குங்குலியக் கலய நாயனார் புராணம் (பாகம் 2)


 

63 நாயன்மார்கள் வரலாறு

குங்குலியக் கலய நாயனார் புராணம் 

(பாகம் 2)


கண் முன்னே 
கனல் விழியன் நிற்க
பிரமித்தபடி 
பிறவிப் பயன் 
அடைந்து விட்டதாகக் கருதி 
தட்டுத்தடுமாறி 
அரைகுறையாக எழுந்து 
அப்படியே அப்பனடி 
தொழுதார் கலயனார்.

அம்மையப்பனின் 
திருவடிகளை 
அவரது 
கண்ணீர்த் துளிகள் 
நனைத்து நனைத்து திருப்பாதங்களைக் கழுவின.

"எழுந்திரு.... 
குழந்தாய்"
எதிரொலியோடு 
ஒலித்தது 
ஏகநாதனின் குரல்  
கோயிலினுள்ளே.

"உனக்குப் 
பசிக்கவில்லையா?
வீட்டிற்குப் போ...  
அங்கே உனக்குப் 
பால் அன்னம் 
காத்திருக்கிறது.

உன் மனையாள் 
உனக்காக 
நெய்விட்டுச் சமைத்துக் காத்திருக்கிறாள்....

உடனே போய்வா...
மகனே."

கலயனாருக்குத் 
தலைகால் 
புரியவில்லை. 
அடிமுடி 
காண 
முடியாதவரைக் 
கண்ணாரக் கண்டதால்...  
காலடி கண்டு 
தொழுததால்.

கலகலவென 
சிரித்த ஒலியோடு 
பரவிய 
பேரொளியோடு 
இறைவன் 
மெல்ல நடந்து 
அமிர்தகடேசுவரர் 
கருவறைக்குள் சென்று 
ஒருமுறை 
திரும்பிப் பார்த்துப் 
புன்னகைத்து விட்டு 
மறைந்து போனார்.

என்ன அதிர்ஷ்டம்....
இந்தக் குங்கிலியம் 
போடும் கலயனாருக்கு....!

அவர் இறையை 
இருமுறை தரிசித்த 
பாக்கியசாலி.

வணிகராக 
வந்த போது 
அடையாளம்  
காண்பிக்காத 
ஆண்டவனாகப் 
பார்த்திருக்கிறார்.

இப்போது 
அப்படியே 
அச்சு அசலாக 
அமிர்தலிங்கமாக அமிர்தகடேசுவரராகக் 
கலயனாருக்குத்
காட்சியளித்து 
அடிதொழச் செய்து 
ஆறுதல் வார்த்தை பேசி 
அரவணைத்து 
ஆட்கொண்டு 
நாயன்மார்களுக்குக்
கிடைக்கும் 
பெரும்பேறு தந்தார்.

அதனாலேயே 
கலயனார் -
குங்குலியக் கலயனார் 
குங்கிலியக் கலய நாயனார் 
எனும் 
பெரும் பெயர் பெற்றார்.

உடனே 
வீட்டிற்குப் போகச்
சொல்லிய 
ஆண்டவர் கட்டளை 
உந்தித் தள்ள  
வீட்டை விட்டு 
நகை விற்கச்
சென்றதிலிருந்து 
நடந்து முடிந்த 
நிகழ்வுகள் பற்றிய 
எந்தச்
சிந்தனையும் இன்றி 
சிவ சிந்தனையோடு 
இல்லத்தை 
நோக்கி நடந்தார்.

இல்ல வாசலிலேயே 
மகிழ்ச்சிப் பெருக்குடன் 
எதிர்கொண்டு அழைத்தாள்
மங்கை நல்லாள்.

வீடு நிறைய
பொருட் செல்வம் 
நிறைந்து கிடக்க 
"இவை எப்படி 
இங்கே வந்தது?"
என 
வியப்புடன் கேட்டார்.

சற்று முன்னர் 
அருட்செல்வம் 
நிரம்பப் பெற்ற 
அருளாளர் 
குங்குலியக் கலய நாயனார்.

மனைவி சுருக்கமாக 
"நாம் இடைவிடாது 
தொழும் 
திருநீலகண்டர் தந்தது" 
எனச் சொன்னாள்.

கணவர்
விளங்காமல் 
திகைக்க 
கனவு கண்டது முதல் 
குபேரனே வந்து 
அனைத்துச்
செல்வங்களையும் 
வீடு 
நிறைத்தது வரை 
ஒன்று விடாமல் 
சொன்னாள்.

பின் 
கணவரைத் தொழுது 
அருகில் அமரவைத்து 
நெய்யிட்ட 
பாலன்னம் ஊட்டினாள் 
தன் கையாலே
ஒரு தாய் போலே.

இரண்டாம் 
கவள உணவோடு 
வாய் அருகே வந்த 
திருமகளின் 
கை தடுத்து 
"குழந்தைகள் 
சாப்பிட்டனரா?"
எனக் கேட்டார் 
கலய நாயனார்.

"இரண்டு நாட்களுக்கு 
முன்னர் 
பசி தாங்காது 
அழுது தூங்கியவர்கள் 
இன்று 
இறையருளால் 
அமுதுண்டு 
அகமகிழ்ந்து 
இப்போதுதான் 
உறங்குகின்றனர்" 
என்றாள் 
மகிழ்ச்சி பொங்க.

மறுநாள் தொட்டு 
குங்குலியக் கலய 
நாயனாரின் குடில் 
சுற்றம் சூழ 
அடியவர்கள் வந்து 
அறுசுவை 
அமுதுண்டு வாழ்த்த 
பழைய நிலைக்குத் 
திரும்பியது.

அப்போதும் 
முன்போலவே 
கலய நாயனார் 
திருக்கடவூர் 
திருக்கோயிலில் 
குங்குலியப் புகை மூட்டி 
சிவப்பணி செய்தார்.

இத்தோடு 
கலயனாரை 
விட்டு விடவில்லை 
திருவிளையாடல் நாயகர்.

கலயனாரின் 
கீர்த்தி வெளிப்பட 
இன்னொரு காரியம் 
செய்தார்.        
          

திருப்பனந்தாள்
என்ற ஊர் 
சோழ நாட்டின் 
பெருமை சொல்லும் தலம்.

அக்காலத்தில் நடந்த 
ஒரு நிகழ்வால் 
சோழ நாடே 
துக்கத்தில் 
தூக்கம் இழந்தது.

வேறொன்றுமில்லை.

ஓர் அசுரன் மகள்.
தாடகை அவள் பெயர். 
அவள் ஒரு சிவபக்தை.

தாடகை 
தினந்தோறும் 
திருக்கோயிலில்
சிவலிங்கம் 
தேடிவந்து 
பூஜித்து வணங்கி 
மாலை சூட்டி மகிழ்வாள்.

ஒருநாள் 
மாலை சூட்டும் போது 
அவள் சேலை 
அவிழ்ந்தது.

வெட்கம் 
பிடுங்கித் தின்ன
ஒரு கையால் 
நழுவிய சேலையை 
இறுக்கிப் பிடித்தபடி 
மாலை சூட 
முயற்சித்தாள்.

மாலை மறையவர் 
முடியை எட்டவில்லை.

அப் பெண் படும் 
வெட்கமும் துயரமும் 
கண்டு 
சிவலிங்கத் திருமேனியே 
கொஞ்சம் சாய்ந்து 
அவளது 
பக்தி மாலையைப் 
பாந்தமாக 
வாங்கிக்கொண்டது.

அதன் பின்னர் 
சிவலிங்கத் திருமேனி 
அப்படியே 
சாய்ந்த நிலையிலேயே 
ஊன்றி நின்றது.

அப்போது ஆண்ட
சோழ அரசன் 
செய்தி கேட்ட 
நாள் முதலாய் 
துக்கம் கொண்டான். 
தூக்கம் இழந்தான்.

சாய்ந்திருந்த 
சிவலிங்கத்தை 
நேர் படுத்த
முயற்சித்தான்.

சிவலிங்கம்
சேதப்பட்டு
விடக்கூடாது 
என்று மெல்லி
பூக்கச்சை கொண்டு 
சிவலிங்கத்தைச் 
சுற்றிக் கட்டி 
பூக்கச்சையின் 
முனைகளை 
ஒன்றிணைத்து 
அதில் ஒரு
வலுவான 
கயிறு கட்டி 
இழுத்துப் பார்த்தான்.

பலனில்லை.

வலிமைமிக்க 
சேனைப் படைகளை 
அழைத்து 
இழுக்கச் சொன்னான்.

ஊஹும்...பலனில்லை.

மனம் தளர்ந்த மன்னன் 
யானைப் படைகளை 
வருவித்துப்
பக்குவமாக இழுக்க 
ஆணையிட்டான்.

யானைகள்தான் 
சோர்வடைந்தனவே 
தவிர 
நேர் படவில்லை 
லிங்கநாதர்.

மன்னனின் கவலை 
அதிகரித்தது.
அது மக்களின் மனங்களில் எதிரொலித்தது.

திருக்கடவூரில் 
தெய்வப் பணியில் 
இருந்த 
குங்குலியக் கலய நாயனார் செவிகளிலும் 
இச்செய்தி நுழைந்தது. 
நிலைகுலைந்து போனார்.

கலயனாருக்கு 
'சிவநேசரான 
சோழ மன்னரைத்
தரிசித்து வணங்கி 
அவர் 
மனக்கவலை போக்க 
தான் ஏதும் முயற்சிக்கலாமா'
என யோசனை எழவே 
திருப்பனந்தாள் பயணித்தார்.

சாய்ந்திருந்த 
சிவலிங்கம் கண்டு 
பதறிப் போனார்.

பூக்கச்சையினைக்
கொண்டு 
சேனையும் யானையும் முரட்டுத்தனமாய் 
இழுத்ததால் 
சிவலிங்கம் 
இளைத்துப் 
போனதாய்க் கருதி
கண்ணீர் விட்டார் 
கலய நாயனார்.

பூக்கச்சையினை 
லிங்கத் திருமேனியில் 
சுற்றிக் கட்டி 
மறுமுனையை 
மாலை போல் ஆக்கி
தன் கழுத்தில் 
கட்டிக் கொண்டு 
கண்மூடி தியானித்து 
'நமசிவாய' என்றவாறு 
இழுத்தார் 
அந்தணர் குலக் கலயனார்.

அவரது 
அன்புப் பிடியிலிருந்து 
அறவாழி அந்தணரால் 
தப்பிக்க முடியவில்லை.

கலயனார் 
காலன் இல்லையே!
எனவே 
அவரது பாசக்கயிறு 
பக்திக் கயிறாகிப் 
பரமனைப் பரவசம் 
அடையச் செய்தது.

அடுத்த கணத்திலேயே 
சிவலிங்கம் நேர்பட்டது.

மெய்சிலிர்த்த 
ஆனைகளும் 
சேனைகளும் 
கலய நாயனாரை 
வணங்கின.

விண்ணில் காத்திருந்த 
தேவர்கள் 
பூமாரி பொழிந்தனர்.

சோழ அரசன் 
ஓடி வந்து 
கலய நாயனார் 
காலடி விழுந்து 
"அன்பாகிய நார் 
கொண்ட கயிற்றால் 
நேர்படச் செய்தீர்கள்.

இந்த நற்செயலால் 
அடியேனும் உய்த்தேன். 
உலகமும் உய்த்தது"
எனப் போற்றினான்.

அத்தனை பேரையும்
அடிவணங்கி 
சிவலிங்கம் 
செம்மையுற்ற நிகழ்வை 
நினைத்தபடி 
இறை தொழப்போனார் 
இறையே போற்றிய 
நாயனார்.

சில நாட்கள் 
அங்கு தங்கினார். 
திருக்கடவூர் 
அமிர்தகடேசுவரர் 
அழைக்கவே 
கடவூர் திரும்பினார்.

வழக்கப்படி 
திருக்கடவூர் 
நாயகருக்கு
குங்குலியம்
அடியவர்களுக்கு 
அன்ன பாலிப்பு 
என 
சிவப் பணியாற்றி 
வந்த 
கலய நாயனார் 
திருச்செவிகளில் 
ஒரு நற்செய்தி 
தேனாய்ப் பாய்ந்தது.

சீர்காழித் தலைவர் திருஞானசம்பந்தரும் 
தாண்டக வேந்தர் 
திருநாவுக்கரசரும் 
ஒருங்கே சேர்ந்து 
அடியார்களோடு 
திருக்கடவூர் 
எழுந்தருள உள்ளதாக 
அச்சேதி சொன்னது.

வானுக்கும் பூமிக்கும் 
உள்ளம் குதிக்க 
கலய நாயனார் 
இருபெரும் 
அருளாளர்களையும் 
உடன் வந்த 
அடியவர்களையும் 
வணங்கி 
வீட்டிற்கு அழைத்துச் 
சென்று 
அறுசுவை விருந்து 
படைத்துப்
பரவசம் அடைந்தார்.

ஏற்கனவே 
திருவருள் பெற்றிருந்த 
குங்குலியக் கலய நாயனார் 
இப்போது இருவரிடமும் 
குருவருளும் பெற்றார்.

இதைவிடப் 
பெரும் பேறு 
வேறென்ன 
இருக்க முடியும்...?

அதன் பின்னர் 
சில காலம் 
சிவப்பணிக்குத் 
தன்னை 
சிவ சிந்தனையோடு  
அர்ப்பணித்துக் கொண்ட 
குங்குலியக் கலய நாயனார் 
இறை அழைத்த 
ஒரு திருநாளில் 
சிவபுரி அடைந்து 
சிவ பதம் தொழுது 
சிவப் பணி தொடரலானார்.

'கடவூரிற் கலயன்றன் 
அடியார்க்கும் அடியேன்'
என்கிறார் சுந்தரர்.

ஓம் நமச்சிவாய!

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)