திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்


 

63 நாயன்மார்கள் வரலாறு

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்


தொண்டை நாடு.

செல்வச் செழிப்பும் 
இயற்கை வனப்பும் 
ஆன்மிகச் சிறப்பும் 
கொண்ட திருநாடு.

நாயன்மார்கள் 
புராணம் சொல்லும்
பெரியபுராணம் 
படைத்த 
ஞானசிகாமணி 
சேக்கிழார் பெருமான் 
அவதரித்த அருள் நாடு.

அதனால் 
சேக்கிழார் பிரான் 
பெரியபுராணத்தில்
தொண்டை நாட்டையும் 
தலைநகர் காஞ்சியையும் 
வர்ணிக்கும் பாணியே
பல கதைகள் சொல்லும்.

எப்படிப்பட்ட 
ஆன்மிக பூமி...! 
எப்பேர்ப்பட்ட 
காஞ்சி நகர்...!

முக்கண்ணரின் 
மூன்று சிவத் தலங்கள் 
தொண்டை நாட்டிற்குப்
பேரருள் கூட்டும்
பெருமை கொண்டவை.

அவை 

திருமாலை 
இடப்பக்கமாகக் கொண்ட 
சிவபெருமான் 
உறைவது 
திருக்காளத்தி மலை.

தேவர்களும் 
தெய்வ பக்தர்களும் 
வேடர்களாகப் பிறந்து 
ஆதி மூர்த்தியின்
அருள் வேண்டுவது 
திருவிடைச்சுரம் 
என்னும் சிவத்தலம்.

வேடுவப் 
பெண்களோடு 
தெய்வப் பெண்கள் 
சேர்ந்து நீராடும் 
சுனையையுடையது 
திருக்கழுக்குன்றம் 
என்னும் 
சிவனுறைத்தலம்.

குறிஞ்சி முல்லை 
மருதம் நெய்தல் 
என்ற 
நானிலங்களுடன் 
பாலையும் சேர்ந்து 
ஐந்திணை நெறியும் 
தத்தம் இயல்பினில் 
செழித்து 
சிவமயமாக விளங்கும் 
நாடே தொண்டை நாடு.

இம்மட்டுமா....!

சோழநாட்டில் 
அவதரித்த 
பட்டினத்தார் 
முக்தி அடைந்த 
தெய்வத் திருநாடு 
தொண்டை நாடு.

ஐம்பெரும் 
சபைகளில் 
ஒன்றாகிய 
ரத்தின சபை 
தொண்டை நாட்டில் 
திருவாலங்காட்டில் 
தான் உளது.

கயிலை மலை 
சென்று திரும்பிய 
காரைக்கால் அம்மையார் 
இறைவனைப் 
போற்றிப் பாடிய 
பெரும்பேறு 
பெற்ற நாடு 
தொண்டை நாடு.


தொண்டை நாட்டின் 
தலைநகரம் 
காஞ்சிபுரம்.

காஞ்சிபுரத்தின்
ஆன்மிகச் சிறப்பும் 
வரலாற்றுச் சிறப்பும் 
வியக்க வைப்பன.

உமாதேவியார் 
உயிர்களிடத்துப் 
பெருங்கருணையினால் 
முப்பத்தி இரண்டு
அறங்களையும் 
புரிந்து கொண்டு 
காமக் கோட்டத்தில் 
எழுந்தருளியிருக்கும் 
பெருமை உடையது 
காஞ்சிபுரம்.

கரிகாற்சோழன் 
இமயத்தில் 
புலிக்கொடி 
நாட்டப் போகும் போது 
காஞ்சிபுரத்தின் 
பெருமையை அறிந்து 
காடழித்து 
எல்லை வகுத்து 
உருவாக்கிய நகரம் 
காஞ்சிபுரம்.

ஆழ்ந்த அகழி 
சூழ்ந்த மதில் 
உயர்ந்த சிகரங்கள் 
வேள்விப் புகை 
நிறைந்த 
அந்தணர் வீதி 
செல்வம் மிக்க 
அரசர் வீதி 
வளமை மிக்க 
வணிகர் வீதி 
விருந்தினரை 
உபசரிக்கும் 
வேளாளர் வீதி 
என்றமைந்த 
சிறந்த நகரம் 
காஞ்சிபுரம்.

கரிகாற்சோழன் 
முதலிய 
சோழ மன்னர்கள் 
காஞ்சி மாநகரத்தைத் 
தலைநகராகக் கொண்டு 
ஆட்சி புரிந்தது 
வரலாற்றுப் பெருமை.

வருடம் முழுவதும் 
ஏதோ ஒரு திருவிழா 
நடந்து கொண்டிருக்கும். 
தேவர் அடியார்
உள்ளிட்ட அனைவரும் 
நிறைந்திருப்பர்.

தானம் தர்மம் 
அன்பு அருள் 
கருணை ஞானம்
முதலியன 
நிலவும் சிவலோகமே 
காஞ்சிபுரம்.

ஐம்பெரும் 
பூதத் தலங்களில் ஒன்று.
முக்தி தரும் ஏழுனுள் 
முதன்மையானது இத்தலமே.

உமையவளிடமே
சிவபெருமான் 
திருவிளையாடல் 
புரிந்தது 
இத்தலத்தில்தான்.

திருக்குறிப்புத் 
தொண்ட நாயனார் புராணம் 
அறிவதற்கு முன் 
ஈசன் தேவியிடம்
நடத்திய சோதனையைத்
தெரிந்து கொள்ளலாமா?


ஒருமுறை - 
கயிலாய மலையில் 
சிவபெருமான் 
பார்வதி தேவியிடம் 
சிவாகமங்கள் பற்றி 
விளக்கிக் 
கொண்டிருந்தபோது 
'எப்போதும் 
நான் விரும்புவது 
பூசையே'
எனத் திருவாய் 
மலர்ந்தார்.

உடனே 
உமையவள் 
சிவாகம முறைப்படி 
சிவபெருமானைப் 
பூசிக்க உறுதி பூண்டாள்.

அதற்குரிய இடமாக 
சிவபெருமான் 
பரிந்துரைத்த 
திருத்தலமே 
காஞ்சிபுரம்.

காஞ்சிபுரத்தில் 
அம்பிகை 
கோயில் கொண்டு 
சிவபெருமானை
விரும்பித் துதித்தாள்.

இடையறாது 
ஐந்தெழுத்தை ஓதி 
கைகுவித்து 
இறைஞ்சி
அருந்தவம் 
புரிந்தாள்.

திருவிளையாடல்
புரிய விரும்பிய 
ஏகாம்பரநாதர் 
வெளிப்படாது 
காலம் தாழ்த்தினார்.

அம்பிகை 
மேலும் 
கடுந்தவம் புரிந்தாள்.

அதன் பின்னர்தான் 
அகிலாண்டேஸ்வரர்
ஒரு மாமரத்தடியில் 
எழுந்தருளினார்.

அகிலாண்ட நாயகி 
இறைவனை 
மெய்யன்புடன்
வழிபட நினைத்தாள்.

திருநந்தவனம் சென்று 
ஈசனுக்கு உரிய 
புது மலர்களைக் 
கொய்து 
கம்பா நதியில் எடுத்த 
திருமஞ்சனநீர் 
நெய் தீபம் 
சந்தனம் பால் 
தயிர் முதலிய 
அபிஷேகப் 
பொருட்களுடன் 
உருகிய 
உள்ளத்துடன் பூசித்தாள்.

இறைவன் 
இறைவியின் 
பூசையை ஏற்று 
ஆட்கொள்ளத் 
தீர்மானித்தார்.

அதற்குள் 
ஒரு விளையாட்டு 
விளையாடி விட 
விருப்பப்பட்டார்.

அக்கணமே 
கம்பா நதியில் 
வெள்ளம் பெருகியது.

புது வெள்ளம் 
வருவது கண்டு 
பதைபதைத்த 
பார்வதிதேவி 
சிவலிங்க மூர்த்தியை 
ஆரத் தழுவிக் கொண்டாள்.

அந்த அரவணைப்பில் 
மனம் நெகிழ்ந்த 
மணிகண்டர்
அம்மையின் 
திருமுலைகளுக்கும் திருக்கரங்களுக்கும் 
மிருதுவாகக் காட்டி 
குழைந்து அருளினார்.

அப்போது 
உலகில் உள்ள 
உயிர்கள் எல்லாம் 
உருகின.

விண்ணவர் வியந்து 
பூமழை பொழிந்தனர்.

வெள்ளம் திரண்ட
கம்பா ஆறு 
வணங்கி விலகியது.

இறுகத் தழுவியதாலும் 
மூர்த்தி குழைந்ததாலும் 
வளைத் தழும்பும் 
முலைச் சுவடும் 
அணிந்தபடியே 
சிவலிங்க மூர்த்தி 
மணவாளக் 
கோலத்துடன் 
பார்வதிதேவிக்குக் 
காட்சியளித்தார்.

அருளாசி கூறிய 
மாதேவன் 
மலைமகளை நோக்கி 
வேண்டும் வரங்களைக்
கேட்கச் சொன்னார். 

மூன்று வரங்கள் 
கேட்டாள் 
முப்பெரும் தேவியரில்
வீரம் செறிந்த தேவி.

"நான் 
நடத்தி வந்த 
பூசை தொடர்ந்து 
எக்காலமும் 
நடக்க வேண்டும்.

இத்திருத்தலத்தில் 
எல்லா அறங்களும் 
நான் செய்யும்படி 
அருள வேண்டும்.

இத்தலத்தில் 
உள்ளோர் 
செய்வினைப் 
பலன் நீக்கி 
மாதவப் பயன் 
கொடுத்தருள 
வேண்டும்."

"அப்படியே ஆகட்டும்" 
என்றார் 
ஆனந்தக் கூத்தர்.

அதன் பின்னர் 
இன்று வரை 
முப்பத்தி இரண்டு 
அறங்கள் 
புரிந்த வண்ணம் 
அருள்பாலித்துக் 
கொண்டிருக்கிறாள்
அன்னை காமாட்சி.



இவ்வளவு சிறப்புமிக்க 
தொண்டை நாட்டில் 
பண்டைய பூமியில்
காஞ்சி மாநகரில் 
ஒரு திருத்தொண்டர்    
வாழ்ந்து வந்தார்.

அவர் சிவநெறி 
நின்ற தவசீலர். 

அடக்கம் 
வாய்மை 
தூய்மை 
ஆகியவற்றோடு 
எம்பிரான் மட்டுமே
அவரது சொத்து.

மனத்தில் 
செம்மையுடையோனின் 
இணையடித் தாமரைகளை 
நிறுத்தி இடையறாது 
சிவபிரானின் திருநாமத்தைத் 
துதித்தபடி இருப்பார். 

பக்தி என்றால் 
சாதாரண 
பக்தி அல்ல.
திடமான பக்தி.

சிவனடியார்களின் 
தேவைகளை 
முகக் குறிப்பிலிருந்து 
தெரிந்துகொண்டு 
பணிவிடை செய்வார்.

அதனாலேயே 
அவருக்குத் 
திருக்குறிப்புத் தொண்டர் 
எனப் பெயர் வந்தது. 

அவர் 
வண்ணார் வகுப்பினர் 
என்பதால் 
சிவனடியார்களின் 
உடைகளைத் 
துவைத்துத் தருவதைச் 
சிவப்பணியாகச் 
செய்து வந்தார்.

திருக்குறிப்புத்
தொண்டரின் 
பக்தியிலும் 
பணிவிடையிலும் 
மனம் குளிர்ந்த 
ஏகாம்பரநாதர் 
அவருக்கு 
அருள் வழங்கத் 
தீர்மானித்தார்.

அதற்கு 
நல்லதொரு 
நாளும் 
குறித்தார்.

அதற்கு முன்னர் 
வழக்கம்போல் 
தன் பக்தருக்குச் 
சோதனை தந்து 
விளையாட நினைத்தார்.

விளையாடி
வினையகற்றி 
தன்னருகேயே 
வைத்துக்கொள்ளத் 
திட்டமிட்டார்.

தொண்டை நாட்டில் 
சிவனின் சோதனைக்கு   
உமாதேவியே 
தப்பவில்லையே! 
இத்திருத்தொண்டர் 
எம்மாத்திரம்?



அது ஒரு
சரியான குளிர்காலம்.

ஓர் ஏழை முதியவர்
உருவெடுத்தார் 
ஏகாம்பரநாதர்.

கழுத்தில் 
உத்திராட்சம்.
மேனி முழுதும் 
திருநீறு. 
அழுக்கு நிறைந்த 
கந்தலாடை சகிதம் 
திருக்குறிப்புத் தொண்டர் 
குடிசை அருகே 
தள்ளாடித் 
தள்ளாடி வந்தார்
குளிரில் நடுங்கியபடி.

ஒரு சிவனடியாரைக் 
கண்டவுடனே
பரவசமடையும் 
திருக்குறிப்புத் தொண்டர் 
உரோமம் சிலிர்க்க
எழுந்து விரைந்தோடி
பணிந்து வணங்கி 
அவரை வழிபட்டார்.

"தவ சீலரே...!
தங்கள் வருகையால்
என் குடிசை புனிதம் 
அடைந்து விட்டது.

இங்கு தாங்கள்
எழுந்தருளியிருப்பது 
அடியேன் செய்த 
தவப் பயனோ!
என் குலமே செய்த 
புண்ணியப் பலனோ!!

ஏன் இப்படி 
இளைத்து 
இருக்கிறீர்கள்?
குளிரில் நடுங்குகிறதே 
தங்கள் திருமேனி!

ஆடை வேறு 
அழுக்காக....
ஆடைகளைத் 
துவைத்துப் 
பல நாட்கள் 
ஆன மாதிரி 
கந்தலாகி உள்ளதே!

ஐயன்மீர்...!
உங்கள் 
உடையைத் துவைத்துத் 
தூய்மையாக்கித் 
தர வேண்டியது 
என் கடமை. "

என்றவாறே 
சிவனடியார் 
உடுத்தி இருந்த 
உடையைக்
கழற்றப் போனார்.

சிவனடியார் மறுத்தார். 
பெரிதும் தயங்கினார்.

"அப்பனே...!
இருப்பதோ 
ஓர் ஆடை...
இப்போதே 
குளிர் வாட்டுகிறது.... 

தாமதமானால் 
தாங்க மாட்டேன்.
உயிர் போய்விடும்...!" 
பயந்தபடி கூறினார்.

"ஐயன்மீர்...
என் தொழில் 
துவைப்பதுதான்.
என் சிவப்பணியே 
சிவனடியார்களின் 
உடைகளைத் 
துவைத்துத் தருவதுதான்.

உங்கள் 
கரிய கந்தல் ஆடையை
திருநீறு போல் 
வெண்மையாக 
வெளுத்துத் தருகிறேன்.

மறுக்காமல் 
தாருங்கள். 
மாலைக்குள் 
துவைத்துக் 
காயவைத்துத் 
தங்களிடம் 
பத்திரமாகத் தந்துவிடுவேன்.

அதுவரை இங்கேயே 
ஓய்வெடுங்கள்....

இதோ....
விரைந்து 
வந்து விடுகிறேன்...."
என்று சொல்லியபடியே 
அடியாரின் 
அழுக்கு ஆடையைப் 
பெற்றுக்கொண்டு 
குளக்கரைக்கு ஓடினார்.

முக்காலமும் அறிந்த 
முக்கண் மூர்த்தி
திருத்தொண்டரின் 
ஓட்டத்தை ரசித்தபடி 
வான் நோக்கினார்.

வானவேடிக்கை 
தொடங்கியது.

சூரியன் 
சுட்டெரிக்க 
ஆரம்பித்தார்.

திருக்குறிப்புத் தொண்டர் 
எல்லையில்லா 
ஆனந்தத்துடன் 
உடையைப் 
பாங்காக அலசி 
வெள்ளாவியில் 
வைத்து 
அழுக்கு நீக்கி 
கந்தலாடையைச் 
சிவனாடையாகப் 
புதுப்பித்து 
உலர்த்துவதற்காக 
அருகில் இருந்த 
பாறை அருகே 
சென்றார்.

விஷமக்கார 
சிவபிரானின் 
குறிப்பறிந்து 
சூரியன் 
மறைந்து போனார்.

பதிலுக்கு 
வருண பகவான் 
சிவபிரானின் 
மனமறிந்து 
மழை பொழியத் 
துவங்கினார்.

மழை என்றால் 
உலகம் 
பார்த்திராத மழை. 
அடை மழை. 
கண் தெரியாத 
அடர் மழை. 
ஆகாயப் பந்தலைக் 
கிழித்துக் கொண்டு 
அப்படியே ஒரு 
பெருங்கடல் கொட்டியது 
போன்ற பேய் மழை.

மிரண்டு போனார் 
திருக்குறிப்புத் தொண்டர். 
அரண்டு போனார் 
ஈரமான 
ஆடைகளைக் கண்டு.

'மாலை 
வந்து விட்டதோ!' 
என நேரம் 
காலம் அறியாதபடி 
மழை 
கொட்டோ கொட்டென்று 
கொட்டிக் 
கொண்டிருந்ததால் 
கடும் துயர் கொண்டார்.

எந்த 
மனதும் வாயும் 
சிவனடியார் 
வீடு வந்த சமயம் 
புளகாங்கிதமடைந்து 
'புண்ணியம்' 
செய்ததாகக் கருதி 
மகிழ்ந்ததோ
அதே மனமும் வாயும் 
புலம்பி 
'பாவி' ஆனதாக 
அரற்ற ஆரம்பித்தன.

"ஐயகோ.....
 என் செய்வேன்? 
வெயிலின்றி 
துணி 
காய மறுக்கிறதே! 
முதியவர் குளிரில் 
என்ன ஆவாரோ?

சிவபக்தருக்கு 
உதவுவதற்குப் 
பதில் 
உபத்திரவம் தந்த 
பாவியானேனே!

தவ முனிவருக்குத் தீங்கிழைத்துவிட்டேன். 
குற்றேவல் தவறிவிட்டதே! 

அவரது திருமேனி 
இராக்குளிரில் 
சில்லிட்டிருக்குமே!

சிறியேனாகி 
சிவநெறி 
தவநெறி 
இழந்து நிற்கிறேனே!"

என்ன நினைத்தாரோ 
பாறையின் மேல் 
தெப்பமாக 
மிதந்து கொண்டிருந்த 
சிவனடியாரின் 
உடையை 
நோக்கிப் போனார்.

கைகளில் எடுத்தார். 
கண்கள் குளமாயின.

'இது 
எப்பேர்பட்டப் பாவம்!' 
என்று ஓலமிட்டவாறே 
பாறையின் மீது 
தன் தலையை வைத்து 
பலமாக வேகமாக 
மோதிக் கொள்ள 
ஆரம்பித்தார்.

கற்பாறையே 
கலங்கியது. 
கற்பனைக்கு எட்டாத 
வினை அகற்றும்
வள்ளல் மனம் 
கரையாதா என்ன? 

விளையாட்டு நாயகன் 
சிவபெருமான் 
அக்கணமே 
அவ்விடம் தோன்றி 
திருக்குறிப்புத் தொண்டரின்  
தலையை உடையாமல் 
தாங்கிப் பிடித்தார்.

 "அன்பனே....!
 உன் நிலையை 
மூவுலகமும் 
அறியும்படி செய்யவே 
இச்சோதனையை 
விளையாட்டாகச் 
செய்தேன். 

உன் நேர்மையான
பக்தி கண்டு 
வியந்தேன். 
மகிழ்ந்தேன்.

விரைவில் 
சிவபுரி வருவாயாக! 
காத்திருப்பேன்.
காத்தருள்வேன்."

இறை 
குரலைக் கேட்டு 
மெய்சிலிர்த்த 
திருக்குறிப்புத் தொண்டர் 
இறையின் திருக்கரங்கள் 
தொட்ட தன் தலையைச் 
சிவனடியில் பதித்தார்.

மழை நின்றது.
புனல் மழை மாறி 
மலர் மழை பொழிந்தது.

கொன்றை மாலை 
சூடியபடி 
இறைவனும் இறைவியும் 
இடப வாகனத்தில் 
திருக்காட்சி அளித்தனர்.

குறிப்பறிந்து
விண்ணவர் வாழ்த்த 
வருணனும் சூரியனும் 
வழிமொழிய 
திருக்குறிப்புத் தொண்டர் 
'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்' 
ஆகப் பெயர் கொண்டார்.

சிவத் தொண்டர்களின் 
ஆடை அழுக்கை 
அகற்றியதோடு 
மும்மலங்களையும் 
இறப்பு பிறப்பு 
ஆகிய அழுக்குகளையும் 
அகற்றி 
சிவத்தன்மை அடைந்து 
அன்புடை நாயனார் ஆகும் 
பேறு பெற்றார் 
திருக்குறிப்புத் 
தொண்ட நாயனார்.

இன்றும் காஞ்சிபுரத்தில் 
முத்தீஸ்வரர் ஆலயத்தில்
இறைவனாகவே 
அருள் தந்து
கொண்டிருக்கிறார் 
திருக்குறிப்புத் 
தொண்ட நாயனார்.

'திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்'
- இது சுந்தரர் திருக்குறிப்பு.

 ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)