அமர்நீதி நாயனார் புராணம் (பாகம் 1)


 

63 நாயன்மார்கள் வரலாறு

அமர்நீதி நாயனார் புராணம் 

(பாகம் 1)

மாரிமைந்தன் சிவராமன்

காவிரி பாயும் 
சோழ நாட்டில் 
தேரோடும்  
திருவீதிகளைக் 
கொண்ட 
பழமையான 
தொன்மையான 
ஊர் 
பழையாறை.

பழையாறைக்குப் 
பெருமை சேர்க்க 
ஆனி மாதம் 
பூச நட்சத்திரத்தில் 
அவதரித்தார் 
வணிகர் 
குலச் செம்மல் 
அமர்நீதி நாயனார்.

பொன், முத்து 
நவரத்தினங்கள் 
சிறந்த பட்டு 
பருத்தி ஆடைகள் 
எந்த தேசத்தில் 
சிறப்பாக 
விளையுமோ 
அங்கிருந்து 
தருவித்து 
நிறைந்த தரத்தில் 
குறைந்த விலையில் 
விற்பனை செய்யும் 
நல்வணிகர் 
அமர்நீதியார்.

வணிக
உலகத்தை
விட்டால் 
அவர் உலகம் 
சிவலோகம் தான்.
சிவனடி தவிர 
வேறொன்றையும் 
சிந்தனை 
செய்ய மாட்டார்.

'செம்மேனி 
கொண்டோன்'
சிவபெருமானின் திருத்தொண்டர்களைக்
கண்டால் போதும்.
மனமகிழ்ந்து 
அவர்களை அழைத்து 
வணங்கி
உபசரித்து உணவளித்து 
அவர்களுக்குக் 
கந்தை,
துறவிகள் 
அரை நாணுக்குப் 
பதிலாக அணியும்  
கீளாடை, கோவணம் 
முதலான ஆடைகளை 
அளித்து 
அறக்குணம் 
காட்டுவார்.
அகம்மகிழ்ந்து 
போவார்.

ஆலாலகண்டருக்குத் 
திருவிழா என்றால் 
முதல் ஆளாய்
முந்திப் போய் 
முன்னின்று 
சிவப் பணியும் 
அறப் பணியும் 
தவறாது செய்வார்.

ஒரு முறை 
திருநல்லூரில் 
பஞ்சவர்ணேஸ்வரர்
திருவிழாவுக்குச் 
சென்றவர் 
இறைவன்பால் 
மனம் லயித்து 
சிவநாமம் ஓதினார்.
பஞ்சவர்ணேஸ்வரர்
வசம் ஆனார்.

சிவன்
வசம் ஆனவர்
அங்கு 
அன்னதானத்திற்கு 
என்றே ஒரு 
திருமடம் கட்டினார்.
காலப்போக்கில் 
மனைவி, மகன் 
உற்றார், 
உறவினர் சூழ 
அங்கேயே தங்கி 
அடியாருக்குச் 
சேவையோடு 
தானே
அமுது படைக்கத் 
தொடங்கினார்.

ஏகாந்தமாய் 
ஏக இறைவனுக்குப்
பணி செய்து வந்த 
அமர்நீதி 
நாயனாருக்கு 
ஒரு நாள் 
சோதனை வந்தது 
எல்லாம் 
உணர்ந்தவனாலேயே.

ஆம்....
அடியார்களைச் 
சோதித்து 
அருள்புரிந்து 
ஆட்கொள்ளும் 
அருளாளர் 
சிவபெருமான் தான் 
அமர்நீதியாருக்குப் 
பெரும் சோதனை தர 
திருவுளம் கொண்டார்.

ஆதி சிவனார் 
பழுத்த அந்தணர் 
வடிவம் எடுத்தார்.
பார்த்தாலே 
பரவசமாக்கும் 
பிரம்மச்சாரி வேடம்.
அழகிய சிகை 
சிரத்தில்.
மூன்று வரித் திருநீறு 
நெற்றியில். 
தர்ப்பப்பை மோதிரம் 
கைவிரலில்.
முப்புரி நூல் மார்பில்.
முறுக்கிய அரைநாண் 
இடுப்பில்.
அறிவுக் கதிர் வீச்சு 
திருமுகத்தில்.
அருள் பொங்கும் 
பார்வை கண்களில்
எனக் காட்சியளித்தார்
அந்தணர் வடிவில் 
வந்த ஆதி சிவனார்.

அம்மட்டுமா ?
இரு கோவணங்களும் 
திருநீறுப் பையும் 
தருப்பையும் 
முடிந்த 
தண்டினை ஏந்தியபடி 
வந்தார் அந்தணர்.

அவரைப் பார்த்ததும் 
பரவசமான 
அமர்நீதியார் 
ஓடி வந்து வணங்கி 
அடிமண் மீது 
முடிபடப் பணிந்தார்.
அவரை அன்போடு 
எழுப்பிய அந்தணர்
"அன்பரே...!  
உன்னுடைய 
வள்ளல் தன்மையை 
அறிந்தே 
வந்திருக்கிறேன்.
நீ தரும் 
அன்னம்
கந்தை (சிறு துகில்)
கீளாடை 
வெண்மையான 
கோவணம் 
வழங்கும் பண்பு 
இவற்றைப் பற்றி 
சிவனடியார்கள் 
பேச்சில் இருந்த 
பிரமிப்பைக் கேட்டே 
நானும் வந்துள்ளேன்."

அமர்நீதியாருக்கு 
அந்தணர் 
வார்த்தைகளால் 
தலைகால் 
புரியவில்லை.

"ஐயன்மீர்....!
இப்போதே
அமுது தயார்.
உங்களைப் போன்ற அந்தணர்களுக்காகவே வேதியர்களைக் 
கொண்டு 
தூய்மையான 
சமையல் செய்கிறோம்."

உணவு வழங்க 
ஆயத்தமானார் 
அமர்நீதியார்.

அதற்காக 
உணவுக்கூடம் 
திரும்பியவரைத் 
தடுத்து
"மெய்யன்பரே...!
நான் முதலில் 
காவிரி சென்று 
நீராடி வருகிறேன்.
அதன் பின்னர் 
உன் திருக்கரங்கள் 
வழங்கும் 
அடியார் போற்றும் 
அமுது உண்கிறேன்."
என்றபடி 
வான் நோக்கினார்.

"ஒருவேளை 
மழை வந்துவிட்டால் 
கோவணம் 
நனைந்து விடும்.
ஈரத்தால் 
அணிய முடியாமல் 
போய்விடும்" 
என்று கூறியபடியே 
தண்டில் இருந்த 
இரு 
கோவணங்களில் 
ஒன்றை 
அமர்நீதியாரிடம் 
கொடுத்தார் அந்தணர்.

"இதைப் பத்திரமாக 
நீ வைத்திரு.
இதன் சிறப்பு 
சொல்லி மாளாது.
பத்திரம்...  பத்திரம்"
என்றவாறே 
புறப்பட்டார் 
புனித நீராட.

அக்கோவணத்தைப் 
பயபக்தியோடும் 
பணிவோடும் 
வாங்கிய 
அமர்நீதியார் 
உள்ளே சென்று 
எவர் 
துணிமணிகளும் 
படாதவாறு 
தனியாக ஓரிடத்தில் 
பாதுகாப்பாக வைத்தார்.

பின் 
அந்தணரின் 
வரவுக்காக 
அவர் வரும் 
திசை நோக்கி 
காத்திருக்க 
ஆரம்பித்தார்.

அந்தணர் 
காவிரிக்குச் 
சென்று
புரண்டோடும் 
காவிரியில் 
மூழ்கிக் குளித்தார்.
குளித்துவிட்டு 
கரைக்கு வந்து 
வானத்தை 
நோக்கினார் 
அந்தணர்.

இறைவனின் 
உள்ளத்தை 
ஆழ அறிந்த 
வருணபகவான்
விடாது மழை 
பொழிந்தார் 
திருநல்லூரே 
மிதக்கும்படி.

திருமடம் 
இருந்த 
திசை 
நோக்கினார்.
அதே நேரம்
அமர்நீதியார் 
பாதுகாப்பாக 
வைத்திருந்த 
கோவணம் 
மாயமாய் 
மறைந்து 
போயிற்று.

காவிரியில் 
நீராடிய
அந்தணர் வடிவ 
அருளாளர்
அணுக்கத் 
தொண்டரின் 
அன்பெனும் 
தூய நீராடுதல் 
வேண்டி 
திருமடம் வந்து 
சேர்ந்தார்
உடல் முழுக்க நீரோடும் 
பெய்யும் மழைநீர் 
சொட்டுக்களோடும்.

"வணிகர் குல 
வள்ளலே...!
சொன்ன மாதிரியே 
மழை. 
நானும் 
நனைந்துவிட்டேன். 
தண்டில் இருந்த 
கோவணமும் 
நனைந்துவிட்டது.
நான் தந்த 
கோவணத்தை 
எடுத்து வா.
நீராடியதால் 
எழுந்துள்ளது 
அகோரப்பசி.
சீக்கிரம் எடுத்து வா."

அமர்நீதியார் 
அவசரகதியில் 
அறைக்குச் சென்று 
வைத்த இடத்தில் 
பார்த்தார். 
கோவணம் 
அங்கில்லை.

அறை 
முழுக்கத் தேடினார். 
மடம் 
முழுக்கத் தேடினார். 
மனைவியை அழைத்து 
தேடச் சொன்னார் .
அவர்களது 
குட்டிப் பையனும் 
சந்து பொந்துகளிலும் 
இண்டு இடுக்குகளிலும் 
கை நுழைத்துத் தேடினான்.
கோவணம் தென்படவில்லை.

"தேவ தேவா...! 
வந்தோர்க்கெல்லாம் 
கோவணம் 
வழங்கி வரும் 
எனக்கு இது 
என்ன சோதனை?"
என இறையடியை நினைத்து
நெஞ்சுருகிக் கெஞ்சினார் அமர்நீதியார்.

"முற்பிறப்பு  
கர்மவினை 
இப்படிப் 
பழி வாங்குகிறதோ!
கருணைக் கடலே !
அந்தணருக்கு 
என்ன பதில் சொல்வேன் ?"
அரற்றினார்.
கதறினார்.

அன்றாடம் வணங்கும் அஞ்செழுத்தானே 
கண்டு கொள்ளாததால் வேறுவழியின்றி 
வந்தவரிடமே 
சரணடைந்தார்.
ஆனால் வந்தவர் 
சினத்துடன் இருந்தார்.
சீற்றமுடன் ஏசினார்.

அமர் நீதி நாயனார் - தொடரும் (பாகம் -2 )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - கருவூரார் (பாகம் 1)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - போகர் பிரான் (பாகம் 5)

சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - சதாசிவ பிரம்மேந்திரர் (பாகம் 4)