சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - உரோம ரிஷி


உரோம ரிஷி

அது ஓர்
அழகிய வனம்.
வனத்தில்
ஒரு குகை.
மனத்தை
அடக்கும்
தவக் குகை.

குகையில்
இருவர்.

ஒருவர்
வயது முதிர்ந்தவர்.
மகரிஷி போல
தெரிகிறார்.

இன்னொருவர்
கம்பீரத் தோற்றம்.
உருவமோ
கனக்கச்சிதம். 
ராஜகளையும்
கொஞ்சம் கவலையும்
தெரிவிக்கும் முகம்.

அவர் ஓர்
அரசன் போல்
இருக்கிறார்.

"முனிவரே!
எத்தனை
நாட்கள்
தாங்கள்
இங்கிருக்கிறீர்கள்?'
ஆர்வமுடன்கேட்டான்
மன்னன் போலிருந்தவன்.

முனிவர்
முகத்தில்
சிறு நகை.

"நான் சொல்லப் 
போவது
புரிகிறதா பார்"
என்கிற மாதிரி
பார்வை.

"மன்னா!
மனிதர்க்கு
ஒரு வருடம்
என்பது
தேவர்க்கு
ஒருநாள்.

மனிதர்க்கு
360 வருடம்
என்பதே
தேவர்க்கு
ஒரு வருடம்.

4800
தேவ வருடங்கள்
சேர்ந்தது
ஒரு யுகம்.

3600
தேவ வருடங்கள்
திரோத யுகம்.

2400 
தேவ வருடங்கள்
சேர்ந்தது
துவாபர யுகம்.

1200
தேவ வருடங்கள்
ஒரு
கலியுகம்.

இவற்றைக்
கூட்டினால்
12000
தேவ வருடங்கள்
வரும்.
இந்த
12000
தேவ வருடங்கள்
பிரமனைப்
பொருத்தமட்டில்....."

முனிவர்
கூறியபடியே
மன்னரை
நோக்கினார்.

ஆழ்ந்து
கவனிக்கிறானா
என்பதைக்
கவனிக்கிற மாதிரி
இருந்தது
முனிவரின் பார்வை.

மன்னன்
உற்று நேக்க
பற்றற்ற முனிவர்
தொடர்ந்தார்

"மன்னா...
12000
தேவ வருடங்கள்
பிரம்ம தேவனுக்கு
ஒரு பகல்
மட்டுமே.

24000
தேவ வருடங்களே
பிரம்மனுக்கு
ஒரு நாள்.

தலை சுற்றுகிறதா..!

இது இறைவன்
அருளிய கணக்கு.

சரி,
விஷயத்துக்கு
வருவோம்.

நான்
இங்கு வந்து
எத்தனை நாட்கள்
ஆகிறதென்று தானே
கேட்டாய்?

அப்பனே!
70
பிரம்ம தேவன்
ஆண்டுகள்
ஆகின்றன."

கிஞ்சிற்றும்
குழப்பமின்றி
முனிவர்
சொல்லி
முடித்தார்.

'வருவதற்கு முன்
எங்கு இருந்தார்?
எப்போது
பிறந்தார்?
இனி
எங்கு செல்வார் ?
எத்தனை
ஆண்டுகள் வாழ்வார்?'
கேட்க நினைத்தான்
மன்னன்.

சித்தர் புருஷர்கள்
பல
ஆண்டுகள்
வாழ்வார்கள் என
மட்டும்
அறிந்திருந்த
மன்னனுக்கு
முனிவரின்
வயது
பிரமிப்பூட்டியது.

அப்படியே
நெடுஞ்சாண் கிடையாக
முனிவர்
பாதம் பணிந்தான்.

முனிவர்
புன்னகைத்தார்.

புன்னகைத்த
மாமுனிதான்
உரோம ரிஷி.

பாதம் பணிந்த
மன்னன்
தொண்டமான்.
காஞ்சியை
ஆண்டு வந்த
மன்னன்
அவன்.

அண்மை காலமாக
அவனுக்கு
இனம் புரியாத
ஒரு கவலை.

அரசனல்லவா!
கால் போன பக்கம்
போக வழியில்லை.
எனவே
யாரிடமும்
செல்லாமல்
குதிரை
போன பக்கம்
போனான்.

மனதைப் போலவே
குதிரையையும்
அவன்
அடக்கவில்லை.

காட்டில்
நுழைந்த குதிரை
இரவு
வந்ததும்
முனிவரின்
குடில் முன்
நின்றது.

ஞானக் குதிரை
போலிருக்கிறது!

அன்று
பவுர்ணமி.
நிலவொளியில்
காடு
ஜொலித்துக்
கொண்டிருந்தது.

குதிரையிலிருந்து
இறங்கிய
மன்னனின்
கண்களில்
குகையும்
குகைக்குள்
முனிவரும்
தென்பட்டனர்.

முனிவர்
என்பதெல்லாம்
உரையாடிய
பின்னர்
உணர்ந்த
விஷயம்.

முதன்முதலில்
பார்த்த போது
குகையில்
இருந்த
மனித உருவைக்
கண்டு
பயந்து
போனான்
பல போர்கள்
கண்ட மன்னன்.

ஆம்...
முதிர்ந்த உருவம்.
நெற்றியில் திருநீறு.
கையில் ஜபமாலை
கழுத்தில் ருத்திராட்சம்.
அருகில்
கமண்டலம்.
அடியில்
புலித்தோல்.

உடம்பு முழுக்க
முடி
பொச பொச
வென்று
முடி முடிச்சுகள்.

உடம்பெல்லாம்
சுருள் முடிகள்.

திருநீறும்
கமண்டலமும்
இல்லாதிருந்தால்
ஏதோ
விலங்கென
விலகி
ஓடி இருப்பான்.

திரும்பத் தான்
நினைத்தான்.
ஆனால்
உருவம்
அழைத்தது.

அப்படியொரு
இனிமையான
அன்பான
குரல்
அதுவரை
அவன்
கேட்டது இல்லை.

"தொண்டமானே!
மன்னன்
மனதில்
பயமிருக்கக் கூடாது.

பயப்படாதே வா
அருகில் வா..."
மந்திரத்திற்கு
கட்டுப்பட்டவன்
போல்
முனிவர் முன்
நெருங்கி
நின்றான்.

'சுவாமி
என் பெயர்
உங்களுக்கு....
எப்படித் தெரியும்?'
நீங்கள்.....?"

பயந்திருந்தாலும்
வியந்து
கேட்டான்.

"மன்னா!'
என்னை
உரோமசன்
என்று
அழைப்பர்.

திருவருள்
குருவருள்
நிரம்பப்
பெற்ற
பேறு
பெற்றவன்.

உடல் முழுவதும்
இருக்கும்
ரோமம் காரணமாக
உரோமசன்
எனப்
பெயர் பெற்றவன்.

முக்காலம்
உணரும்
ஞானம்
பெற்றவன்.

பற்றற்றவன்
எனினும்
இறை பற்று
மிக்கவன்.
தவப் பற்று
கொண்டவன்.

இறையே
இன்று
உன்னை
இங்கு
அழைத்து
வந்திருக்கிறது.

மனக்கவலை
விடு!
மனம்
சலனமடைந்தால்
மதி
கலங்கும்.
கவலை விடு
இறையே வழி
என
வாழ்."

என்ன 
ஆச்சரியம்!

 மன்னன்
மனதில்
தெளிவு
முளைவிட்டது.
முனிவர்
பேசப் பேச
அது
பூவாகிப் பிஞ்சாகி
காயாகிப் பழமாகி
கனியாகக்
கொண்டிருந்தது.

பல காலம்
பழகிய
உறவு
மாதிரியான
ஒரு
சூழல்.

இச் சூழலில்
தான்
மன்னன்
கேட்டான்.
முனிவர்
அக்குகையில்
வாழும் காலம்
குறித்து.

பிரம்மதேவனின்
வருடக் ஆயுள்
கணக்கை
மன்னன்
வாய்பிளக்க
கேட்டதை
ரசித்த
உராமரிஷி

"இன்னும்
சொல்லவா?
வயது ரகசியம்...
வாழ்க்கை ரகசியம்...
இங்கிருக்கும் ரகசியம்...
அனைத்துக்கும் மேலாய்...
சித்தர் ரகசியம்!
சிவ ரகசியம்!'

முனிவர்
இவ்விதம்
கேட்கக் கேட்க
அவரது
முடி நிறைந்த
புருவம்
வில்லாய்
வளைந்து
கேள்விக்
குறிபோல்
வித்தை
காட்டியது.

'மன்னா'
மீண்டும்
சொல்கிறேன்
கவலை மற.

உன் முன் வினை
தீவினை
கொண்டது.

உன் நாட்டு மக்களின்
வினையும்
சேர்ந்து
கொண்டது.

அதனால் தான்
யுத்தம் நிகழ்ந்தது.
அதில் உனக்கு
தோல்வி வந்தது.

வீரர் பலர்
உருண்டு 
மாய்ந்தனர்
கவலையோடு
நீ
இங்கு ஓடி வரக்
காரணமும் அதுவே."

மன்னனது
வாழ்வின்
ரகசிய
முடிச்சுகளை
அவிழ்த்தார்
குகை முனி.

பின்னர்
இனிக்
கவலையில்லை
என்பது போல்
கரங்களை உயர்த்தி
ஆசிர்வதித்தார்.

முனிவர்
ஆசிர்வதிக்கும் போது
அவரது
அருட்கரங்களை
நோக்கினான்
மன்னன்.

சற்று
நோக்கியவன்
திகைத்து
உற்று நோக்கினான்.

அது
இன்னொரு
ஆச்சரியம்!

முனிவரின்
முன் கையில்
ரோமங்கள்
இல்லை.
மன்னன்
வியப்பதை
முனிவர்
கவனித்தார்.

"மன்னா!
நீ பயந்து
வியந்து
கேட்க
விரும்புவது
புரிகிறது.

வேறொன்றும்
இல்லை.
பிரம்மனின்
ஆயுள்
மூன்றரை
கோடி
வருடங்கள்
என்று
சற்று
முன்பு
சொன்னேன்
அல்லவா?

ஒரு பிரம்மன்
லயமாகும் போது 
என்
முன் கை முடி
ஒன்று
உதிரும்.

இப்படி
உதிர்ந்த
கணக்கே
எத்தனை
பிரம்மன்கள்
பிறந்து
வாழ்ந்து
லயமாகிப்
போயிருக்கிறார்கள்
எனத்
தெரிய வரும்
தெய்வக் கணக்கு.

இன்னொரு
தொடர்பையும்
இறைவன்
வகுத்துள்ளான்.

அஷ்டவக்ரர்
என்றொரு
முனிவர்
உள்ளார்.

அவருக்கு
உடம்பு
எட்டு
கோணலாய்
திரும்பி
இருக்கும்.

ஒரு
உரோம ரிஷி
இறந்தால்
ஒரு கோணல்
சரியாகும்.
என்னைப்
போலிருந்த
உரோம ரிஷிகள்
சிலர்
இறந்திருக்கிறார்கள்."

இறைவன்
வகுத்த
‘வயது
கணக்கு'
மன்னனுக்கு
முனிவர்
சொன்னார்.

80 வயதுக்குள்
மானிடப்
பிறவி
ஆடும் ஆட்டமும்
போடும் கொட்டமும்
நானே பெரியவன்
எல்லாம் தெரியும்
என
ஆணவம்
அகங்காரம்
எல்லாம்
ஒரு தடவை
மன்னன்
மனக் கண்ணில்
ஆடி மறைந்தது.

3000
ஆண்டுகள்
பூமியில்
இருந்து
ஆண்டுக்கு
ஒன்றாய்
மூவாயிரம்
பாடல்கள்
படைத்த
மூலரைப்
பற்றி மட்டும்
அறிந்திருந்த
அரசனுக்கு
பல்லாயிரம்
கோடி
ஆண்டுகள்
வாழும்
முனிவரைப்
பார்த்ததும்
தன் அற்ப
வாழ்வில்
கிடைத்த
அற்புதம்
என
எண்ணி
மகிழ்ந்தான்.

முனிவர்
தொடர்ந்தார்.

'மன்னா!
இந்த
இடம்
பெருமை மிக்கது.
இறைத்
தன்மை
நிரம்பக்
கொண்டது.

என்னை
என்றோ
ஈர்த்தது.
உன்னை
இன்று
ஈர்ந்துள்ளது."

"கேட்க
நினைத்தேன்.
சொல்கிறீர்கள்.
சுவாமி.
தாங்கள்
இத்தனை காலம்
இங்கிருப்பதின்
ரகசியம்...'
மன்னன்
நெகிழ்ந்துருகிக்
கேட்டான்.

'சொல்கிறேன்
மன்னா..!
கேள்...
இங்கு
உனக்கும்
வேலை
இருக்கிறது.

அதுவே
உன்னை
அழைந்து
வந்திருக்கிறது"
உரோம முனி 
தொடர்ந்தார்.

"மன்னா...
இது
பிரம்ம தேவன்
ஒருவன்
இருந்த இடம்.
அவன்
சிவ
சிந்தையோடு
தவமிருந்தான்.

அவனது
ஆன்மா
சிவனோடு
நெருங்கிய
வேளையில்
மூலக்கனல்
எழுந்தது.

ஒரு நாள்
எழுந்த மூல
அக்கினியின்
மத்தியில்
இறைவன்
சதுரமான
சித்திரப்பலகை
வடிவில்
பிரசன்னமானார்.

பிரம்மனை
ஆட்கொண்டார்.

அதுமுதல்
சிவனுக்குப்
பலகை நாதர்
என்ற
பெயர் வந்தது.


 ஒருமுறை
பிரளயம்
ஒன்று
எழுந்தது.
உலகம்
அழிந்தது.

அதனால்
இவ்வூர்
ஆதிபுரி
ஆனது.

அஷ்ட நாகங்களில்
ஒன்று
வாசுகி.
அவர்
இங்கு வந்து
வழிபட்டு
தவமிருந்து
இறைவனோடு
இரண்டறக்
கலந்தார்.

அதன்
அடையாளம் தான்
அடிக்கடி
பலகை நாதரின்
திருமேனியில்
பாம்புச் சட்டை
மாலை போல்
பளபளக்கும்.

இதைக்
காணக்
கண் கோடி
வேண்டும்.

வாசுகி
சித்தியானதைத்
தொடர்ந்து,
பலகை நாதருக்கு
படம் பக்க நாதர்
என்ற
பெயர்
அமைந்தது.

மன்னா...!
ஒருமுறை
இங்கே
பெரும் வெள்ளம்.

சர்வமும்
நாசம்
என
எண்ணிய 
வேளையில்
சர்வேஸ்வரன்
'வெள்ளமே
ஒற்றிப் போ'
என்றாரே
பார்க்கலாம்.

வெள்ளம்
விலகியது.

அதனைத்
தொடர்ந்து
இவ்விடத்திற்கு
'ஒற்றியூர்’
என்ற
திருநாமம்
ஏறி
அமர்ந்தது.

இது
அளவிற்கரிய
ஆன்மிக அருள்
நிறைந்த இடம்.
எனவே தான்
வந்த நாள்
முதல்
வேறிடம் செல்ல
என்மனம்
ஒப்பவில்லை.

அற்புதம்
காண்கிறேன்.
அதில்
லயிக்கிறேன்.

நீயும்
இங்கேயே
இருந்து விடு.

உனக்கு
வேண்டுவனவற்றை
நான்
உபதேசிக்கிறேன்.

நீ தியானம்
கொள்.
நான் தரும்
மந்திர உபதேசம்,
மனதினில் கொள்."

தலையாட்டிய
தொண்டமான்
உரோம ரிஷியிடம்
பேருபதேசம்
பெற்றான்.

இடையில்
ஊருக்குத்
திரும்பி
கடமை முடித்து
குகைக்குத்
திரும்பினான்.

தியானம்.
தியானம்..
தியானம்...
அதனைத்
தொடர்ந்து
தவம்...
தவம்...
ஆழ் தவம்!

உயர் நிலை
தவத்தை
அடைந்த
தொண்டமான்
உரோம முனியின்
உறு துணையோடு
கோயில்
அமைத்தான்.

அக்னியால்
உருவான
பலகை நாதரின்
உக்கிரம்
தாக்காமலிருக்க
மந்திரங்கள்
அடங்கிய
வட்டப்பாறையை
உரோம முனி
தவநிலையில்
அருளினார்.

கோயில் பணியின்
நிறைவாக
ஒருநாள்
மாமுனி
உரோம ரிஷியின்
ஆசிகளோடு
மன்னன்
தொண்டமான்
இறையோடு
இறையாய்
இரண்டறக்
கலந்தான்.

சித்தியானான்.

அட!
என்னே மகிமை!
இன்றும்
தேடி வருவோருக்கும்
கோயில் பணி
செய்வோருக்கும்
அமர்ந்து ஆழ்ந்து
தியானிப்போருக்கும்
உயரிய
புண்ணியத்தை
உன்னத நிலையை
தருகிறதே
ஒற்றியூர்!

சித்த புருஷர்
உரோம முனியின்
குருவருள்
உடன்
பற்றி
சிறக்கிறதே!

ஒற்றியூர் தலத்தின்
ஆன்மிக பலம்
போற்றிடத் தக்கது.

மாணிக்க வாசகரும்
பட்டினத்தாரும்
பாடித் தவமிருந்து
பக்தி பரவசமும்
ஞானத் தெளிவும்
பெற்றத்
திருவூரே
திருவொறியூர்.

வள்ளல் பெருமான்
வாழ்வில்
பெரும்பகுதி
நாள்தோறும்
நாடி வந்து
தவமிருந்து
அழுதபடி
போற்றி
அமுதத் தமிழ் விருந்தாய்
திருவருட்பாவை
அருளிய
திருப்பதியே
திருவொற்றியூர்.

உரோம ரிஷி
உயர்ந்த சித்தர்.
அகத்திய மாமுனி
அன்னாரது குருமுனி.

போகருக்கு
நம்பிக்கைக்குரிய
மாணவர்.
காகபுஜண்டருக்கு
நண்பர் என்பது
ஒரு செய்தி.

மாறுபட்ட
தகவலும் உண்டு.

காகபுஜண்டரின்
மகனே
உரோம ரிஷி
என்றொரு
சேதியும் உண்டு.

அகத்திய
மகரிஷியிடம்
ஒருநாள் தன்
நீண்ட நாள்
ஆசையைச்
சொன்னார்
உரோம ரிஷி.

'சிபெருமானின்
அருளாசியை
நேரில்
பெற வேண்டும்
அதற்கு
ஆவண
செய்ய வேண்டும்'
இதுவே
உரோமரின்
விண்ணப்பம்.

'ஆகட்டும்
பார்க்கலாம்
எனச்
சொன்ன
அகத்தியர் பெருமான்
ஒருநாள்
சீடனை அழைத்தார்.

'இதோ...
இந்த
தாமிரபரணி
ஆற்றில்
ஒன்பது
தாமரை மலர்களை
மிதக்க விடுகிறேன்.

இவற்றில்
ஒவ்வொன்றும்
ஒவ்வொறு
பகுதியில்
கரை ஒதுங்கும்.

ஒதுங்கும் கரையில்
கடலும்
நதியும்
சேரும்
சங்கு முகத்தில்
நீராடு.

நவகிரக வரிசையில்
வழிபாடு செய்.

சிவன் வருவார்
நேரில்
அருள் தருவார்!"
என்று
கூறியபடி
தாமரை மலர்களை
நீரில்
தவழ விட்டார்.

 ஒரு மலர்
பாப நாசத்தில்
தரை
தொட்டது.
அடுத்து
சேரன் மாதேவி
கோபகநல்லூர்
குன்னத்தூர்
முறப்பநாடு
திருவைகுண்டம்
தென்திருப்பேரை
ராஜபதி
சேர்ந்த பூ மங்கலம்
ஆகிய ஊர்களில்
தாமிரபரணிக் 
கரைகளில்
ஒதுங்கி நின்றது,

உரோம ரிஷி
ஒவ்வொரு
கரையிலும்
குருநாதர்
சொல்லியபடி
நீராடி
இறைவனைச்
சிந்தையில் வைத்து
நிஷ்டையிலிருந்தார்.

நிறைவில்
இறைவன் 
தோன்றினார்.
இறுக அணைத்தார் 

இரண்டறக் கலக்கும்
இனிய வைபவம்
முத்தேக சித்தியில்
முடிந்தது.

அகத்தியர் ஆற்றில் 
விட்ட
தாமரை மலர்கள்
ஒதுங்கிய ஊர்கள்
நவ கயிலாய தலங்கள்
ஆகியன.

தாமிரபரணியோ
தரணியில்
சிறந்த
ஆன்மிக அருள்
நிறைந்த
நதியாய்
பயணம்
கண்டது.

இத் திருத்தலங்கள்
வருவோருக்கும்
வழிபடுவோருக்கும்
வசதிகள்
வாய்ப்புகள்
பல்கிப் பெருகி
வளம் தருவன
ஆயின.


ஒரு சமயம்
நீராடாமல்
கோயிலுக்கு
வந்த 
உரோம முனிவரை
விநாயகரும்
முருகனும்
தடுத்தனர்.

புறத் தூய்மையை விட
அகத் தூய்மையே
உண்மையானது
என
உரோம ரிஷி
வாதிட்டார்.

பரமனோ
உரோம ரிஷி
பக்கம்
உறுதியாய்
நின்று
முனிக்காகவே
கோயிலின்
வெளிப்புறம்
காட்சி தந்து
அருள்
பாலித்ததாக
புராணங்கள்
பகருகின்றன.

உராம ரிஷி
ரோமாபுரியிலிருந்து
வந்தவராயிருக்கலாம்
என்றொரு
கருத்தொன்று உண்டு.

உரோம மகரிஷியின்
நூல்கள்
உன்னதமானவை.
உவமை நயத்திற்கும்
சிலேடைகளுக்கும்
பஞ்சமில்லாதவை.

அவரின் நூல்கள்.
அவரின்
வைத்தியம்
ஞானம்
சோதிடம்
போன்ற
துறைகளில்
கரை கண்டவை
அவரது படைப்புகள்.

உராம ரிஷியை
வணங்கி
வழிபட்டு
வாழ்வில்
வளத்தில்
வயதில்
மனதில்
இறையில்
உய்ய
ஒற்ற வேண்டிய
ஒப்பற்ற திருத்தலம்
திருவொற்றியூரே.

திருவொற்றியூர்
சென்று
திரும்பி வந்தால்
திருப்பம் நிச்சயம்.

உரோம ரிஷி
சித்தியான
இன்னொரு தலம்
பொதிகை மலையில்
காரையாறுக்கு
மேலிருக்கும்
அகத்திய வனம்.

கும்பகோணம்
அருகிலிருக்கும்
கூந்தனூர்,
திருகாளத்தி
நவ கயிலாய தலங்கள்
இவர்
தவம் செய்த
புண்ணிய தலங்கள்.

அஷ்டமா சித்தி பெற்ற
அற்புத மகரிஷியே
சித்தர் உரோம முனி.

நாடி வருவோருக்கும்
நலம் பல தருவார்.
குறிப்பாய்
மன நலம்
வேண்டுவோர்
வழிபட ஒரு சித்தர்.
அவரே
உரோம சித்தர்.

இது
பொய்யில்லை
புனையில்லை
சத்தியமே!

(உரோம ரிஷி திவ்விய சரித்திரம் -நிறைவு)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)