திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 2)
63 நாயன்மார்கள் வரலாறு
திருநீலகண்ட நாயனார் புராணம் (பாகம் 2)
பழுத்த யோகி
உடல் முழுக்கத் திருநீறு.
பேச்சும் மூச்சும்
'சிவ சிவ' என
நா அசையா முழக்கம்.
வீதியில் நடந்து வந்த
அந்த யோகியின்
நெற்றியில்
திருநீற்றுப் பட்டை,
கழுத்தில்
ருத்ராட்சக் கொட்டை.
புலன்கள் முழுக்க
திருநீலகண்டம்
என வாழும்
நீலகண்டர்
இல் முன் நின்றார்
அந்த யோகி.
நீலகண்டருக்கு
எல்லையில்லா
மகிழ்ச்சி.
கையும் ஓடவில்லை.
காலும் ஓடவில்லை.
மனது மட்டும்
எட்டுக்கால் பாய்ச்சலில்
குடிசை முன் நின்ற
சிவனடியாரை நெருங்கி
அவரை
யோகியின்
காலடி
விழ வைத்தது.
"சுவாமி.....
என்னே என் பாக்கியம்!
உள்ளே வாருங்கள்"
பாதாபிஷேகம் செய்து
விழுந்து வணங்கி
உள்ளே
அழைத்துச் சென்றார்
உள்ளமெல்லாம்
பூரிப்புடன்.
யோகியார் ஆசி தந்தார்.
இறையருளும்
கூடும் என்றார்.
பின்
வந்த காரியத்தை
மெலிதாகச் சொன்னார்.
"அப்பனே!
நான் கொஞ்ச காலம்
தேச சஞ்சாரம்
செய்கிறேன்.
வர நாளாகும்.
என்னிடம் இருக்கும்
இந்தத் திருவோடு
ஈடு இணையற்ற
அருளாற்றல் மிக்கது.
உள்ளே வைக்கும்
எப்பொருளையும்
சக்தி மிக்கதாக
மாற்றும்
பேராற்றல் கொண்டது.
பயணத்தில்
எனக்கெதற்கு?
நீயே பொருத்தமான
சிவ பக்தன்.
நான் திரும்ப வரும் வரை
நீ பத்திரமாக வைத்திரு.
திரும்ப வந்து
பெற்றுக் கொள்கிறேன்."
'பத்திரம்' எனத் தந்தார்.
மீண்டும் 'பத்திரம்'
என்று எழுந்தார்.
வீதி வரை வந்து
வழியனுப்ப வந்த
திருநீலகண்டரின்
தோள்தட்டி
'பத்திரம்' என்று
அழுத்தமாக
விஷமச் சிரிப்புடன்
சொன்னார்.
நீலகண்டர்
யோகியார்
சென்ற திசையை
வணங்கியபடியே இருக்க....
தெருமுனை வரை
நடந்த சிவனடியார்
நொடிப்பொழுதில்
மாயமானார்.
குயவன் அறியாதபடி.
ஓரிரு நொடிகளில்
அவர் அமர்ந்த இடம்
சிதம்பரம்
பொன்னம்பலம்.
ஆண்டுகள் பல
உருண்டோடின.
அதே சிதம்பரம்.
அதே நீலகண்டர்.
அதே குடிசை.
அதே
விலகி வாழ்ந்த
வைராக்கிய
தாம்பத்தியம்.
நீலகண்டரும்
அவர் மனையாளும்
இளமை இழந்து
வயோதிகத்தின்
விளிம்பில்
வாழ்ந்து
கொண்டிருந்தது
மட்டுமே மாற்றம்.
அன்று
நீலகண்டர்
குடிசை வாயிலில்
'திருநீலகண்டம்...
திருநீலகண்டம்'
என இறை
நாடிக் கொண்டிருந்தார்.
ஆயிரம் சூரிய ஒளி
பிரகாசத்துடன்
கோடிப் பூக்கள்
நறுமணம் கமழ
அப்போது வந்தார்
யோகி வடிவிலிருந்த
ஆதியோகி
அம்பலத்தரசன்.
"அப்பனே....நலமா?
கொஞ்சம் அவசரம்....
என் திருவோடு தா...
தெருவோடு
நான் விடைபெறுகிறேன்."
"சற்றுப் பொறுங்கள்
ஐயன்மீர்..."
தாள் பணிந்து
வணங்கிவிட்டுக்
குடிசைக்குள் போனார்
நீலகண்டர்.
என்னே கொடுமை!
வைத்த இடத்தில்
தேடினார்.
திருவோடு
காணவில்லை.
வைத்த இடத்தில்
மண் துகள்கள் கூடத்
தென்படவில்லை.
குடிசை முழுக்கத்
தேடினார்
ஊஹூம்...
கண்ணில் படவில்லை.
"என்ன அப்பனே...!
என்னவாயிற்று...?
நேரமாகிறது.....!"
வீட்டிற்குள்ளேயே
வந்துவிட்டார்
தீராத
விளையாட்டுப் பிள்ளை
திருவோட்டை
மாயமாய் மறையச்
செய்திருந்த
மறை போற்றும்
பிள்ளையாரின் தந்தை.
அடுத்து என்ன?
ஆடல் அரசனின்
குரல் ஓங்கித்
திருவோடு கேட்க
பறிகொடுத்திருந்த
அப்பாவி நீலகண்டர்
பரிதவித்துக் கதறினார்.
"சுவாமி....
இது என் பிழை அல்ல.
நான் பொய்யன் அல்ல.
என்னை நம்புங்கள்.
வேறு திருவோடு
செய்து தந்து விடுகிறேன்."
சிவயோகியின்
கோபம்
எல்லை மீறியது.
"என் சக்தி வாய்ந்த
திருவோட்டை
வைத்துக்கொண்டு
வேறு தரலாம்
என்று வஞ்சகம்
செய்யப் பார்க்கிறாயா?"
நெற்றிக் கண்ணைத்
திறக்காத குறை.
"ஐய்யோ... சுவாமிகளே!
அப்படிச் சொல்லாதீர்கள்.
நான் வஞ்சகன் அல்ல"
துடிதுடித்தார் நீலகண்டர்.
யோகி
கோபம் தணியாமல்
கண் சிவக்க,
"ஓடு தரவில்லை எனில்
ஊரைக் கூட்டுவேன்.
நியாயம் கேட்பேன்."
நன்றாகவே நடித்தார்.
மகா நடிகன் அல்லவா?
"நீ
திருடவில்லை எனில்
உன் மகனுடன்
ஊர்க் குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்...!
நம்புகிறேன்."
"சுவாமி....
அதற்கு வாய்ப்பில்லை."
"காரணம்?"
"எனக்கு மகவு இல்லை."
"ஓஹோ...
மகனையும்
தொலைத்து விட்டாயா?"
குரலில் அனல் தெறித்தது.
"ஆம்... சுவாமி
அந்த பாக்கியம் இல்லை."
" சரி....சரி
காலம் கடத்தாதே.
உன் மனைவியுடன்
ஊரார் முன்னிலையில்
குளத்தில் மூழ்கி
சத்தியம் செய்.
நம்பித்
தொலைக்கிறேன்."
தில்லைவாழ் அந்தணர்
வேத விற்பன்னர்கள்
ஊர்ப் பெரியவர்கள்
திருப்புலீச்சரத்துக்
குளத்தின் முன்பாகக்
கூடியிருக்க
பஞ்சாயத்து தொடங்கியது.
வாதி
தன் வாதம் சொன்னார்.
தன் மீது
பொய்யான
பழி வராதிருக்கப்
பரிகாரமும் கேட்டார்.
திருநீலகண்டர்
தன் மனைவியுடன்
குளத்தில் இறங்கிச்
சத்தியம் செய்ய
வேண்டும் என்று
மக்கள் மன்றமும்
கூறவே
சம்மதித்தார்
திரிசடையார்.
ஒரு நீண்ட
மூங்கில் தண்டின்
ஒரு முனையை
திருநீலகண்டர்
பிடித்துக்கொள்ள
மறுமுனையை
மனையாள் பிடித்தபடி
குளத்தில் இறங்கினர்
சத்தியம் காக்க.
"பொறு... பொறு...
குயவனே...
இதென்ன நியாயம்?
கரம் பிடியப்பா...
குளத்தில் மூழ்கி
கழுத்தளவு
நீரில் நின்று
சத்தியம் செய்..."
முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு
யோகியின் குரல்
கடும் கோபமாய்
விண்ணைத் தொட்டது.
(திருநீலகண்டர் புராணம்
பகுதி- 3 தொடரும்)
மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்
கருத்துகள்
கருத்துரையிடுக