சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 2)


போகர் பிரான்

(பாகம் 2)

-மாரிமைந்தன் சிவராமன்

ஆரம்பத்தில்
போகர் பிரான்
குருநாதர்
காலாங்கி முனிவரிடம்
அனைத்தும் கற்றார்.

பற்பல இடங்கள்
பயணப்பட்டு
சித்தர்கள் பலரைச்
சந்தித்து
சிந்தித்து
சித்திகள்
பல
கற்றுத் தேறினார்.

'கற்றவை
யாவும்
மக்களுக்கே'
என்பதே
போகரின்
கொள்கை.

'தான்
பெற்ற
இன்பம்
பெறுக
இவ்வையகம்' 
என்பதே 
போகரது 
தாரக மந்திரம்.

இதை
வேறெந்த
ஞானிகளும்
சித்தர்களும்
விரும்பவில்லை.
தர்க்கமே
எழுந்தது.

"மக்கள்
சுயநலம் கொண்டவர்கள்.

வலிந்து
சொன்னாலும்
ஏற்க மாட்டார்கள்.

அவரவர்
விதிப்பலனை
ஏற்றுத்தான்
தீர்க்க வேண்டும்.

மாற்ற நீ யார்?

ஒருவரின்
மரணம்
என்பது
இறைவனின் சித்தம் .

அதை மீற 
அதை மாற்ற
உனக்கேது உரிமை?

நமக்கெல்லாம் 
தவமே கடமை.

ஊரை 
உயர்த்துவதை
விட
உன்னை உயர்த்து.

அதுவே 
உன் பிறவியின் 
நோக்கம்."

வாதிட்டார்கள்.

போகர் மறுத்து 
மக்களிடம் 
போனார்.

மக்கள்
விலகிப் போனது
ஆச்சரியம்
தந்தது.

அவர்களைக்
கவர
மாயாஜாலம்
காட்டினார்.

ஜாலவித்தைகள்
வசிய மை
அஞ்சன ரகசியம்
ஆவி உலகம்
எனக்
காட்டி
கூட்டம் சேர்த்தார்.

சேர்ந்த கூட்டத்தைப்
பயன்படுத்தி 
அவர்களுக்கு
அரிய 
மருத்துவம்
சொன்னார்.

எளிய ஞானம்
கற்பித்தார்.
மனம் மகிழ்ந்தார்.

குரு சிஷ்ய
உறவுக்கு
உதாரண புருஷர்கள்
காலாங்கி நாதரும்
நம் போகரும் தான்.

அப்படி ஓர் உறவு
அப்படி ஓர் அக்கறை
அப்படி ஓர் ஈடுபாடு
இது முன்
இப்புவியில்
இருந்ததில்லை.

எங்கும்
எப்போதும்
இருக்கப்
போவதுமில்லை.

காலாங்கி நாதர்
காசியில் பிறந்தவர்
எனினும்
கஞ்சமலையில் தான்
அதிகமிருந்தார்.

குரு
கதவைத் தான் 
திறப்பார்.
நாம் தான்
உள் செல்ல வேண்டும்
என்பது ஒரு 
யதார்த்த வழக்கு.

315 வருட
காலாங்கி நாதரின்
புவி வாழ்க்கையில்
போகருடன்
இருந்த நாட்கள்
ஜீவிதமானவை.

போகர் பெருமானின்
அத்தனைச்
சிறப்புக்கும்
காரணமானவை.

பின்னாளில்
குருநாதர்
சீனத்திற்குச்
சென்று விட்டார்.

பொதிகை மலையில்
தங்கிவிட்ட
போகர்
ஆன்மிகம் 
மருத்துவம்
என
குருவழியில்
இறங்கிவிட்டார்.

காலச் சக்கரம்
சுழன்றது.

சீன தேசத்தில்
பலகாலமிருந்த
காலாங்கி நாதருக்கு
ஒருநாள்
'போதும்
இவ்வுலகம்'
எனச்
சலிப்பு வந்தது.

சும்மா
ஒரு 3000 வருடம்
சமாதியிலிருக்க
விருப்பம் கொண்டார்.

விடைபெறலாம்
என
எண்ணிய போது
போகரின் நினைவு
நெஞ்சிலாடியது,

'எனக்கு
அருளிய குருவும்
வாய்த்த சீடனும்!
ஆகா...
என்ன தவம் செய்தேனோ!'
எனத்
தன்னையே மெச்சிக்
கொண்டார் 
காலாங்கி நாதர்.

உச்சியில் ஆனந்தம்
மிகுந்தது.

காலாங்கி நாதரின்
குரு - யார் தெரியுமா?
அவர் - திருமூலர்.

சீடனை
அழைத்துத்
தான் கற்றதைக்
கற்பித்து 
பெற்ற
எல்லாம் சமர்ப்பித்து
தனக்குப் பின்னரும் 
தொடரட்டும் பணிகள்
என நினைத்தார்
காலாங்கி நாதர்.

அவர் மனத்தில் 
நினைத்தது
சீடனின் 
மனக் கண்ணில்
காட்சியாய்த் தெரிந்தது.

இன்றைய 
டெலிபதிக்கு
அன்றே 
சித்தர்கள் 
அதிபதி.

குருவின் 
அழைப்பை
சீடர் போகர் ஏற்றார்.

ஒளியின் வேகமும்
ஒலியின் எதிரொலியும்
தோற்கும் வகையில்
உடனடியாக
சீனாவில் இருந்தார்.

எதையும் துறப்பதும்
எங்கும் பறப்பதும்
நினைக்கும் இடத்தைக்
கணத்தில் சேர்வதும்
சித்தர்களுக்கு
எளிதுதானே!

பொதிகையிலிருந்து
போகர்
ஆகாய மார்க்கமாக
சீனாவிலிருக்கும்
காலாங்கி நாதரை
அடைந்து
அடி பணிந்து
வணங்கினார்.

போகரின்
சீன வாழ்வு
மகத்துவம்
மிக்கது.

குரு காலாங்கிக்கு
ஏக மகிழ்ச்சி.
போகருக்கும்
ஏக சந்தோஷம்.

பிரிந்தவர்
கூடும்போது
பிறக்கும் மகிழ்வுகளைப்
புரிந்தவர் அறிவர்.

காலாங்கி நாதர்
புதிய மருந்துகள்
மருத்துவமுறைகள்
எனப் பலப்பல
பலகோடி 
வைத்திய
முறைகளைப்
போகருக்குக் கற்பித்தார்.

சூடமெனப் பற்றி
ஜோதியாய்
ஒளிர்ந்த
போகரிடம்
தான் 
சமாதி நிலைக்குச்
செல்வதாகவும்
தனக்குப் பின்னர்
சீன மக்களுக்குத்
தன்னைப் போல்
தொண்டாற்ற
வேண்டுமெனவும்
வேண்டுகோள் வைத்தார்
அன்புக் கட்டளையாக!

குரு
பேச்சைத் தட்டாத
சீடனன்றோ
நம் போகர்!

'சரி' 
என்றார் போகர்.

'சரி... 
நான் செல்லவா?'
எனக் கேட்டார் குருநாதர்.

அடுத்த கணத்தில்
அந்த அதிசயம்
நடந்தது.

அங்கு
ஓங்கி எழுந்த
ஜோதியில்
ஓங்காரமாய்க்
கலந்தார்
காலாங்கி நாதர்.

இறையோடு
இறையாய்
இரண்டறக் கலப்பதும்
ஒளியோடு ஒளியாய்
ஒளிர்ந்து மிளிர்வதும்
கருவாகி உலகில்
அருந்தவம் புரிவதும்
எண்ணிய போது
எண்ணியவாறு
விண்ணில் பறப்பதும்
மீண்டும்
மண்ணில் தோன்றுவதும்
மக்களைக் காப்பதும்
சித்தர்களுக்கான
நிறை நிலைகள்
அல்லவா?

அதன் பின்னர்
குரு சொன்ன
வார்த்தைகளை
மெய்ப்பிக்க
சீனாவிலேயே
தங்கினார்
போகர் பிரான்.

கற்றதை
குருவிடமிருந்து
பெற்றதை
வாரி வழங்க
வள்ளலாய்
வலம் வந்தார்.

இங்கோர் சிக்கல்
இயற்கையாய் 
எழுந்தது.

அவர்
விரித்த கடையில்
கொள்வாரில்லை.

அந்நியன் என
அவர் உருவமும்
நிறமும், மொழியும்
அடித்துச் சொன்னதால் 
பல அடி தூரம் 
விலகிச் சென்றனர் 
சீன மக்கள்.

'ஐயோ...
குருவின்
எண்ணத்தை
எளிதாய்
நிறைவேற்ற
முடியவில்லையே!'
போகரின் உள்ளம்
கவலையில்
துடித்தது.
துயரில்
தோய்ந்தது.

என்ன செய்யலாம்
என
யோசித்த வேளையில்
அங்கு
யாசித்து வாழ்ந்து வந்த
ஒரு வயோதிகர்
கண்ணில் பட்டார்.

இன்றோ நாளையோ
எனத்
தள்ளாடும் வயது.
மூப்பு வேறு ஒரு
முடிவெடுத்து இருந்தது.

இக்கணமோ
மறுகணமோ
எனக்
காலக்கெடு விதித்துக்
காத்திருந்தது.

அதுவும்
நடந்தது.
ஆம்!
அந்த தாத்தா 
காலமானார்.

போகருக்கு
ஒரு யோசனை
வந்தது.

'அந்த முதியவரின்
உடலில்
புகுந்து கொண்டால்...
சீனர் என்று
மக்கள் நம்பி
நாடி வருவார்களே'
என நினைத்தார்.

பிறகென்ன?
அஷ்ட சித்திகளில்
ஒன்றான
பரகாயப் பிரவேசம் 
செய்தார்.

ஆம்!
கூடுவிட்டுக்
கூடு பாய்ந்தார்.

அந்தச் 
சீனத் தாத்தாவின்
உடலினுள் புகுந்தார்
போகர்.

குரு சொன்னபடி
தன் பணி தொடர்ந்தார்.

நாளொரு மேனியும்
பொழுதொரு 
வண்ணமுமாய்க்
கூட்டம் கூட்டமாய்
ஊரே திரண்டு
போகர் பிரானைக்
கொண்டாடி மகிழ்ந்தது.

எத்தனை காலம்
இந்த முதிய உடலில்?

காயகல்பம் அறிந்தவர்
கட்டிளம் காளையாய்
துள்ளிக் குதிக்க
வேண்டாமா?

யோசித்தார் போகர்.

யோகமறிந்தவர்
யாகம் உணர்ந்தவர்
தவத்தில் அமர்ந்து
குண்டலினியை
சகஸ்ரார பீடத்தில்
ஏற்றி
எழுப்பினார்.

பெண் சக்தியான
குண்டலினி
ஆண் ஆற்றலான
சகஸ்ரார தளத்தில்
இணைந்தால்
ஆனந்தம் கூத்தாடும்.

பேரானந்தம்
அலைமோதும்.
சிவ சித்தம்
பூரணமாகும்.

ஆனந்த
பேரானந்த நிலையில்
ஆண்களும் வியக்கும்
அழகரானார்.
இளைஞரானார்.

சீன மண்
அவரை
வணங்கி நின்றது.
பணிகள் தொடர்ந்தன.

போகர்
என்ற 
பாரதப் பெயரையும்
சீன மொழிக்கு
மாற்றம் செய்தார்.

'போ-யாங்'
என்பதே
அவரது சீனப்பெயர்.

அதற்கு அர்த்தம்
போகர் மார்க்கம்.

குரு
போ-யாங்
போதனைகள்
சீன மக்களை
ஈர்த்தன.

எக்கச்சக்க
சீடர்கள்
வாழ்வின் 
நிறைவைக் காண
மெய்ஞான சித்தரிடம்
எப்போதும்
மொய்த்தனர்.

தெய்வத்
திருமூலர் வழிவந்த
காலாங்கி நாதரின்
ஞான வழி வந்த
ஞானச் சித்தர் அல்லவா?

குருமார்களைப்
போல
சீடர்...

தாத்தாக்களுக்குத்
தப்பாமல் பிறந்த
பெயரன்.
பேர் விளங்கும்
பேரன்.

நெருங்கிய
சீடர்கள்
அவரைத்
தொழுதனர்.

அவரே
உலகமென
ஆராதித்து
மகிழ்ந்தனர்.

அன்புடன் அவரை
'லாவோட்சூ'
(LAU-TSU)
என அழைத்தனர் 
சீனர்.

சீன வரலாற்றில்
போகரே
லாவோட்சூ.

அவர்
சொன்னதே
வாழும் கலையை
உலகுக்குச் சொன்ன
டாவோயிசம் (TAOISM).

லாவோட்சூ
காலத்தில்தான்
அவரால்தான்
சீனாவில்
ரசவாதம்
எனும்
அதிசயம்
நடந்தது.

காயகல்பம்
உலகின் கண்
உலா வந்தது.

சீன மருத்துவம்
மூலிகைகளால்
நிறைந்தது.

சீனக் கலாசாரம் 
கூட
புது உருக்
கொண்டது.

சீன மக்கள்
லாவோட்சூவைக்
கடவுளாகவே
கண்டனர்.
வணங்கி வழிபட்டனர்.

ஒருமுறை
பேரறிஞர்
கன்பூசியஸை 
லாவோட்சூ
சந்தித்து 
கருத்துப் பரிமாற்றம்
கொண்டது 
ஒரு வரலாற்றுப் பதிவு.

கன்பூசியஸ்
லாவோட்சூவைப்
பறக்கும் சர்ப்பம் (Dragon) 
எனப்
போற்றிப் புகழ்ந்தது
இன்னுமோர் பதிவு.

கன்பூசியஸ் தந்த
விருது
எத்தனை அர்த்தம்
கொண்டது!

சீனப்பாம்பு
சீறும் பாம்பு
டிராகன் நெளியும்.
ஆன்மிகமாய்
விரியும்... விரியும்..

குண்டலினி கூட
பாம்பு தானே!

இன்னும் சிந்தித்தால்
ஆயிரம் அர்த்தங்கள்
அணி வகுத்தல்லவா
வரும்!

காலாங்கி நாதரே
கன்பூசியஸ்
என்பதோர் ஆய்வும்
ஆய்வுக் களத்தில்
உள்ளது.

ஓம் நமசிவாய!

(பாகம் - 3) தொடரும்.

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)