குலச்சிறை நாயனார் புராணம் (பாகம் 2)


 

63 நாயன்மார்கள் வரலாறு

குலச்சிறை நாயனார் புராணம் 

(பாகம் 2)


சைவத்தை 
வளர்ப்பதற்கும் 
சமயத்தை அழிக்க 
நினைப்போரை 
வேரொடு வேராய் 
அழிக்க
வல்லவருமான 
சமய ஞான வீரரைத்
தரிசிப்பதற்கும்
ஆவல் கொண்டனர்
மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும்.

அன்னை 
உமையவளிடம்
ஞானம் பெற்ற 
ஞானசம்பந்தரை 
மதுரைக்கு 
அழைத்து வந்தால் 
அஞ்ஞான இருளை 
அழித்துவிடலாம் 
என்பதில் 
உறுதியாய் இருந்த
குலச்சிறையார் 
அரசியாரிடம் 
கலந்துரையாடி 
திருமறைக்காடு 
விரைந்தார்
ஞானசம்பந்தரைத் 
தரிசித்து 
பாண்டிய நாட்டிற்கு 
அழைத்து வர.

வழியில் எதிரே 
ஒரு சிவிகை.
சிவிகையைச் சுற்றி 
'சிவ சிவ' என
ஒலித்தவாறு 
அடியவர் கூட்டம்.

சிவிகையினுள்
அன்பொழுக 
அருள் பெருக 
அமர்ந்திருந்தார் 
'ஆளுடைய பிள்ளை' 
திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தரைப் 
பற்றி நிறையக் 
கேள்விப்பட்டிருந்த 
குலச்சிறையார் 
குதிரையிலிருந்து 
இறங்கிய
இடத்திலிருந்தே
கைகூப்பியபடி
நிலமிசை வீழ்ந்தார்.

'யார் இவர்?'
என அருகிருந்தோரிடம் 
கேட்டறிந்த 
சிவஞானச் செல்வர் 
சிவிகையில் இருந்து 
இறங்கி வந்து 
குலச்சிறையாரைத் 
தோள் தூக்கி
ஆசி தந்து
ஆரத் தழுவினார்.

நலம் 
விசாரிப்புக்குப் 
பின்பு
நாடு பற்றிப்
பேச்சு எழுந்தது.

சமணத்தால் 
நாடு 
படும் பாடு குறித்து 
குலச்சிறையார் 
விவரிக்க
நிலைகுலைந்து 
போனார் 
ஞானசம்பந்தப் 
பெருமான்.

சைவம் தழைக்கவே 
தான் 
தேச சஞ்சாரம்
செய்வதாகக் கூறிய 
ஞானசம்பந்தர் 
பாண்டிய நாட்டிற்கு 
வர ஆர்வம் காட்டினார். 

குலச்சிறையார்
அகம் மகிழ்ந்து 
தாள் பணிந்து
அழைக்கவே
உடனே சம்மதித்தார்.

விடைபெற்று  
பரிமேலேறி
காற்றை விட 
வேகமாக 
பாண்டியநாடு 
விரைந்து 
பட்டத்தரசியிடம் 
நடந்ததைக் கூறி
வரவேற்பு 
ஏற்பாடுகளில் 
மனத் துள்ளலோடு 
ஈடுபடலானார்.

பாண்டிய நாட்டின் 
பட்டத்தரசி 
மங்கையர்க்கரசியார்
எல்லை வரை 
சிவிகையில் வந்து 
எல்லையில்லாப் 
பக்தியோடும் 
நம்பிக்கையோடும் 
ஞானசம்பந்தரை
வணங்கி நின்றார்.

முதல் அமைச்சர் 
குலச்சிறையார் 
முறைப்படி 
அரசனிடம் 
சொல்லிவிட்டு
மகாராணியோடு வந்து
ஞானக் குழந்தையை
முகமலர்ந்து வரவேற்றார். 

ஞானசம்பந்தர் 
மதுரையிலேயே 
சிலகாலம் 
தங்க ஏற்பாடாயிற்று.

சமணர்களால் 
சம்பந்தருக்குத் 
தீங்கேதும் 
நேர்ந்துவிடும் 
என்பதை யூகித்த
முதலமைச்சர் 
குலச்சிறையார் 
பலத்த காவலுக்கு
ஏற்பாடு செய்திருந்தார்.

ஞானசம்பந்தரை
மதுரையம்பதி 
உறையும் 
சொக்கநாதரைத் 
தரிசிக்க வைத்து 
பெரும் பாக்கியம் 
பெற்றார்
குலச்சிறையார்.

ஞானசம்பந்தர் 
தனது 
இணையற்ற 
அருளாற்றலால் 
மன்னனின் 
மனத்தை மாற்றி 
சமணத்திலிருந்து 
சைவத்திற்குத் 
திருப்பிவிட்டால் 
'தங்கள் கதி 
அதோ கதி'
என அஞ்சிய 
சமணர்கள் 
கொடும் திட்டம் 
தீட்டினர்.

பாண்டிய வீரர்களின் 
கட்டுக் காவலை மீறி 
ஞானசம்பந்தர் 
தங்கியிருந்த 
மடத்திற்குத்
தீ வைத்தனர் 
தீய மனத்தோர்.

சமணர்கள் 
வைத்த 
பெரும் தீ 
அனல் விழியனின் 
அருள் புதல்வனை 
என்ன செய்துவிடும்?

எம்பிரானை 
எண்ணி 
ஒரு பதிகம் பாடி
'தீ எய்தவரையே 
சென்று சேரட்டும்'
எனக் 
கோபம் காட்டினார் 
ஞாலமும் அறிந்த 
ஞானசம்பந்தர்.

அவர் வாக்கு 
சற்றும் பொய்க்காமல் 
அப்பெருந்தீ 
அரசனின் வயிற்றைச் 
சென்றடைந்தது.

மன்னன் தீராத 
வெம்மை 
நோயில் வீழ்ந்தான். 
பெரும் நெருப்பு 
தீண்டிய 
புழுவாய்த் துடித்தான்.

சமணர்கள் 
சமணத்துறவிகள் 
தாங்கள் அறிந்திருந்த 
அனைத்து 
மருந்துகளையும் 
மந்திரங்களையும்  
பிரயோகித்துப் பார்த்தனர்.

வெம்மை
கூடியதே தவிர 
குறைந்தபாடில்லை. 
அதனால்
கோபம் கொண்டு
சமணர்களை நோக்கி 
மன்னன் வீசிய வார்த்தைகள் வெம்மையாய்ச் சுட்டன.

இந்தச் 
சந்தர்ப்பத்தைப் 
பயன்படுத்திக் கொண்டு 
மாதரசி 
மங்கையர்க்கரசியாரும் 
முதலமைச்சர் 
குலச்சிறையாரும் 
மன்னனிடம் 
திருஞானசம்பந்தரின் 
மகத்துவங்களை 
எடுத்துச் சொல்லி 
அவரை 
அரண்மனைக்கு
அழைத்து வர 
அனுமதி கேட்டனர்.

சமணமே 
பெரிதெனக் கருதி 
அதுகாறும் 
சமணம் தழுவி 
அரசாண்டு வந்த 
மன்னன் 
வெம்மை 
நோயைக் கூடத் 
தீர்க்க முடியாத 
பொய் மதம் 
சமணம் 
என வெறுத்து 
ஞானசம்பந்தரைத் 
தரிசிக்க 
விருப்பம் 
தெரிவித்தான்.

வந்தார் 
ஆளுடைய பிள்ளை.

கனிவாய்ப் பார்த்து 
புன்னகையால் 
ஆசி கூறி 
வெண்ணீற்றைக் 
கையிலெடுத்து 
உடலெங்கும் 
பூசி விட்டார் 
சிவநாமம் அர்ச்சித்தபடி.

'மந்திரமாவது நீறு'
 எனத் தொடங்கும் 
பதிகம் பாடியபடி.

அப்பதிகமே
திருநீற்றுப்பதிகம்.

என்ன மாயமோ 
அக்கணமே 
பாண்டியனின் நோய் 
பறந்தோடிப் போனது.

மன்னன்
மனத்தில் இருந்த 
அஞ்ஞான இருளும் 
அகன்று போனது.

தீரா நோய் 
தீர்க்கப்பெற்ற 
அனுபவத்தால் 
சைவத்தின் 
பெருமையை உணர்ந்த 
பாண்டிய மன்னன் 
அத்கணமே
சைவம் தரித்தான்.

ஞானசம்பந்தரின் 
திருவடிகளில் 
தன் நெற்றி பதித்து 
கண்ணீர் வடித்தான்.

அது நாள் வரை 
தன்னையும் 
தன் குடிகளையும் 
நம்ப வைத்து 
மதம் மாற்றிய 
சமணர்களுக்குத் 
தக்க தண்டனை தர 
முடிவெடுத்தான்.

அதற்குள்ளாகவே 
மன்னன்  
ஞானசம்பந்தரால்
குணமான செய்தி 
பாண்டிய நாடெங்கும் 
பரவிவிட்டது.

பயந்துபோன 
சமணத் துறவிகள் 
ஞானசம்பந்தரை 
வம்பிழுக்கும் நோக்கில் 
வாதப் போருக்கு 
அழைத்தனர்.

மூன்று வகை 
வாதங்களான
சுர வாதம் 
அனல் வாதம் 
புனல் வாதம் 
அறிவு தெளிய
நடந்தேறின.

முதல் இரண்டு 
வாதங்களில் 
தோல்வி கண்ட 
சமணர்கள் 
'புனல் வாதத்தில் 
தோற்றால் 
வேந்தனே 
எங்களைக் 
கழுவேற்றலாம்' 
என 
மார்தட்டினர்.

ஆனால் அதிலும் 
ஞானசம்பந்தர் 
வெற்றிக் கொடி 
நாட்டினார்.

முதலமைச்சர் 
குலச்சிறையார் 
வாதம் புரிந்து தோற்ற 
சமண குருமார்களையும் 
ஓடி ஒளிந்த 
சமணர்களையும் 
ஒருவரைக் கூட 
விடாமல் பிடித்துக்
கழுவேற்றினார்.

அப்படிக் 
கழுவேற்றப்பட்டு 
மாண்ட 
சமணர்களின் 
எண்ணிக்கை 
எட்டாயிரமாம்.

அதன் பின்னர் 
பாண்டிய மன்னன் 
அரசியாருடன் சேர்ந்து 
குலச்சிறையார் 
ஆலோசனையுடன் 
செய்த 
சிவப் பணிகள் 
பல்லாயிரம் இருக்கும்.

அதனால் 
பாண்டிய நாட்டில் 
சமணம் பூண்டோடு 
அழிந்தது.
சைவம் தழைத்தது.

'வந்த வேலை 
இறை விருப்பப்படி 
முடிந்துவிட்டது'
எனக் கருதி
சில நாட்களில் 
ஞானசம்பந்தர் 
சோழநாடு புறப்பட்டார்.

குலச்சிறையாருக்கு ஞானசம்பந்தருடனேயே 
சோழநாடு சென்று 
சமயப் பணி தொடர 
ஆசை மிகுந்தது.

ஞானசம்பந்தர் 
புறப்படும் 
தருணம் வரை 
அவரது 
சம்மதத்திற்காகக் 
காத்திருந்தார். 
கண்ணசைவுக்காக
முகம் பார்த்திருந்தார்.

ஞானசம்பந்தரோ
"இங்கிருந்தபடியே 
சைவம் தழைக்க 
சமயப் பணியாற்றுங்கள். 
சிவநெறி போற்றி 
இருங்கள்" 
எனக் கனிவோடு 
உத்தரவிட்டு 
மகிழ்வோடு 
விடைபெற்றார்.

திருஞானசம்பந்தரின் 
திருவாக்கே
இறைவாக்கு 
என உணர்ந்த 
குலச்சிறையார் 
பல்லாண்டு 
சிவப் பணிகள் செய்து 
ஒரு நன்னாளில் 
மதுரையம்பதியிலேயே 
முக்தியடைந்தார்.

சிவபுரியில் 
சிவபிரான் அருகில் 
தேவகணங்களுடன் 
அவர்களில் 
ஒருவராய்ப்
பேரருளோடு 
திகழத் தொடங்கினார் 
குலச்சிறை நாயனார். 

குலச்சிறையாரை 
 'பெருநம்பி' 
எனப் போற்றுகின்றனர் 
தாங்கள் அருளிய 
பதிகங்களில் 
நம்பியாரூராரும் 
ஒட்டக்கூத்தரும்.

இது 
குலச்சிறையாருக்குக் 
கிடைத்த 
இறையம்சம் கொண்ட
நாயனார் விருது.

நம்பி என்றால் 
'ஆண்களில் 
மேன்மையானவர்' 
என்று பொருள்.

'குணம் கொடு 
பணியுங் குலச்சிறை' 
எனப் போற்றுகிறார் 
மாணிக்கவாசகர்.

'பாண்டிய நாடு 
முழுதும் 
சமண இருள் 
கவிழ்ந்த போது 
ஆணில் ஒருவரும் 
பெண்ணில் ஒருவருமே 
சைவத்தில் 
நிலைத்து நின்று 
காத்தவர்கள்.

ஆணில் 
குலச்சிறை நாயனார்.
பெண்ணில் 
மங்கையர்க்கரசியார்' 
என்று நன்றியோடு 
புகழ்மாலை சூட்டுகிறார் 
வாரியார் சுவாமிகள்.

'பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் .' 
- சுந்தரமூர்த்தி நாயனார்


ஓம் நமசிவாய!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)