சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சிவவாக்கியர் (பாகம் 2)


சிவவாக்கியர்

பாகம் 2

-மாரிமைந்தன் சிவராமன்

ஒரு நாள்
காட்டில்
பதமான
மூங்கிலொன்றை
இதமாக
வெட்டிக் 
கொண்டிருந்தார்
சிவவாக்கியர்.

மரத்தினின்றும்
மூங்கிலிலிருந்தும்
சிதறிச் சூழ்ந்தன
பொன் துகள்கள்.

உற்றுப் பார்த்தார்
சிவவாக்கியர்.

சற்றுத் தள்ளி
காட்டிடை
வெட்டிக் 
கொண்டிருந்த
கட்டிளம் மனையாளும்
ஓடி வந்து பார்த்தாள்.

பிரமித்தாள்.

அத்தனையும்
தங்கத் துகள்கள்...
கண்ணொளி
பறித்து விடும்
பேரொளிப் பரல்கள்.

கையில்
எடுக்க
ஓடினாள்
மங்கை நல்லாள்.

'தொடதே..
அது வேண்டாம்..!'
சிவவாக்கியரை
அறியாமலேயே
உரத்த குரல்
அவருள்ளிலிருந்து
எழுந்தது.

கணவன்
பேச்சை
மறுத்தறியா
குறத்தி மகள்
அப்படியே சற்று
புறத்தில் நின்றாள்.

"அது வேண்டாம்
அது
ஆட்கொல்லி...
அழித்து விடும்"
சிவவாக்கியர்
இவ்வாக்கியத்தைத்
திரும்பத் திரும்பச்
சொல்லியபடியே
இருந்தார்.

இல்லறம்
துறவறம்
இரண்டுக்குமிடையே
ஒரு மெல்லிழை.
அது தந்த
ஞானம்.

கூடவே
அடங்கியிருந்த
ஐம்பது 
ஆண்டு காலத் 
தவம்.

முற்பிறப்பின்
வினைப் பயன்.

"திரும்பலாம்"
சிவ வாக்கியர்
கட்டளை போல்
சொல்ல
அடி தொடர்ந்தாள்
அவர் பத்தினி.

அதற்குள்
சிவவாக்கியரின்
உரத்த குரல்
அவ்வழி சென்ற
நால்வரின்
செவிகளில் ஏற
அவர்களும்
வந்து சேர்ந்தனர்.

அவர்கள்
நால்வரும்
மனையாளின்
உறவினர்.
நடந்ததைக்
கேட்டனர்.
துகள்களைப்
பார்த்தனர்.

வியந்து
நின்றனர்.
விஷமமாய்ச்
சிரித்தனர்.

"சுவாமி...
இது
தங்கம்
போலிருக்கிறதே...
தகதகக்கிறதே...!

இதைப்போய்
பேய்
என்கிறீர்களே!

நாங்கள்
வியப்படைந்து
நிற்கிறோம்!
நீங்களோ
பயமடைந்து
ஓடுகிறீர்களே!

இதை
பேய்
பிசாசு
எமன்
உயிர்க்கொல்லி
என்கிறீர்கள்...!

நீங்கள்
சொல்வதுதான்
உண்மையாயிருக்கும்.
ஓடுவதே
உத்தமம்!"

சிவவாக்கியர்
"ஆமாம்... ஆமாம்"
எனச் சொல்லியபடி
மனைவியோடு
அவளைக் கையோடு
இழுத்தபடி
வீடு நோக்கி ஓடினார்.

நால்வருக்கும்
கொண்டாட்டம்.
எத்தனை
ஆண்டுகள்
ஓடி உழைத்தாலும்
கிடைக்காத
தங்கக் குவியல்.
பல தலைமுறைக்குப்
பஞ்சமிருக்காது.

ஒருவன்
பெரிய துணி
விரிக்க
தங்கத் துகள்களை
மூவரும்
அது முழுக்க நிரப்பி
மூட்டையாய்க் கட்டினர்.

"அப்பா...
கவனம்
நால்வருக்கும்
சம பங்கு...
ஊரில்
யாரிடமும்
சொல்லி
வம்பு
சேர்க்க
வேண்டாம்.
எச்சரிக்கை!"
மூத்தவன் சொல்ல
அனைவரும்
ஏற்றனர்.

வாய்மொழி
உடன்படிக்கை
உடன்
அமலுக்கு வந்தது.

காடு
கடந்துதானே
ஊருக்குச் செல்ல
வேண்டும்? 

பகலில் சென்றால்
பலர் கண் படுமே!
இரவில்
செல்ல 
முடிவெடுத்தார்கள்.

அதுவரை
பசியாதிருக்க
இருவர்
ஊர் சென்று
உணவு
வாங்கி வரத்
தீர்மானித்தார்கள்.

மீதம் இருவர்
காட்டில்
மூட்டைக்குக்
காவல் .

நகருக்குச்
சென்று
உணவு வாங்கி
வந்த இருவரில்
ஒருவனின்
மனதில்
விஷம்
நிரம்பி இருந்தது.

"ஏப்பா...
யோசித்துப் பார்த்தேன்
எதற்கு நாலு பங்கு?
இந்த
உணவில் விஷம்
கலந்தால்
அந்த
இருவரும் 
செத்துப் போய்
விடுவார்கள்.

இந்த சொத்து
இரண்டாய்ப் போகுமே!"
சம்மதித்தான்
கூட்டாளி.

உணவில் விஷம்
கலந்தனர்
கூட்டுக் 
களவாணிகள்.

அதே போன்று
காட்டிலும்
ஓர் உரையாடல்.

"தம்பி... !
ஒரு யோசனை.
உணவோடு
வருபவர்களை
அந்தப்
பாழும் கிணற்றில்
தள்ளி விட்டால்
பங்கு
இரண்டாகும்.

வீணாய்
எதற்கு
நாலு பங்கு?"
தூபம்
போட்டான்
ஒருவன்.

மற்றவன்
மறுக்காமல்
சம்மதித்தான்.

காத்திருந்தனர்
துரோகக் கயவர்கள்.

உணவோடு
வந்தவர்களை
நீர் கொண்டு
வரக் கேட்டார்கள்
காட்டிலிருந்தபடி
காத்து இருந்தவர்கள்.

'சாகப்போகிறவனுக்குக்
கடைசித் தண்ணீர்‘
குதூகலித்தபடி
கிணற்றடி போயினர்
இருவரும்.

ஒரே தள்ளு.

கிணற்றில் விழுந்த
இருவரும்
பாழும் கிணற்றில்
பரலோகம் கண்டனர்.

நான்கு
இரண்டான
மகிழ்வில்
உணவை
உண்டனர்.

அந்தோ!
அவர்களும்
மாண்டனர்.

விஷ உணவால்
நடந்ததைப் பார்த்து
அடைபட்டிருந்த
தங்கத் துகள்கள்
ஒன்றோடொன்று
மோதி ஒளிர்ந்தன.


மறுநாள்
நால்வரின்
துர் மரணம்
குறவர் குடியிருப்பில்
பேச்சாயிருந்தது.

சிவவாக்கியர்
சித்தம் அறிந்தவராய்
மனைவியிடம்
சொன்னார்.
"சொன்னேன்
அல்லவா?
அது
உயிர்க்கொல்லி
என்று.

பார்த்தாயா...!
நாலு பேரின்
உயிரையும்
பறித்து விட்டது."

ஆமெனத்
தலையசைத்த
மனையாளுக்கு
பதியின் வாக்கு
பயத்தைத் தந்தது.

ஆயினும்
அவளது
அருங்குணமான
சரணாகதி
அவளை
நொடியில்
தூக்கிப் பிடித்தது.



சிவவாக்கியருக்கும்
கொங்கணருக்கும்
ஒரு
நெருங்கிய நட்பு
உண்டு.

அது
அந்தக் கால
நண்பேண்டா...!

சித்தர் பரம்பரை
என்பது
ஒரு வகை
சித்தர் உறவு.
அது பற்றிலா
உறவாயிருக்கும்
குரு சீடர் என
விளங்கும்.

பலசமயம்
பாந்தமான
நட்பாயிருக்கும்.

சீடனை
மகனாய்ப்
பாவித்துப்
பெருமிதம்
கொள்ளும்.

இவ்விரு
சித்தர்களுக்கும்
இருந்த உறவு
பரிபூரண நட்பு.

பல்லாண்டு
அருகில் இருந்ததால்
ஏற்பட்ட
பலமான நட்பு.

சிவவாக்கியர்
காங்கேயம்
அருகிலிருக்கும்
சிவன்மலை வாசி.

வாசி வாசியென
சிவனையே
சுவாசித்து வந்தவர்.
வருபவர்.

கொங்கணர்
பக்கத்தூர்க்காரர்.
ஓதியூர்
மலையில்
சித்தநிலை எய்தியவர்.
அதுவே அவரது
உறைவிடம்.

'அருமை நண்பர்
முறம்
முடைந்து
வாழ்க்கை நடக்கிறாரே
அது அவர் அறம்.

பரவாயில்லை...

கூட இருக்கும்
புது மனைவியும்
கஷ்டப்படுகிறாளே...!'
கவலைப்பட்டார்
கொங்கணர்.

ஒரு
திட்டத்துடன்
சிவவாக்கியரின்
வீட்டிற்கு வந்தார்.

அது நேரம்
சிவவாக்கியர்
காட்டிற்குச்
சென்றிருந்தார்.

வசதியாய்ப்
போயிற்று
உயிர் நண்பருக்கு!

"அம்மணி!
வீட்டிலிருக்கும்
இரும்பை எல்லாம்
எடுத்து வா...!"

எடுத்து வந்தாள்.

"போதாது...
இது போதாது
வீட்டைச் சுற்றி
கண்ணில் படும்
இரும்பெல்லாம்
கொண்டு வா..!"

கொண்டு வந்தாள்.

"என் முன்
வை...

எனக்குக்
கொஞ்சம்
அருந்த
நீர் தருகிறாயா?"

ஓடிப்போய்
தண்ணீர்
எடுத்து வந்தவள்
திகைத்து நின்றாள்!

அவள் தந்த
இரும்பெல்லாம்
தங்கம்! 
பத்தரை மாற்றுத்
தங்கம் அல்ல.
பல்லாயிரம் மாற்று
சொக்கத் தங்கம்!

"சிவவாக்கியர்
வந்தால்
நான் வந்து
சென்றதாகச்
சொல்.

இதை
வைத்துக் கொள்.
கொஞ்சம்
வசதியாக வாழ்.

நான்
சொன்னால்
கேட்கமாட்டான்.
நீ
பக்குவமாய்
எடுத்து சொல்லிப்
பாங்குடன்
வாழ்...."
விடைபெற்றார்
கொங்கணர்.

மாலையில்
வீடு திரும்பிய
சிவவாக்கியர்
நடந்ததை அறிந்து
நண்பரின் குணநலன்
போற்றினார்.

ஆயினும்
அவர் தந்து 
சென்றது
ஆட்கொல்லி 
ஆயிற்றே!

"வேண்டாமிந்த
உயிர்க்கொல்லி...
இதை
அப்படியே அந்தக்
கிணற்றில் போடு"
கட்டளையிட்டார்.

அருகிலிருந்த
பாழும் கிணற்றில்
விருப்பு
வெறுப்பு இன்றி
கொட்டித் திரும்பினாள்
கெட்டி மனக்காரி.

"தங்கம் மேல்
உனக்கு
ஆசை உண்டா?
வேண்டுமா?"
அவள்
கெட்டி மனத்தை
வெட்டிச் சீராக்கக்
கேட்டார் 
சிவவாக்கியர்.

பதிலேதும் 
சொல்லாத
பதிவிரதையை
அருகிலிருந்த
ஒரு மலைக்கு
அழைத்துச் சென்றார்.

அங்கு
அம்மலைமீது
சிறுநீர்
கழித்தார்.

அம்மலையே
பொன்னானது.

உலகம் உள்ளளவும்
அப்பொன்மலை
போதுமானது.

அஃதொன்றும்
அவளைக்
கவரவில்லை.
"சுவாமி...
இதை
ஆட்கொல்லி
என்று
சொன்னதை
மறவேனோ?

வேண்டேன்...
வேண்டேன்..
இந்த உயிர்க்கொல்லி!

இதை அடைய
மனம்
விரும்பேன்!"

மனம் நெகிழ்ந்தார்
சிவவாக்கியர்.

யார்
சுட்டிக் காட்டிய
பெண்?
காசியார்
கைகாட்டிய
மாதன்றோ!

மனமொத்த
வாழ்க்கை
மகத்துவம்
அடைவதற்கு
மனையாளே
காரணம்
அன்றோ!

சில மாதங்களில்
சிவனாந்தர்
என்றொரு
ஆண் மகவு
பிறந்தது.

'மணவாழ்வு
நிறைவடையும்
தருணம்... 
இதுவே!'

முடிவெடுத்திருந்தார்
ஞானம்
நிறைந்திருந்த
சிவவாக்கியர்.


இன்னொரு
இனிய
புராணம் உண்டு.

பிருகு மகரிஷி
திருமழிசையில்
தவமிருந்த
காலம்.

தவம்
பொறுக்கா
தேவேந்திரன்
தவத்தைக்
கெடுக்க
அழகிய
தேவகன்னியை
அனுப்பி
வைத்தான்.

அவளின்
சாகசம்
பிருகு முனியின்
தவத்தை
எளிதில்
கலைத்தது.

தவம் தவறி
மோகம் எகிற
ஆண் குழந்தை
அடுத்து
பிறந்தது.

வந்த வேலை
முடிந்த
திருப்தியோடு
தேவகன்னி
தேவருலகம்
திரும்பினாள்.

தாயற்ற
குழந்தை
தவித்தது.

பிருகு
மகரிஷியும்
தவ
ஞாபகம்
வரவே
தவத்தில்
மூழ்கினார்.

பெற்றோரை
இழந்த
குழந்தை
நடுக்காட்டில்
அழுதது.
பசியில்
துடித்தது.

கண்ணுற்ற
பரமனும்
பார்வதியும்
குழந்தையை
ஆட்கொண்டு
அருள்பாலித்தனர்.

அப்போது
இறையருளால்
வேடன்
ஒருவன்
அவ்வழி
வந்தான்.

அவனுக்குக்
குழந்தை
என்றால்
கொள்ளைப்
பிரியம்.

ஏனெனில்
பாவம்
அவனுக்குக்
குழந்தைப் 
பேறில்லை.

பல காலம்
வேண்டியதன்
பலனாக
இறைவன்
குழந்தையைக்
காட்டியிருக்கிறார்
என்று
அந்த வேடன்
குழந்தையை
எடுத்து
வளர்க்கத்
தொடங்கினான்.

வேடனின்
மனைவிக்கு
அவனை விட
குழந்தை மேல்
ஆசை.

காட்டுக்
குழந்தையை
வாங்கி
முத்தமிட்டு
மார்போடு
அணைத்தாள்
என்ன ஆச்சரியம்...!

தாயாகாதிருந்த
அவளின்
மார்பில்
தாய்ப்பால்
சுரந்தது.

ஆச்சரியத்துடன்
அவள்
பால் தர
முனைந்தாள்.

குழந்தைதான்
மறுதலித்தது.
மார்பைத்
தள்ளி
விலகியது.

இறைவனின்
பேரானந்தப்
பாலை
அருந்திய
குழந்தை
வேடன்
மனைவி
ஊட்டிய பாலை
ஏற்கவில்லை.

தாய்ப்பால்
அருந்தாமலேயே
வளர்ந்தது
அத்தெய்வக் குழந்தை.

வேடனின்
அன்பில்...
அவன்
மனைவியின்
அரவணைப்பில்...
வளர்ந்தது.

குழந்தைக்கு
என்ன
பெயர்
வைக்கலாம்?

திருமழிசையில்
கண்டெடுத்த
குழந்தை என்பதால்
திருமழிசையான்
எனப்
பெயர் வைத்தனர்
பெற்றோர்.

வேடன்
வைணவன்.
எனவே
வைணவராய்
வளர்ந்தது
குழந்தை.

திருமால்
அடிபற்றத் 
தொடங்கிய
குழந்தையே
பின்னாளில்
சிவனடி
பற்றி
சிவவாக்கியர்
ஆயிற்று
என்கிறது
அப்புராணம்.


(சித்தர் சிவவாக்கியர் - பாகம் 3 தொடரும்)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)