சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 4)

போகர் பிரான்

(பாகம் 4)

-மாரிமைந்தன் சிவராமன்

நீதி கேட்டு
சித்தர்கள் கூட்டம்
தட்சிணாமூர்த்தி 
முன் நின்றது.

எப்போதும்
மௌனமாய்
இருக்கும்
தட்சிணாமூர்த்தி
சித்தர் கூட்டம்
கண்டு
மௌனம் கலைத்தார்.

"என்ன விசேஷம்?
எல்லோரும்
வந்திருக்கிறீர்களே?"
உலக மகா நடிகர்
ஒன்றும் தெரியாதவர் 
போல் கேட்டார்.

குற்றச்சாட்டுகளை
அடுக்கி
குமுறினர் சித்தர்கள்.

"வெடியுப்பு
கல்லுப்பு
வீரம்
தீட்சை விதி
யோக மார்க்கம் 
போன்றவை
எல்லாம்
பட்டவர்த்தனம்
போகர் நூலில்."
வெடித்தார்கள்
சித்தர்கள்.

"போகரை
அழைத்து வாருங்கள்
அவர் தரப்பைக்
கேட்போம்."
சிவ பிரான் 
நியாயமாய் 
நடுவில் நின்றார்.

கூர்முனிவர்
போகரை
அழைத்து வந்தார்.

"போகரே!"
தட்சிணாமூர்த்தியின்
குரல்
கணீரென்று
ஒலித்தது.

"பூனைக்கு
நான்கு
வேதங்களையும்
உபதேசித்து
ஓதச் செய்தீர்.

சிங்கத்தை
அரசனாக்கினீர்.

என்
பொறுப்பிலிருக்கும்
ரசக் கிணற்றிலிருந்து
ஆதி ரசத்தை
அதிரடியாய்
எடுத்து வந்தீர்."

இப்போது
சித்தர்கள் 
முகத்தில்
மகிழ்ச்சி .

ஈசன் 
போகரிடம்
கறாராய்ப் பேசுவதாகப்
பூரிப்படைந்து
அவர்கள் முகம் 
பிரகாசமானது.

"இப்போது 
புதுப் புகார்!

சித்தர்
ரகசியங்களை
வெளிப்படுத்தி
நூலாக்கி உள்ளீராமே!"

சிவனின் முகம் 
சிவந்திருந்தது.
போகரைக் 
கூர்ந்து நோக்கினார்.

"ஆம்
பகவானே!"

"எங்கே
அந்நூல்?
எடுத்து வா 
படித்துப் பார்க்கிறேன்"

கையோடு
கொண்டு வந்திருந்த
நூலினைப் 
போகர் 
பணிந்து தந்தார் 
பரமனிடம்.

"இறைவனே... 
தரட்டுமா?
நானே படிக்கட்டுமா?"

மகிழ்வோடு
மகேஸ்வரன்
தலையசைக்க
போகர் படிக்கத்
தொடங்கினார்.

நீதியரசனும்
உன்னிப்பாய்க் 
கேட்டார்.

ஒவ்வொன்றாய்ப்
படிக்க
ஒன்றிப் போனார்
ஈஸ்வரன்.

கேட்கக்
கேட்க
இறைவன்
முகத்தில்
எல்லையில்லாப்
பூரிப்பு.
ஆனந்தம்..
பேரானந்தம்...

இது கண்டு
இப்போது
போகர் 
முகத்தில்
பிரகாசம்.

"எல்லாம்
சரிதான்.
சித்தர்கள்
ரகசியம்
காக்க
விரும்புகின்றனர்.

கொடுத்து விடு.
மலைக் குகையில்
பத்திரப்படுத்தட்டும்."

இறைவனின்
உத்தரவால் 
இப்போது
சித்தர்கள் 
முகத்தில் 
பிரகாசம்.

"சுவாமி...
ஏற்கனவே
ஏற்பவர்
ஏற்க என
அத்தனையையும்
மக்களிடம்
வாரி
இறைத்து விட்டேன்."

போகர்
குற்ற உணர்வு
ஏதுமின்றி
குரல் உயர்த்திச்
சொன்னார்.

இப்போது 
பரமன் முகத்திலே 
பிரகாசம். 

"அப்படியா...
அதுவும் நல்லது."

தன் தீர்ப்பை
இப்படித்தான் 
ஆரம்பித்தார்
இறையரசன்.

"கல்வி
என்பது
ஒருவரோடு
சுருங்கிப் போவதல்ல.

கல்வி கற்பது
போதிப்பதற்கே.

பலரைச் சேர்தலே
சென்றடைதலே
படைத்தலின் நோக்கம்.
அது
படைக்கும் நூலுக்கும்
பொருந்தும்.

மக்களுக்காகவே
உலகு.

சித்தர்களே!
பொறாமை
காழ்ப்புணர்வு
சுயநலமே
உங்கள்
புகாருக்கு
அடிப்படை.

போகர்
பக்கமே
நான்."

சுப்ரீம்
தீர்ப்பு.

சித்தர்கள்
இறைவனை 
வணங்கி
விடைபெற்றனர்.

போகரை
வாழ்த்தி
விடை கொடுத்தார்
தட்சிணாமூர்த்தி.


தேடல்
நிறைந்த
போகரின்
ஒவ்வொரு நாளும்
ஞானம் தந்தது.

ஒருமுறை
இலங்கை
கதிர்காம முருகன்
போகரை அழைக்க
அங்கே சென்று
புகழ் பெற்ற
யந்திரக் கோயிலைக்
கட்டினார்.

அந்த யந்திரம்
1008
தாமரை இதழ்கள்
கொண்டவை.

கதிர் காமத்தில்
போகரைத் தரிசித்த
பேறு பெற்றவர்
மகா அவதார்
பாபாஜி.


பொதிகை மலையில்
சதுரகிரியில்
சிவகிரியில்
அலைந்த காலங்களில்
படிப்படியாக
சித்த நிலைக்கு
உயர்ந்தார்
போகர்
என்கின்றன
நிகழ்ந்த
சம்பவங்கள்.


ஒரு சமயம்
திருமணமான
அறுபதாம் நாளில்
மரணமடைந்தான்
மணமகன்.

மனைவியும்
உறவினரும்
மக்களும்
அழுதபடி இருக்க
அந்த வழி
வந்தார்
ஞான விழி
நாயகர்.

நடந்ததை
அறிந்து
துடித்தார்.

இறந்தவனை
எழுப்பும்
நிறை சக்தி
அப்போது
அவருக்கு
கை 
கூடியிருக்கவில்லை.

'இறந்தவரை
எழுப்ப
வழியே இல்லையா?'
தேடலில்
இறங்கினார்.

மேரு மலையின்
தென்புறத்தில்
நவநாதர்கள்
சமாதி முன்
நின்றார்.
வணங்கினார்.

எண்ணற்ற
சித்தர்கள்
போகரின்
கண்களுக்குப்
புலப்பட்டனர்.

"போகரே....!
நீ வந்திருப்பதன்
நோக்கம்
புரிகிறது.

இந்த
வீண் எண்ணத்தை
விட்டு விடு.

பிறப்பும்
இறப்பும்
வினைப் பயன்.
தெய்வ நியதி.

மக்களை
நம்பாதே.

இறந்தவர்களை
எண்ணி
நீ ஏங்காதே.

அது 
காலத்தின் கட்டாயம்.
காலமே 
அதைக்
கவனித்துக் 
கொள்ளும்.

உன்னை
உயர்த்து.
தவம் கொள்."
புத்தி சொல்லினர்.

போகரின் 
மனம் 
ஏற்கவில்லை.
''அப்படியெனில்...
இறைவன்
என் மனதில்
ஏன்
இரக்க சிந்தனைகளை
விதைத்தான்?"
கொக்கி
போட்டார்
போகர் பெருமான்.

கோபம் வந்தது
ஒரு சித்தருக்கு.

"தெய்வ நியதிக்குப்
புறம்பாக
உன் புத்தி
போகிறது.

இதுவரை
கிடைத்த
சித்தியெல்லாம்
மறந்து போகட்டும்."

சாபம் இட்டார்.

"மக்களை 
வாழ்விக்கும்
முறைகளுக்கு
விடை தேடினால்
சாபம் 
கிடைக்குமெனில்
சம்மதமே. 

நான்
இங்கேயே
சாகவும் தயார்."
போகர்
பொருமினார்.

"போகரே...!
நீர்
உயர்ந்தவன்....

சாபம்
விலக்குகிறோம்.

மக்களுக்கு
காயகற்பம்
கற்பி.

இறவாமல்
இளமையாக
இருப்பதற்கு
வழி சொல்.

அதுவே
உமக்கான வழி."

போகர்
மனம்
நிறைவடையவில்லை.

வந்தது வந்தோம்
என
மேரு மலையில்
தாதுக்களைச்
சேகரித்து
பொதிகை திரும்பி
பாதரச மணிகளை
உருவாக்கினார்.

பாதரச மணிகள்
தயாரித்துப் 
பிறருக்கு
வழங்கி மகிழ்ந்த
பெருமானின்
தேடல்
மீண்டும்
தொடங்கியது.

இம்முறை
மேரு மலையிலிருக்கும்
காலாங்கி நாதரின்
சமாதிக்கு வந்தார்.
வணங்கி நின்றார். 

அவரிடம்
ஏதேனும்
புதிதாகக்
கற்று
மக்களிடம்
போய்ச்
சேர்க்க வேண்டும்
என்பதே
பயண நோக்கம்.

"குருநாதா..!
பிறப்பின்
ரகசியம்
கற்றுத்
தாருங்கள்.

மக்களிடம்
சேர்க்க வேண்டும்.

மக்கள்
மனத்தால்
புகழ்வர்.

அப்புகழ்
என் குருநாதரான
உங்களுக்குப்
பெருமை தரும்!"

நன்றாகவே
பீடிகை போட்டார்.

அந்த இடம்
வெட்டவெளி.

இருப்பினும்
'ஹே...ஹே'
என
எண்ணிலடங்கா
சித்தர்களின்
சிரிப்பொலி
கேட்டது.

போகர்
நோட்டம்
விட்டார்.

அத்தனை பேரும்
சித்தர்கள்.
சிவ சித்தர்கள்.

"இவ்வளவு
நேரம்
எங்கிருந்தீர்கள்?
புலப்படவில்லையே!"
போகர் கேட்டார்.

"எங்கிருப்போம்?
எப்போதும்
இங்கு தான் 
இருப்போம்.

குருநாதர்
காலாங்கி நாதரின்
சமாதியைச்
சூழ்ந்திருப்போம்.

அது தானே
சீடர் கடமை.

சமாதி பிரியாது
சாதகம் செய்து
தவம்
கொள்வது தானே 
சரியான பாதை."

கூறினர்
காலாங்கி நாதரின்
கணக்கற்ற சீடர்கள்.

போகருக்கு
ஒன்று
புரிந்தது.

தான் ஒருவனே
சீடன்
என்ற நினைப்பில்
இருந்த 
கர்வக் கணக்கு
தவறெனப் புரிந்தது.

தான்
ஏதோ
தேடலில்
குருநாதரோடு
இராமல்
ஊர் சுற்றும்
தவறு புரிந்தது.

"எத்தனை காலம்
இப்படி
குருநாதருடன்
இருக்கிறீர்கள்?"
அகம்பாவம்
குறைந்த நிலையில்
கேட்டார்
போகர்.

"ராமன்
ராவணன்
அரிச்சந்திரன்
பாண்டவர்கள்
விராடன்
திருதராஷ்டிரன்
போன்றவரெல்லாம்
தாம்
குருவிடம் கற்றதைச்
சோதித்துப் பார்க்க
இங்கே
வந்ததை
நாங்கள்
கவனித்திருக்கிறோம்.

நீ காலத்தைக்
கணக்கிட்டுக் கொள்."

சித்தர்கள்
செவி புகச் செப்பினர்.

"அதோ பார்...
அவர்கள்
உருவாக்கிய
தங்கம்
நவரத்தினம்
பஸ்பங்கள்
செந்தூரங்கள்."

போகர் பார்த்தார்.

மலையளவாய்
அவையிருக்க
மலைத்துப் போனார்,

"இவ்வளவு
செல்வங்களையும்
மக்களுக்கு
வழங்கினால்...?"

யதார்த்த மனம்
கேள்வி கேட்டது.

"போகரே..!
மக்களின்
மனம்
குரங்கு.

போற்றுவதும்
தூற்றுவதும்
அவர்கள்
இயல்பு.

அவர்களுக்கென
வாழ்வது
போலித்தனம்.

சித்தர்களுக்கு
மேலானது
தவமே தவிர
வேறில்லை."

புத்தி சொன்ன
சித்தர்கள்
மறைந்தனர்.

பின்னரும்
போகரிடம்
குழப்பம்
இருந்தது.

அதனால்
தேடல்
தொடர்ந்தது.

ஒரு நாள் எதிரில்
பெரும் 
புற்று ஒன்று
கண்டார்.

சித்த புருஷர்
உள்ளே
இருப்பதை
உணர்ந்தார்.

அவரைத்
தரிசிக்க
ஆவல்
கொண்டார்.

புற்றை
வலம் வந்தார்.
வணங்கி
முன் அமர்ந்தார்.

சித்தர்கள்
வலியுறுத்திய
தவத்தில்
ஆழ்ந்தார்.

தவத்தின் இடையே
ஓர்
ஒளிச் சித்தர்
வெளிப்பட்டார்.

"ஓ..
காலாங்கியின்
மாணவன்
போகன் நீதானா?

என்
தவம்
கலைத்து விட்டாயே!

பரவாயில்லை...
விஷயத்தைச் சொல்.
என்ன வேண்டும்?"

"நீங்கள்
எத்தனை காலமாக
இங்கிருக்கிறீர்கள்?"
ஆவலாய்க் கேட்டார்
போகர்.

"ஒரு சில நாட்களாக
இருக்கிறேன்.
ஆமாம்..
இப்போது
என்ன மாதம்?"

"கலியுகம்
தொடங்கி..."
போகர் 
ஆரம்பித்தார்.

"என்ன,
கலியுகம்
தொடங்கி
விட்டதா?"

ஆச்சரியத்தில்
கண் விரித்த
சித்தர்
"நான்
துவாபர யுகத்தின்
ஆரம்பத்தில்
இங்கு
அமர்ந்தேன்..."

பல யுகம் கண்ட
அவர் பேச்சில்
சிக்கனமிருந்தது.

"போகா...
அந்த 
மரத்தைப் பார்.
அதன் கனிகளைக் 
கவனி.

அதில் ஒன்றைச்
சாப்பிட்டால்
பசி இருக்காது.

நரை திரை விழாது,
பார்வை பழுதாகாது.
கிழத் தன்மை
நெருங்காது."

போகர் பார்க்க
கனி ஒன்று
தனித்து விழுந்தது.

அது
போகரின் மடியில்
விழுந்தது.

"இதைச் சாப்பிடு!"

சுவைத்தார்
போகர்.

"இந்தா...
இதையும்
பெற்றுக் கொள்."

புலித்தோல்
ஆசனம் ஒன்றை
வழங்கினார்
மகா சித்தர்.

பணிவோடு
பெற்றார்
போகர் பிரான்.

"போகா...
கவனி!'

மான் தோலில்
அமர்ந்து
ஜபம் செய்தால்
மனம் அடங்கும்.

தொடர்ந்து
மான் தோலில்
அமர்ந்திருந்தால்
மனம்
அலைபாயும்.

மனம்
அப்படியே
அசையாமலிருக்க
புலித்தோலே
உத்தமம்.

அதற்காக
எடுத்த எடுப்பில்
புலித்தோல்
கூடாது.
பைத்தியம்
பிடித்து விடும்.

இனி மேலாவது
உன் நிலை
தவமாயிருக்கட்டும்!

அப்போது
பதுமை ஒன்று
அங்கு
குதித்தது.


(தொடரும் பாகம் - 5)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)