சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - இராமதேவர் எனும் யாகோபு சித்தர்
இராமதேவர் எனும் யாகோபு சித்தர்
-மாரிமைந்தன் சிவராமன்
சித்தர்கள்
இனம் மொழி
நிறம் நாடு
சமயம் சாதி
கடந்தவர்கள்.
சமரச சன்மார்க்கமே
அவர்கள் சமயம்.
சித்தர் தத்துவமே
அவர்கள் மதம்.
சாதிகளைக் கடந்து
சாதித்தவர்கள் அவர்கள்.
பற்பல
சித்துக்களையும்
இறை
நிலைகளையும்
போதித்தவர்கள்
அவர்கள்.
மதமாற்றம்
என்னும்
சொல்
புழக்கத்தில்
இல்லாத
காலத்திலேயே
மதம் மாறி
மக்கள் நலன்
பேணிய
சித்தர்கள்
உண்டு.
இராமதேவர்
எனும்
சித்தர் பிரானே
மதமாற்றம்
கண்ட
முதல் சித்தர்.
இதற்காக
நாடு விட்டு
நாடு சென்ற
நல்மகான் அவர்.
கூடுவிட்டுக் கூடு
பாயும் கலையின்
வித்தகர் அவர்.
நாடு விட்டு
நாடு செல்ல
அவர்
கையாண்டது
சித்தர் முறையே.
ஆகாய மார்க்கத்தில்
அதிரடி வேகத்தில்
எங்கும்
செல்பவர் அவர்.
அரேபியர்களின்
மனங்களை வென்றவர்.
மருத்துவத் துறையில்
அவர் ஒரு வித்தகர்.
சித்த மருத்துவத்தின்
சிகரம் தொட்டவர்.
யுனானி
மருத்துவத்திற்கு
வழிகாட்டியவர்.
யுனானியிலும்
சித்த மருத்துவத்திலும்
வல்லவரான
இராமதேவர்
தமிழிலும்
அரபியிலும்
பல படைப்புகள்
அருளிய
அருளாளர்.
புலத்தியரின் சீடர்.
சட்டைமுனி
காலாங்கி நாதர்
போகர்
மற்றும்
எண்ணற்ற
சித்தர்களின்
அருளாசி பெற்றவர்.
இஸ்லாமிய
சூஃபிகள்
பலரின்
இதயத்தை வென்றவர்.
நபிகள் நாயகம்
எனும்
ஒப்பற்ற சித்தரின்
இதயத்தில் நின்றவர்.
இராமதேவரின்
புகழ்க் கொடி
இந்தியாவில்
சதுரகிரியிலும்
அரபு தேசத்தில்
மெக்காவிலும்
பட்டொளி வீசிப்
பறந்தபடி
இருக்கும்.
அவர் பெயர்
தமிழ்நாட்டில்
இராமதேவர்.
அரபு தேசத்தில்
யாகோபு முனிவர்.
அவர் சரிதம்
ஒரு
திவ்விய சரித்திரம்.
நாகப்பட்டினம்
இராமதேவர்
பிறப்பினால்
புனிதம்
பெற்ற ஊர்.
சின்ன வயதிலிருந்தே
இராமதேவருக்கு
ஆன்மிகம்
அருகில் இருந்தது.
உள் மனதில்
ஆழ்ந்து
இருந்தது.
அமைதியாய் இருப்பார்.
அதிகப் பேச்சிருக்காது.
கண்களில் ஏனோ
நீர் வடிந்தபடி
இருக்கும்.
ஏனென்று கேட்டால்
பதிலிருக்காது.
உள்ளத்தில் மட்டும்
எப்போதும்
ஓர் ஆனந்த அலை
அடித்துக்
கொண்டிருக்கும்.
அவர் ஓர்
அம்பிகை பக்தர்.
அன்னையைத்
தியானத்தபடியே
எப்போதும் இருப்பார்.
நடக்கும் போதும்
அன்னை.
படிக்கும் போதும்
அவளே!
உண்ணும்போதும்
அம்பாள்!
உறங்கும்போதும்
அவளே!
அம்பாள் சிந்தனையே
பேச்சாய், மூச்சாய்
இருந்ததாலோ
என்னவோ
பல நேரம்
அவரிடம் பேச்சும்
இருக்காது.
மூச்சும் இருக்காது.
இந்த
அபூர்வ நிலையில்
அவர் பாட்டுக்கு
நடந்து
கொண்டு இருப்பார்.
அம்மன் பக்தி
மட்டும்
ஆரவாரமாய்
அவரை
அங்கும் இங்கும்
போகச் செய்தது.
அப்படித்தான்
காசிக்குச் சென்று
அன்னபூரணியைத்
தரிசிக்க
ஆர்வம் கொண்டார்.
நடந்தார்.. நடந்தார் ...
பேச்சின்றி உணவின்றி
கால் கடுக்க!
கண்ணீர் மல்க!
நாடி ஓடியதோ
இல்லையோ
அவர் நாடிய
காசி வந்தது.
அன்னையைத் தரிசித்தார்.
ஆலகால விஷம் உண்ட
விஸ்வநாதரையும்
விழுந்து வணங்கினார்.
'சுவாமி!
நீங்கள்
நாகப்பட்டினத்திற்கு
வந்து
எம் மக்களுக்கு
அருள வேண்டும்.'
மனமுருகி நின்றார்.
அவரது
வேண்டுதலுக்கு
ஈசன் செவிமடுத்தார்.
காசியில்
நீராடும்போது
ஒரு லிங்கம்
அவர் கைகளில்
அகப்பட்டது.
அவர் மனம்
மகிழ்ச்சியில்
துள்ளியது.
நாகப்பட்டினம்
திரும்பி
அந்த லிங்க நாதரைப்
பிரதிஷ்டை
செய்து
வழிபட ஆரம்பித்தார்.
இராமதேவருக்கு
எப்போதுமே
ஒரு ராசி உண்டு.
போகுமிடந்தோறும்
உத்தமர்கள்
சாதுக்கள்
ஞானிகள்
தரிசனம்
கிடைக்கும்.
அவர்களின்
உபதேசங்கள்
கிடைக்கும்.
அருளாசிகள்
நிரம்பக் கிடைக்கும்.
அதனால்
ஞானம் கூடும்.
சித்திகள் கை கூடும்.
இப்படியாகப்
படிப்படியாக
அடுத்தடுத்த
சித்த நிலைக்கு
உயர்ந்தார் இராமதேவர்.
ஒருமுறை
ஒரு
பூரண சித்தரைக்
கண்டார்.
அவரிடம்
உபதேசம்
பெற்ற போது
"மெக்கா
நகருக்குச் செல்.
எக்கச்சக்க
மூலிகைகளின்
சுவர்க்கம் அது.
உனக்கும்
உனது
எண்ணத்திற்கும்
தவ வாழ்வுக்கும்
உதவும்.
உன் பிறவியின்
பயனும் அதுவே."
மெலிதாய்ச் சொன்னார்
அச்சித்தர் பிரான்.
ஆனால் அது
வலுவாய் அமர்ந்தது
இராமதேவர் சிந்தையில்.
நாகப்பட்டினம்
துறைமுகம்
அக்காலத்தில்
கப்பல்கள் கூடும்
வணிக தளம்.
அங்கு
அரபு நாட்டுக்
கப்பல்கள்
அடிக்கடி வருவது
வழக்கம்.
அங்கு வரும்
கப்பல்களை
வியந்து பார்க்கும்
இராமதேவர்
அரேபியர்களுடன்
அவ்வப்போது
நிறைய தமிழ்
கொஞ்சம்
அரைகுறை
அரபி மொழி
என அளாவுவது
வழக்கம்.
ஏதோ
விட்ட குறை
தொட்ட குறையாய்
இருக்கலாம்.
முன்னர்
சித்தர் ஒருவர்
சொன்னதும்
அதை ஒட்டித் தானோ
என்னவோ!
ஒருநாள்
கப்பலொன்று
பெருஞ்சித்தர்
இராமதேவரை
போகச்
சொல்லி இருந்த
மெக்காவுக்குப்
பயணமானது.
அக்கப்பலின்
அருகே
ஒரு சிறுவனைக்
கண்டார் இராமதேவர்.
பார்த்த மாத்திரத்தில்
அவனைப்
பிடித்துப் போனது.
அவனருகே சென்று
பேச முயல்வதற்குள்
விளையாடியபடியே
அச்சிறுவன்
வேறு பக்கம்
ஓடி விட்டான்.
அந்தப் பக்கம்
போய்ப் பார்த்த போதும்
அச்சிறுவன்
தென்படவில்லை.
சுற்றி முற்றித்
தேடிப் பார்த்தார்.
அவன்
அவர் கண்ணிலேயே
படவில்லை.
அவனைத் தேடியே
இராமதேவர்
கப்பல் ஏறினார்.
ஏற்கனவே
சித்தர்
வலியுறுத்தி இருந்த
மெக்கா போனார்.
அரபுதேசத்தில்
தேடித் தேடி
அவர் அலைந்தும்
வெகுநாள்
கழித்தே
அந்தச் சிறுவனை
அவர் கண்டுபிடித்துத்
தன்னுடன்
வைத்துக் கொண்டதாக
ஒரு தகவல் உண்டு.
ஆம்....
மனத்திற்குப்
பிடித்துப் போன
அச்சிறுவனைத்
தனது சீடனாகவே
வைத்துக் கொண்டாராம்.
இப்படி
நல்ல சீடனைத் தேடி
குருவானவர்
எங்கும் செல்வார்.
எத்தனை காலமும்
காத்திருப்பார்
என்பதே
இந்நிகழ்வு
தரும் உறுதி.
மெக்காவில்
இஸ்லாமியர்கள்
இராமதேவரை
ஏற்கவில்லை.
"நீ யார்?
எதற்கு வந்தாய்?"
எனக்
குடைந்தெடுத்தார்கள்.
இப்பிரச்சனை
ஒருபுறம் இருந்தாலும்
இன்னொரு புறமோ
மெக்கா நகரின்
ஜீவ அருள் வளம்
அவருக்கு
எல்லையில்லா
மகிழ்வைத் தந்தது.
யாருக்கும் புலப்படாத
மூலிகைகள்
கற்ப மூலிகைகள்
அவர் கண்களுக்குத்
தெரிந்தன.
அவை
'வா....வா' என
அழைத்து மகிழ்ந்தன.
'போ.. போ'
எனத் துரத்திய
இஸ்லாமியரிடையே
எவ்வளவோ
பேசிப் பார்த்தார்.
மெக்கா
மக்களின்
மேம்பாடே
தனது
நோக்கமெனக் கூறி
கெஞ்சிப் பார்த்தார்.
'நானொரு சித்தன்.
மூலிகைப் பலனை
உலகிற்களிப்பதே
எனது
பிறப்பின் ரகசியம்'
என
நல்லவிதமாய்
நவின்றும் பார்த்தார்.
இறையின்
அருளால்
அவர்கள்
மனம்
கொஞ்சம்
இளகியது.
ஒரு கட்டத்தில்
அவர்களுடன்
ஒரு புரிந்துணர்வு
ஒப்பந்தம்
ஏற்பாடானது.
அதன்படி
அதன்
முதல்படியாக
இராமதேவர்
இஸ்லாம்
மதத்திற்கு
மனமொப்பி
மாறினார்.
'யாகோபு '
எனும்
பெயர்
இராமதேவருக்குச்
சூட்டப்பட்டது.
சுன்னத் செய்யப்பட்டது.
உண்ண ரொட்டி தரப்பட்டது.
குர்-ஆன் ஓதப்பட்டது.
பிற உபதேசங்கள்
அருளப்பட்டன.
இராமதேவர்
யாகோபு ஆனார்.
இப்படித்தான்
ஏக இறைவன்
திருவுளப்படி
இராமதேவர்
யாகோபு முனிவர்
ஆனார்.
காயகல்ப
மூலிகை ஆய்வும்
ஓய்வில்லா
இறை தியானமுமே
அவரின்
அரபு
வாழ்க்கை ஆனது.
மூலிகைப் பலன்கள்
முஸ்லீம் மக்களுக்கு
முழுதாய்க் கிட்ட
முயன்றார்
யாகோபு நாதர்.
விரைவில்
வெற்றிக் கனி
பறித்தார்.
பறித்த
வண்ணமிருந்தார்.
நவரத்தின
மயமான
நபிகள் நாயகத்தின்
ஜீவ சமாதியிலேயே
நேரம் காலம்
பார்க்காது
ஒருங்கிணைந்து
இருந்தார்.
ஒருநாள்
மெக்கா நகரமே
மெய்சிலிர்க்கும்
வண்ணம்
வானம் அதிர்ந்தது.
பூமி பூபாளம்
பாடியது.
பஞ்ச பூதங்களும்
ஆர்ப்பரித்தன.
இதன்
தேவரகசியம்
அறிந்த
யாகோபு முனிவர்
தேவ தூதரின்
வருகைக்காக
வழிமேல்
விழி வைத்துக்
காத்திருந்தார்.
இன்ஷா அல்லாஹ்!
நபிகள் நாயகம்
சமாதி முன்
தியானத்திலிருந்த
யாகோபு முன்பு
பேரொளியாம்
பெருமான்
நபிகள் நாயகம்
தோன்றினார்.
பிறர்
கண்களுக்குப்
புலப்படாத
அரிய காட்சி.
அருள் நிறை காட்சி.
யாகோபுவிற்கும்
நபிகள் பிரானுக்கும்
நடந்த உரையாடல்
சித்த ரகசியம்.
பற்பல
உபதேசங்களை
ஆன்மிக
ரகசியங்களை
நபிகள் நாயகம்
உபதேசித்தார்.
யாகோபுவும்
சித்த மருத்துவ
மகிமையை
யுனானி தொடர்பை
தான் மேற்கொண்ட
முயற்சிகளை
நபிகளுக்கு
எடுத்துச் சொன்னார்.
இஸ்லாமிய முறைப்படி
வணங்கித் தொழுது
ஆசி பெற்றார்.
பரிபூரண ஆசி தந்த
நபிகள் நாயகம்
'அரபுக்குக் கிடைத்த
அற்புத மகான்'
என்று ஆசி தந்து
மகிழ்ந்தபடி
மறைந்தார்.
சிறு வயதிலிருந்து
உத்தமர்களை
சித்தர்களை
தெய்வங்களைத்
தரிசிப்பது
யாகோபு
உருவிலிருக்கும்
இராமதேவரின்
ராசி ஆயிற்றே!
அதனால் தான்
இணையற்ற
இறைதூதர்
காட்சியும்
அருளும்
தந்திருக்கிறார்.
அதன் பின்
பிறவிப் பயனை
அடைந்த மகிழ்வில்
அங்கேயே
யோக நிலையில்
சமாதியில்
ஆழ்ந்தார்.
எல்லாம் வல்ல
அல்லாஹ்
எனும்
இறையருளாலே
ஞானத்தின்
அழகிய
முன்மாதிரி
என
விளிக்கப்பட்டும்
முகமதுநபி பிரானின்
அருளாசிக்குப்
பின்னர்
சீடர் கூட்டம்
யாகோபுவின்
மொழிக்கும்
காட்டும் வழிக்கும்
காத்திருந்தது.
'நபி யாகோபு'
எனும்
இணையற்ற
உயர் பெயர்
தேடி வந்தது.
அவரின் புகழ்
அரபு தேசத்தில்
ஓங்கி வளர்ந்தது.
தான்
கற்றவற்றை
பற்பல
சித்த புருஷர்களிடம்
பெற்றவற்றை
வைத்து
நூல்களை
அரபு மொழியில்
அழகுறப்
படைத்தார் யாகோபு.
அதுசமயம்தான்
போகர் பிரான்
தான் படைத்த
அற்புத ரதத்தில்
சீன தேசத்து
அன்பர் புடை சூழ
மெக்கா வந்தார்.
போகரைக்
கண்ட மாத்திரத்தில்
யாகோபு
எனும்
முன்னாள்
இராமதேவரின்
மனத்தில்
அன்புப்பெருக்கு
அலைபோல்
எழுந்தது.
போகர் சீரடி
தொழுதார்.
பீறிட்டு
எழுந்த கண்ணீரால்
போகரின் திருவடி
கழுவினார்.
'சுவாமி...!
என்ன புண்ணியம்
செய்தேனோ...!
உங்களைத் தரிசிக்கும்
அரிய வாய்ப்பு
எனக்கு.
கொஞ்ச நாள் முன்பு
நபிகளைத் தரிசித்தேன்.
ஆஹா...!
சுவாமி..!சுவாமி..!
அற்புதம்... அற்புதம்'
நெஞ்சுருகினார்
யாகோபு சித்தர்.
"இராமதேவா....!
உனை நினைத்து
உன் தொண்டை
நினைத்து
மகிழ்கிறேன்.
உன் பணி
சிறக்கட்டும்.
தொடரட்டும்.
இன்னும் நிறைய
செய்...
அதன் பின்
சமாதி செல்.
அதுவே அறம்.
சித்தர் தருமம்.
வாழ்த்துகள்!
வருகிறேன்."
போகரின்
வாழ்த்தை
முழுதாய்ப் புரிந்து
எழுந்தவரைக்
கைகளில் ஏந்தி
உச்சி முகர்ந்து
முதுகு தடவி
மௌனமாய்ச்
சொன்னார்.
"நீ
இங்கு யாகோபு.
தமிழ்நாட்டில்
இராமதேவர்.
மறந்துவிடாதே!"
போகரின்
சொற்களுக்கு
அர்த்தங்கள் ஆயிரம்.
யாகோபுவிற்குத்
தெளிவு பிறந்தது.
ஆயிரம் பணிகள்
காத்திருக்கும் போது
யாகோபு
அங்கேயே
ஓய்ந்திருக்க முடியுமா!
சமாதி
நிலையில்தான்
ஒளிந்திருக்க முடியுமா?
சீடர்களை
அழைத்தார்.
10 ஆண்டுகள்
சமாதி நிலையில்
இருக்கப் போவதாகத்
தெரிவித்தார்.
சீடர்கள்
துடித்துப் போனார்கள்.
"காயகல்பம்
உண்டாலும்
நான்கு யுகங்கள்
வாழ்ந்தாலும்
பிறப்பென்று எடுத்தால்
இறப்பு நிச்சயம்.
உடலுக்குத் தான்
மரணம்.
ஆன்மாவுக்கு அல்ல.
ஆன்மா அழிவதில்லை"
என்று
அவர்களுக்குச்
சொல்லி
விடைபெற்றார்.
கண்கலங்கிய
சீடர்களில்
பிரதான சீடர்
10 ஆண்டுகள்
சமாதி அருகிலேயே
காத்திருந்தார்.
10 ஆண்டுகள்
கழித்து
சமாதி
நிலையிலிருந்து
வெளிவந்த
யாகோபு
சில காலம்
அரபு மக்களின்
மனநலம்
உடல்நலம் காக்க
இறை சார்ந்த
உபதேசங்கள்
அருளினார்.
நாளுக்கு நாள்
சீடர்கள் கூட்டம்
பெருகியது.
பின்னொரு நாளில்
சீடர்களை அழைத்து
30 ஆண்டுகள்
சமாதியில் இருந்து
அருளப் போவதாகச்
சொன்னார்.
துயர் கொண்ட சீடர்கள்
"மீண்டும் காண்பது
எப்போது?"
என ஏங்கியபடியே
வினவினர்.
"வருவேன்....
அப்போது
பல
அற்புதங்கள் நிகழும்.
தேன்மாரி பொழியும்.
நூறு மலர்கள்
பூத்துக் குலுங்கி
அரபு நாடே
மணம் கமழும்.
விலங்குகள்
ஞானம்
பேசும்.
இவையே அறிகுறி"
எனப் புன்னகைத்தார்.
சீடர்கள்
குருவின்
உறுதிமொழியை
நம்பி
30 ஆண்டுகள்
காத்திருந்தனர்.
சொல் தவறா
சித்தர் பிரான்
சொன்ன மாதிரியே
30 ஆண்டுகள் கழித்து
வெளிப்பட்டார்
ஒளிமயமாக
ஜோதி வடிவிலே.
இது
யாகோபு
பிரபஞ்சத்திற்கு
வெளிப்படுத்திய
இறை செயல்.
ஆம்..!
உலகில்
பலரின் நம்பிக்கை....
இறை வடிவம்
ஒளியாகவே இருக்கிறது.
மதங்களைத் தாண்டிய
பேருண்மை இது.
இரண்டாம் முறை
சமாதியில் இருந்து
வெளிவந்த
யாகோபு
அரபு மக்களுக்கு
ஆயிரம் ஆயிரம்
உபதேசங்கள் அருளினார்.
அடுத்து
ஒரு நன்னாளில்
சீடர்களை அழைத்தார்.
"நான் சமாதி
நிலைக்குச் செல்கிறேன்.
இம்முறை திரும்ப
இங்கு நான்
வெளிப்பட மாட்டேன்..."
சீடர்கள் கதறினர்.
அவர்களைச்
சாந்தப்படுத்தி விட்டு
சமாதியானார்
அரபு போற்றிய
அருளாளர்.
அரபு தேசத்தில்
சமாதி நிலையில்....
ஆனால்
அதே சமயம் -
யாகோபுவின்
விண்ணொளி
ததும்பும்
விண்வெளிப்
பயணம்
பாரத தேசமாயிருந்தது.
இதைத்தானே
போகர் பிரான்
நாசுக்காக
நபி யாகோபுவிடம்
நயம்பட
உத்தரவாகச்
சொல்லி இருந்தார்!
சித்தர்களுக்கு
ககன மார்க்கமாய்
ஆகாயப் பயணம்
நொடிக்குள் நடக்கும்
விரைவுப் பயணம் தானே!
பாரதம்
என்பது
சித்தர் பெருமக்களுக்கு
இமய மலையும்
சதுரகிரி மலையும்
பொதிகை மலையும்
இன்னும் சிற்சில
சித்தர் மலைகளுமே!
பாரதம்
திரும்பி வந்தவர்
இராமதேவராய்ப்
பலருக்கும்
உபதேசித்தார்.
தேடி
வந்தவர்களுக்கெல்லாம்
நல்லன செய்தார்.
நோய் நொடியென
வந்தாருக்கெல்லாம்
நோய் தீர்த்து வைத்தார்.
சதுரகிரியில்
தியானம்
கொண்டார்.
அம்மலை
அவருக்குப்
பிடித்துப் போகவே
அச்சித்தர்
மலையிலேயே
வெகுநாள் தங்கி
மக்களைப்
பீடிக்கும்
நோய் நொடிகளுக்கு
மருந்து காணும்
நூல்கைளைப்
படைத்தார்.
அரபு மொழியில்
மெக்காவில்
படைத்த
14 நூல்களின்
தமிழ் மொழி
ஆக்கமே
அந்த
வைத்திய நூல்கள்.
சதுரகிரியில்
காலாங்கி நாதரின்
ஜீவ
சமாதிக்கருகில்
வாழ்ந்து
மகிழ்ந்து
காலாங்கி நாதரின்
அருளோடு
தனது அனுபவத்தை
இன்னும்
சில படைப்புகளாக்கித்
தமிழகத்திற்குத்
தந்து அருளினார்.
இராமதேவர்
சதுரகிரியில்
தவமிருந்த இடம்
இன்றும்
'இராமதேவர் வனம்'
என
சித்த மகிமையோடு
தவமிருப்போருக்கு
அருள்பாலித்து
வருகிறது.
அவ்வனம்
'யாகோபு நாதர்
மலை' என
வணங்கப்பட்டும்
வருகிறது.
வற்றா தாமிரபரணியும்
வாடாத் தென்றலும்
அகத்தியர்
அருளால்
உற்பத்தியாகும்
பொதிகை
மலை உச்சியில்
யாகோபு
தவமிருந்த
தவக்குகை
அருளாற்றல்
கொண்டதாய்
இன்றும்
அருள்பாலித்துக்
கொண்டிருக்கிறது.
இதற்கு
'துலுக்க மொட்டை'
என்றே
பெயர்
இருக்கிறது.
அந்த அடர் காட்டில்
இஸ்லாமியர்கள்
இன்றும்
வசிக்கிறார்கள்.
மெக்காவில்
மூன்றாம் முறை
சமாதியானவர்
சீடர்கள் அறிய
அங்கு
மக்கள் முன்
வெளிப்படவில்லை.
அதுவே
மெக்காவில்
அவரது
ஜீவசமாதியானது.
இது இஸ்லாமியர்
பெற்ற பெரும்
பாக்கியம்.
மெக்காவிலிருந்து
தமிழகம் வந்து
சதுரகிரியில் தங்கி
பற்பல நூல்கள்
அருளிய
இராமதேவர்
சதுரகிரியிலும்
லயமானார்.
ஜீவ முக்தி
அடைந்தார்.
இராமதேவர்
தமிழகத்தில்
இன்னொரு
மலையில்
இறையோடு
இறையாக
இரண்டறக் கலந்தார்.
அந்த இடம்
அழகர் மலை.
பற்பல இடங்களில்
லயமாவது
சித்தர்கள் இயல்பு.
பதஞ்சலி
10 இடங்களில்
லயமானதாக
செய்தி உண்டு.
சதாசிவ பிரம்மேந்திரர்
3 இடங்களில்
லயமாகி உள்ளாரே!
அந்த வகையில்
மூன்று இடங்களில்
லயமாகி இருக்கிறார்
யாகோபு நாதர்
என்கிற இராமதேவர்.
இராமதேவராக
சதுரகிரியிலும்
அழகர் மலையிலும்.
யாகோபுவாக
மெக்காவில்.
இராமதேவர்
பற்றிய
இன்னொரு
சுவாரசியத் தகவல்.
அவர்
பிறந்தது
வைணவ குலத்தில்
ஐயங்கார் பிரிவில்!
அவர் மறவர்
என்பாரும் உண்டு.
'மெய்ராம தேவர்
ஆதி வேதப்
பிராமணராம்
பின்பு
உய்யவே
மறவர்தேவர்
உயர்குலச் சாதியப்பா'
என்கிறார் கருவூரார்.
யாகோபு சித்தர்
பற்றிய பற்பல
வியத்தகு பாடல்கள்
போகர் 7000 நூலில்
விரவிக் கிடக்கின்றன.
குறிப்பாக
இராமதேவர்
யாகோபு ஆனதை
சுவைபடச்
சொல்லியிருப்பார்
போகர் பிரான்.
700 ஆண்டுகள்
3 நாட்கள்
பூமியில் உலவிய
இராமதேவர்
மாசி மாதம்
பூரம் 2-ஆம் பாதத்தில்
அவதரித்தார்
என ஒரு
சித்த குறிப்பு
சொல்லி மகிழ்கிறது.
சாதியும்
மதமும்
அற்றவர்
சித்தர்கள்
என்பதற்கொரு
சான்றே
சித்தர் இராமதேவர்
திவ்விய சரித்திரம்
எனப்
போற்றிப் படிக்கலாம்.
அவரை
மத நல்லிணக்க
மாண்பாளர் என
வணங்கி மகிழலாம்.
இராமதேவர் பற்றிய
ஓர் ஆய்வு
இப்படிக் கூறி
புளகாங்கிதம்
கொள்கிறது.
'இராமதேவர்
நடக்கும் போது கூட
சமாதி நிலையில்
இருக்கும் பாக்கியம்
பெற்றவர்.
இந்நிலைக்குப் பெயர்
சஞ்சார சமாதி .
எண்ணம் மட்டும்
எங்கோ சென்றிருக்கும்.
எதனையும் இவரது
கண்கள் நோக்கிடாது.
காதுகள் கேட்காது.
சுவாசமும் ஓடாது.
எங்கு செல்கிறார்
என்று அவருக்கே
தெரியாது.
இந்த
சஞ்சார சமாதி
நிலையில் தான்
இராமதேவர்
காசிக்கும்
மெக்காவிற்கும்
சதுரகிரிக்கும்
அழகர் மலைக்கும்
பயணித்திருப்பார்.'
ஈடு இணையற்ற
மதமாச்சரியமற்ற
சித்தர் இராமதேவர்
எனும்
யாகோபு சித்தரை
மலர்ப் பாதம் தொட்டு
வணங்கி உய்வோம்.
ஓம் நமசிவாய!
கருத்துகள்
கருத்துரையிடுக