ஆனாய நாயனார் புராணம்


63 நாயன்மார்கள் வரலாறு

ஆனாய நாயனார் புராணம்


எம்பெருமான் 
பக்தர்களைச்
சோதித்து 
இடர் தந்து 
துயர் நீக்கியே 
ஆட்கொள்வார் என 
நினைப்போர்க்கு மாறாக 
ஆனாய நாயனார் புராணம் 
ஆதி பகவனின்  
அருட் பெருமையை 
பெருங்கருணையை 
விளங்கச் சொல்லும்.
பெருமிதம் கொள்ளும்.

திருவிளையாடல் 
ஏதும் இல்லாமலேயே 
சிவபுரிக்குச் 
சிவனாலேயே
அழைத்துச் செல்லப்பட்ட 
பெருமை கொண்டவர் 
ஆனாய நாயனார்.

எல்லா வளங்களும் 
நிறைந்திருக்கும் 
சோழநாட்டின் 
உட்பிரிவுகளில் ஒன்று 
அருள் வளமிக்க
'மழநாடு.'

அங்கு 
மேல் மழநாட்டில்
'திருமங்கலம்'
என்றொரு 
பெருமங்கலம்.

திருமங்கலத்தில் 
அருள்பாலிக்கும் 
ஆண்டவரின் 
திருநாமம் 
சாமவேதீஸ்வரர்.

வீணை ஓசையும் 
வேத ஓசையும் 
வேய்ங்குழல் ஓசையும் 
வெண்சங்கு ஓசையும் 
நிறைந்திருக்கும் 
யாத்திரைத்தலமே 
திருமங்கலம்.

வேய்ங்குழல் 
என்பது 
வேறொன்றுமில்லை.
கார்வண்ணன் 
கையிலிருக்கும்
புல்லாங்குழலே. 

ஆயர் குலம் செய்த 
பெரும் தவத்தால் 
அக்குலத்தில் 
அவதரித்தார் 
ஆனாய நாயனார்.

ஆனாயர் 
என்பதே 
காரணப் பெயர்தான். 
ஆனிரை காப்பதால் 
அப்பெயர் வந்தது.

மிக உறுதி வாய்ந்த 
சிவபக்தரான ஆனாயர் 
சிவத்தை அன்றி 
வேறு ஒன்றையும் 
விரும்பாதவர்.

தூய ஒளி வீசும் 
வெண்ணீறை 
விரும்பும் திருத்தொண்டர்.

ஐந்தெழுத்தை 
எப்போதும் ஓதும் 
சிந்தனையினர்.  
அன்பும் அறனும் 
இரு கண்ணெனக் 
கொண்டவர்.

சிவனடியார்களைப் 
பேணுவதில் 
சிறந்தோங்கியவர்.

சிவனடியார் 
எக்குலத்தவர் ஆயினும் 
ஆழ்ந்த பக்தியோடு 
உபசரிக்கும் உன்னதர்.

ஆயர்குலத் தலைவராக 
விளங்கிய 
ஆனாயர் 
திருமங்கலம் உறை
சாமவேதீஸ்வரருக்கு 
அனுதினமும் 
பால் தயிர் 
நெய் பஞ்சகவ்யம் 
திருநீறுக்குச் சாணம் 
தருவதைச்
சிவப் பணியாகக் 
கருதி செய்து வந்தார்.

அவர் வீட்டைச் சுற்றி 
கன்று பசு எருது 
என ஆனிரைகள் 
நிறைந்திருக்கும்.

கன்றுகள் 
பால் கறவை 
மாறிய பசுக்கள் 
பால் சுரக்கும் 
பசுக்கள் 
சினைப் பசுக்கள் 
இளம் கன்றுடைய பசுக்கள் 
வலிய எருதுகள் 
எனத் தனித்தனித்
தொழுவத்தில் 
அவை 
கட்டப்பட்டிருக்கும்.

இளம் கன்றுகள் 
வயிறு முட்டத் 
தாய்ப்பசுவிடம் 
பால் குடித்த 
பின்னர்தான்
இறைவனுக்கும் 
அடியார்க்கும்
உற்றார் 
உறவினருக்கும் 
பால் கிடைக்கும்.

கோமாதாவிற்குப் 
பணி செய்வதற்கென்றே 
பல கோவலர்கள் 
ஆனாயர்
ஏவலுக்குக் காத்திருப்பர்.

அனுதினமும் 
ஆனிரைகளை 
ஏவலர்கள் 
அருகிருக்கும் 
முல்லை நிலத்திற்கு 
அழைத்துச் சென்று 
புல் மேயவிடுவர்.

உடன் செல்வார் 
ஆனாயர் 
சிவ நாமம் 
உச்சரித்த படியே.

ஆனிரைகளுக்கு 
அருந்த தூயநீர்
உரிய நேரத்தில் 
இளைப்பாற மர நிழல்
பொல்லா விலங்குகளிடம் 
இருந்து பாதுகாப்பு
முதலானவற்றை 
முழுமனதோடு 
இன்னொரு ஏவலராய்க் 
கண்காணிப்பது
ஆனாயரின் 
அன்றாடப் பணி.

அதை சிவப்பணி 
எனச் செய்வார்.
காரணம் 
அவை தரும் 
பாலும் மோரும் 
தயிரும் நெய்யும் 
சாணமும் கோமியமுமே 
அவர் 
சிவபூஜைக்குத் 
தினம்தோறும் 
அனுப்பிவைக்கும் 
நிவேதனப் பொருட்கள்.

இதன் மூலம் 
கிடைக்கும் வருமானம் 
அனைத்தையும் 
சிவப்பணிக்கும் 
சிவனடியாருக்குமே 
செலவிடுவார்.

ஆனிரைகளோடு 
வீட்டை விட்டுப் 
புறப்படும்போது 
நெற்றியில் திருநீறு 
சிவார்ப்பணக் கோலம் 
ஒரு கையில் வெண்கோல்
மறு கையில் வேய்ங்குழல் 
எனத் தெய்வீகமாகக் 
காட்சியளிப்பார்.

கோவலர்களிடம் 
வேலை வாங்கவும் 
தானே வேலை செய்யவும் 
தெரிந்த அவரிடம் 
ஒரு கலை 
கைவசம் இருந்தது.

ஆம்...
அருமையாக 
வேய்ங்குழல் வாசிப்பார்.

அவரது 
புல்லாங்குழலிசை 
இசை நூல் 
இலக்கணம் கொண்டது.
ஐந்தெழுத்தைத் 
தன்னகத்தே கொண்டது.

பஞ்சாட்சரத்தை 
ஆனாயர்
ஏழிசையில் 
சுருதியோடு 
இசைக்கும்போது 
குழலிசை காடெங்கும் 
இனிமையாய்ப் பரவி 
சிவ மணம் பரப்பும்.

சகல சராசரங்களும் 
வசமிழந்து உருகி 
நிற்கும்.

திருமங்கலத்தில் 
குடிகொண்டிருக்கும் 
சாமவேதீஸ்வரரே
மயங்கிப் போவார். 

இப்படித்தான்-
ஒரு கார் காலத்தில் 
ஒரு நாள் 
ஆனாயர்
ஆனிரைகளை 
மேய்த்த வண்ணம் 
சென்று
கொண்டிருந்தபோது 
கொன்றை மரம் 
ஒன்றைக் கண்ணுற்றார். 

மாலை போல் நீண்ட பூங்கொத்துக்களைத் 
தாங்கி நிற்கும் 
கொன்றை மரம் 
ஆனாயருக்குத் 
தாழ்கின்ற 
சடையினை உடைய 
சிவபிரான் போல் 
காட்சியளித்தது.

அருகிலே சிவன்.
அவரோ இசைஞானி.
கையிலே குழல் வேறு. 

பக்தியில் லயித்தவர் 
பஞ்சாட்சரத்தை 
பரவசத்துடன் 
வாசிக்க ஆரம்பித்தார்.

குழல் வாயும்
தன் வாயும் 
இணைந்தொழுக 
இசை வடித்தார்.

காந்தர்வ வேதத்தில் 
சொல்லியிருந்தபடி 
செய்யப்பட்டிருந்த 
வேய்ங்குழல் 
ஆனாயர் 
விரல் துள்ளலில் 
தெய்வீக இசையாக 
ஒலிக்க ஆரம்பித்தது.

அந்த இசை 
தேன் கலந்து அல்ல 
தேவாமிர்தம் கலந்து 
அனைத்து ஜீவராசிகளின் 
செவிகளிலும் பாய்ந்தது.

அக் குழலோசை 
அசையாததை 
எல்லாம் அசைத்தது. 
அசைந்ததை எல்லாம் 
அசையாதிருக்கச் செய்தது.

பசுக்களும் கன்றுகளும் 
தமை மறந்து போயின. 
பறவைகள் 
பரவசம் அடைந்தன.

தாளத்திற்கு ஏற்ப 
மயில்கள் 
தோகை விரித்தாடின.

விலங்குகள் 
மதிமயங்கி 
கிறங்கி நின்றன.

மான்களும் 
சிங்கங்களும் 
யானைகளும் 
புலிகளும் 
மனங்களைப் 
பறிகொடுத்து 
மயிர் சிலிர்த்துக் 
குதூகலித்தன.

ஆறுகளும் 
அருவிகளும் 
மேலும் பாயாமல் 
கீழும் விழாமல் 
தம் இயல்பிசை மறந்து
குழலிசை கேட்டன.

கடலலைகள் 
அசைவற்று ஓய்ந்தன.

ஒரு கட்டத்தில் 
மான்களும் புலிகளும்
யானைகளும் சிங்கங்களும்
பாம்புகளும் கீரிகளும் 
பகைமை மறந்து 
ஒன்றன் மீது 
ஒன்றாக 
ஓடி விளையாடின.

துன்புறுத்துவோரும் 
துன்புறுவோரும் 
ஒன்றுபட்டுக் கூத்தாட 
காடெங்கும் 
அமைதி பூத்தது.

ஏவலுக்குக் 
காத்திருந்த 
கோவலர்கள் 
பணி மறந்து 
இன்பத்தில் துய்த்தனர்.

விண்ணுலகிலிருந்து 
வித்யாதரர்களும் 
கின்னரர்களும்
தேவர்களும்  
தேரில் வந்து இறங்கி 
நேரில் அருகில் வந்து 
ராக தேவனை
ரசித்த வண்ணமிருந்தனர்.

இசைக்கு 
மயங்காதோர் உண்டோ?

உலகில் 
முதன்முதலில் 
வேய்ங்குழல் 
இசைத்தவர் 
முருகப்பெருமான்.

அடுத்து 
புல்லாங்குழல் 
வாசித்து 
அகிலத்தைக் 
கவர்ந்தவர் 
கண்ணபிரான்.

இப்போது 
ஆனாயர்.
 
கடவுளரையும் 
கவர்ந்திழுக்கும் 
புல்லாங்குழல் இசை.

ஆனந்தத் 
தாண்டவமியற்றும் 
ஆண்டவனையே 
அருகில் வரவழைத்தது 
அவரது குழலிசை.

நேர்மையான 
பக்தி நேர்த்தியான 
குழலிசை 
பஞ்சாட்சர மந்திர மகிமை இறையனாரின் 
உள்ளத்தை உருக்கி 
ஆனாயர் முன் 
தோன்ற வைத்தது.

பேரொளி சூழ
குழலிசை தொடர
அன்னை பார்வதியோடு 
எழுந்தருளிய 
அப்பன் பரமசிவன் 
ஆனாயருக்குக் 
காட்சியளித்தார்.

"தெய்வீக இசைஞானியே!

வேய்ங்குழல் இசையால் 
எம்மை மகிழ்வித்த 
ஆனாய  நாயனாரே!

எம்மீது அன்பு கொண்ட 
அடியார்கள் 
எப்போதுமே 
உன்னுடைய 
குழலிசையைக் 
கேட்பதற்கு ஏதுவாக 
இப்போதே இவ்விடத்தில் 
நின்றபடியே 
நம்மிடத்து வருவாயாக!"

என ஆனாய நாயனாரை 
அன்போடு 
அழைத்துக் கொண்டு 
கயிலாயம் புறப்பட்டார் 
கொன்றை நாதன்.

தேவர்கள் 
கற்பக மலர் மாரி 
பொழிந்தனர்.
முனிவர்கள் 
மறைமொழி 
துதித்தனர்.

ஆனந்தக் 
கூத்தனுடன் 
ஆனாய நாயனார் 
பொன்னம்பலம் 
புகுந்தார் 
புல்லாங்குழல் 
இசைத்தவாறே!

'அலை மலிந்த புனன் மங்கை ஆனாயர்க்கு அடியேன்'
-சுந்தரரின் திருவாக்கு.


ஓம் நமசிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)