தார்.

அத்திருநாளில்
கோலாகலமாக 
சோமயாகம் 
தொடங்கியது.

இறைவன்
சோமசுந்தரரின் 
வருகைக்காகக் 
காத்திருந்தார் 
சோமாசியார்.

நாட்டின் 
பல பகுதிகளில் 
இருந்து வந்திருந்த 
வேத விற்பன்னர்கள் 
முனிவர்கள் 
யாகத்தில் 
ஆழ்ந்திருந்தனர்.

அப்போது 
நான்கு வேதங்களையும் 
நான்கு 
நாய்களாக உருமாற்றி 
இறந்த ஒரு கன்றைச் 
சுமந்தபடி 
புலையன் வேடத்தில் 
சிவபிரான் 
வருகை புரிந்தார்.

பார்வதி தேவி 
தலையில் 
மதுக்குடத்துடன் 
பின் தொடர்ந்து 
வந்து கொண்டிருந்தார்.

அவர்கள் பின்னால் 
மனித முகத்துடன் 
இருந்த விநாயகரும் 
அழகிய 
முருகப்பெருமானும்
யாகம் நடக்கும் 
இடத்திற்கு வந்தனர்.

இவர்களைப் 
பார்த்த மாத்திரத்தில் 
பயந்து போன 
வேதவிற்பன்னர்கள் 
காத தூரம் 
ஓடிப்போனார்கள்.

பாவம்
பல்லாண்டு காலம்
ஆன்மிகத்தில் 
திளைப்பதாக 
வாழ்ந்து 
கொண்டிருந்த
அவர்களுக்கு 
இறைவனை 
அடையாளம் 
தெரியவில்லை.

பயந்து 
பாய்ந்தோடி 
ஒளிந்தார்கள்.

அதே சமயம்
நம்பிக்கையுடன் 
காத்திருந்த
சோமாசியாரும் 
மனைவி சுசீலையும் 
அச்சம் ஏதும் 
கொள்ளாமல் 
அண்ட சராசரங்களை 
ஆள்பவரின் 
திருநாமத்தை 
உச்சரித்தபடி 
இருந்தனர்.

இறைவன் 
நடப்பது 
அனைத்தையும்
ரசித்தபடி இருக்க...
ஞானம் நிறைந்த
விநாயகர் 
தன் சுய ரூபத்திற்கு மாறி காட்சியளித்தார்.

விநாயகரிடம் 
பணிவுடன்
'தியாகராஜர் 
தோன்றி ஆசி தந்து 
அவிர்பாகம் 
பெற்றுச் செல்ல வேண்டும்'
என வேண்டுகோள் 
வைத்தார் சோமாசியார்.

'அப்படியே ஆகட்டும்'
எனச் சொல்லி 
'நான் உடன் இருப்பேன்' 
என்று
அங்கிருந்தோரின்
அச்சத்தைத்
தீர்த்து வைக்க 
முன் வந்தார்
'அச்சம் தீர்த்த விநாயகர்.'

அதுசமயம் 
உலகம் கண்டிராத
ஒரு சிலரே கண்டிருந்த
பேரொளியில்
சிவபெருமான் பார்வதி 
சமேதராய்க் காட்சியளித்து 
ஆசிகளைச் சொல்லி 
அவிர்பாகத்தைப் பெற்று 
சோமாசியாரை 
சோமாசிமாற நாயனாராக 
ஏற்ற வண்ணம் 
விடைபெற்றார்.

சிவபெருமான் 
பார்வதிதேவியுடன் 
காட்சி தருவதே 
புண்ணியம்.
அதுவே ஒரு 
சிவனடியார் 
நிறைவடைந்ததற்கான
அங்கீகாரமும் கூட.

சோமாசியார்
சோமாசிமாற நாயனார்
எனும்
பதவி உயர்வு பெற்றார்.

தேவர்களும் 
முனிவர்களும் 
வானிலிருந்து 
பூச்சொறிதல் நடத்தி 
சோமாசிமாற நாயனாரை 
வாழ்த்தி மறைந்தனர்.

அதன் பின்னர்
சோமசிமாறர் 
குரு சுந்தரரைத் தேடி 
திருவாரூர் போய் 
நடந்ததை எல்லாம் 
கனிந்துருகிக் கூறி 
'எல்லாப் புகழும் 
உங்களுக்கே'
என்று பூரண 
சரணாகதி அடைந்தார்.

'சரணாகதியே  
திருவருள் கிடைப்பதற்கு
முக்கிய காரணம்' 
என்பது
ஆன்மிக வாக்கு.

இது 
சோமாசியார் 
நாயனார் ஆனதற்குப் 
பிரதான காரணம்.

சோமாசியார் 
இறையடி இணைந்து 
நாயனாராகத் 
திகழ்வதற்குப் 
பஞ்சாட்சரம் என்னும் 
ஐந்து எழுத்தே
அடிப்படைக் காரணம்.


இது பற்றி 
வாரியார் சுவாமிகள்
ஆன்மிக ரசம் கலந்து
இப்படிச் சொல்வார்:

'திருவைந்தெழுத்தை 
விதிப்படி ஓதினால் 
சித்தம் தெளியும்.

ஐம்புலன்களும் 
ஐம்பொன்னாகும்.

ஐம்புலன்கள்
காமம்
குரோதம் 
கோபம் 
மதம் 
மாச்சரியம் 
என்னும் 
ஆறு வகைக்
குற்றங்களும் 
ஒடுங்கி 
ஓதுபவரைக் காக்கும்.
உடன் இருப்போரையும் 
உய்ய வைக்கும்.

ஒவ்வொருவர் 
உள்ளத்திலும் 
இறைவன் உறைகிறான்
எனில் 
ஏன் காட்சியளிப்பது இல்லை?'
என்ற கேள்வி எழலாம்.

கலங்கிய தண்ணீரில் 
சந்திர சூரிய பிம்பங்கள் தோன்றுவதில்லை
என்பதே அதற்கான பதில்.

அறியாமையால் 
கலங்கிய 
மாசுடை அகத்தில் 
இறைவன் 
தோன்றுவதில்லை.

அவன் நேரடியாகத்
தோன்றும்
காட்சியைக்
காண வேண்டும் எனில்
எளிய வழி.

பஞ்சாட்சர மந்திரம்
ஓதி வந்து 
ஆணவ அழுக்கை நீக்கி 
சித்தம் தெளிந்தால்
சிவனடி சேரலாம்.'

வாரியார் மட்டுமல்ல
ஆன்றோரும் சான்றோரும்
வழிமொழியும் வழி இதுவே.

சோமாசியாரின்
அர்ப்பணிப்பு மிக்க
சரணாகதி அடையும்
புனித வாழ்க்கை 
கற்பித்த
ஐந்து வழிகளை
மேற்கொண்டால்
சிவமைந்தர்கள் 
அனைவரும்
முதல் கட்டமாக
சிவனருள் 
நிரம்பப் பெறலாம்.

ஒரு நன்னாளில்
சிவகாட்சி காணலாம்.

அதுவே
உண்மையான
சிவ அங்கீகாரம்.

நிறைவில்
உண்மையிலும்
உண்மையான
சிவலோக பதவி
அடையலாம்.


இது சத்தியம்.
இறை மீது சத்தியம்.

'அம்பரன் சோமாசிமாறனுக்கு அடியேன்' என்பது 
சீடர் குறித்தான 
குரு சுந்தரரின் 
புகழ்வாக்கு.


(சோமாசிமாற நாயனார் புராணம் - நிறைவு)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)