சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - காகபுஜண்டர்(பாகம் 3)
காகபுஜண்டர்
பாகம் 3
மாரிமைந்தன் சிவராமன்
மேருமலைக்
காகமான
காகபுஜண்டர்
குறித்து
ஆதி காலக்
கதை ஒன்றும்
உண்டு.
பல பிறவிகள்
கண்ட
காகபுஜண்டரின்
கதைக்களம்
காலந்தோறும்
புதுத்தளம்.
அப்படி
ஒரு
பிறவியில்
அயோத்தியில்
பிறந்தார்
புஜண்ட பிரான்.
அப்பிறவியில்
புஜண்டர்
மாறுதலாய்
ஒரு
சிவபக்தன்.
ஆயினும்
வாய்ஜாலம்
தற்பெருமை
அதிகமிருந்தது.
அயோத்தியில்
பிறந்திருந்தாலும்
இராமபிரான் மீது
கிஞ்சித்தும்
பற்றில்லை.
இராமனை
இகழ்வது
வழக்கமாய்
இருந்தது.
அப்பிறவிப்
பழக்கமாய்
இருந்தது.
அப்போது
ஒருமுறை
அயோத்தியில்
பஞ்சம்
தலைவிரித்தாடியது.
புஜண்டர்
பிற தேசம்
போனார்.
போன இடம்
வடநாடு
உஜ்ஜயினி.
அங்கு
புஜண்டரின்
சிவ வழிபாடு
தொடர்ந்தது.
அங்கும்
இராமரைப்
பற்றிய
மதிப்பீடு
தாழ்ந்திருந்தது.
வாய்வீச்சு
மிகுந்திருந்தது.
அங்கு
வேதம் அறிந்த
வேதியர்
ஒருவர்
பழக்கமானார்.
அவர்
புஜண்டருக்குக்
குருவாய்த் திகழ்ந்து
கல்வி, வேதம்
மந்திரம்
கற்பித்தார்.
குரு
தந்த
கல்வியும் கூட
புஜண்டரை
மேன்மையாக்கவில்லை.
இராமனை
இகழ்வதைக்
குறைக்கவில்லை.
இப்படிக்
குரைப்பது
குருநாதருக்கும்
எரிச்சலைத் தந்தது.
மகன் போல
வைத்திருந்த
புஜண்டருக்கு
அவரால் ஆன
அறிவுரை தந்தார்.
''மகனே!
இராம நாமம்
தூற்றாதே!
போற்ற வேண்டிய
திருநாமம் அது.
சிவபெருமானும்
பிரம்ம தேவனும்
இராமபிரானை
வழிபட்ட
வரலாறு
அறிவாயா நீ!
அவர்களை விடவா
எல்லாம்
அறிந்தவன் நீ?
உண்மையான
சிவபக்தன்
மேன்மையான
ராமர்
திருவடி மீது
பக்தியே வைப்பான்.
இராம வெறுப்பை
விட்டு விடு.
தவறு தவிர்.
மேன்மையைக்
குறி வை."
குரு
உபதேசம்
செய்தும்
திருந்தவில்லை
புஜண்டர்.
குரு
சொல்லை
மீறினார்.
சில நேரம்
குருவையும்
அவமதித்தார்.
ஒருமுறை
மகா காலேஸ்வரர்
கோயிலுக்கு
குரு வந்தார்.
அவர்
வருவதைக்
கவனித்தும்
பாராதவரைப் போல
புறம் பார்த்திருந்தார்
புஜண்டர்.
''அவன் அப்படித்தான்''
என குரு
ஒதுங்கிப் போனார்.
பார்த்திருந்த
பரம்பொருளுக்குத்தான்
கோபம் வந்தது.
குரு
பொறுப்பார்.
மூல குருவுக்கு
என்ன கவலை?
பொறுப்பது
அவர் வேலையா
என்ன?
கோபம்
வந்தது
சாபம்
எழுந்தது.
"இவன்
குரு துரோகி.
குருவின்
சொற்களை
மதிக்காதவன்.
குரு
மன்னிக்கலாம்.
நான்
மன்னிக்க மாட்டேன்.
இவன்
கோடி யுகங்கள்
கொடிய உலகில் நரகில்
நலிந்து கிடக்கட்டும்.
பற்பல
பிறவிகள்
பாம்பாய்
புழுவாய்
பூச்சியாய்
நெளிந்து
பறந்து
ஒளிந்து
வாழட்டும்.
குருவைக்
கண்டும்
மலைப்பாம்பு போல்
உட்கார்ந்திருந்தவன்
பாம்பாய் மாறி
மரப்பொந்தில்
கிடக்கட்டும்!"
சிவபெருமானை
அப்படியொரு
கோபத்தில்
யாருமே
பார்த்திருக்க மாட்டார்கள்.
குருதான்
சாபக் கணைகளுக்கு
இடையில்...
''சிவ... சிவா..
அறியாமல்
செய்துவிட்டான்
மன்னியுங்கள் -
அருள்
தாருங்கள்!
அவன்
என்
வளர்ப்புப்
பிள்ளை..."
சிவபிரான்
குருவின்
வார்த்தைகளால்
கொஞ்சம்
மனம் இரங்கினார்.
குரு
பற்றிய பாதங்களில்
கண்ணீர் நிறையவே
தோள் பற்றி
எழ வைத்தார்.
''சரி... சரி...
சாபம்
தந்தது
தந்ததுதான்.
பலித்தே தீரும்.
இனிமேல்
அவன்
இராமபிரானைத்
தூற்றக் கூடாது.
அப்போதுதான்
பிறவி தோறும்
போற்றும் வண்ணம்
வாழ்க்கை அமையும்.
உங்களைப்
போன்ற
பிரம்ம ஞானிகளை
அவமதிக்கக் கூடாது.
உங்கள்
வேண்டுதலால்
இவன் இதுநாள் வரை
சேமித்து வைத்திருக்கும்
ஞானம்
எப்பிறவியிலும்
குறையாது.... தாழாது.
பிறவிகள்
தோறும்
புதுப்பிறவி
எடுக்கட்டும்.
ராம பக்தி
நிலைத்திருக்கட்டும்."
புஜண்டரும்
குருவும்
சிவபிரானை
வணங்கி
மகிழ்ந்தனர்.
அது தொடர்ந்து
பாம்பாய்
ஒரு பிறவி...
பற்பல
ரூபத்தில்
பல பிறவிகள்
எடுத்து வந்த
புஜண்டர்
காகமாய்
எடுத்த
பிறவிதான்
நீண்ட காலம்
நீடித்திருப்பது.
அக்காலமே
காகபுஜண்டரின்
வரலாறு அறிய
வாய்ப்பாயிருப்பது.
சாபம்
பெற்ற பின்னர்
தொடர்ந்த
பிறவிகள் தோறும்
காகபுஜண்டரின்
உள்ளத்தில்
ராமபிரானே
நிரம்பி
இருந்தார்.
அயோத்திக்குச்
செல்வதும்
ராமருடன்
விளையாடி
மகிழ்வதும்
ஒவ்வொரு
அவதாரத்திலும்
நிகழ்ந்தது.
இப்படி
இன்னொரு பிறவியில்
புஜண்டர்
ஓர்
அந்தணர்
மகனாய்ப்
பிறந்தார்.
ராம நாமம்
உள்ளத்திலும்
உதட்டிலும்
பவனி வந்தது.
கண்கள்
ராமனின்
திருவடிக்காக
ஏங்கின.
செவிகளோ
ராமனின்
சொற்களுக்காகத்
தவமிருந்தன.
ராமரைத்
தரிசிக்கப்
பல இடங்களில்
அலைந்தார்.
திரிந்தார்.
மேருமலைக்கு
வந்தார்.
அங்கே மலை முகட்டில்
ஒரு தவமுனிவர்.
லோசம முனிவர்.
அவரடி
தொழுது
புஜண்டர்
கேட்டது
ராமரைப் பற்றியே!
"பிரம்ம ஞானம்
கைவரப் பெற்ற
மகா ஞானியே!
ராம தரிசனம்
காண வேண்டும்.
வழி சொல்லுங்கள்.''
விழிகள் பிரகாசிக்க
புஜண்டர் கேட்டார்.
''தம்பி...
உருவ வழிபாடு
சாரமற்றது.
பிரம்மமே
சத்தியமானது.
பிரம்மத்தைப்
பார்.
உணர்.
அதுவே
சாஸ்வதமானது.
பிரம்மம்
என்பது
எது தெரியுமா?
நீயே பிரம்மம்.
உனக்கும்
அதற்கும்
வேறுபாடில்லை."
முனிவர்
எளிமையாகச்
சொன்னார்.
''ஜீவராசிகளும்
பிரம்மமும்
ஒன்றெனில்
தெய்வபக்தி
என்பது எது?
மாந்தர் வேறு
கடவுள் வேறு
என்றில்லாவிட்டால்
தெய்வபக்தி
எப்படிச்
சாத்தியம்?"
வாதாட
ஆரம்பித்தார்
புஜண்டர்.
வாதங்கள்
வம்பாய்த் தொடர
கோபப்பட்டார்
பிரம்ம ஞானி.
''ஐயா...
பிரம்மம்
உருவமில்லாதது.
அதுவே
சிறந்தது
என்கிறீர்களே!
பிரம்மம்
சலனமற்றது.
புலன்களால்
சிதைந்து விடாது.
கவலையற்றது.
ஆனந்தமானது
என்கிறீர்களே!
பிரம்மமான
உங்களுக்கேன்
கோபம்
வருகிறது?
பிரம்மமும்
ஜீவராசிகளும்
ஒன்றென்றால்
ஜீவராசிகளுக்கு மட்டும்
எதற்கு
இத்தனை
கவலைகள்...
பிரச்சினைகள்...
பிரம்மம்
மட்டும்
கவலையின்றி
பிரச்சனைகளின்றி
இருக்கிறதே!
கவலையற்றது
பிரம்மம்
என்கிறீர்களே
எப்படி
சுவாமி?
எல்லாவற்றிலிருந்தும்
விடுதலை
வேண்டுமெனில்
ராம பக்தியே
வழி காட்டும்.
பக்தி மார்க்கமே
சிறந்தது.
உருவ வழிபாடே
உயர்ந்த வழிபாடு.
உண்மை வழிபாடு."
உரத்துச் சொன்னார்
புஜண்டர்.
லோசம முனிவர்
பதில் சொல்லவில்லை.
பதிலாக
கோப மிகுதியில்
சாபம் தந்தார்.
''அறிவுத் தெளிவு
அறவே இல்லாதவனே!
என்
உபதேசங்களை
அலட்சியம்
செய்கிறாயா?
உயர்ந்த உண்மைகளை
நம்ப
மறுக்கிறாய்!
காக்கைதான்
யாரையும்
நம்பாது.
எல்லாவற்றுக்கும்
பயப்படும்.
உணவிடுபவரை
விட்டு
பயந்து
விலகிப் போகும்.
உனக்கும்
காக்கைக்கும்
வேறுபாடு இல்லை.
காக்கையாய்ப்
போ!''
புஜண்டர்
காகமானது
குறித்துக்
கவலைப்படவில்லை.
முனிவரை
வணங்கி
விண்ணில்
பறந்து போனார்.
ராம நாமமே
உணர்வாய்
உயிராய்
விரவிப் போனார்.
காகபுஜண்டரின்
தியானத்தில்
ராம பிரானே
நிறைந்திருந்தார்.
காலம்
சுழன்றது.
புஜண்டரின்
ராம தியானம்
சாபம் தந்த
முனிவரை
உலுக்கியது.
'இப்படி ஒரு
ராம பக்தரா!'
வியந்தார்
லோசம முனிவர்.
புஜண்டரை
அழைத்தார்.
"தம்பி...
இனி
நீயென்
சீடன்.
நீ
அறிந்த
இராம சரிதம்
ஒரு புறம்
இருக்கட்டும்.
சிவபிரானே
எனக்கொரு
ராம கதை
சொல்லி
உள்ளார்.
உண்மையான
ராம பக்தனான
உனக்கு அதைச்
சொல்கிறேன்
கேள்.
தெய்வம்
சொன்ன
ராம கதையைச்
சீடனுக்குச்
சொன்னார்.
ராம
மந்திர உபதேசம்
தியான வழிமுறை
கற்பித்தார்.
அரவணைத்தார்
ஆட்கொண்டார்.
''சீடனே!
இனி
நீ விரும்புவது
எல்லாம்
கைகூடும்.
நீ விரும்பினால்
மட்டுமே
மரணம் கூட
நிகழும்.
விரும்பும்
உருவை
நீ எடுக்கலாம்.
காலம்
குணம்
செயல்
இயல்பு
குறை
போன்றவற்றால்
எழும்
துயரம்
ஏதும்
உனக்கிருக்காது.
முன்பு
சாபம்
தந்த
குரு
இப்போது
ஆசி
தந்தார்.
பின்
காலம் தோறும்
ராமன்
புகழ்பாடும்
வாழ்வைக்
களிப்புடன்
கழித்து
வரலானார்
காக ரூப
சித்தபிரான்.
காகபுஜண்டர்
காக உருக்
கொண்ட
கதை இதுவெனச்
சிலர்
சொல்கிறார்கள்.
(காகபுஜண்டர் பாகம் 4 தொடரும்)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
Om namasivaya Sri Ramajeyam
பதிலளிநீக்கு