திருநாளைப் போவார் நாயனார் (நந்தனார்) புராணம் (பாகம் 1)

 


திருநாளைப் போவார் நாயனார் புராணம் 

(பாகம் 1) 

சோழ நாட்டில் 
வளமிக்க 
உட்பிரிவு நாடுகளில் 
ஒன்று 
மேற்கானாடு.

திருநீற்றின் 
ஒளிக்கீற்று போல் 
விளங்கும் 
கொள்ளிடம் ஆற்றின் 
கரையோரம் இருக்கும் 
பழமையான வளமையான 
ஒரு திருப்பதி அது.

இருண்ட சோலைகள் 
நிறைந்த 
இயற்கைச் சூழல் நகரம்.

தென்னை, பலா, மா 
எனப் பலப்பல 
தருக்கள் தாலாட்டும் 
தன்னிகரில்லா சிற்றூர்.

அவ்வூரில் 
பூ மரங்களில் 
தேன் வண்டுகள் 
இன்னிசை பாடுவது 
'ஓம்' காரமாய் இருக்கும்.

தேன் மழையும் 
வான் மழையும் 
ஒருசேரப் பொழியும் 
இனிமை கொண்ட 
அத்திருத்தலத்தின் 
திருப்பெயர் 
ஆதனூர்.

ஆதனூரில் 
ஒரு சிவபக்தர்.
பிறைமதி அணிந்த 
பெருமான் மீது 
பெருங் காதல் 
கொண்டவர்.

பெயர் நந்தனார்.

நந்தனார் 
சிவபிரான் மீது 
ஆழ்ந்த பக்தி 
கொண்டவர். 
எவரிடத்தும் 
பணிவு காட்டும் 
குணத்தவர்.

பிறப்பால் புலையர். 
தாழ்ந்த குடி.
ஆதனூர் அருகில் 
ஒரு புலைப்பாடிதான் 
அவர் குடிப்பாடி.

அக்காலத்திய 
குலம் கோத்திரம்
இக்காலம் கண்டிராத
சாதிக் குறைபாடு. 

அவர் குடியினரின்
அடிப்படைத் தொழில் 
உழவு மற்றும் பறையடித்தல்.

ஊர்த் 
தூய்மைப் பணிக்குக் 
கிடைத்த 
சிறு நிலத்தின் 
விவசாயமும் மான்யமுமே 
நந்தனாரின் வாழ்வாதாரம்.

சிவன் மீது கொண்ட 
தீராக் காதலால் 
அடிக்கடித் 
தல யாத்திரை சென்று 
ஆதி பகவனைத்
தரிசித்து வருவார்.

ஆனால் 
கோயிலினுள் சென்று 
இறைவனைத் தரிசிக்க 
அவருக்குக் 
கொடுத்து வைக்கவில்லை.
சாதீயத் தடை இருந்தது.

அதற்குமேல்
அவருக்கே 
அவர் குலத்திற்கே
தாழ்வு மனப்பான்மை
தலைதூக்கி இருந்தது.

கோயிலின் முன்பு
கோபுர வாசலில் நின்று 
எம்பி எம்பி 
சிவத் திருமேனி 
காணத் துடிப்பார்.

சில நாளேனும் 
காத்திருந்து 
தீபாராதனை சமயத்தில் 
உயரக் குதித்து 
சிவலிங்க தரிசனம் 
தூரத்தில் கண்டு 
குதூகலிப்பார்.

உரிமையோடு 
அருகில் சென்று 
சிவபெருமானைத் 
தரிசிக்க 
முடியவில்லையே 
என்ற ஏக்கம் 
அவருக்கு  எழாத 
நாளிருக்காது.

ஆதங்கத்தின் 
விளிம்பில் 
தன்னையும் 
தன் பிறப்பையும் 
திட்டித் தீர்ப்பார். 

அதே சமயம் 
செல்லும் திருக்கோயில்களில் 
சிவார்ச்சனைக்குத் 
தேவையான கோரோசனை 
வழங்கி மகிழ்வார்.

மத்தளம் போன்ற 
வாத்தியங்களுக்கு 
உரிய தோல் தருவார். 
யாழ், வீணை போன்ற 
கருவிகளுக்கு 
நரம்புகள் வழங்குவார்.

அவற்றை ஏற்கும் 
கோயில்காரர்கள் 
அவரை மட்டும் 
ஏற்க மாட்டார்கள்.

'அதனால் என்ன?' 
என்று கோயிலின் முன் 
கனிந்துருகிப் பாடுவார். 
கால் களைக்க 
கூத்தாடுவார். 
செவி இனிக்கப்
பறை அடிப்பார்.

ஒருமுறை
வைத்தீஸ்வரன் 
கோயில் அருகில் இருக்கும் 
திருப்புன்கூர் 
திருத்தலத்திற்குச் சென்றார்
அருட்பெரும்ஜோதி 
ஆதி சிவனைத் தரிசிக்க.

சைவத் திருத்தலங்களில் 
ஒன்றெனப் பெயர் பெற்ற 
திருப்புன்கூரில் 
உறைந்து 
அருள்பாலித்துக் 
கொண்டிருக்கும் 
இறையனாரின்
திருநாமம் 
சிவலோகநாதர்.

இறைவன் 
புங்கை மரத்தின் 
கீழ் இருந்து 
இறையாட்சி 
செய்ததாலே 
அவ்வூருக்கு 
திருப்புன்கூர் 
எனப் பெயர் வந்தது.

நந்தனார் 
அக்கோயிலுக்கு 
ஆசையோடு சென்றார்.

பறை அடித்த 
இசையோடும்
கண்கள் சொரிந்த 
கண்ணீரோடும்
கோபுரம் முன் நின்று 
இறைவனைத் துதித்தார்.

அக்கோயிலில் 
நந்தியின் உருவம் 
சற்று அதிக உயரம்.

எப்படித் தாவிக்
குதித்தும் 
எல்லாம் 
உணர்ந்தோனைக் கண்டு 
தரிசிக்க முடியவில்லை.

என்புருக்கிப் பாடி 
ஏகத்துக்கும் ஆடி 
ஆடிய பாதனைக் 
காணமுடியாது 
கதறி அழுதார்.

உள்ளிருக்கும் 
சிவலோக நாதருருக்கு 
நந்தனாரின் பக்தி 
பரவசம் ஊட்டியது.

கோயிலின் 
வலப்புறம் இருக்கும் 
நந்தியெம்பெருமானை 
அன்போடு அழைத்து 
'வந்திருக்கும் பக்தன் 
என்னைப் பார்க்கும்படி 
சற்று விலகி நில்!' 
என கட்டளையிட்டார்.

காவல்காரரான
நந்தீஸ்வரர் விலக 
நந்தனார்
இறை தரிசனம் கண்டார்.

மகிழ்ச்சி மேலீட்டால் 
குதித்தாடி மகிழ்ந்தார்.

தரிசனம் கண்ட பின்னர்
கரிசனத்தோடு 
ஒரு திருப்பணியை 
மேற்கொண்டார்.

திருக்கோயிலின் 
மேற்புறம் 
ஒரு பள்ளம் இருந்தது.

அதனைத் தனியாளாக 
ஒரு குளமாக வெட்டி
நீர் நிறைத்து 
திருப்பணி செய்து 
மன நிறைவோடு 
ஆதனூர் திரும்பினார். 

அக்குளம்
இன்றும் உள்ளது 
கோயில் சூழலின்
அருள் கூட்டியபடியே!.

நந்தனாருக்கு 
வெகுநாட்களாக 
ஓர் ஆசை இருந்தது.

'சிவத் தலங்கள் 
பல சென்றிருந்தாலும் 
ஆடும் நாதன் 
அருட்காட்சி தரும் 
சிதம்பரத்திற்குச் 
செல்லவில்லையே!'
என்ற ஏக்கம் இருந்தது.

தான் தரிசித்த
தலங்கள் பற்றி 
சக தோழர்களிடம் 
சிலாகித்துச் சொல்வது 
அவர் வழக்கம்.
தரிசிக்கச் 
செல்ல இருக்கும் 
திருக்கோயில்களின்
தல புராணங்களை 
லயித்துச் சொல்வதும் 
அவர் வழக்கம்.

சிதம்பரநாதன் புகழை 
அன்றாடம் அனைவரும் 
வியப்புறச் சொல்வார். 
சிதம்பரம் கோயில் 
அழகை - சிறப்பை
நேரில் பார்த்தவர் போல் 
ஆடல் பாடலோடு 
வர்ணித்து  
சிவன் வசமாவார்.

சிதம்பரம் 
அவர் மூச்சில் 
சுவாசமாய் இருந்ததால் 
அவரது பேச்சில் 
எப்போதும் 
'சிதம்பரம்' 
என்ற பதம் இருக்கும்.

"சிதம்பரத்திற்கு 
எப்போது 
செல்லப் போகிறாய்?" 
என்று 
ஒவ்வொரு முறையும் 
நண்பர்கள் கேட்பார்கள். 

ஒவ்வொரு நாளும் 
உறவினர்கள் 
விசாரிப்பார்கள். 

"நாளை 
செல்லப் போகிறேன்" 
என மறுகணமே 
விடை சொல்வார். 

ஆனால் மறுநாளும் 
ஆதனூரில் தான் 
அலைந்து கொண்டிருப்பார்.

அது போது 
"ஏன் சிதம்பரம் 
செல்லவில்லையா?" 
எனக் கேட்போரிடம் 
"நாளை போவேன்" 
என மார்தட்டுவார்.

இப்படி 
நாளை நாளை 
என்று சொல்லி வந்ததால் 
நந்தனாரை அவ்வூரார் 
'நாளைப் போவார்'
என்று கேலி 
செய்ய ஆரம்பித்தனர்.

காலப்போக்கில்
அவர் பெயரே 
'நாளைப் போவார்' 
என்றாகிப் போனது.

எத்தனை நாட்கள் 
நாளை நாளை 
என்று சொல்லமுடியும்?

ஒருவழியாக 
ஒருநாள்
நந்தனார் 
சிதம்பரத்திற்குப் 
புறப்பட்டு விட்டார்.

'ஒருவர் விரும்பினால் 
சிதம்பரத்திற்குச் 
செல்லமுடியாது.
சிதம்பர நடராசர் 
விரும்பினால் தான்
அவர் செல்ல முடியும்'
என்பது 
ஓர் ஆன்மீக வாக்கு.  

சிதம்பரம் 
நடராசப்பெருமான் 
விரும்பி 
அழைத்ததால் தான் 
நந்தனாரின் 
சிதம்பர நடைப் பயணம்
நிஜமானது என்பதை
பின்னர் 
அணிவகுத்து நடந்த 
அதிசய நிகழ்வுகள்
ஊர்ஜிதப்படுத்தின.

ஓம் நமசிவாய!

(திருநாளைப் போவார் நாயனார் புராணம் - தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)