சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - காகபுஜண்டர்(பாகம் 1)


காகபுஜண்டர்

பாகம் 1

மாரிமைந்தன் சிவராமன்


தேவேந்திரன்
சபை.

அதோ...
நாரதர்!

இதோ...
வசிஷ்டர்!

தவத்தில் சிறந்த,
உலகில் உயர்ந்த
தவராஜர்கள்
நிறைந்த
சபை.

ஞானம்
நிறைந்த
ஒரு
மகரிஷியின்
உரை.

அவர்
திருநாமம்
சதாதபர்.

எல்லோரும் 
கூர்ந்து கேட்டுக் 
கொண்டிருந்தார்கள்.

தலைப்பு :
சிரஞ்சீவிகளாக
இருப்பவர்களின்
திவ்விய சரித்திரம்.

சதாதபரின்
சத்சங்கம்
களை கட்டிக்
கொண்டிருந்தது.

"மெய் அன்பர்களே!
என்னினும் உயர்ந்த
தவ ஞானிகளே!

மாமேருவின்
உச்சியில்
காட்சிக்கினிய
ஒரு கற்பக மரம்
உள்ளது.

அம்மரத்தில்
ஒரு
பெரிய கூடு
உள்ளது.

அக் கூட்டில்
ஒரு
பெரிய
காகம்
உள்ளது.

அதன்
பெயர்
புஜண்டன்.
அதை
காக புஜண்டன்
என்றழைக்கிறார்கள்.

ஒரு சாபத்தின்
காரணமாக
காகமான
ஞானச் சித்தர் இவர்.

இவரை ஒத்த
யோக நிலை
கொண்டவர்
எங்கும் இல்லை.
எவரும் இல்லை.
அளவிட முடியாத
ஆயுளைக்
கொண்டவர்
உரோமர்.

அவரின்
குருவே
காகபுஜண்டர்.

எல்லையற்ற
ஆயுள்
விரிந்த
அறிவு
முக்கால
ஞானம்
கொண்ட
சிரஞ்சீவி
காகபுஜண்டர்."

சதாதபர்
பேசப் பேச
அவர் முகம்
ஒளி மிகுந்து
பிரகாசித்தது.

அவர்
சொல்வதைக்
கேட்கக் கேட்க
கேட்பவரின்
முகத்திலும்
ஒளி வெள்ளம் 
படர்ந்தது.

சித்தர்கள்
குறித்து
பேசுபவர்
உள்ளம்
பூரிப்பதும்
கேட்பவர்
உள்ளம்
குதூகலிப்பதும்
இரு தரப்பு
முகங்களும் 
பிரகாசிப்பதும் 
இயற்கையே.

அது
இறையருள்
வகுத்த நீதி.
நியதி.

காகபுஜண்டரின்
பெருமைகளைச்
சதாதபர்
சொல்லிக்
கொண்டிருக்கும்
போதே
வசிஷ்டருக்கு
நிலை கொள்ளவில்லை.

உடனே
அவரைப்
பார்க்க
தரிசிக்க
அளவளாவ
ஆவல் கொண்டார்
அவதார புருஷர்
ராமபிரானின்
ஞான குருவான
வசிஷ்டர்.

அக்கூட்டம்
முடிந்த கையோடு
மேருமலை
விரைந்தார்.

மேருமலை
மலைகளாலும்
குகைகளாலும்
மரஞ்செடி 
கொடிகளாலும்
நிறைந்து
ஓர் அருள்
தவஞானியைப்
போல்
விஸ்வரூபமாய்க்
காட்சி
அளித்துக்
கொண்டிருந்தது.

அங்கு
பறவைகளின்
கானங்கள் கூட
சிவ மயமாய்
சிலிர்க்க வைத்துக்
கொண்டிருந்தன.

வியந்தபடி
ரசித்தபடி
வசிஷ்டர்
கற்பக மரம்
தேடி
அடைந்தார்.

"வாருங்கள்
வேத வல்லுனரே!
ஈடில்லா
மாமுனியே!"

காக ரூபத்திலிருந்த
காகபுஜண்டர்
வரவேற்றார்.

"பறவைகளின்
அரசே!

உம்மைப் பற்றித்தான்
தேவலோகத்தில்
ஒரே பேச்சு.

அப்பப்பா...
எத்தனை கால
வாழ்க்கை.
மரணமிலாப்
பெருவாழ்வு.

எத்தனை
பிறவி!
எத்தனை 
அனுபவ 
ஞானம்!
இருந்தும் 
எவ்வளவு அமைதி!

கர்வமற்ற
காகபுஜண்டரே!

உம்மைப் பற்றி
நிறைய அறிய
ஆவல் கொண்டே
நேரில் வந்தேன்.

உங்கள்
ஆயுட்கால
அனுபவத்தை
ஞானத்தை
தத்துவத்தை
அறியவே
வந்துள்ளேன்."

ஞான நிலையின்
உச்சத்திலிருந்த
ஞானமுனி 
வசிஷ்டர் கேட்க
கற்பகத் தருவின்
உச்சியில்
இருந்த
காகபுஜண்டர்
தலை அசைத்தார்.

அவர் சொன்ன
பதில்களால்
எதற்கும் அசையா
வசிஷ்ட ரிஷியே
அசைந்தார்.

அவர் சொன்ன
சுய வரலாறு
கேட்பவர்
எவரையும்
அசர வைக்கும்
வல்லமை கொண்டது.

அகிலத்தையே
அசைக்கும்
பெருமை மிக்கது.

"வசிஷ்ட மகரிஷியே!
என் வரலாறு
யாருக்கும்
பிரமிப்பு தரும்.

அதில்
என்
ஆயுள் வரலாறு
எப்படிப்பட்டவருக்கும்
மயக்கம் தரும்.

அது
இறைவனின்
கருணை.
மாயூரநாதனின்
மகிமை.

சீர்காழி
மாயூரநாதனே
எனக்கு
அருள் தந்து
ஆயுள் தந்து
காக வடிவு தந்து
காத்து வரும்
நாத பிரான்.

நான் 
பல கோடி 
யுகங்கள் 
கண்டவன்.

யுகம் பற்றிய
கணக்கொன்று
உண்டு.
கேளுங்கள்!

அதுவே
பிரமிப்பூட்டும்!

மொத்த
யுகங்கள் 18.
ஒவ்வொன்றும்
பல கோடி
வருடங்கள்.

அறியுகம் 14
கோடி வருடங்கள்.
அற்புதனர்
10 கோடி ஆண்டுகள்.

தர்ம யுகம் 12 கோடி
ராசி யுகம் 16 கோடி
வீராசன் யுகம் 20 கோடி
விண் யுகம் 16 கோடி
வாயு யுகம் 7 கோடி
மைன யுகம் 6 கோடி.

இவ்விதம்
தொடங்கி
கலி யுகம் 4 கோடியே
32 ஆயிரம் ஆண்டுகள்.

18 யுகங்கள் ஒரு கல்பம்.
கல்பம்18 சேர்ந்தால்
அது இந்திரனின்
ஒரு நாள்.

இந்திரன் கணக்கில்
60 வருடம் சேர்ந்தால்
அதன் பேர் ஆண்டு யுகம்.

18 ஆண்டு யுகம்
ஒரு பிரளயம்.
1 லட்சம் பிரளயம்
ஒரு நாள் பெருக்கம்.
16 நாள் பெருக்கமே
இந்திரன் லயம்.
அதுவே அவனது
ஆயுள்.

7000 கோடி
நாள் பெருக்கு
வகோர முனிவருக்கு
லயம்.

வகோர முனியின்
8 கோடி நாள்
நாத முனிக்குப்
பூரணம்.

நாத முனியின்
1 கோடி நாள்
விஷ்ணு முனிக்கு
லயம்.

இப்படித் தொடர்ந்து
ஒவ்வொரு 
முனிவருக்கும்
அவர்தம் ஆயுள்
பற்பல கோடி
பல்லாயிரம் கோடி
கூடி வரும்.

அந்த வகையில் 
பார்துமா முனியின் 
10 கோடி 
ஆயுட்காலம் 
சென்றால் 
உரோம ரிஷியின்
ஒரு உரோமம்
உதிரும்.

மூன்றரை கோடி
உரோமம்
உதிர்ந்தால்
அவர்
பரமபதம்.

அது பற்பல
பல்லாயிரம்
கோடிகள் நாளென
வரும்போது
திருமால்
சங்கரர்
மகாவிஷ்ணுவின்
ஆயுள்கள்
லயமாகிப்
பூரணமாகும்.

இப்படி
யுகக் 
கணக்கிருக்கையில்
என்
ஆயுளைக்
கணக்கிடுங்கள்.

இது
நம்ப முடியாததாய்
இருக்கலாம்.

ஆனால்
இதுவே
உண்மை.

இது
இறையருள்
கணக்கு.

இதற்கொரு
தற்காலிக
சாட்சி
நானே.

உரோம ரிஷி
என்
புதல்வனே!
சீடனே! 

உங்களுக்குத்
தெரியுமா?

காலக் கணக்கில்
வரும்
உரோமம்
இதுவரை
எனக்கு
ஒருமுறை கூட
உதிர்ந்ததில்லை.

என்
நீண்ட ஆயுளில்
நான்
கண்டதைச் 
சொல்கிறேன்.
செவிமடுத்துக்
கேளுங்கள்!

மாயூரநாதனைத்
தரிசிக்க
உமாதேவி
மயில் வடிவம்
கொண்டு
மாயூரம் வந்து
பூஜை செய்வதை
நான்
பார்த்திருக்கிறேன்.

அப்படி
இரண்டு முறை
இறைவியைப்
பார்த்த
பாக்கியசாலி நான்!

உங்களுக்குத் 
தெரியும்!

ஆதியில்
பிரம்ம தேவனுக்கு
ஐந்து முகங்கள் 
இருந்தன.

'சிவனைப் போலவே
எனக்கும்
ஐந்து முகம்.
எனவே
நானும் சிவனும்
சரி சமம்'
என
கர்வம் ஏற்பட்டது
பிரம்மனிடத்தில்.

கர்வத்தின்
விளைவு?

ஒரு தலை
கொய்யப்பட்டது
இறைவன் திருவருளால்.

நடுத்தலை
இழந்த
பிரம்மன்
நான்முகனானான்.

ஐந்து
தலைகளோடு
மாயூரம் வந்து
சிவபூஜை செய்த
பிரம்ம தேவனை
ஒன்பது பிறவியாய்
ஒன்பது முறை
ஒன்பது பிரம்மனைப்
பார்த்திருக்கிறேன்.

அதன் பின்
நான்கு தலைகளோடு
நான்முகன்
வந்து சென்றதை
பத்து முறை
பார்த்திருக்கிறேன்.

மகாவிஷ்ணு கூட
ஆதி காலத்தில்
வெண்மை நிறத்தில்
இருந்தார்.

பாற்கடலைக்
கடைந்த போது
பக்தர்களைக் காக்க
அவரும்
சிவனைப் போல
ஆலகால
விஷமுண்டு
நீல நிறம்
கொண்டார்.

நான்
வெள்ளை நிற
விஷ்ணு பிரானையும்
நீல நிற
விஷ்ணுவையும்
பத்து தடவை
பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும்
சிவ பூஜைக்காக
அவர்
மாயூரம் வருவார்.
இறையருள்
பெற்றுச் செல்வார்.

தேவர்கள்
பாற்கடலைக்
கடைந்ததைக் கூட
கண்ணாரக்
கண்டிருக்கிறேன்.

உலகம்
தோன்றிய
காலத்தில்
பூமி
சூரிய
சந்திர
தோற்றத்தைப்
பார்த்து
ரசித்திருக்கிறேன்.

இரண்யாட்சன்
பூமியை
எடுத்துச் செல்ல
முயன்றதையும்,
பெருமாள்
வராக அவதாரம்
எடுத்து
பூமியை
மீட்டதையும்
நேரில் கண்டு
வியந்திருக்கிறேன்."

"காகபுஜண்டரே!
தாங்கள் சொல்லச்
சொல்ல
பெருமைப்படாமல்
கர்வமில்லாமல்
சலனமில்லாமல்
தாங்கள்
சொல்லச் சொல்ல.
வியந்து
சிலிர்க்கிறேன்.

எவ்வுலகமும்
வியக்கக் கூடிய
ஞான அனுபவம்
பெற்றவர் நீங்கள்."

வசிஷ்டர் வாயால்
வாழ்த்துகள் நிறைந்தன.

"இன்னும் கேளுங்கள்
மகரிஷியே!

சிவபெருமான்
இதுவரை
முப்பது தடவை
முப்புரங்களை
எரித்துள்ளார்.

தட்சனது
யாகத்தை
இரண்டு முறை
அழித்துள்ளார்.

மகாவிஷ்ணு
பரசுராமராக
ஆறு தடவை
அவதரித்துள்ளார்.

ராமாவதாரம்
பத்து முறை.
கிருஷ்ணாவதாரம்
பதினைந்து முறை.

இவையெல்லாம்
பார்த்தது
எனது பாக்கியம்."

உடனே
"உங்களைப்
பார்ப்பது
எனது பாக்கியம்"
வசிஷ்டர்
வணங்கிச் சொன்னார்.

"வசிஷ்டரே
உங்களுக்கு இது
எட்டாவது பிறவி.
தெரியுமா!'

காகபுஜண்டர்
கணக்குச் சொன்னார்.

வசிஷ்டரே
அதிர்ந்து போனார்.
"அடேங்கப்பா...
எட்டாவது பிறவியா?"
காகபுஜண்டர்
'ஆம்' என்பது போல
புன்னகை பூத்தார்.

"தங்கள்
வரலாறைக்
கூறுங்களேன்?"
வசிஷ்ட மகரிஷி
கேட்க 
காகபுஜண்டர் 
ஞானச்சுவை கலந்து 
கூறத் தயாரானார்.

தன் வரலாறாய்
தவஞானி
சொன்னதும்
பின்னாளில்
போகர் பெருமான்
தான் அருளிய
சப்த காண்டத்தில்
பாடல்களால்
புனைந்ததும்
உரோம ரிஷி
உரைத்ததும்
சுக பிரம்மரிஷி
ஞான சூத்திரத்தில்
கூறி மகிழ்ந்ததும்
வசிஷ்டர்
ராமபிரானுக்குக்
காகபுஜண்டர்
குறித்து
விளக்கிச்
சொன்னதும்
அபிதான
சிந்தாமணியில்
உள்ளதும்
காகபுஜண்டர்
வரலாறாய்
விரவிக்
கிடக்கிறது.


(காகபுஜண்டர்: பாகம்- 2 தொடரும்)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)