சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சிவவாக்கியர் (பாகம் 3)
சிவவாக்கியர்
பாகம் 3
-மாரிமைந்தன் சிவராமன்
சிவவாக்கியர்
வரலாற்றை
இன்னமொரு
விதமாயும்
சொல்கிறார்கள்.
எல்லாம்
சிவமயம்
என்றிருந்த
சிவவாக்கியரை
பேயாழ்வார்
ஒரு சமயம்
தெளிவுற
போதித்து
மாற்றினார்.
பக்திசாரர்
எனப்
பெயர் பெற்ற
வைணவராக்கினார்.
அவரே
திருமழிசையாழ்வார்!
இதனால்தான்
சிவவாக்கியர்
முதலா?
திருமழிசையாழ்வார்
முதலா?
எனும்
சர்ச்சை
இருக்கிறது.
பாடல்கள்
படைத்தார்.
பாமரருக்குப்
புரியும்
பாடல்கள் புனைந்தார்.
புலவர்களுக்கேற்ற
கவிதைகள் தந்தார்.
ஞானம் தெளிய
ஞானப்பாடல்கள்
அருளினார்.
'தெள்ளுதமிழ்க்
கவிவாணர்
இவர்க்கீடுண்டோ?'
என வியக்கிறார்
போகர் பெருமானே
எனில்
அவர் தமிழ்த்திறனைக்
கணித்திடுங்கள்.
மூட நம்பிக்கைகளை
விரைந்தோட வைக்கும்
பாடல்கள்
சிவவாக்கியரின்
படைப்புகள்.
சிவவாக்கியர்
ஆத்திகரா
நாத்திகரா
எனப்
பட்டிமன்றமே
வைக்கலாம்.
அவர்
ஞானமிகு நாத்திகர்
மானமிகு ஆத்திகர்
என்பதே
சாலப் பொருந்தும்.
சாட்டை
அவரது வார்த்தைகள்!
சுளீர்
எனத் தாக்கும்
அவரது கருத்துக்கள்.
'ஒரு கல்லை நட்டு
அதற்குப்
பூ வைத்து
மந்திரம்
ஜெபிப்பது
எதற்காக?
அந்தக் கல்
பேசுமா?
சமையல்
ருசியை
சமைக்கப்பட்ட
சட்டியும்
எடுக்கும்
அகப்பையும்
அறியுமோ?
உண்மையில்
இறைவன்
உன்னுள்ளில்
அல்லவா
இருக்கிறான்!'
எனப்
பாடலில்
அறைவார்
சிவவாக்கியர்.
ஓர் ஆச்சரியம்!
பெண்மையைப்
போற்றும்
சிவவாக்கியர்
‘தீட்டு'
எனும்
சொல்லையும்
செயலையும்
அக்காலத்திலேயே
கண்டித்திருக்கிறார்.
பெண்களை
மாதவிலக்கின்
போது
தீட்டெனச்
சொல்லி
விலக்கி
வைப்போரைத்
திட்டித் தீர்க்கிறார்.
தொட்ட
இடந்தோறும்
தீட்டு தீட்டு
எனக்
குறை கூறுவோரை
விட்டு வைக்காமல்
திட்டி வைக்கிறார்
தனது பாடலில்.
தமிழகத்தில்
சித்தர் மார்க்கத்தில்
இருப்பவரை விட
பகுத்தறிவாளர்கள்
ஆண்டாண்டு காலமாக
அதிகம் பாடியது
சிவவாக்கியர்
பாடல்களைத்தான்.
நடைமுறையில்
இருக்கும்
கடவுள் மறுப்பு போல்
கருத்துக்கள் கொண்ட
கவிதைகள் பலவும்
சிவவாக்கியருடையதே...!
ஆனால்
உண்மையில்
அவர்
கடவுள்
மறுப்பாளர் அல்ல.
சடங்குகளின்
போலித்தன்மை
பண்பாட்டின்
சீர்கேடுகள்
போன்றவற்றைத்
தோலுரித்துக்
காட்டிய புரட்சியாளர்
சிவவாக்கியர்.
அரியும்
சிவனும்
ஒன்றென
சமரசம் சொன்னார்
சிவவாக்கியர்.
அவரது
பாடல்கல்ள்
சிவ
மயமாயிருக்கும்
இராம நாமமும்
உடனிருக்கும்.
சைவம்
வைணவம்
சமணம்
பௌத்த
பேதங்கள்
தலைதூக்கிய
காலத்தில்
சமரச ஞானியாக
விளங்கியவர்
சிவவாக்கியர்.
அந்த வகையில்
சிதம்பரம்
வள்ளல்
இராமலிங்கப் பெருமான்
அருளிய
சுத்த சமரச மார்க்கத்தின்
முன்னோடி
சிவ வாக்கியரே.
சிவவாக்கியரை
சைவர்
எனக்
கொண்டாடுவோர்
உண்டு.
காரணம்
அவர் பாடல்களில்
ஐம்பது தடவை
சிவாயம்
என்ற சொல்
அமர்ந்திருக்கும்.
இல்லையில்லை...
திருமழிசை
ஆழ்வார்தான்
சிவ வாக்கியர்
என
வைணவக் கொடி
தூக்குவோரும் உண்டு.
சிவவாக்கியரும்
திருமழிசை ஆழ்வாரும்
ஒருவரே
என்றும்
ஓர் ஆய்வு
உள்ளது.
இருவர்
பாடல்களிலும்
இருக்கும்
யாப்பு முறை
ஒரே மாதிரியாக
இருப்பதும்
அதனால்
சந்தத்தில்
ஒத்திருப்பதும்
இருவரது வாழ்வு
நிகழ்வுகளும்
ஒத்திருப்பதும்
இதற்குக் காரணமாகச்
சொல்வர்.
'குரு பரம்பரா ப்ரபாவம்'
எனும்
நூல் கூறும்
திருமங்கை ஆழ்வார்
சரிதையும்
புலவர் புராணம் கூறும்
'சிவவாக்கியர் சரிதையும்’
சில
ஒருமித்த நிகழ்ச்சிகள்
கொண்டவை
என்பதும் உண்மையே!
எச்சமயமும்
ஆழச் சாராத
ஆழ்மனச் சைவர்
அருந்தவ வைணவர்.
அதே சமயம்
சாதி மதம்
கோயில் என எதையும்
விட்டு வைக்காது
சறுக்கல் துளியுமின்றி
சாடக் கூடியவர்
சிவவாக்கியர்.
இவரது
நூலுக்கு
சிவவாக்கியம்
என்பதே பெயர்.
அதுவே பின்னாளில்
சிவவாக்கியர் பாடல்கள்
என்றாயிற்று.
சிவவாக்கியம்
நாடிப்பரீட்சை
சிவவாக்கியரின்
படைப்புகள்.
அவர்
பாடியவற்றில்
520 பாடல்கள்
காணக்
கிடைக்கின்றன.
சிவவாக்கியர்
சித்தர் பெருமானாய்
உலகறிந்த நிலையில்
உலாவந்த போது
ஒரு சில அன்பர்கள்
காண வந்தனர்.
"சுவாமி!
சித்தர் தரிசனம்
கோடிப் பாவ நாசம்
என
அறிவோம்.
உங்கள் அருள்
வேண்டும்"
என்றனர் அவர்கள்.
அவர்கள் நோக்கம்
அறிந்த சித்தர்
அவர்கள்
தேடி வந்தது
அருளல்ல
பொருள் எனத்
தெளிந்து புரிந்து
புன்னகை பூத்தார்.
"சுவாமி!
தங்கள்
சித்துகளைக்
காண விரும்புகிறோம்...
கூடவே இருந்து
ரசவாதம் கற்று
தங்கம் செய்து
உலகைக் காக்க
வறுமையைப் போக்க
விரும்புகிறோம்."
வந்த நோக்கத்தை
வலிந்து
சொன்னார்கள்.
மெலிதாய்ச் சிரித்த
சிவவாக்கியர்
"அன்பர்களே!
உங்களைப்
போன்றவர்
இப்படித் தங்கம்
தங்கமெனத்
தொந்தரவு
தருவீர்கள்
எனப் பயந்தே
சித்தர்கள்
எவர் கண்ணிலும்
படுவதில்லை.
சித்தர்கள்
தெய்வ
மயமானவர்கள்.
அவர்களை அதிகம்
நெருங்காதீர்.
அவர் சொல்
கேட்காமல் போனால்
சாபமிடுவார்கள்.
வம்பாய்ப் போய்விடும்.
பொருளாசை
ஒழியுங்கள்!
தங்கம் தேடாதீர்கள்!
சித்தத்தை
சிவனிடம்
வையுங்கள்.
நீங்களே
தங்கமாவீர்கள்.."
உபதேசம்
தந்தார்.
அதுபோல
வழங்கிய
உபதேசங்களே
சிவவாக்கியம்
ஆனது.
திருமூலர் வர்க்கத்து
சிவவாக்கியரின்
சீர்மிகு சீடர்கள்
பிரம்மச் சித்தர்
வாலைச் சித்தர்
ஆகிய
இருவர்.
சிவவாக்கியர்
சித்தி அடைந்தது
கும்பகோணத்தில்.
சிவன் மலையில்
ஒளிரூபமாய்
சிவவாக்கியர்
வாழ்ந்ததாக
ஐதீகம்.
இங்கு
சிவவாக்கியருக்குத்
தனி சன்னதியே
உள்ளது.
திருமழிசை
இவரது
கிருபை பொருந்திய
திருத்தலம்.
புதுக்கோட்டை
தஞ்சைக்கு
இடையே
பெருங்களூர்
எனும்
தலம்.
இங்கே
சிவவாக்கியர்
சமாதி
மண்டபம்
உள்ளது.
இங்கே
ஜீவசமாதி
அடைந்ததாக
ஓர் உறுதியான
ஆய்வு
கூறுகிறது.
கும்பகோணத்தில்
சிவவாக்கியரும்
கும்பமுனியும்
ஒரு சேர
அருள் பாலிப்பது
ஆதிகும்பேசுவரர்
ஆலயத்தில்.
கும்பேசுவரர்
ஆலயத்தில்
மூலவர்
வீற்றிருக்கும் இடமே
சிவவாக்கியரின்
ஜீவசமாதி
என்கிறது
ஒரு குறிப்பு.
சதுரகிரியில்
சிவவாக்கியர்
இன்றும்
அருவாய்
அருள்பாலிக்கிறார்.
ஆண்டுகள் பல
சதுரகிரி
மலைக்கு
செல்பவர்
உணர்வர்
இந்தப்
பேருண்மையை!
சிவவாக்கியர்
மலையே
மருவி மருவி
சிவன்மலை
ஆனதாம்.
சிவன்மலை
முருகன் கோயிலில்
சிவவாக்கியர்
தவமிருந்த இடம்
தியானத்திற்கு
ஏற்ற இடம்.
சிவவாக்கியரின்
பெருங்கருணைக்கு
உகந்த இடம்.
கண்டிப்பாய்ச்
செல்லுங்கள்.
பேரருள்
பெற்றுச்
செல்லுங்கள்.
(சித்தர் சிவவாக்கியர் திவ்விய சரித்திரம் - நிறைவு)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக