குலச்சிறை நாயனார் புராணம் (பாகம் 1)
63 நாயன்மார்கள் வரலாறு
குலச்சிறை நாயனார் புராணம்
(பாகம் 1)
மாரிமைந்தன் சிவராமன்
பழம் பெருமை
பல கொண்ட
புகழ்மிகு நாடு
பாண்டிய நாடு.
பாண்டிய நாட்டிற்கு
ஆன்மிகச்
சிறப்பு சேர்க்கும்
சிவத் தலங்கள்
பல உண்டு.
அதில் ஒன்று
மணமேற்குடி.
நெற்பயிர்
நிறைந்த வயல்கள்.
கரும்புப் பயிர்
சூழ்ந்த தோட்டங்கள்.
கமுகு மரங்கள்
பரந்த புறம்புகள்
எனப் பசுமை மிளிர்
நகரே மணமேற்குடி.
மணமேற்குடியில்
அவதரித்து
சிவனடியார்
சேவை புரிந்து
உரிய காலத்தில்
சைவம் காத்த
பெருமை கொண்டவர்
குலச்சிறை நாயனார்.
மணமேற்குடியில்
குடிகொண்டிருக்கும்
ஜகதீஸ்வரனாரைத்
தரிசிக்க நாள்தோறும்
சிவனடியார்கள்
வந்த வண்ணம் இருப்பர்.
அதற்கான
அருள்
ஆற்றல் கொண்ட
ஆன்மிகச் சிறப்பு
அக்கோயிலுக்கு உண்டு.
அக் கோயிலை
நிர்மாணித்து
அர்ப்பணித்தவர்
யார் தெரியுமா?
திருவாசகம் அருளிய
மாணிக்கவாசகப்
பெருமானார்.
அதனாலேயே
சிவனடியார்கள்
பிறவிப் பிணி தீர்க்க
மாணிக்கவாசகரைத்
தேடி வந்து விடுவார்கள்.
ஜகதீஸ்வரர் கோயிலுக்குத்
தினந்தோறும் சென்று
சிவ பாதங்களைத்
தொழும் வழக்கம்
உடையவர்
குலச்சிறையார்.
சிவ பாதங்களை
மட்டுமல்ல
சிவனடியார்களைக்
கண்டாலும்
அவர்தம்
காலடி வீழ்ந்து
கொண்டாடி மகிழ்வார்.
சிவனடியார்களைக்
கண்ட மாத்திரத்திலேயே
கூப்பிய கரங்களோடு
வணங்கி வரவேற்று
தாள் பணிந்து
ஆசி பெற்று
அவர்கள்
அகமகிழ உபசரித்து
வழியனுப்புவது
குலச்சிறையாரின்
சிவத்தொண்டு.
நெற்றியில் திருநீறு
கழுத்தில் உருத்திராட்சம்
நாவினில் பஞ்சாட்சரம்
என்று வருகை தரும்
சிவநேசர்களைக்
கண்டால் போதும்
பிறவிப் பயன்
அடைந்த மாதிரி
உபசரித்து உளமகிழ்ந்து
அருள் பெறுவார்.
சிவனடியார் வழிபாடே
சிவ வழிபாடு என்பது
அவரது வாழ்வியல்.
சிவனடியார்களைச்
சிவனாகப் பார்ப்பதே
அவரது பண்பியல்.
வரும் சிவனடியார்
உயர் குலமா
பிற குலமா
நற்குணத்தவரா
தீங்குணத்தவரா
என்றெல்லாம்
ஆராய மாட்டார்.
வேறுபாடு
பார்க்க மாட்டார்.
வேறுபாடும்
காட்ட மாட்டார்.
தனித்து வந்தாலும்
கூட்டமாக வந்தாலும்
துதித்து வணங்குவார்.
முகம் மலர்ந்து
உபசரித்து மகிழ்வார்.
அனுதினமும்
சிவனடியார்களைத்
தரிசிப்பதை
வழக்கமாகக்
கொண்டிருந்ததால்
அவர் இருக்குமிடம்
ஆண்டு முழுதும்
சிவ மணம்
கமழ்ந்த வண்ணம்
இருக்கும்.
இத்தனைக்கும்
குலச்சிறையார்
சாதாரணப் பிரஜை
அல்ல.
பாண்டிய நாட்டின்
பெரும் செல்வந்தர்.
ஆனால்
செல்வம் அவருக்கு
வெறும் தூசு.
சொத்தெல்லாம்
சிவன் சொத்து
என்று கூறிப்
புன்னகைப்பார்.
அவர் ஒரு போர்வீரர்.
வெறும் வாய்ச்சொல்
வீரர் அல்ல.
நாடு காக்கும்
நற்படைக் காவல் தலைவர்.
சிவப் படையின்
தளபதி தானென்று
நினைத்து மிடுக்கோடு
வலம் வருவார்.
எப்போதும்
தன்னைச்
சிவனடியார்களின்
அடித்தொண்டர்களில்
ஒருவராகவே
கருதிப் பணி செய்வார்.
பின்னாளில்
பாண்டிய நாட்டின்
முதலமைச்சராக
பாண்டிய மன்னனின்
வேண்டுகோளுக்கிணங்க
பரிபாலனம்
மேற்கொண்டபோதும்
தன்னை
முதலமைச்சராகக்
கருதாமல்
சிவனடியார்களின்
அடிமையாகவே
எண்ணி வாழ்ந்தார்.
திருநீறு
உருத்திர மாலை
பஞ்சாட்சரம்
கோவணம்
என
சிவக் கோலமே
முதலமைச்சரின்
அடையாளமாய் இருந்தது.
அப்போது
பாண்டிய நாட்டின்
அரசனாக இருந்தவன்
நின்றசீர் நெடுமாறனார்
என்பவன்.
அவனது இயற்பெயர்
மாறவர்மன் அரிகேசரி.
பின்னாளில்
அவன்தான்
கூன் பாண்டியன்
என அழைக்கப்பட்டான்.
அவனுக்கு
ஏனோ
சமண மதத்தின் மீது
ஓர் ஈர்ப்பு.
அதனால்
சமண மதத்தைத்
தூக்கிப் பிடித்தான்.
அவனையொட்டி
குடிமக்களும்
சமணம் சாய்ந்தனர்.
குல பேதம் பார்க்காத
குணக்குன்றே
தனது அரசவையில்
இருக்க வேண்டுமென
வேண்டி விரும்பி
குலச்சிறையாரை
முதலமைச்சராக
நியமித்திருந்தான்.
குலத்தைக் காப்பவர்
என்னும் பொருளில் தான்
அவருக்குக் குலச்சிறையார்
என்ற பெயரே வந்தது.
ஆம்...
குல பேதம் காணும்
இழி குணத்திற்குச்
சிறையிட்டவர்
குலச்சிறையார்.
முதலமைச்சரான
குலச்சிறையாருக்குச்
சமணம் ஏற்புடையதல்ல.
என்றாலும்
தம் உயிர்க் கொள்கையான
சைவம் போற்றினார்.
சைவம் தழைக்க
விரும்பினார்.
செந்தமிழ்ப்
பாடல்களால்
செஞ்சடையனைத்
துதித்தபடி
நல்ல காலத்திற்காகக்
காத்திருந்தார்.
பாண்டிய மண்ணில்
சைவம் அழியாதிருக்க
சைவத்தின் வழிநின்று
நல் முயற்சிகள்
பல மேற்கொண்டார்.
நல்ல வேளையாக
சைவத் திருத்தொண்டை
தன் பிறவிப் பயனாகக்
கருதி வாழ்ந்து வந்த
பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார்
சிவப் பணிகளை
இடைவிடாது
மேற்கொண்டிருந்தார்.
மங்கையர்க்கரசியார்
செய்து வந்த
திருத்தொண்டுகளால்
குதூகலித்த
குலச்சிறையார்
அரசமாதேவிக்கு
மெய்த் தொண்டராய்த்
துணை நின்றார்.
'பயிரை வளர்த்தால்
மட்டும் போதாது.....
பயிரை அழிக்க முயலும்
கோரைப்புல் போன்ற
களைகளைக்
களைந்தெறிய வேண்டும்'
என்பது
குலச்சிறையாரின்
கருத்தாய் இருந்தது.
'ஆண்டவனுக்குச்
செய்வது ஆராதனை.
அடியவருக்குச்
செய்யும் வழிபாடு
சமாராதனை.
'சம' என்பதற்கு
'நல்ல' என்று பொருள்.
அடியவருக்குச் செய்யும்
வழிபாடு
செய்தாலே போதும்.
விரைந்து
முக்தி கிடைத்து விடும்'
என்பது
மங்கையர்க்கரசியாரின்
செயல்பாடாய் இருந்தது.
அது உண்மைதான்.
பட்டினத்தார்
நேரே
இறைவனை வழிபட்டார்.
பத்திரகிரியாரோ
பட்டினத்தாரை
வழிபட்டார்.
பட்டினத்தாருக்கு
முன்னரே
பத்திரகிரியார்
முத்தி பெற்றார்
என்பது தானே
முக்தி இரகசியம்?
இதனை உணர்ந்து
பட்டத்தரசியாரும்
குலச்சிறையாரும் எவ்வளவோ
திருத்தொண்டுகள்
புரிந்தும்
சைவம் அருகி
சமணம் பெருகி வந்தது.
காரணம்
மன்னனின் விருப்பமே
மக்கள் விருப்பமாக
மலர்ந்தது.
இதில்
சமணர்களின் சூதும்
கலந்திருந்தது.
இந்த சமயத்தில்
பாண்டிய நாட்டிற்கு
அருகே உள்ள
திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தர் தங்கியிருப்பதாகத்
தகவல் வந்தது.
அரசி
மங்கையர்க்கரசியாருக்கும்
முதல்வர்
குலச்சிறையாருக்கும்
ஏக மகிழ்ச்சி.
(குலச்சிறை நாயனார் புராணம்-பாகம் 2 தொடரும் )
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக