இளையான்குடி மாற நாயனார் புராணம்
63 நாயன்மார்கள் வரலாறு
இளையான்குடி மாற நாயனார் புராணம்
இளையான்குடி
என்ற சிற்றூரில்
ஆவணி மாதம்
மக நட்சத்திரத்தில்
அவதரித்தவர்
சிவ அர்ப்பணிப்பில்
சிறந்தோங்கியவர்
என்று
சிவனடியார்கள்
போற்றும்
இளையான்குடி
மாற நாயனார்.
சோழநாட்டில்
திருநள்ளாறு
அருகே இருக்கும்
இளையான்குடி.
தொண்டை நாட்டிலுள்ள
இளையான்குடி.
இன்றைய
சிவகங்கை
மாவட்டத்தில் இருக்கும்
இளையான்குடி
என மாறனார் அவதரித்த
இளையான்குடி பற்றி
மூன்று முரண்கள் உண்டு.
ஆன்மிகத்தில்
உச்சம் தொட்ட
சிவநேசர்கள்,
மாற நாயனார்
உழவு செய்யும்
வேளாளர் குடும்பத்தில்
பிறந்து
வாழ்வாங்கு வாழ்ந்து
வாழ்வு
நிலை
குலைந்த போதும்
சிவனடியார்
மனம் குளிர
பணிந்து உபசரித்து
இறை போற்றிட
முக்தி அடைந்த
திருத்தலம் என
இளையான்குடியைப்
போற்றுகின்றனர்.
மாற நாயனார்
நாயன்மார்களுக்கு எல்லாம்
வழிகாட்டி
என புகழ்ந்து
வணங்குகின்றனர்
சைவம் போற்றுவோர்.
முழுமையும் கலந்த அன்பு.
முழுமையும் நிறைந்த
சிவ சிந்தனை.
தேடி வந்தோரை
ஓடிச்சென்று
உபசரிக்கும் மாண்பு.
இவையே மாற நாயனார்.
அவர்
நாடி வருபவர்
எந்த வர்ணத்தவர்
என்று பார்ப்பதில்லை.
அருள்வல்லான்
அனுப்பிவைக்கும்
நல்லடியார் என்றே
கருதி வணங்குவார்.
முதலில்
சிவனடியாருக்கு
அஞ்சலி செய்து
இன் புகழ்பாடி
பாத
அபிஷேகம் செய்து
ஆசனத்தில் இருத்தி
சைவ ஆகமப்படி அர்ச்சித்து
விருந்து படைப்பார்.
எப்படிப்பட்ட
விருந்து தெரியுமா ?
கசப்பு
புளிப்பு
இனிப்பு
துவர்ப்பு
கார்ப்பு
உவர்ப்பு
கொண்ட
அறுசுவை உணவு.
அதுவும்
நான்கு வகைகள்.
சிலதைப் பருகலாம்.
சிலதை நக்கலாம்
சிலதை உண்ணலாம்.
சிலதைத் தின்னலாம்.
இவற்றையே
பருகல், நக்கல்
உண்ணல், தின்னல்
என்கிறது தமிழ் மரபு.
சுவைகளில்
ஆறு சுவையாய் '
ஆறானவன்'
சிவபெருமான்
என்கிறது சைவ மரபு.
பொதுவாக
மகேஸ்வரனுக்குப்
படைப்பதைப் போல்
சிவனடியாருக்குப்
பரிமாறுவதை
மகேஸ்வர பூஜை
என்பர்
சிவனடி
வணங்குவோர்.
இளையான்குடியில்
பெரும் நிலச்சுவான்தார்
இளையான்குடி
மாற நாயனார்.
'குபேரன்' என்றே
ஊரே சொல்லி
வியக்கும்.
வணங்கும்.
ஊரெங்கும்
அவர் பற்றிய
பேச்சும் புகழும்
செல்வமும்
செல்வாக்கும்
இப்படி
நேர்மறையாக இருக்க
அவருடன்
எதிர்மறையாக
விளையாட
ஆர்வம் கொண்டார்
அருள் வள்ளல் நாதர்.
'செல்வம்
இருப்பதால் தான்
மாற நாயனார்
வாரி வழங்குகிறார்.
செல்வம் இழந்து
வறுமையில் வீழ்ந்தால்
அவர் என்ன செய்வார் ?'
என ஊரில்
பேச்சு இருந்தது.
அதுவே
ஆதி நாதனின்
எண்ணத்திலும்
எழுந்து
ஒரு விடை தரும்
திருவிளையாட்டாய்
ரூபமெடுத்தது.
'தன்னிடம் இருந்த
அத்தனை செல்வமும் அஞ்செழுத்தானுக்கே
உரியது' என
வாழ்ந்து வந்த
மாறநாயனார்
வாழ்வில் வீழ்ச்சி
தொடங்கியது.
வருமானம் குறைந்தது.
நிலங்களை விற்று
சிவனடியார்களுக்கு
முன்பு போலவே
மனம் நிறைய
உணவு தந்தார்.
கடைமுடிநாதர்
கணக்குப்படி
காலப்போக்கில்
வறியவர் ஆனார்
மாற நாயனார்.
அப்போதும்
குணம் மாறாமல்
கடன் வாங்கி
இறை கடன்
நிறைத்தார்.
கடைசியில்
எஞ்சியிருந்தது
ஒரு சிறு
விவசாய நிலமே.
அவருக்கும்
அன்பும் பண்பும்
ஒருங்கே கொண்ட
அவர் மனைவி
புனிதவதிக்கும் கூட
போதாத சாகுபடிதான்.
ஓரிடத்தில்
கூலி வேலைக்குப்
போனார்
கூத்தபிரான்
திட்டப்படி.
ஆனால்
செல்வம் முற்றிலும்
நீங்கிய பிறகும்
மாற நாயனார்
அறம் நீங்காது
மனம் தளராது
வீடு தேடி வரும்
சிவனடியார்களை
உபசரித்தே வந்தார்.
ஒருநாள் இரவு.
மழை பொசு பொசுவென தூறிக்கொண்டிருந்தது.
எங்கோ இடியும்
கண் எதிரே மின்னலும்
பயமுறுத்திக்
கொண்டிருந்தது.
வீட்டுத் திண்ணையில்
இருந்த
மாற நாயனாருக்கு
பசி உயிரை வாங்கியது.
நம்பி வந்த
மனையாள்... பாவம்
அன்று அவளும்
முழு நாள் பட்டினி.
'சாகுபடியும் தேறாது...
இருவரையும்
சாகும்படி
அம்மையப்பன்
திட்டமிட்டு விட்டானோ'
என எண்ணியவாறு
வீட்டை
உள்பக்கம்
தாளிட்டு விட்டு
உறங்கப் போனார்
மாற நாயனார்.
அப்போது
லேசாகக் கதவு
தட்டும் ஓசை.
திடுக்கிட்டு எழுந்த
நாயனார்
கதவைத் திறந்தார்.
கதவு தட்டியவர்
ஒரு சிவனடியார்.
அவர் மற்றையோர்
போல் இல்லை.
முகம் பிரகாசமாக இருந்தது.
ஒருவித
திருநீறு மணம்
வீடு முழுதும் நுழைந்து
நறுமணம் பரப்பியது.
சிவனடியார் வடிவில்
விளையாடல்
புரிய வந்தவர்
கைலாசபதி அல்லவா !
கைலாயமும்
பூலோகமும்
கண்டிராத பேரொளி
வீட்டை நிறைத்தது.
ஆனால் கண்கள்
பூஞ்சை அடைந்து
நாசிகள் உணர்விழந்திருந்த
மாற நாயனாருக்கும்
அவர் மனைவிக்கும்
ஒளியும் வாசமும்
எதுவும் புலப்படவில்லை.
அவர்கள் கவலை
உண்மையில்
வேறாக இருந்தது.
இந்த இருட்டில்
வந்தவருக்கு
எப்படி
விருந்து படைப்பது?
சிவனடியாரின்
புன்னகைக்கு
வணக்கம் சொல்லி
துண்டு கொடுத்து
மழையில் நனைந்த
தலையையும்
உடம்பையும்
துவட்டிக்
கொள்ளச் செய்து
விழுந்து வணங்கி
அவ்விருட்டு நேரத்திலும்
புகழ் ஓதி
ஓர் இடத்தில்
அமரச் செய்தார்
அறம் நழுவா
மாறன் நாயனார்.
"கொஞ்ச நேரம்
ஓய்வெடுங்கள் சுவாமி...!
உங்களுக்கு
அமுது தயாராகிவிடும்"
என்றார்
விருந்தோம்பல் மிக்க
இளையான்குடியார்.
நடத்திக் கொண்டிருக்கும்
நாடகத்தின் நாயகனும்
ஒன்றும்
அறியாதவர் போல்
'சரி... சரி'
என தலையாட்டி விட்டு
சுவர் ஓரமாய்
இருந்த திட்டில்
படுத்துக் கொண்டார்.
கண்கள் மூடி
உறங்குபவர்போல்
நடித்தாலும்
ஞானக் கண்ணனுக்கு
நடப்பதும்
நடக்க போவதும்
தெரியும் தானே !
வீட்டினுள்
சமையலறையில்
மாற நாயனாருக்கும்
மங்கை நல்லாளுக்கும்
கவலை நிறைந்த
பேச்சு தொடங்கியது.
மனைவி புனிதவதி
அறிவாற்றலில் சிறந்தவள்.
ஆலோசனை சொல்வதில்
வல்லவள்.
"என்ன செய்யலாம் ?"
என்று கணவன்
கை பிசைந்து
துடிதுடித்த போது
"மெதுவாகப் பேசுங்கள்...
சுவாமிகள்
தூக்கம் கலைந்து
விட போகிறது.."
என கணவனின்
வாய்பொத்தி
ஒரு
மௌனத்திற்குப் பிறகு
கூறலானாள்.
"இந்த இரவில்
நாம் யாரைக் கேட்பது?
நமக்கு இனி யாரும்
கடன் தர மாட்டார்கள்.
இந்த நேரத்தில்
அரிசியும்
தந்துதவ மாட்டார்கள்.
எந்த உதவியும் கிட்டாது.
ஒன்று செய்யலாம்.
இன்று காலை
நமது நிலத்தில்
விதைத்த விதைநெல்லை
எடுத்து வந்து
சமாளிக்கலாம்...."
ஆலோசனை
சொன்ன கையோடு
நெல்மணிகளை
எடுத்துவர
ஒரு கூடையைத்
தந்தாள்
மாற நாயனாரின்
மனமறிந்த மணவாட்டி.
மழை பொழியும்
கும்மிருட்டில்
தூரத்திலிருந்த
தன் நிலம்
நோக்கி நடந்தார்
இளையான்குடியார்,
மழைத் தூறலைச்
சமாளிப்பதற்காக
கூடையைத் தலைமேல்
கவிழ்த்தபடி.
ஒரு பெரும் மின்னல்
வெளிச்சம் விட்டது.
கண்முன்னே
இரு பாம்புகள்
பிணைந்து விளையாட
வரப்பு மறைவில்
கீரி ஒன்று
இரண்டில்
ஒன்றையாவது
இரையாக்கக்
காத்திருந்தது
அவர் கண்ணில்பட்டது.
மாறனார்
பாம்புகளுக்கெல்லாம்
பயந்த மாதிரி
தெரியவில்லை.
இறை தேடுவோருக்கு
கீரியின் இரையா
முக்கியம்?
எம்பி எழும்
பாம்புகளின்
விஷமம்
விஷமா என்ன ?!
நிலத்திற்குச் சென்றார்.
அன்றைய
பெரு மழையால்
அதிர்ஷ்டவசமாக
விதை நெல்மணிகள்
தேங்கிய மழை நீரில்
மிதந்து கொண்டிருக்க
கைகளில் துளாவி
நெல்மணிகளை
நேரத்தியாகச் சேர்த்துக்
கூடையிலிட்டார்,
சோர்வடையாச் சிவபக்தர்.
கூடை நிரம்பியது
சேற்றுமண் கப்பிய
நெல்மணிகளால்.
யோசனையோடு
திரும்பும் வழியில்
ஓரத்தில் விளைந்திருந்த
கீரைகளையும்
ஓரிரு காய்களையும் பறித்துக்கொண்டார்
கறி சமைக்க.
வீட்டுக்கு வந்தார்.
மனைவி எதிர்பார்த்தபடி
வாசலிலேயே
காத்திருந்தாள்.
"அம்மா....
இதோ
கொண்டு வந்துவிட்டேன்.
பாவம் சுவாமி.
ரொம்ப களைத்து
கண்ணயர்ந்துள்ளார்.
இனி உன் வேலைதான்.
சமையலைத் தொடங்கு.
சுவாமிகளுக்கு படைப்போம்.
விரைந்து செய்.
மீதமிருப்பின்
நம் பசியும் தீர்ப்போம் "
மைத்துனர்
ஸ்ரீரங்கநாதரை போல்
ஏகாந்தமாய்ப்
படுத்திருந்த
ஆதி நாதர்
லேசாய் கண்விழித்து
கண் சுருக்கி
மென்னகைத்தார்.
சமையலறைக்குள்
சென்ற பிறகுதான்
உறைத்தது
புனிதவதிக்கு.
'உணவு தயாரிக்க
பொருட்கள் தயார்.
தீ மூட்ட
விறகு வேண்டுமே ?'
கணவனைக்
கண்ணீரோடு
அழைத்தாள்.
மெதுவாய்ச்
சொன்னாள்.
"பிராண நாதா...
நாம் இருவரும்
ஒன்றை மறந்து விட்டோம்.
"அடுப்பு எரிக்க
விறகு வேண்டாமா?
வீட்டிலும் விறகில்லை.
வெளியில் தேடினாலும்
ஈரம் பட்டு
நமத்துப் போய் இருக்கும்"
கண்ணீர் சொரிந்தாள்.
கவலை மிகுந்து
என்ன செய்வது
என புரியாமல்
தலையைச் சொறிந்தபடி
வீட்டை நோட்டமிட்ட
மாற நாயனாரின்
கண்களில் பட்டது
மேற்கூரை விட்டம்.
வறுமையின்
கோரத் தாண்டவத்தில்
சிதிலமடைந்து
கவனிப்பாரின்றிக் கிடந்த
வீட்டின் ஒருபுற
மேற்கூரையில்
மரப்பட்டைகள்
ஆங்காங்கே
காய்ந்து
தொங்கிக்
கொண்டிருந்தன.
சட்டெனத் தாவி
அவற்றைப் பிடுங்கி
மனைவியிடம் தந்தார்
மாற நாயனார்.
"போதுமா தாயே"
"இப்போதைக்குப் போதும்"
மனம் நெகிழ்ந்தாள்
மனையாள்.
இனி
புனிதவதிக்குத் தானே
புனிதமான வேலை ?
நெல்மணிகளை
அப்பியிருந்த
சேற்றை நீக்கி,
தண்ணீர் விட்டு அலசி,
அழுக்கு நீக்கி,
அடுப்பில் இருக்கும்
சட்டியில் லேசாக வறுத்து,
போதுமான பதத்தில்
அவற்றை உரலில் இட்டு,
எழும் ஓசை
சுவாமிகளின்
செவிகளைத் தொடாதவாறு
மெல்ல இடித்து,
உமி, அரிசி
என வேறாகப் பிரித்து
அரிசியை மட்டும்
தனித்து எடுத்து
சோறு ஆக்கினாள்.
கீரையையும்
காய்களையையும்
கறியாகச்
சமைத்து முடித்தாள்.
சமையல் வேலை
முடிவுற்றதும்
புனிதவதி
முகமலர்ந்து
கணவனைப் பார்த்து
தலையசைத்தாள்.
அதற்காகவே
காத்திருந்த
மாற நாயனார்
சுவாமிகளின்
அருகில் சென்று
மெலிதாக அழைத்தார்.
"சுவாமி...
எழுந்தருள்வீர்!
அமுது தயார்!!"
அதற்காகவே
காத்திருந்தவர் போல்
எழுந்தார்
ஏழு உலகமும் போற்றும்
கருணாமூர்த்தி.
எழ முயன்ற
அதே கணத்தில்
கோடி சூரிய ஒளியாய்
பிரகாசித்து
ஜோதி சொரூபமாய்
காட்சி அளித்தார்
சிவனடியார் உருவில் வந்த சிவபெருமான்.
இளையான்குடி
மாற நாயனாரும்
ஈடில்லா மனைவி
புனிதவதியும்
அதிர்ச்சியில்
செய்வதறியாது
திகைத்து நின்றனர்.
அனிச்சையாய்
அவர்கள் கரங்கள்
கைகூப்பின.
சிரங்கள்
தாழ் பணிந்தன.
காட்சி தந்த கடவுளரின் காணக்கிடைக்காத
முடி பார்த்து
முகம் தரிசித்து
அடிபணிந்து
காலடி விழுந்து
அவரின் அடியையும்
தொழுது வழங்கினர்.
சிவனது
அடியையும் முடியையும்
பார்க்கும் பாக்கியம்
திருமாலுக்கும்
பிரம்மாவுக்கும் கிடைக்காத
பெரும்பேறு அன்றோ?
அப்பேறு
அடியார்க்கு அடியாராய்
சிவ சேவை புரிந்த
மாறனார் தம்பதியினருக்கு
இறையே
நேரில் வந்து தந்தது
பெரும்பேறு அன்றோ !
உலகாளும்
உமையவர்
உரத்த குரலில்
சொன்னார்.
"புண்ணிய சீலரே!
புனிதவதியே!
நீவிர் இருவரும்
உரிய காலத்தில்
சிவபுரம்
வந்தடைவீர்கள்.
சிவபுரியில்
சிவகணங்கள் ஆகி
சிவபணி தொடர்வீர்கள்.
அங்கே
உங்களுக்காக
என் நண்பன்
குபேரன்
காத்திருப்பான்.
வரவேற்பான்.
சங்கநிதி, பதுமநிதி
இரண்டையும்
இரு கரங்களில்
ஏந்திக் கொண்டு
உங்கள்
ஏவலுக்கு
பணி செய்வான்."
புன்னகைத்தபடியே
மறைந்தார்
மழை நேரத்தில் வந்த
மறை நாயகன்.
அப்போது
ஒரு பெரும்
தொடர் மின்னல்
வெளிச்சத்தைப்
பீச்சியடித்தது.
அம்மாதிரியான
பெரும் மின்னல்
குடிசைக்கு
ஆபத்தை விளைவிக்கும்
என அறிந்திருந்த இருவரும்
வீட்டைவிட்டு
வெட்டவெளிக்கு
ஓடிவந்தனர்.
மின்னல் தொடர்ந்தது.
"திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்"
என்றபடியே
கணவனும் மனைவியும்
ஒருவருக்கொருவர்
ஆதரவாய்
கரங்கள் பிடித்தபடி
சில நொடிகளுக்கு
முன் பெற்ற
பேரருள் தரிசனத்தையும்
மறந்து நடுங்கியபடி
நின்றிருந்தனர்.
அப்போது
திடுமென தோன்றிய
மின்னலின் ஊடே
வானில் தோன்றி
சிவனும் பார்வதியும்
தம்பதி சமேததராய்
ரிஷப வாகனத்தில்
அருட்காட்சி அளித்தனர்.
அக்காட்சியைக்
கண்குளிரக் கண்ட
மாறனார் தம்பதியினர்
கண்ணீர் மல்க
உரத்த குரலில் '
திருச்சிற்றம்பலம்...
திருச்சிற்றம்பலம்'
என்று இறைதொழுதனர்.
காணக் கண்கோடி
வேண்டுமே என
மாற நாயனார்
மகிழ்ந்திருந்த நேரத்தில்
ஆசீர்வதித்த படியே
விண்ணில் மறைந்தனர்
இறைவனும் இறைவியும்.
அதன் பின்னர்
சில காலம்
மாறநாயனார் -
புனிதவதி தம்பதியினர்
இளையான்குடியே
வியந்து
தொழும் வண்ணம்
சிவனடியார்க்குப்
பணிசெய்து விட்டு
இறையடி சேர்ந்தனர்.
'உலகில்
மனிதராகப் பிறந்ததன்
பிறவிப் பயன்
அடியார்க்கு
அமுது படைத்தலே'
என்கிறார்
திருஞான சம்பந்தர்.
இதையே
பின்னாளில்,
நடைமுறை
உலகிற்கு ஏற்ப தடையின்றி 'பசித்தவருக்கு
அன்னதானம் செய்க'
என்று ஆணையிட்டு
'அணையா அடுப்பு' அமைத்தார்
அருட்பெரும் ஜோதி கண்ட
வள்ளல் பெருமான்.
மகேஸ்வர பூசை
செய்பவர்களை
'மகேஸ்வரர்' என்று
அழைக்கிறது ஆன்மிகம்.
இளையான்குடி
மாற நாயனார் புராணம்
நமக்கு
சொல்லியுள்ள
சிவ ரகசியம்
என்ன தெரியுமா ?
'வறுமையிலும்
சிறுமையின்றி
முடிந்தவரை
பசியாற்றுங்கள்'
என்பதே.
'இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்' என இளையான்குடி மாற நாயனாரின் கீர்த்தியை உலகுக்கு உரைக்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார்.
ஓம் நமசிவாய!
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக