திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 3)
63 நாயன்மார்கள் வரலாறு
திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 3)
குளத்தில்
நீலகண்டரும்
அவர் மனைவியும்
உடல் நனைந்து
நிற்க..
யோகியின் குரல்
விண்ணதிர..
குளத்தைச்
சுற்றி இருந்தோர்
அமைதி காத்து
அடுத்து
நடப்பதைக் காணக்
காத்திருந்தனர்.
நீலகண்டரே
அந்த அமைதிச்
சூழலை உடைத்தார்.
"சுவாமிகளே...!
வேத விற்பன்னர்களே..!
பஞ்சாயத்தாரே..!
பொது மக்களே...!
எனக்கும்
என் மனைவிக்கும்
ஓர் ஒப்பந்தம்
உள்ளது.
அது ஒரு
சத்திய விரதம்.
இளம் பருவத்தில்
ஒருமுறை
இல்லாள் விடுத்து
அன்னியப்
பெண்ணொருத்தி
உடல் தொட்டேன்.
செய்தியறிந்த
என் மனையாள்
அடுத்த கணமே
'எம் உடல் தீண்டாதே... திருநீலகண்டம்'
எனச் சத்திய வாக்கு
சொல்லி
விலகி விட்டார்.
நானும்
தவறு உணர்ந்து
உடலால்
எப்பெண்ணையும்
தீண்டாது
உளத்தால்
திருநீலகண்டரை
மட்டும் தீண்டியபடியே
வாழ்ந்துவிட்டேன்
இத்தனை காலமும்.
ஊருக்கும் உலகுக்கும்
தெரியாது காத்த
இந்த ரகசியத்தை
இத்தனை
காலம் கழித்து
உரைக்க
வேண்டியதாயிற்று.
உரக்கச் சொல்ல
வேண்டியதாயிற்று."
கண்ணீர் பெருக
தலை கவிழ்ந்தார்
திருநீலகண்டர்.
சிவயோகி
வந்த வேலை
நிறைந்த மகிழ்வோடு
"சரி...சரி...
இருவரும் அப்படியே
தலை முழுகுங்கள்"
என்றார்
உத்தரவு போல்.
தம்பதியினர்
தலை முழுகி
குளத்திலிருந்து
எழுந்தபோது
பிரிந்த
அன்று இருந்த
இளமைக் கோலத்துடன்
காட்சி அளித்தனர்.
"கருணைக்கடலே..."
கூட்டம் குதூகலித்தது.
சிவ யோகியோ
தம்பதியினரை
ஆசீர்வதித்தபடியே
"உன் சிவபக்தியும்
உன் மனைவியின்
கற்பு நெறியும்
கார் உள்ளளவும்
கடல் உள்ளளவும்
போற்றத்தக்கது
என உலகுக்கு
அறிவிக்கவே
யாம்
வருகை புரிந்தோம்”
எனக் கூறிவிட்டு
மறைந்து போனார்.
அதே நேரம்
சிவ பார்வதி
சமேதராய்
ஆகாயத்தில்
அருட்காட்சி புரிந்தனர்.
அடுளார்
குளத்தைச் சூழ்ந்திருந்த
அத்தனை பேரும்
'ஹர ஹர சங்கர..
ஜெய ஜெய சங்கர'
எனக் குரலெழுப்பி
மகிழ்ந்தனர்.
சிவ தரிசனம்
காணக்
காரணமாயிருந்த
திருநீலகண்டர்
தம்பதியினரை
ஒருசேர வணங்கினர்
ஊர் மக்கள்.
'வாழ்க...
திருநீலகண்ட நாயனார்'
என்ற முழக்கம்
விண் தொட்டு
எதிரொலித்த
வண்ணம் இருந்தது.
விண்ணில்
காட்சியளித்துக்
கொண்டிருந்த
அம்மையும்
அப்பனும்
திருநீலகண்டர்
தம்பதியினரை
உளமாற வாழ்த்தி
விடை பெற்றனர்.
'ஆடம்பரமற்ற
துறவுக்குரிய
பண்புடன்
பிரம்மச்சரிய
வாழ்வை வாழ்ந்தால்
என்றும் குன்றாத
இளமை பெறலாம்'
என்பதே
திருநீலகண்ட
நாயனார் புராணம்
சொல்லும்
சிவ ரகசியம்.
கருணைக் கடலின்
ஆணைப்படியே
பின்னர் பூமியிலே
சில காலம்
நல்வாழ்க்கை
வாழ்ந்து
நல்லதொரு நாளில்
இருவரும்
சிவபதம்
அடைந்தனர்
என்பது வரலாறு.
'திருநீல கண்டத்துக்
குயவனார்க் கடியேன்'
எனச் சாசனமே
எழுதுகிறார்
சுந்தரமூர்த்தி நாயனார்.
திருத்தொண்டர் புராணம்
அருளிய போது
முதலாவதாக
திருநீலகண்டர்
பற்றியே எழுதித்
தொடங்க
ஆணையிட்டாராம்
அம்பலவாணர்.
திருநீலகண்டரின்
திருவாட்டியை
'அருந்ததிக்
கற்பின் மிக்கார்'
எனப் போற்றுகிறார்
பெரியபுராணம்
படைத்த சேக்கிழார்
பெருமான்.
பட்டினத்தாரோ
தான் போற்றிய
மூன்று நாயன்மார்களில்
நடு நாயகமாக
திருநீலகண்டரை
வைத்து வணங்குகிறார்.
இவ்வளவு
கீர்த்திகள் மிக்க
திருநீலகண்ட நாயனார்
தை மாதம்
விசாக நட்சத்திரத்தில்
சிதம்பரம்
எருக்கத்தம்புலியூரில்
அவதரித்து
சிவப் பணியும்
சிவனடியார் பணியும்
வாய்மையுடனும்
தூய்மையுடனும்
வைராக்கியத்துடனும்
செய்து
இறவாப் புகழ் பெற்றார்.
இன்றும்
இறை பாத நிழலில்
இளைப்பாறிக்
கொண்டிருக்கிறார்.
(திருநீலகண்ட நாயனார் புராணம் - நிறைவு)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக