சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சிவவாக்கியர் (பாகம் 1)


சிவவாக்கியர்

பாகம் 1

-மாரிமைந்தன் சிவராமன்

சித்த பெருமான்களில்
சிறந்தவர்
சிவ வாக்கியர்.

சித்தர்களில்
அதிகளவு
அதிஞானப்
பாடல்களைப்
புனைந்தவர்
சிவவாக்கியரே.

அனல்
பறக்கும் சொற்கள்
புரட்சிக் கனல்
தெறிக்கும் சாடல்கள்
சிவ வாக்கியர்
சிறப்பைச் சொல்லும்.

பிறக்கும் போதே
'சிவ சிவ’
என
மழலை மொழியில்
மயங்க வைத்தவர்
என்பதால்
சிவவாக்கியர்
எனப் பெயர்
வந்தது.

பேசிய
முதல் சொல்
'சிவ'
நாமம்
என்பதால்
சிவவாக்கியர்
எனவும்
சொல்வர்.

பாடல்களில்
'சிவ சிவ'
என
இறைப் பெயரை
அதிகம்
பதிய வைத்ததால்
பரமனின்
பெயராய்
சிவவாக்கியர்
என்றானது
என்போரும்
உண்டு.

சிவனே
வாக்கு அளித்ததால்
சிவவாக்கியர்
எனப் பெயர்
வந்தது
என்கின்றனர்
சிலர். 

தை மாதம்
மக நட்சத்திரம்
2-ஆம் பாதத்தில்
சிம்ம
ராசியில்
அவதரித்தார்
சிங்க நிகர்
சிவவாக்கியர்.

அந்தணர் குலத்தில்
தோன்றிய
அற்புத மகான்
சிவவாக்கியர்.

தந்தையும் தாயும்
வள்ளல் தன்மையில்
ஊர் போற்ற
வாழ்ந்தவர்கள்.

மண் சிலை செய்வது
அவர்தம் தொழிலாம்.

பெற்றோர்
அறத்தின் 
பயனாய்
அருந்தவத்தின் 
பலனாய்
அவதரித்தவரே
சிவவாக்கியர்.

ஆன்மிகப் பற்றும்
தேடல் நிலையும்
நிறைய இருந்தது
என்பதைத் தவிர
சிவவாக்கியர்
குறித்த தகவல்
அவரது
ஐம்பது வயது வரை
ஏதும் இல்லை.

வடக்கே
காசியின்
மகிமையைக்
கேள்விப்பட்ட
சிவவாக்கியர்
ஐம்பதாவது 
வயதில்
அங்கு
சென்றதே
அவரது வாழ்வில்
அரும்பிய 
திருப்புமுனை.

காசியில்
ஒரு சித்தர்.
அவர்
காசினி காணாப்
பெரும் சித்தர்.

செருப்புத் தைப்பது
அவரது தொழில்.
சக்கிலிச் சித்தர்
என்பர் அவரை.

அவர்
சக்தி மிக்கவர்
வாசியில் வல்லவர்
சித்தில் சிறந்தவர்
என்பது
யாருக்கும் தெரியாது.

காசியின்
குறும் சந்துகளில்
இருபுறமும்
வேடிக்கை
பார்த்த வண்ணம்
ஞானத் தேடலோடு
சென்று கொண்டிருந்த
சிவவாக்கியர்
கண்களில்
அந்தச் சித்தர்
பட்டார்.

சிவவாக்கியர்
கண்கள்
நகர மறுத்தன.
மீள மறுத்தன.
அப்படியொரு
ஈர்க்கும் முகம்.
கவர்ந்திழுக்கும்
பொலிவு.

வைத்த கண்
வாங்காது
சிவவாக்கியர்
அச்சித்தரை
நெருங்கினார்.
அதுவரை
இல்லாத
ஈர்ப்பு!

பூர்வ ஜென்ம
உறவு போல
ஒரு தொடர்பு.
விட்ட குறையோ
தொட்ட குறையோ
நிறை நோக்கி
நெருங்கி வந்தார்
எதிர்காலச் சித்தர்.

"வாப்பா...!
எதைத் தேடி
வந்தாய்?
தேடியது
கிடைக்கும்.
இங்கே அமர்வாய்!"

ஒரு பலகையைக்
காட்டினார் சித்தர்.

பதிலேதும் 
சொல்லாமல்
உத்தரவுக்குட்பட்ட
பணியாளர் போல
அவர் முகத்தைத்
தரிசித்தபடி
அமர்ந்தார்
சிவவாக்கியர்.

"எனது 
தேடல்..."
ஆரம்பித்தார்
சிவவாக்கியர்.

"தெரியுமே!"
அதிர்ச்சியூட்டினார்
சித்தர்.

கொஞ்ச நேரம்
அமைதி.
இருவரும்
பேசிக் 
கொள்ளவில்லை.
ஆயினும்
மௌனமும்
பார்வையும்
மெலிதாய்ப் பேசின.
நிறையப் பேசின.
நிறைவாய்ப் பேசின.

குருவாய்
செருப்புத் தைப்பவர் 
சீடராய்
வேதம் ஓதிய
அந்தணர்.
இருவரும்
ஒன்றாகிப்
போயினர்.

"உனக்குத்
தீர்வு சொல்கிறேன்...
இந்தா..
செருப்புத்
தைத்த காசு
இது.

இதோ...
இது
சுரைக்காய்.
பேய்ச் சுரைக்காய்.

இரண்டையும்
தருகிறேன்.
காசை
காசியில் 
ஓசையோடு
ஓடும்
கங்கையில் போடு.

கங்கை
வேறு யாருமல்ல
என் தங்கையே!

பேய்ச் சுரைக்காய்
கசக்குமல்லாவா... ?
கங்கை நீரில்
கழுவி
கசப்பை நீக்கி வா!"

குரு
எடுத்துத் தந்தார்.

குரு
பேச்சுக்கு
மறுபேச்சு கூடாது.
இதுவே
குரு சீடர் உறவுக்குப்
பால பாடம்.

அருகில் ஓடிய
கங்கைக்குச்
சென்றார்
சிவவாக்கியர்.

காசினை
எடுத்துத்
தூக்கி
எறியும் போது...
ஆற்றிலிருந்து
வலது
கையொன்று
வளையோசை
அதிர
மெதுவாய்
எழுந்தது.

சிவவாக்கியரைச்
சைகையால்
'வா.. வா என
அழைத்தது
அத்திருக்கரம்.

காசினை
அக்கையில்
வைத்து
வணங்கி
நின்றார்.

பெண்ணரசியின்
வலது கை
வளையோசை
கல கலவென
ஒலி எழுப்பிய
வண்ணம்
மீண்டும்
நீருக்குள் மறைந்தது.

பின்னர்
பேய்ச்
சுரைக்காயைக்
கங்கைக் கரையினில்
நின்று
கருத்தாய்க்
கழுவினார். 

குருவிடம்
ஓடி வந்தார்.
தாள் பணிந்தார்.

"'நல்லது...
ஆனால்
நான் ஒரு
தவறு 
செய்துவிட்டேன்"
சித்தர்
சிரித்தபடி 
தொடர்ந்தார்.

"ஆம்...
கங்கை நீர்
இங்கேயே
இருக்கிறது.
காசை
இதில்
போட்டிருக்கலாம்.

உன்
வாழ்வின்
முற்பிறப்பு
மாசுக்களையும்
கழுவியிருக்கலாம்!

இதோ பார்....
செருப்புத்
தோலினால்
ஆன ஒரு பை...!"

அதைத் திறந்தார்.
அதில்
கங்கை நீர்
இருந்தது.

"மீண்டும்
அவளிடம்
காசைத்
திரும்பக் கேள்
தருவாள்...
ஆசிர்வதிப்பாள்..!"

சிவவாக்கியர்
எதுவும்
யோசிக்கவில்லை.

ஒரு சொல்
சிறு சொல்
குரு சொல்
என்பது
குரு சீடர்
உறவின்
அடுத்த பாடம்.

குருவின்
திரு உருவில்
திருவாய்
மலர்ந்திருக்கும்
சொற்களில்
மயங்கியிருந்த
சீடர்
சிவவாக்கியர்
மனமுருகி
வேண்டி நின்றார்
குரு
கட்டளைப்படி.

அந்தத்
தோல் 
பையிலிருந்தும்
புனித
கங்கை வந்தாள்.
அதே
வளையோசை....
காசு தந்தாள்.
சீடர் பெற்றார்.

ஆசிர்வதித்தபடி
கங்கையின் கை
நீரினில் முழ்கியது.

"சரி..
உன் மனம்
குணம்
கொஞ்சம்
குழம்பி
இருக்கிறதே!

உன் தேடல்
கூட
அதை நாடித்தானே!"
புதிர் போட்டார்
சித்தர்.

புரியாது விழித்தார்
சிவவாக்கியர்.

"பெண்ணின்
கையைக் கண்டதும்
பரவசம்
அடைகிறாய்!
காசு தரும்போதும்
பெறும்போதும்
கரம் படும்போதும்
கிளர்ச்சி
அடைகிறாய்.

முக்திக்கு முன்
வாழ்ந்து விடு...
பின் வா...
சித்திக்கு
அதுவே
சரியான வழி.

திருமணம் செய்து
கொள்.
வாழ்ந்து பார்.

பின் 
ஒருமனம் நாடு.
முக்தி தேடு.
கண்டிப்பாய்க்
கிடைக்கும்.
சித்தி
கை கூடும்."

சித்தரின்
சொற்கள்
சிவவாக்கியருக்குப்
பிரமிப்பைத்
தந்தன.

'எனது
சஞ்சலங்கள்
சுவாமிக்குத்
தெரிந்தது எப்படி?
அண்மைக் காலமாய்
ஐம்பது வயதில்
எழும்
பேரின்பப்
பெண்ணாசை...
திருமணமா
துறவறமா
என்றிருந்த
மனக்குழப்பம்
இவருக்கும்
தெரிந்திருக்கிறதே!'

யோசித்த
நொடிகளில்
குருவின்
அடுத்த கட்டளை
வந்தது.

"இந்தா
மண்....
இது நீ
கங்கையில் கரைத்தது.
கசப்பைக்
கழுவியதாகக் கருதும்
பேய்ச் சுரைக்காய்.

இரண்டையும்
கொண்டு செல்.

எந்தப் பெண்மணி
இவற்றைக் கொண்டு
சமைத்துத் தருகிறாளோ
அவளே
உன் மனையாள்.

அவளை
மணம் செய்.
உன்
மணம் சிறக்கும்.
மனம் 
பின் திறக்கும்."

வாழ்த்தி
விடை கொடுத்தார்
செருப்புச் சித்தரான
பெரு நெருப்பொத்த
ஒளி சிந்தும்
ஞானச் சித்தர்.

குருவின்
வார்த்தைகளுக்குக்
குறுக்கே
நடக்குமா?
உண்மையா?
என்றெல்லாம்
கேள்விகள்
எழக் கூடாது.

சந்தேகமே தப்பு.
குடும்ப உறவுக்கும்
மட்டுமல்ல
துறவுக்குக்கூட
சந்தேகம் மகா தப்பு.

குரு
கட்டளையை
ஒருநாள் கூட
தாமதமாக்கக் 
கூடாது.

குரு - சீடர்
உறவில்
தேர்வாக
சரணாகதிதான்
சரியான வழி.

இவையெல்லாம்
அடுத்தத்த பாடங்கள்.

அதி சீக்கிரமாய்
அதி தீவிரமாய்
விடைபெற்றார்
சிவவாக்கியர்.

ஐம்பது வயதிலும்
பதினாறு வயதினராய்
தனக்கேற்ற
இணை தேடி
காதல் பயணம்
கொண்டார்.
தெற்கே
நடைப் பயணம்!

பாவம்,
சிவவாக்கியர்!
அது
ஒரு நீண்ட
நெடிய பயணமாய்
இருந்தது.

பார்த்த 
பெண்டிரெல்லாம்
சிவவாக்கியரின்
உடற்கட்டில்
உடற் கூறில்
மனமுருகிக்
காதலிக்க
வந்ததென்னவோ
நிஜம்தான்.

ஆனால்
எச்சூட்டிலும்
வேகாத
மணலையும்
கறிக்கு
ஆகாத
சுரைக்காயையும்
தந்து
சமைத்துத்
தரச் சொல்ல
இவரென்ன
பைத்தியமா
என
பயந்து
விலகினர்.
கேலி பேசினர்.

ஆயிற்று
இப்படியே
சில காலம்.
தென் பகுதிக்கே
வந்து சேர்ந்தார்.


அங்கே ஒரு
காடு.
அருகில் ஓர்
ஆதிவாசிகளான
குறவர்
குடியிருப்பு.

அங்கு சென்றார்.
பெண்னொன்று
கண்டார்.

காட்சிக்கு இனியவளாய்
மனதுக்கு உகந்தவளாய்
அம்மங்கை தென்பட்டாள்.

"நிறையப் பசி.
இவற்றை வைத்து
சமைத்துத் தர
முடியுமா?"
கேட்டார்.

பதில் இல்லை.
உடன்
வாங்கினாள்.
உள்ளே சென்றாள்.
சிறிது நேரம்
கழித்து
வெளியே
வந்தாள்.

கைகளில்
சுவையான
சமையல்.
ஐந்து நட்சத்திர
அறுசுவை
உணவு தயார்.

ஏனென்று
யோசிக்காமல்
எப்படியென்றும்
பார்க்காமல்
துறவி
போலிருக்கும்
ஒருவர்
கேட்டார்
என்பதற்காகச்
சமையலில்
இறங்கிய
சரணாகதி
சிவவாக்கியருக்குப்
பிடித்துப் போனது.

குரு
சுட்டிக் காட்டிய
அழகு மகள்
அமுது படைத்த
குறவன் மகளே
எனப் புரிந்தார்.
அவளே
தனது
மனையாள்
என்று
மனமகிழ்ந்தார்.

காட்டிற்குச்
சென்றிருந்த
அவள்
பெற்றோர்
வரும் வரை
காத்திருந்தார்.
பெண் கேட்டார்.

அவர்கட்கும்
சம்மதமே!
இருப்பினும்
வேண்டுகோள்
ஒன்றை
கண்டிப்போடு
நிபந்தனையாக
வைத்தார்கள்.

மாப்பிள்ளை
தங்களுடனேயே
தங்கி
தம் தொழிலே
செய்து
குலம் செழிக்க
வைக்க 
வேண்டுமென்று.

சுருங்கச் சொல்லின்
வீட்டு மாப்பிள்ளை.

ஐம்பது வயதில்
இனி
ஆவதென்ன?

குருவின்
கட்டளை... 
மனைவியின்
பெற்றோரின் 
நிர்பந்தம்.

சொந்தம்
தொடங்கும் போதே
பந்தம்
வைக்கும்
நிர்பந்தம்.

மறுக்கவில்லை
சிவவாக்கியர்.

நடந்தது திருமணம்
குறவர்குலம் வாழ்த்த!

அந்தணர் குலத்தில்
பிறந்தவருக்கு
குறவர் குலத்தில்
திருமணம்.

குருமனம் போற்றிய
நல்மணம்
திருமணம் நாடிய
ஒரு மனம் தேடிய
கலப்புத் திருமணம்.

குறவர் இனம்
போற்ற தமிழ்த்
திருமணம்.

சிவவாக்கியர்
அவதரித்த போது
முதல் சொல்லாய்
பவனி வந்தவர்
பரமன்.
அவரின்
ஞானமைந்தன்
முருகப் பெருமான்
மணந்தது
வள்ளி எனும்
குறவர் குலக்
கொழுந்தைத் தானே!

சிவவாக்கியர்
எண்ணத்தால்
செயலால்.
குறவரானார்.

காட்டுக்குச்
செல்வதும்
மூங்கில்
வெட்டுவதும்
முறம் கூடை
முடைவதும்
தொழிலானது.

சம்சாரக்
கடலில்
மூழ்குவதும்
முத்தெடுப்பதும்
நிறைவாய்ச்
சென்றது. 


(சிவவாக்கியர் திவ்விய சரித்திரம் பாகம் 2 தொடரும்)

மதிப்பாய்வு
பேராசிரியர் R. பாண்டியராஜ்
திருமதி.நந்தினி கிருஷ்ணகுமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)