சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - காகபுஜண்டர்(பாகம் 2)


காகபுஜண்டர்

பாகம் 2

மாரிமைந்தன் சிவராமன்

தன் வரலாறாய்
தவஞானி
சொன்னதும்
பின்னாளில்
போகர் பெருமான்
தான் அருளிய
சப்த காண்டத்தில்
பாடல்களால்
புனைந்ததும்
உரோம ரிஷி
உரைத்ததும்
சுக பிரம்மரிஷி
ஞான சூத்திரத்தில்
கூறி மகிழ்ந்ததும்
வசிஷ்டர்
ராமபிரானுக்குக்
காகபுஜண்டர்
குறித்து
விளக்கிச்
சொன்னதும்
அபிதான
சிந்தாமணியில்
உள்ளதும்
காகபுஜண்டர்
வரலாறாய்
விரவிக்
கிடக்கிறது.

ஞான வாசிஷ்டம்
நூலில்
வசிஷ்டர்
காகபுஜண்டர் குறித்து
நிறையச் சொல்கிறார்.

அவற்றை
எல்லாம்
ஒன்றாகக் கலந்து
இனிச் சுவைப்போம்.


அம்பிகையின்
பரிவாரத்
தேவதைகள்
ஜயா
விஜயா
அலம்புசை
உத்பயை
சக்தா
ரக்தா
ஜயந்தி
அபராஜிதா
ஆகியோர்.

இத்தேவதைகள்
எட்டுப் பேரும்
ஒரு சேர
ஒரு விழா
நடத்தினர்.

விழா எனில்
அக்காலத்திலும்
ஆட்டமும் பாட்டமும்
அமர்க்களமாய் இருந்தது.

அதி மதுர மதுவும்
அதில் இருந்தது.

தேவதைகளின்
வாகனங்கள்
அன்னங்கள்.
பெண் அன்னங்கள்.

அலம்புசைக்கு
மட்டும் 
வாகனம் 
காக்கை.

அதன் பெயர்
சண்டன். 

ஆக 
ஏழு அன்னங்களும்
ஒரு காக்கையும்
விருந்துண்டன.
கூடவே கள்ளுண்டன.

அக மகிழக்
கூடிக் களித்தன.

விளைவு?

பெண் அன்னங்கள்
கர்ப்பமுற்றன.

ஒரு நாள் 
21 முட்டைகள் 
இட்டன.

பிறந்த குஞ்சுகள்
ஒன்றைத் தவிர
இருபதும்
அன்னங்கள்.

ஒன்று மட்டும் 
காக்கை.

விருந்துக்கு
வந்திருந்த
சிவ பார்வதியின்
புண்ணியத்தால்
சிவகலைக்
கலப்பால்
பிறந்ததே
அந்த காகம்.

அதன் பேர்
புஜண்டர்.

அன்னங்கள் யாவும்
தக்க தருணம் வரை
வாழ்ந்து
மகிழ்ந்து
முக்தி அடைய
புஜண்டர் மட்டும்
தந்தை சொல் கேட்டு
மேருமலை வந்து
கல்லால மரத்தில்
தவமிருந்தார்.

காலங்கள் மாறி 
புது யுகங்கள்
புலரும்
போதெல்லாம்
பழைய யுகம்
அழிந்து போகும்.

அப்போதெல்லாம்
காகபுஜண்டர்
மேலும்
உயரே பறந்து
அழியாதிருப்பார்.
அழிவதை எல்லாம்
பார்த்திருப்பார். 

பிரம்மன்
மீண்டும்
புது யுகம்
படைக்கும் போது
கல்லால மரம்
வந்து
குடியேறி விடுவார்.
தவம்
தொடர்வார்.

இதுவே
அவர் ஆயுள்
ரகசியம்.

ஞான சாதனை
கண்ட
காகபுஜண்டரின்
மரணமில்லா
அதிசயம்.

இந்த
விஷயம்
கயிலாயத்தில் கூட
பிரசித்தி
பெற்றது.

ஒரு காலத்தில்
சிவபெருமானுக்கு
ஒரு சந்தேகம்
எழுந்தது.

கயிலாயத்
திருச்சபையில்
தேவர்களும்
தெய்வங்களும்
கூடியிருந்த வேளை.

தனது சந்தேகத்தை
முன் வைத்தார்
சிவபிரான்.

"உலகமே
பிரளத்தில்
அழியும் போது
நம்
எல்லோருக்கும்
குருவான
பரப்பிரம்மம்
எங்கிருப்பார்?

நீங்கள்
எங்கே
இருப்பீர்கள்?
பிரம்மா
விஷ்ணு
ருத்திரன்
மகேஸ்வரன்
சதாசிவம்
ஆகிய
ஐவரும்
எங்கு
உறைவர்?"

ஈசனின்
சந்தேகம்
அடுத்தடுத்த
கேள்விகளால்
நிரம்பித்
தவித்தது.
அரங்கில்
அமைதி.
அப்படியொரு
அமைதி.

யாரிடமும்
பதிலில்லை.

பதினாறு
வயதுப்
பாலகன்
மார்க்கண்டேயன்
அருகிலிருந்த
திருமாலிடம்
மெல்லக்
கேட்டான்.

"சுவாமி....
எல்லோரும்
முழிக்கிறார்களே!
விழிப்பேற்ற
நீங்களாவது 
வழி
சொல்லுங்கள்!”

திருமால்
எழுந்தார்.

"லோக நாதா!
பரமேஸ்வரா!

இது பற்றி
சில
சித்தர்களும்
ரிஷிகளும்
அறிந்திருக்கலாம்.

காகபுஜண்டர்
என்ற
பரிபூரண சித்தருக்குக்
கண்டிப்பாய்த்
தெரிந்திருக்கும்.

அவரை
அழைத்துக்
கேட்டு
தங்கள்
சந்தேகம்
தீர்க்கப் பெறலாம்."

"அப்படியே
ஆகட்டும்!
அவரை
அழைத்து
வாருங்கள்!"

சிவன்
ஆணையிட்டார்.

"அவரை
அழைத்து வர
வசிஷ்ட ரிஷியே
சரியான நபர்.
தகுதியான நபரை
அழைக்க
சரியான நபர்.''
திருமால்
வழிமொழிந்தார்.

சிவபிரான்
வசிஷ்டரை
நோக்க
அவர்
காகபுஜண்டரைக்
கையோடு
அழைத்து வர
துரிதமாய்க்
கிளம்பினார்.

''மார்க்கண்டேயா....!

எனக்குத்
தெரியாத
ஒன்றைக்
கூறிவிட்டாயே!
சபாஷ்... சபாஷ்''
எனப்
பாராட்டிய
சிவபிரான்
திருமாலைப் பார்த்து

''காகபுஜண்டரைப்
பற்றி
உமக்கெப்படித்
தெரியும்?"
என
புருவம் வளைய
வினாத் தொடுத்தார்.

"பரமேஸ்வரா!
ஒரு முறை
பிரளயத்தின் போது
எல்லாமே
அழிந்து போயின.

எனக்கு
வேலையில்லை.
சித்துகள் கூட
ஒடுங்கியிருந்தன.

ஆலிலை மேல்
அறிதுயில்
கொண்டிருந்தேன்.

அருகில்
என்
சக்கரம்
எப்போதும் போல்
சுழன்று
கொண்டிருந்தது.

அதன்
சுழற்சியை
அதுவரை
தடுத்தவர்
யாருமில்லை.

அதுசமயம்
புஜண்டர் வந்தார்.
சக்கரத்தை
நிறுத்தி விட்டுத்
தாண்டிச் சென்றார்.
அதுபோதே
அவர்
கீர்த்தி உணர்ந்தேன்.

அவர் வல்லவர்.
அவரே
உங்களுக்கு
நல்ல பதில்
தர வல்லவர்."

வசிஷ்டர்
புஜண்டரை
சில கணத்தில்
கயிலாயம்
அழைத்து
வந்தார்.

காகபுஜண்டர்
அவையையும்
அவைத் தலைவரையும்
வணங்கினார்.

"ஐயனே!
பிரளயத்தின் போது
எல்லாம் அழியும்.
எதுவும்
விதிவிலக்கல்ல,
எவரும்
விலக்கல்ல.

நான்
எத்தனையோ
யுகப் பிரளயங்களைப்
பார்த்திருக்கிறேன்.

எத்தனையோ
பிரம்மாக்கள்....
எத்தனையோ
விஷ்ணுக்கள்....
எத்தனையோ
சிவன்கள்
அழிந்ததைக்
கண்டிருக்கிறேன்.

அடுத்து
புது யுகங்கள்
புலர்வதையும்
பார்த்து
மெய் 
சிலிர்த்திருக்கிறேன்."

கயிலாய
திருச்சபை
காகபுஜண்டரின்
விரிவான பதிலில்
தெளிவுற்றது.

சிவபிரான்
மனமகிழ்ந்தார்.
புஜண்டரால்
சந்தேகம் நீங்கித்
தெளிவு பெற்றார்.



வர ரிஷி
என்றொரு
மகரிஷி.

வாராது வந்த
அந்த
வர ரிஷியின்
சாபத்தால்
வெள்ளாட்டின்
வயிற்றில்
பிறந்தவர்
காகபுஜண்டர்
என்கிறார்
போகர்.

வெள்ளாடு
என்பது
விதவையைக்
குறிக்கும்.
எனவே
விதவையின்
மைந்தனே
காகபுஜண்டர்
என ஒரு
விளக்கமும்
உண்டு.

திருதராட்டிரனனும்
பாண்டுவும்
சந்திர குலத்தில்
விதவைகளின்
புதல்வர்களாய்
வியாசரின் அருளால்
பிறந்தவர்கள்.

அவ்வகையில்
விதவை
வயிற்றில்
உதித்த
காகபுஜண்டரும்
சந்திர குலத்தவர்
என்கிறது
ஒரு குறிப்பு.

அக்கினி குலத்தில்
வன்னியர் இனத்தில்
பிறந்தவர்
என்கிறார்
போகர் பிரான்.

காகபுஜண்டர்
முட்டையிலிருந்து
வந்தாரா
வெள்ளாட்டின்
பிள்ளையாய்
அவதரித்தாரா
என்பது
பற்றி
உண்மை சொல்ல
எவரும் இல்லை.



இராமகதையில்
காகபுஜண்டருக்கு
முக்கிய
இடமுண்டு.

ஆம்...!
காகபுஜண்டரின்
பிரிய தெய்வம்
சீதாப்ரியன்
ராமபிரானே.

எப்போதெல்லாம்
ராமாவதாரம்
நிகழ்கிறதோ
அப்போதெல்லாம்
பலயுகம் வாழும்
காகபுஜண்டரும்
அயோத்தி சென்று
ராமபிரானின்
அருகிலிருப்பதை
வழக்கமாக்கிக்
கொள்வார்.

சிறு காக்கையாய்
உருமாறி
ராமபிரானின்
பால பருவத்தை
ரசிப்பார்.

ராமன்
உண்ணும் போது
சிதறும்
உணவுகளை
காக்கை உருவில்
பிரசாதமாக
எடுத்து
ருசிப்பார்.

ராமபிரானின் 
பால பருவத்து
விளையாட்டுத்
தோழன் 
காகம் உருவில்
இருந்த
காகபுஜண்டர்.

சின்னக்
குழந்தையாய்
இருந்தபோது 
ராமர் 
தோழர் காகத்தைக்
காணவில்லை 
என்று அழுவாராம்.

ஒருமுறை
இருவருக்கும்
ஓடிப் பிடிக்கும்
விளையாட்டு.

ராமர்
துரத்திப் பிடிக்க
முயற்சிக்க
காகம்
தப்பி ஓடி
ஆகாயத்தில
உயரப் பறந்தது.

ராமரால் இனி
பிடிக்க முடியாது
என
ஆகாயத்திலிருந்தபடி
காகம்
பெருமூச்சு
விட்டபோது
ராமரின்
திருக்கரங்கள்
விண்வரை
நீண்டு
காகத்தைப்
பிடித்தன.

மயங்கிய
காகம்
கண் விழித்த போது
ராமரின்
கைப்பிடியில்
இருந்தது.

பின்
நடந்ததுதான்
அதிசயம்.
பேரதிசயம்.

கையிலிருந்த
காக ரூப
காகபுஜண்டர்
ராமரின்
வாயால்
இழுக்கப்பட்டார்.
இறைவனின்
திருவயிற்றில்
அடைக்கலமானார்.

அங்கே
ராமபிரான் 
வயிற்றுக்குள்
காகபுஜண்டர்
கண்டது
எவரும்
காணாதது.

பலவித
உலகங்கள். 
சிவன்கள்.
விஷ்ணுக்கள்.
பிரம்ம தேவர்கள் .
ருத்திரர்கள்.
சூரிய சந்திரர்கள்.
முனிவர்கள்.
சித்தர்கள்.
பற்பல அண்டங்கள்.

கூடவே ராமரும் 
காகபுஜண்டரும். 

வயிற்றுக்குள்ளேயே
கலங்கிப்
போனார்
பலகாலம் கண்ட
காகபுஜண்டர்.

ராமபிரான்
வாய்விட்டுச்
சிரித்தார்.

புஜண்டர்
வாய்ப்புறம்
வழியாக
வெளியே
வந்ததார்.

இறை விளையாட்டு
இனிது முடிவுற
வெளியே வந்தவர்
"இறைவா...
காப்பாற்று
என்னைக்
காப்பாற்று....''
என வணங்கி
நின்றார்.

"புஜண்டரே
பயப்பட
வேண்டாம்.

என்ன
வரம்
வேண்டும்?

தயங்காது
கேள்!

எதுவானாலும்
தருவதற்குத்
தயாராய்
இருக்கிறேன்.

உனக்கெது
வேண்டும்?

அஷ்டமா சித்திகளா?
தத்துவ ஞானமா?
வைராக்கிய அதிர்ஷ்டமா?
வேறெது வேண்டும்?

கேள்...''

கருணையாய்க்
கேட்டது
இறைவனின் திருக்குரல்.

''ராமா!
எனக்கெதுவும்
வேண்டாம்.

உன்
திருவடிகளில்
நீங்காத
பக்தி
ஒன்றே
போதும்."

பாதம் பணிந்து
காகபுஜண்டர்
கண்ணீர் மல்கக்
கேட்டார்.

ராமபிரான்
வியந்து
போனார்.

"புஜண்டா!

இதுவரை
இப்படியொரு
வரத்தை
யாரும்
எவரும்
எவரிடமும்
கேட்டதாய்த்
தெரியவில்லை.

பக்தியை
எவரும்
வரமாய்க்
கேட்டதில்லை.

நீ
ஒப்பற்றவன்.
நீடு வாழ்க!

உனக்கு
எல்லாம்
கை கூடும்!"

ஆசி தந்தார்.
விடை தந்தார்.

காகபுஜண்டர்
காடேகினார்.
தவம் தொடர்ந்தார்.

(காகபுஜண்டர்: பாகம் 3 - தொடரும்)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)