அமர்நீதி நாயனார் புராணம் (பாகம் 2)


 

63 நாயன்மார்கள் வரலாறு

அமர்நீதி நாயனார் புராணம் 

(பாகம் 2)

மாரிமைந்தன் சிவராமன்


இறையனார் 
தந்து 
அமர்நீதி 
தொலைத்த  
கோவணம்
பிரச்சனையாகி
விஸ்வரூபம் எடுத்தது.

"ஐயன்மீர்....!
தாங்கள் தந்த 
கோவணம் 
காணவில்லை.
எங்கு 
எவ்வாறு 
மறைந்தது?
நானறியேன்.
இது என் 
அறியாப் பிழை. 

தயை கூர்ந்து 
மன்னித்தருள 
வேண்டும்.
வேறு கோவணம் 
தருகிறேன்.
புத்தம் 
புதிதாய்த் தருகிறேன்.

ஆடையைக் 
கிழித்து 
பிரித்தது அல்ல
நான் தரும் 
கோவணம்.
பிரத்தியேகமாகக்
கோவணமாகவே 
நெய்ததைத் தருகிறேன்.
அடியார்கள் 
பாராட்டிய 
வெண்மை மிக்க 
கோவணம் தருகிறேன்."
அழுதபடி நின்றார் 
அமர்நீதியார்.

சிவனுக்கு 
சினம் மிகுந்தது.
கோபம் கொப்பளித்தது.
அதனால் 
வார்த்தைகள் 
அதிரடியாய்த் தெறித்தன.

"என்ன நீ...!
ஏதேதோ 
கதை சொல்கிறாய்.
நான் தந்தது 
சிறப்பு கொண்ட 
கோவணம் என்றதால் 
வேறொன்று கொடுத்து என்னுடையதைக் 
கவரப் பார்க்கிறாயா?
இதுதான் உன் 
வணிக லட்சணமா?

அமர்நீதியாருக்கு 
மயக்கமே வந்தது.
"அந்தணரே...!
என் பிழையைப் 
பொறுத்தருள்வீர்...!
எவ்வளவு 
வேண்டுமானாலும் 
தருகிறேன்.
பொன் பொருள்
வைரம் ரத்தினம் 
பட்டாடை 
எது வேண்டுமானாலும்
கேளுங்கள்.
தருகிறேன்"
ஒரு முறை அல்ல, 
பல முறை கெஞ்சினார்.

"ரத்தினங்கள் 
எனக்கு எதற்கு?
அவற்றை வைத்து 
நான் 
என்ன செய்யப் போகிறேன்?
எனக்கு 
என் கோவணம்தான் 
வேண்டும்" 
விடாப்பிடியாய் 
அடம் பிடித்தார் அந்தணர்.

இதைக் கண்ணுற்ற 
அமர்நீதியார் 
உற்றார் உறவினர் 
கண்கலங்கிக் 
குமுறி அழுதனர்.
"சரி... சரி....
வேண்டுமானால்
இந்த 
ஈரக் கோவணத்திற்கு
ஈடாக 
வேறு கோவணம் தா.
அது இதன் 
எடைக்கு 
ஈடாக இருக்கவேண்டும்."
கொஞ்சம் இறங்கி 
வந்தார் இறைவனார்.

ஒரு தராசு 
கொண்டு வரப்பட 
அதில் ஒரு தட்டில் 
தன் ஈரம் உலர்ந்த 
கோவணத்தை வைத்தார்.
மறு தட்டில் 
மனம் கலங்கியபடி 
தன்னிடமிருந்த 
உயர்ந்த 
பட்டுக் கோவணத்தை 
வைத்தார் 
அமர்நீதியார்.

அப்போது 
அந்தணரின் தட்டு 
கீழிறங்கி 
ஈடில்லை 
எனக் காட்டியது.
தன்னிடமிருந்த 
அடுத்த கோவணத்தைத் 
தட்டில் வைத்தார்.
அந்தணரின் 
தட்டு எழவில்லை.

துடித்துப் போன 
அமர்நீதியார்.
அடுத்து அத்தனைக் கோவணங்களையும் 
தன் தட்டில் வைத்தார்.
அது போதும் 
அவர் தட்டு  
இறங்கவில்லை.

ஆடைகள் 
துணிமணிகள் 
பட்டுப் பீதாம்பரங்கள் 
எனப் பலவற்றை வைத்தார். 
தட்டு தள்ளாடியதே 
தவிர தரை நோக்கவில்லை.

'புவனம் எல்லாம் 
வைத்தால் கூட 
அந்தணரின் 
கோவணத்திற்கு 
ஈடாகாதோ' 
எனக் கலங்கிய 
அமர்நீதியார் 
இறுதியில் 
அடியாரின் 
திருவடிகளைப் 
பிடித்தார்.

"சுவாமி....!
இனி என்னிடம் 
கொடுக்க 
ஏதும் இல்லை. 
எல்லாவற்றையும் 
தந்து விட்டேன்.
என் மனைவி மகன்
நான் மட்டுமே பாக்கி."
அந்தணர் 
மௌனம் சாதித்தார்
பொய்க்கோபம் 
காட்டியபடியே!

"இதோ 
அவர்களையும்
தருகிறேன்."
மனைவியும் 
மகனும் தட்டேறினர் 
சிவநாமத்தை 
விடாது ஜெபித்தபடி.

அதற்கும் 
பலன் இல்லை. 
இரு தட்டுகளும் 
சமமாகவில்லை.
பொறுமையை இழந்தார் 
பொன்மனச் செம்மல்
அமர்நீதியார். 

இனி 
அவர் மட்டுமே மீதி.
கண்ணிறைந்த 
இறைவனைத் தொழுதபடி 
கண்களில் நீரைச் சுரந்தபடி 
ஐந்தெழுத்தை உச்சரித்தபடி 

தானும் தட்டு 
ஏறத் தயாரானார்.

"இறைவா...!
அன்பர் துயர் தீர்க்கும் 
அருளாளா !!
என் அன்பு 
உண்மையெனில் 
என் சிவ சேவை 
உண்மையெனில் 
என் அடியார் சேவையில் 
பிழை நேரவில்லை 
என்பது உண்மையெனில் 
என் அடிமைத் திறம் 
பழுதில்லை என்பது
உண்மையெனில்
என் மீதிருக்கும் 
பழியைத் தீர்த்து வை."

கண்ணீர் 
பெருக்கெடுத்து 
விழி நிரப்பி 
கரைபுரண்டு ஒட 
தன் தட்டின் மீது 
ஏறி நின்றார்
'சிவாயநம.. 
சிவாயநம' 
என்று ஒலித்தபடி.

என்ன ஆச்சரியம்!
இரு தட்டுகளும் 
நேர் நின்றன.
கவலையோடு
சூழ்ந்திருந்த
அத்தனை பேரும் 
பிரமிப்பில் ஆழ்ந்தனர்.
அடுத்த ஆச்சரியம் 
உடனே நிகழ்ந்தது.

வானிலிருந்து 
பூமாரி பொழிந்தது.
தேவர்களின் 
மறை இசை
தேவகானமாய்
நல்லூரில் ஒலித்தது.
அதற்குப் பின்னரும் 
மற்றொரு ஆச்சரியம்!

வம்பிழுக்க வந்து 
வம்பிழுத்து வந்த 
சிடு சிடு அந்தணர் 
திடுதிப்பென 
மாயமாய் மறைந்தார் 
அனைவர் 
கண் எதிரிலேயே!
அடுத்து நடந்தது 
அதிசயமே 
வியக்கும் அதிசயம்!

அது கணமே 
இறைவனும் இறைவியும் 
ஒளி வெள்ளத்தில் 
ரிஷப வாகனத்தில் 
ஒருசேரக் காட்சியளித்தனர் 
வான் வெளியில்.

இறைக் காட்சி
கிடைத்த மாத்திரத்தில்
அதுகாறும்
அமர்நீதியாக இருந்தவர்
அமர்நீதி நாயனாராகும்
பேறு பெற்றார்.

மங்கையொரு பாகன்  
மனம் நெகிழ்ந்து பேசினார்
அமர்நீதி நாயனாரும்
நல்லூர் மக்களும் 
ஆச்சரியத்தில் 
திளைக்கும்படி.

"அன்பரே....!  
அமர்நீதியாரே...!
சிவ சேவை 
அடியார் சேவை  
அன்னதானம் 
இம்மூன்றும்
அற்புதமானவை.
எதற்கும் ஈடிலாதவை.
எதிர்த்தட்டில்
நானே நின்றிருந்தாலும் 
நீயே வென்றிருப்பாய்.

இறையன்பு 
இறைவனை 
விட உயர்ந்தது 
என்பதை 
உலகுக்கு 
அறிவிக்கவே 
இந்த நாடகம்.

அமர்நீதியே!
நீ உன் 
மனைவியுடனும் 
மைந்தனுடனும் 
என்னுடனேயே 
சிவபுரம் வாருங்கள்"
என ஆசிர்வதித்தபடி
மறைந்தனர் 
மறை நாயகனும்
இறை நாயகியும்.

அடுத்து நடந்தது தான் 
உலகம் கண்டிராத 
பேராச்சரியம்!
தராசு 
அப்படியே 
புஷ்பக விமானமாக 
மாறி
விண்ணில் 
பறக்க ஆரம்பித்தது.

அமர்நீதியாரும்
அன்பு மனைவியும் 
ஆருயிர் மைந்தனும் 
தேவகணங்கள் 
வரவேற்க 
சிவபுரம் அடைந்து 
சிவானந்தப் 
பெருவாழ்வு வாழ்ந்தனர்.

நீதியே இவரை 
விரும்பி வந்ததால் 
அமர்நீதி 
எனப் பெயர் பெற்றார் 
என்கின்றனர் 
ஆய்வாளர்கள்.

அமர்தல் 
என்பதன் பொருள் 
விரும்புதல் என்பதாம்.

அமர்நீதியார் 
புராணத்தை 
ஊன்றிக் 
கவனித்தால்
சில ஆன்மிக 
உண்மைகளை
உணர முடியும்.

ஆண்டவனைக் காண 
அனைவரும் செல்வர்.
ஆனால் அடியவரைக் காண 
அரனாரே வருவார்.
உள்ளங்கவர்க்
கள்வனாகக் 
கடவுளைப் பாடுவர்.
ஆனால் இறைவன் 
அமர்நீதி  நாயனாரைக்
கள்வன் ஆக்கினார்.

இறைவனின் 
தராசுத் தட்டில்
ஆண்டவர் 
அருள் முன்பு 
அடியார் 
இறையன்பு தாழும்.
அன்பு மேலிட மேலிட 
அருள் தட்டு உயர்ந்து 
கொண்டே போகும்.

அன்புதான் பெரிது. 
அருள் துணை வரும்.
இறைவன் 
உறைவதும்
ஆனந்த நடனம்
ஆடுவதும் திருமடம்.
தவத்திற்கும் 
தியானத்திற்கும்
அதுவே சிறப்பிடம்.

அன்னதானமே
அங்கு முதலிடம்.
அமர்நீதி நாயனாரை 
சுந்தரமூர்த்தி நாயனார் 
தொண்டர் தொகையில்,

'அல்லிமென் முல்லையந்தார் 
அமர்நீதிக்கு அடியேன்' என அகமகிழப் பாடுகிறார்.

ஓம் நமசிவாய

(அமர்நீதி நாயனார் புராணம் - நிறைவு)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)