குங்குலியக் கலய நாயனார் புராணம் (பாகம் 1)


 

63 நாயன்மார்கள் வரலாறு

குங்குலியக் கலய நாயனார் புராணம் 

(பாகம் 1)


சோழநாடு.

காவிரி பாய்ந்து 
நீர் வளம் பெருகும் 
பொன்னி நாடு. 
வானவர் 
வாழ நினைக்கும் 
அருள் வளமிக்க நாடு.

கலை பல வளர்த்து 
நிலைத்த புகழ் 
கொண்ட நாடு.
திருவருளும் 
குருவருளும் 
நிறைந்திருக்கும்
அருள்மிகு நாடு.

இத்தகைய 
பெருமைமிக்க 
சோழ நாட்டில் 
திருக்கடவூர் 
என்ற ஒரு திருத்தலம். 
அங்கு ஒரு சிவத்தலம்.

அந்தணர்கள் 
அதிகம் வாழ்ந்த 
திருக்கடவூரில் 
கோயில் கொண்டிருக்கும் 
இறைவனின் பெயர் 
அமிர்தகடேசுவரர். 
அபிராமி அம்மை 
இறைவியின் திருநாமம்.

திருக்கடவூரின்
இன்றைய பெயர்
திருக்கடையூர்.

ஒருமுறை 
இந்திரன் 
முதலான தேவர்கள் 
அமிர்தம் நிறைந்த 
கலசத்தைக் 
கொண்டு வந்த போது
கரைபுரண்டு ஓடும் 
காவிரியில் நீராட 
விரும்பினர்.

கலசத்தைக் 
கரையருகே 
வைத்துவிட்டு 
நீராடித் திரும்பினர்.

காவிரிக் கரையில் 
வைத்திருந்த கலசத்தைத் தூக்கியபோது 
தூக்க முடியவில்லை.

கனமாய் இருந்தது.

உள்ளிருந்த அமிர்தம் 
லிங்கமாக 
உருமாறி இருந்தது.
அந்தக் கனத்த லிங்கமே அமிர்தலிங்கம்.

இதனாலேயே 
இறைவனின் 
திருப்பெயர் 
அமிர்தகடேசுவரர் 
ஆனது.

கடயம் என்பதற்கு 
கலயம் என்று 
ஒரு பொருள் உண்டு.

இந்த லிங்கத்தை 
வழிபட்டே
மார்க்கண்டேயர்
பல 'பதினாறு ஆண்டுகள்' 
வாழும் 
அமரத்துவம் பெற்றது 
புராண நிகழ்வு.

உயிர் பறிக்க 
வந்த எமனைக் 
காலால் உதைத்துத் தள்ளி 
மார்க்கண்டேயர்
உயிர்காத்தவர் 
அமிர்தகடேசுவரர்.

இறைவி  
அபிராமி அம்மை 
அபிராமி பட்டரின் 
உயிர் காத்த அம்மன்.
'அபிராமி அந்தாதி'யின் 
பாட்டுடைத் தலைவி.

திருக்கடவூரில் 
அன்பும் ஒழுக்கமும் 
ஒருங்கிணைந்த 
ஓர் அந்தணர்.

சிவபிரானையும் 
சிவனடியார்களையும் 
போற்றும் 
புனிதப் பார்ப்பனர் அவர்.

அவருக்குப்
பெற்றோர் வைத்த பெயர் 
கடவூர் உறை 
கடவுளின் பெயரான 
கலயனார் என்பதே.

சிவபிரானுக்குத்
தூபம் இடுதல் 
அவரின் பணிகளில் 
தலையாய ஒன்று. 

சாம்பிராணிப் 
புகை மூட்டத்தில் 
கடவூரைக்  
கயிலாயம் 
எனச் 
சிந்தனை செய்து 
மகிழ்வார் கலயனார்.

தூபப் பணியென்றால்
தன்னை மறப்பார்.
தன் குடும்பம் மறப்பார்.
தரணியையே மறப்பார்.
அவ்வளவு ஏன்... ?
சிவனையே மறப்பார்.  
அவ்வளவு ஈடுபாடு. 
ஓர்மைப்பாடு.  

சிவனடியார்களை 
உபசரிப்பதிலும் 
இணையற்றவர் 
கலயனார்.

செல்வச் செழிப்பு 
நிறைந்திருந்ததால்
அவர் வீட்டில் 
எப்போதும் 
அடியார் கூட்டம் 
அலைமோதும்.

மனைவி மக்கள் 
உற்றம் சுற்றம்
என இரவும் பகலும்
அவர் வீடு 
நிறைந்திருக்கும்.

திருநீறு மணமும் 
சமையல் வாசமும் 
மூக்கைத் துளைக்கும். 
கலயனார் பணியை
வாய் போற்ற வைக்கும்.

அமிர்தகடேசுவரரே 
கலயனார் தூபம் 
இடுவதைப் 
பெரிதும் ரசிப்பார்.
அவர் 
அடியவர்களை 
உபசரிக்கும் 
பாங்கினைக் கண்டு 
நெகிழ்வார்.

ஆனால் 
சிவனாருக்குத்தான் 
பிடித்துப் போனவர்களைச் 
சோதனை செய்து 
பார்க்காவிட்டால் 
பொழுது போகாதே!

கலயனாரின் 
கீர்த்தியை 
உலகறியச் செய்ய 
திருவுளம் கொண்டார் 
கடவூர்ப் பெருமான்.

எல்லையில்லா 
எம்பெருமானின்
தொல்லைமிக்க 
விளையாட்டு 
துவங்கியது.

முதல்கட்டமாக 
கலயனாரின் 
செல்வம் குறைய 
ஆரம்பித்தது.

கலயனார்
நிலபுலன்களை விற்றார். 
அடிமைப் பணி 
செய்பவரை விற்றார்.

தன் உணவைச்
சுருக்கினார்.
அடியார்க்கு
விருந்தைச்
சுருக்கவில்லை.

அதற்கும் 
சோதனை 
வைத்தார் 
கூத்தபிரான்.

வீட்டில் 
வறுமை 
தாண்டவமாடியது.

அடுத்த வேளை 
சோற்றுக்கே 
ஆபத்து வந்தது.

ஒரு கட்டத்தில்
அவரும் மனைவியும் 
மக்களும் சுற்றமும் 
இரு நாள் பட்டினி. 

'உணவு 
இல்லாவிட்டால் என்ன....?'
என்று கலயனார் 
கோயிலிலேயே 
தங்கி விட்டார்.

அவருக்குத்தான் 
இறைவனைக் கண்டால் 
பசிக்காதே!
தூக்கம் வராதே!!
துக்கம் இராதே!!!

பெரியவர்கள் 
வயிற்றுப்பசி 
பொறுக்கலாம்...  
குழந்தைகள்...?

கலயனாரின் 
மனைவி 
மகாலட்சுமியின் 
அம்சம்.

செல்வம் 
நிறைந்து இருந்த போது 
சேமிக்க நினைக்காமல் வந்தோருக்கெல்லாம் 
வாரிக் கொடுத்த 
வள்ளல் பிராட்டி அவள்.

இரு நாள் கழித்து 
இல்லம் திரும்பிய 
கணவனைக் 
கனிவோடு 
அருகே அழைத்தாள்.

"நாதா...!
நாம் பசி பாராது 
இருக்கலாம்.

குழந்தைகள் 
பசித்து அழுவதைக் 
காணச் சகிக்கவில்லை.

இந்தாருங்கள்...
இதை எடுத்துச் சென்று 
கேட்கும் விலைக்கு விற்று 
நெல் வாங்கி வாருங்கள்...

குழந்தைகளுக்கும் 
வருவோருக்கும் 
அரை வயிறேனும் 
பசியாற்றலாம்."

தீர்க்கமாகச் சொல்லிய 
தீர்க்க சுமங்கலி 
கலயனாரின் 
கைகளில் திணித்தாள் 
ஒரு சிறு பொருளை.

அது 
திருமாங்கல்யம்.

தன் 
உயிரே போனாலும் 
பெண்கள் 
கழற்ற விரும்பாத 
உறவின் அடையாளம்.

கணவர் 
உயிர் போன பின்பே 
கண்ணீரோடு 
கழற்றி விடும் 
பேரன்புப் பந்தம்.

தான் கட்டிய 
தாலியோடு 
கண்ணீர் பெருக்கோடு 
கலயனார் விற்று 
நெல் பெற 
கடைப்பக்கம் போனார்.

எதிரே 
ஒரு வண்டி.
வண்டி நிறைய 
பெரிய பெரிய 
பொதிகள்.

அப்பெரிய 
சாக்கு மூட்டைகளை 
வியப்புடன் பார்த்த 
கலயனார் 

"ஐயா....
இம்மாம்
பெரிய பொதியில் 
என்ன இருக்கிறது?" 
வண்டியோடு வந்த 
வணிகரைக் கேட்டார்.

"அப்பனே.... 
அதில் குங்குலியம் 
இருக்கிறது.

அதிகப் புகையும் 
ஊரையே 
மணக்க வைக்கும் 
நறுமணமும் கொண்ட 
குங்கிலியம்...  இது.

குங்கிலியம்
சாம்பிராணியைப் 
போன்றது.
ஆனால் 
அதைவிட உயர்ந்தது.
மணம் மிக்கது. 

உனக்குத் 
தெரியும் தானே?"

வணிகர் 
வணிக நோக்குடன் 
சிலாகித்துச் சொன்னார்.

"குங்குலியமா...? 
 என் ஈசன்  
அமிர்தகடேசுவரருக்கு 
அத்தனைப் பிரியமே!

நறுமணத்தில் 
முகம் மலரும் 
அருட்சுடர் ஆயிற்றே 
என் அப்பன்!"
என்று சற்று 
கர்வத்தோடு 
கூறினார் கலயனார்.

வணிகர் 
புன்னகையுடன் 
வண்டியை ஓட்ட 
எத்தனித்தார்.

"ஐயா...
இந்த குங்குலியப் 
பொதி மூட்டைகளை 
எனக்குத் தாருங்கள்...

இதோ என்னிடம் 
பொன் நகை உள்ளது.

இதற்குப் 
பதிலாகத் தாருங்கள். "

வணிகர் 
மாங்கல்யத்தை 
வாங்கிப் பார்த்தார்.
கலயனாரின் 
பெருமிதம் பூசிய
முகத்தைப் பார்த்தார்.

தான் வந்த வேலை 
முடிந்து விட்டது 
என்று 
குங்குலிய மூட்டைகளைக் கலயனாரிடம் 
கொடுத்து விட்டு 
மறைந்து போனார்...  
வணிகராக வந்து 
இறை முகம் காட்டாத 
இறையனார்.

கலயனார் 
ஏக மகிழ்ச்சியுடன் 
ஏகாந்த இறைவனின் 
இருப்பிடமான 
கடவூர் கோயிலுக்குள் 
சென்று 
உரிய இடத்தில் 
குங்குலிய மூட்டைகளைப் 
பாதுகாப்பாக வைத்த 
திருப்தியோடு 
இறைவனைத் தரிசித்தார்.

மெய் தவத்தில் 
ஆழ்ந்து போனார்.
புற உலகை 
மறந்து போனார்.

வெளியில் 
சென்ற கணவர் 
நெல் மூட்டைகளோடு 
திரும்பி வருவார்
என வாசலில் 
காத்திருந்து 
காத்திருந்து 
சோர்வடைந்து போன 
புண்ணியவதி 
அழுது அழுது 
ஓய்ந்து 
தூங்கிய குழந்தைகளை 
அணைத்தபடி 
உலர்ந்த கண்ணீரோடு 
தூங்கிப் போனாள்.

நள்ளிரவில் 
கனவில் வந்தார் 
சிவஜோதியாக 
சிவபிரான்.

"அம்மா....!
அருந்தவப் பெண்ணே!
உன் 
அன்பும் அர்ப்பணிப்பும் சுற்றங்களையும் 
அடியார்களையும் 
போற்றும் விதமும் 
எமக்கு எல்லையில்லாத 
மகிழ்ச்சியைச் தருகிறது.

எழு....
எழுந்து போய் 
வீடு முழுதும் பார்.

அள்ள அள்ளக் 
குறையாத 
நெல் அரிசி ரூபத்தில்
பொற்காசுகளைக் 
குபேரன் நிறைத்திருக்கிறான்.

இனி 
தொல்லை இல்லாது 
உம் பணி தொடர்க!"

செஞ்சடையார் 
சொல்லியபடியே
கனவிலிருந்து 
மறைந்தார்.

திடுக்கென விழித்த 
திருமாங்கல்யத் திருவாட்டி 
அறையை விட்டு 
வெளியே வந்தாள்.

சிவன் சொத்து 
வீட்டை நிறைத்திருந்தது.

ஏழேழு தலைமுறைக்கும் தடையில்லாமல் 
அன்னம் பாலிக்கலாம்.
அத்தனை பெரிய 
பொற்குவியல்.

காண்பது 
கனவா நனவா 
என மலைத்தாள் 
கலயனாரின் மணவாட்டி.

கனவில் வந்து 
அருட்காட்சி தந்தவர் 
மறை நாயகர் 
என அறிந்து 
பூரித்துப் போனாள்.
புளகாங்கிதம் அடைந்தாள். 

அதேநேரம் 
கோயில் தூணில் 
தலை சாய்த்த வண்ணம் அமிர்தகடேசுவரரைப்
பார்த்துப் பரவசப்பட்டுக் 
கொண்டிருந்த 
கலயனார் 
கண்முன்னே 
காட்சி தந்தார் 
முக்கண்ணர்.

ஓம் நமசிவாய!

குங்கிலியக் கலய நாயனார்  புராணம் (பாகம் 2) - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)