சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 6)


போகர் பிரான்

(பாகம் 6)

-மாரிமைந்தன் சிவராமன்

தடை போட்ட 
அந்தத் தலைமை
இடம்...?

போகரின்
உபாசனா
தெய்வமான
புவனேஸ்வரி தான்
அந்தப் பெரிய இடம்.

"வேண்டாம்...
போகா... !
வருங்கால
உலகம்
இதைத்
தவறாகப்
பயன்படுத்தும்.

விபரீதமே
விளையும்.

இது மட்டும்
வேண்டாம்.

காயசித்தி 
தானே 
உனக்கு 
வேண்டும்?

கவலை விடு.

பழனிக்குப் போ.

சித்தர்களைத் தரிசி.

என் மகன் 
முருகனை 
சிந்தையில் ஏற்றி 
தவம் கொள்.

முருகனே 
நேரில் வந்து 
சொல்லித் தருவான்."

புவனேஸ்வரி 
உறுதி தந்தாள்.

மகிழ்வோடு 
போகர் 
பழனி மலை 
புகுந்தார்.

பல கால
தவம்.

இதுகாறும் 
போகருக்கு 
எல்லோரும் 
வலியுறுத்திய 
தவம். 

ஒரு நாள் 
பெரும் ஜோதி.

கண் விழித்த 
போகர் 
கண்டது 
கந்த பெருமானை.


"நீ
பார்க்கும்
என் உருவை
அப்படியே
சிலையாக்கு.

பிரதிஷ்டை செய்.

நீ பார்த்ததை
மக்கள்
அனைவரும்
பார்த்து
வழிபட
வகை செய்.

அதன்
பலனாய்
உனக்குக்
காயசித்தி
கிடைக்கும்.

அதை
மக்களிடம்
கொண்டு செல்.
ஆசிகள்."

ஆண்டவன்
மறைந்தாலும்
போகரின்
மனதில்
உருவாய்
ஒளிர்ந்தார்.

அதை
அப்படியே
வார்த்தார்.

நவபாஷாணத்
திருமேனியாய்
திருமால் மருகர்
மலர்ந்தார்.

ஒரே சிந்தனை.
விபூதியே
அலங்காரப் பொருள்.

அதுவே
போகரின்
உடல் முழுக்க
மணம் வீசும்.
ஒளி வீசும்.

பஞ்சாமிர்தமே
அபிஷேகப் பொருள்.
அதுவே
போகரின்
பசியாற்றும் விருந்து.

அவ்வப்போது
எழும்
சந்தேகங்களை
அருகிருக்கும்
முருகப் பெருமானிடமும்
அன்னை
புவனேஸ்வரியிடமும்
எழுந்தோடிச் சென்று
கேட்டுத் தீர்ப்பார். 

தெளிவு பெறுவார்.

81 பொருட்களைச்
சேர்த்துக் கலந்து
9 பொருட்கள்
ஆக்கினார்.

அதுதான்
நவபாஷாணம்.

எரிப்பதற்கு
மட்டும்
9 வகை
எரிபொருட்கள்.

81 முறை
வடிகட்டி
வார்த்தெடுத்தார்
நவபாஷாணத்தை.

பாஷாணக் கலவை
அத்தனையும் விஷம்.
சுவாசித்த நொடியே
உயிர் போகும்.

அதையெல்லாம்
தகர்த்து
எக்காலத்திலும்
அழியாத
நவபாஷாணச்
சிலையை
உருவாக்கி வந்தார்.

சீடர்
புலிப்பாணியை
உடன்
வைத்துக்
கொண்டார்.

நவபாஷாணச் 
சிலை
முழுமை 
அடைந்த போது
போகரின் மனதில்
உள்ளொளி பெருகியது.

உள்ளொளியில்
காய சித்தியும்
தவ ஆற்றலும்
வெள்ளிடை மலையாய்
உருகி வழிந்தன.

போகர் 
பரிபூரணச் 
சித்தரானார்.

பழனி மலையில் 
பாலதண்டாயுதபாணி
சன்னதிக்கு அருகில்
இன்றும்
போகர் பிரான்
அருள்பாலித்துக்
கொண்டிருக்கிறார்.

பழனியில்
போகர் பிரான்
உருவாக்கிய
நவபாஷாணச் சிலைகள் 
மூன்று.

ஒன்று 
பழனி மலையில்
தண்டாயுதபாணி சுவாமியாக
அருள் 
சொரிந்து 
கொண்டிருக்கிறது.

இன்னொன்று
கொடைக்கானல் 
அருகே
பூம்பாறையில்
குழந்தை வேலப்பராகக்
காட்சி தருகிறது.

மூன்றாவது
எங்கு உள்ளது 
என்று உறுதியாகத்
தெரியவில்லை.

முருகப்பெருமானும்
போகர் பெருமானும்
மனது வைத்தால்
மக்களுக்குப் 
பாக்கியம் இருந்தால்
அந்த மூன்றாவது 
நவபாஷாணச் சிலை
என்றாவது ஒருநாள்
வெளிப்படலாம்.

கண்வழி கண்டு
மெய்வழி உணர்ந்து
கனிந்துருகி
வழிபடலாம்.


போகரின்
அருமை
பெருமைகள்
வரையறை அற்றது.

வார்த்தைகள் தவிக்கும்
ஆற்றல்
நிறைந்தது.

எண்ணற்ற நூல்கள்
அவர்தம் படைப்பு.

முதல் சித்தர் 
அகத்தியரே போற்றிய
நூல்கள் அவை.

'அமுதம்'
என்கிறார்
காகபுஜண்டர்.

போகர்
சப்த காண்டம்
நிகண்டு
வைத்தியம்
சரக்கு வைப்பு
ஜனன சாகரம்
உபதேசம்
கற்ப சூத்திரம்
வைத்திய சூத்திரம் 
முப்பு சூத்திரம்
ஞான சூத்திரம்
அட்டாங்க யோகம்
பூஜா விதி
ஆகியவை
அவர்
அருளியவற்றில்
குறிப்பிடத் தக்கவை.

எழுதியது
மொத்தம்
7 லட்சம்
பாடல்கள்
என்கிறது
ஒரு குறிப்பு.

சித்த
மருத்துவத்தின்
தந்தை போகரே!

ஒவ்வொரு
மூலிகையின்
வேர்
தண்டு
இலை
பூ
காய்
கனி
கொட்டைகள்
ஆகியவற்றின்
வேதியல்
பண்புகளை
ஆராய்ந்தவர்
போகர்.

போகரைப்
போல்
இப்பொருட்களை
ஆராய்ந்தவர்
எவருமில்லை.

கற்ப மூலிகைகள்
பாஷாணங்கள்
ரசவாதம் 
போகரின்
விரல்
நுனியில்
ஏவலுக்குக்
காத்திருந்தன.

பாஷாணங்கள்
64 வகை என்று
இனம் கண்டு
சொன்னவர்
போகரே.

நவபாஷாணம்
போகரின்
அறிவுத் திறனுக்கும்
அருட் திறனுக்கும்
சான்று.

சீனத்தில்
அவர் செய்த
சித்த வித்தைகள்
பற்பல கோடி.

தன் வித்தைகளை
'வேடிக்கை சிமிட்டு
வித்தை’
எனக்
கண் சிமிட்டிச்
சொல்லுவார் போகர்.

கவி பாடும் புலவர்
என்பதால்
அத்தனை
செயல்களையும்
செய்யுட்களாகப்
பதிவு செய்திருக்கிறார்
சீன மொழியில் 
எவர்க்கும் புரியும்
வகையில்.

போகர்
தமிழ் மொழியில்
படைத்ததை விட
சீன மொழியில்
அருளியதே அதிகம்.

சீன நாட்டில்
ஒரு வகை
வெள்ளை நிற
மக்கள் உண்டு.
அவர்கள்
போகரின்
மரபு
என்பார்கள்.

போகர் 
ஓர் 
அற்புதச் சித்தர்.
பொறியியல் 
துறையின் 
வல்லப சித்தர்.

போகர் 
கட்டிய 
மரக்கப்பலும் 
தேவரதங்களும் 
வேறெந்தச் சித்தர்களும் சிந்திக்காதவை.

அவற்றை
உருவாக்கிய
விதத்தை
வித்தையை
பாடம் போல்
தன் பாடல்களில்
பதமாய்க்
கற்பித்திருக்கிறார்.

அவற்றில் சில...

(தொடரும் பாகம் - 7)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்



கருத்துகள்

  1. பெயரில்லா6 மே, 2025 அன்று 7:11 PM

    அன்பேசிவம் ஐயா அருமை அருமை ஐயா மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)