சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - பிண்ணாக்கீசர்
பிண்ணாக்கீசர்
-மாரிமைந்தன் சிவராமன்
மருத்துவத்தில்
மாயம் செய்த
மகா சித்தர்
பிண்ணாக்கீசர்.
பிண்ணாக்கீசர்
குறித்த
தரவுகள்
குறைவுதான்.
ஆயினும்
கீர்த்திகள்
அதிகம்.
புண்ணாக்கு
சித்தர்
என்ற பெயரே
பின்னாளில்
பிண்ணாக்கீசர்
என ஆகி
இருக்கலாம்.
இந்தச் சித்தருக்கு
புண் நாக்கு.
ஆம்!
இரண்டெனப்
பிளவுப்பட்ட நாக்கு.
இரட்டை நாக்கு.
புண் நாக்கு
என்பதற்கு
பிளவு பட்ட நாக்கு
என்று பொருள்.
பிண்ணாக்கீசருக்கு
'தன்னாசியப்பர்'
என்று இன்னொரு
நாமமும் உள்ளது.
லம்பிகா
யோகம்
என்றொரு
மகாயோகம்
உண்டு.
லம்பிகம்
என்றால்
தேரை.
மடக்கிய
நிலையில்
கோடை காலத்தில்
நாக்கை
அண்ணாக்கில்
செருகிக்
கொள்ளுமாம்
தேரை.
பிண்ணாக்கீசருக்கோ
பிறப்பிலேயே
இரட்டை நாக்கு.
பிறப்பே யோகம்.
ஒரு நாக்கைத்
தொண்டையின்
மேல்பகுதி
வழியாக
தலை உச்சி வரை
கொண்டு வருவது
ஒரு கலை.
இது ஒரு வகை
யோகக் கலை.
இந்நிலையில்
பசி, தாகம்
ஏதுமிருக்காது.
சகஜ நிலைக்குத்
திரும்பும்போது
ஒரு நாக்கால்
மறு நாக்கை
உள்ளிழுத்துக்
கொள்வார்கள்
இக்கலையில்
வல்லவர்கள் .
பிண்ணாக்கீசர்
லம்பிகா
யோகத்தில்
வல்லவர்.
நாக்கு மட்டுமல்ல
இச்சித்தரின்
வாக்கும் போக்கும்
வித்தியாசமானவையே.
சித்தர்களில்
பெரும்பாலோர்
தமிழர்கள்.
தென்னாட்டவர்
என்ற
சிறப்பு
மறுப்பில்லாத
உண்மை.
பிண்ணாக்கீசர்
கன்னட நாட்டவர்.
தென்னாட்டவர்.
கீசரை
மாடு
மேய்க்கும்
யதுகுலத்தாயின்
பிள்ளை என்கிறார்
போகர் பிரான்.
அதுவும்
கன்னி
வயிற்றுப் பிள்ளை.
கருவூராரோ
பிண்ணாக்கீசர்
வேதியர்
என்கிறார்.
வைகாசி
சித்திரை நட்சத்திரம்
பாதம் 2-இல்
கன்னி
ராசியில்
பூமியில்
உதித்தவர்
பிண்ணாக்கீசர்.
வேதியர் என்பதால்
ஆலயங்களில்
வளர்க்கப்பட்டவர்.
அதனால்
செழுமை
கொழுமை
ஆளுமை அதிகம்.
நட்டநடு
வீதியே
இவருக்குப்
பிடித்த இடம்.
அடிக்கடி
படுக்கும் இடம்.
கால்மேல்
கால்போட்டுப்
படுத்தபடி
ஆகாயத்தைப்
பார்த்திருப்பார்.
வாய்க்கு
வந்தபடி
ஏதோ
பேசிக் கொண்டிருப்பார்.
கவனித்துக் கேட்டால்
'கோவிந்தா...
கோவிந்தா'
என
இறை நாமமாக
இரு நாக்கும்
உச்சரிக்கும்.
எட்டுத்திக்கும்
எதிரொலிக்கும்.
அவர்
ஏதோ
உளறும்
பித்தர் எனப்
பலரும்
நினைத்தனர்.
உண்மையில்
அவர்
ஞானம்
ஊறிய சித்தர்.
அவருக்கு
உபதேசித்தவர்
பாம்புப்பிடாரன்
பாம்பாட்டிச் சித்தர்.
ஒரு பட்டுப் போன
ஆத்தி மரப் பொந்தில்
அமர்ந்து
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த
பிண்ணாக்கீசர்
முன்பு
பாம்பாட்டிச் சித்தர்
தோன்றி
ஞானத்தைக்
கற்பித்தார்.
அது முதல்
பிண்ணாக்கீசர்
சித்துக்களின்
நாயகனானார்.
அவர்
சித்து
விளையாட்டுகளை
மக்களுக்கு
உதவப்
பயன்படுத்தினாரே
தவிர
ஏதும்
மாயாஜாலம்
காட்டவில்லை.
எப்போதாவது
சகஜ நிலைக்கு
வருவார்
பிண்ணாக்கீசர்.
அப்போது
கூடவே பசியும் வரும்.
'கோபாலா.. கோபாலா'
எனக்
கண்ணீர் விடுவாரே
தவிர
உணவுக்காக
உணர்வுக்காக
சித்தாடமாட்டார்.
காண வரும்
மக்கள்
சித்தர்
கண்ணீர் கண்டு
பசிக்கிறது போலும்
என்று
பாலும் பழமும் தருவர்.
கொஞ்சம்
எடுத்துத்
தன்
பசி தீர்ப்பார்.
பின்
வந்தவரிடம்
வழங்கிவிட்டு
மீண்டும்
ஆத்தி மரப்
பொந்தில்
புகுவார்.
'ஆதிநாராயணா'
என்று
ஆதிநாதனைச்
சரணடைவார்.
நோயில்
வாடும்
மக்கள்
மரம் தேடி
வருவர்.
இவர்
வரம் தேடித் தொழுவர்.
மந்திரிப்பார்.
நோய் பறக்கும்.
பிண்ணாக்கீசர்
நோய்ப்பட்டவரின்
மெய் தொட்டு
கை தொட்டு
நீவும் போதே
நோய்
இறங்குவது
தெரியும்.
அப்படியொரு
கை ராசி.
சித்து ராசி.
இதை
ஆற்றுப்படுத்தும்
சக்தி
என்கிறது
அறிவியல்
ஆன்மிகம்.
சிலருக்கு
மருந்தும்
தருவார்.
அது
மரத்தடி
மண்.
அம்மண்
நோயாளிக்குக்
கசக்காது.
இனிக்கும்.
தீராத
வியாதிகளைத்
தீர்த்து
வைக்கும்.
எனவே
சித்த
மருத்துவராக
ஊர் மக்கள்
அவரைப்
போற்றினர்.
நோய் தீர்த்து
ஆசி தந்து
அருளியவரை
ஒரு பெருங்கூட்டம்
சித்தரெனப் புரிந்து
கொண்டது.
ரசவாதம்
அறிய
நச்சரித்தது.
காயகல்ப
ரகசியம் கேட்டு
சதா காலம்
சூழ்ந்திருந்தது.
ஆனால்
சித்தர்
சொன்ன
தத்துவங்களைச்
செவி மடுக்காமல்
ஒதுக்கி வைத்தது.
எனவே
பிண்ணாக்கீசர்
கடைசி வரை
தக்கதொரு
சீடரைத்
தானாகத்
தேர்ந்தெடுக்கவில்லை.
மெய்ஞானம்
ஞானப்பால்
முப்பு சுண்ண செயநீர்
யோகப்பாடல்
முதலான
நூல்களை
அருளினார்.
சில காலம்
வடநாடு
சென்றார்.
அங்கும்
ஓங்கு புகழ்
பெற்றார்.
பின்னாளில்
வசித்த இடம்
திரும்பி
ஆத்தி மரத்தில்
தஞ்சம் கொண்டார்.
தவம் செய்தார்.
ஒரு
நன்னாளில்
மரத்தையே
இறையாகத்
தரிசித்து
இறையோடு
இறையாக
லயமானார்.
சிவமானார்.
காலப்போக்கில்
பட்டுத் துளிர்த்த
அந்த மரம்
பசுமை செழிக்க
பிண்ணாக்கீசர்
ஜீவசமாதி
ஆனது.
நோய் தீர்த்த
சித்தபிரான்
என்பதால்
மக்கள்
நோய் தீர
அம் மரத்தையே
பிண்ணாக்கீசராகப்
பாவித்து
வழிபட்டனர்.
மரத்தடி
இருந்த
சருகுகளைக்
கொண்டு
கசாயமாக்கி
அருந்த
நோய் தீர்ந்தது.
நோய் வந்தால்
அம் மரத்திற்குக்
காப்புக் கட்டி
வணங்குவது
வழக்கமானது.
சித்திகள்
பற்பல செய்த
நந்திவர்க்கச் சித்தர்
எனப் போற்றப்படும்
பிண்ணாக்கீசர்
சித்தியான
தலங்கள் குறித்து
பல்வேறு
தகவல்கள் உண்டு.
கேரள மாநிலம்
நாங்குனாசேரி
எனும்
சாங்காசேரியில்
பிண்ணாக்கீசர்
ஜீவசமாதியான
ஆத்தி மரம் உள்ளது.
இத்தலத்தில்
நோய் தீர்க்கும்
சித்தர் பிரான்
திருவடி தொழுவார்க்கு
தீரா நோய் தீரும்.
பிண்ணாக்கீசர்
லயமான இடம்
கோவை
பெரியநாயக்கன் பாளையம்
அருகே
செல்வபுரத்திலும்
உள்ளது.
இங்கு தன்னாசியப்பர்
என்ற பெயரில்
பிண்ணாக்கீசர்
அருள் பாலித்துக்
கொண்டிருக்கிறார்.
இங்குதான்
அவர்
வெகு காலம்
சுவாசித்து
வசித்து வந்த
ஆலமரப் பொந்து
உள்ளது.
பல்லாயிரம் ஆண்டு
வயது கொண்ட
அந்த மரத்தின்
முன் அமர்ந்து
உளம் உருக
தியானித்து
ஒரு பிரார்த்தனையை
முன்வைத்து
இரு கைகளையும்
தூரமாகத் தள்ளி
வைத்துக் கொண்டு
கண்களை மூடி அமர்ந்தால்
சில நிமிடங்களில்
இரு கரங்களும்
தாமாக
ஒன்றை நோக்கி
ஒன்று நகர்ந்து
சேர்ந்து கொள்கின்றன.
இரு கரங்களும்
இணைந்தால்
பிரார்த்தனை
சாசுவதம் ஆவதால்
நாளுக்கு நாள்
பக்தர்கள் கூட்டம்
பெருகி வருகிறது.
பிண்ணாக்கீசர்
தவம் செய்து
வந்த தலங்களில்
பெருந்துறை
அருகிலிருக்கும்
சென்னிமலையும்
ஒன்று.
அதனால்
பிண்ணாக்கீசருக்கு
'சென்னிமலைச்
சித்தர்' என்ற
பெயரே உண்டு.
சென்னிமலை
மலைக் கோயிலில்
முருகன் வீற்றிருக்கும்
திருத்தலத்தில்
பிண்ணாக்கீசருக்குத்
தனிச் சன்னதியும்
தவக் குகையும்
உள்ளன.
இங்கிருப்பது
பிண்ணாக்கீசரின்
ஒளிச் சமாதி
என்கிறது
ஓர் ஆய்வு.
சித்தர்கள்
பல
இடங்களில்
லயமாவதால்
இத்தலங்களையும்
பிண்ணாக்கீசரின்
லயத் தலங்கள்
என ஏற்று
வணங்குதல்
சிறப்புடையதே.
நந்தீசர்தான்
குருநாதர்
என்கிறார்
முப்பு நூல்
சாஸ்திரத்தில்
பிண்ணாக்கீசரே!
பிரம்மஞானம்
நிறைந்திருந்த
பிண்ணாக்கீசரின்
சீடர்தான்
மச்சமுனி சித்தர்.
அவரது மகன்தான்
அழுகணிச் சித்தர்
என்பாரும் உண்டு.
'சட்டைமுனிக்கு
கருக்கிடை
ஞானத்தை
சொல்லித் தந்தேன்.
திருமூலர்
வழி கொண்டேன்'
என்கிறார்.
ஒரு பாடலில்
பிண்ணாக்கீசர்.
எனவே
சட்டைநாதரும்
இவர் சீடரே.
சித்தர் பிரான்களில்
சிறந்தோங்கிய
சித்தரான
பிண்ணாக்கீசரின்
அருட் தல வழிபாட்டில்
தங்கு தடையற்ற
ஆரோக்கியம்
மிளிரும்
அருளாற்றல்
ஒளிரும்
என்பது உண்மை.
பேருண்மை.
பிண்ணாக்கீசரைப்
போற்றி வணங்குவோம்.
ஈடற்ற பேரருள் பெறுவோம்.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக